search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று! அவரது சாதனைகளைப் பயின்று உரமூட்டிக் கொள்வோம்.
    • திராவிடச் சமத்துவம் நிலைபெறத் தொடர்ந்து வெல்வோம்.

    சென்னை:

    முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசரின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்து சமய அறநிலையத் துறை, இடஒதுக்கீடு போன்றவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்த சட்டங்களைக் கொண்டு வந்து திராவிட வரலாற்றில் துருவ நட்சத்திரமாக விளங்கும் பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று! அவரது சாதனைகளைப் பயின்று உரமூட்டிக் கொள்வோம்! திராவிடச் சமத்துவம் நிலைபெறத் தொடர்ந்து வெல்வோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
    • இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி பொற்கொடிக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.

    கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.

    இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்! என கூறியுள்ளார்.

    • சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
    • டி.ஜி.பி.சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றம்சாட்டி இருந்தனர்.

    இதையடுத்து, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, டி.ஜி.பி.சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    முன்னதாக, அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது நடந்த சம்பவம் பற்றி பொற்கொடி விரிவாக எடுத்துக் கூறினார்.

    • அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
    • பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்கள் மற்றும் கண்டனங்களை தெரிவித்தனர்.

    இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது நடந்த சம்பவம் பற்றி பொற்கொடி விரிவாக எடுத்துக் கூறினார்.

    இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என பொற்கொடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

    இதற்காக இன்று காலை தலைமை செயலகத்தில் இருந்து அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.

    • மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.
    • மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும்.

    மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை "பாரதிய நியாய சன்ஹிதா, 2023", "பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023" மற்றும் "பாரதிய சாக்ஷியா சட்டம், 2023" என மாற்றப்பட்டு, 1-7-2024 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

    அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பாராளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும், அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    பாராளுமன்றத்தில் 146 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை அறிந்துகொள்ள விருப்பமில்லாமல், மத்திய அரசு அவசர கோலத்தில் இச்சட்டங்களை பாராளுமன்றத்தில் விவாதங்கள் ஏதுமின்றி, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றியது.

    நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையினரின் கருத்தினைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தப் புதிய சட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதைத் தெளிவாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது 17-6-2024 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஒன்றிய அரசின் இந்த புதிய சட்டத்தின் சில அடிப்படைப் பிரிவுகளில் தவறுகள் இருப்பதோடு, மாநில அரசுகளிடமிருந்து முழுமையாக கருத்துக்களைப் பெறாமல் இவை இயற்றப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்த முதலமைச்சர் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும், முறையாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.

    இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று (8-7-2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், பொதுத் துறைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தின் முடிவில், இந்தப் புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைத்திட, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.சத்யநாராயணன் அவர்கள் தலைமையில் ஒருநபர் குழுவினை அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்கள்.

    இக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு வழங்கும் என்றும் கூறியுள்ளார்.

    • கைது செய்யப்பட்ட பாலு சமீபத்தில் தி.மு.க.விலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பக்கநாடு கிராமம் குண்டு மலைக்கரடு பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 36). லாரி டிரைவர்.

    இவர் சமீபகாலமாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை ஆடியோ பதிவாக சமூக வலைதளங்களில் பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பூலாம்பட்டி போலீசார் இன்று அதிகாலை பாலுவை கைது செய்து அவரிடம் முதலமைச்சரை பற்றி அவதூறான கருத்துக்களை பரப்பியது தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட பாலு சமீபத்தில் தி.மு.க.விலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சி, சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
    • தகுதிவாய்ந்த 200 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற் நுட்பக்கல்வி, ஐ.டி.ஐ. படித்து வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில், மலைப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், துறைச் சார்ந்த மாவட்ட திட்ட அலுவலர், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று, தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பழங்குடியின வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் 450 நபர்களை திரட்டி திருச்சி, சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தின் முடிவில் தகுதிவாய்ந்த 200 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    13.2.2024 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்ட 200 பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

    பயிற்சி ஆணைகள் பெற்ற 200 பழங்குடியின இளைஞர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள பயிற்சி நிறுவனத்தின் மூலம் மூன்று மாதக்காலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது.

    பயிற்சியின்போது அந்த இளைஞர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் அனைத்தும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்டது.

    திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற இளைஞர்களில், 146 இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனமான ரானே ஆட்டோ மோடிவ் இந்தியா லிமிடெட் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தலைச் சிறந்த இந்திய நிறுவனங்களின் மூலம் நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களின் கல்வித்திறன் மற்றும் தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் வழங்கி, வாழ்த்தினார்.

    பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட 146 இளைஞர்களில், 106 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் ஆவர்.

    • ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது.
    • கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.

    சென்னை :

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.

    ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணிக் கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.
    • கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 149 இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்துவதில் உறுதிகொண்டு உன்னதமான பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். இந்த திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களிடமும் இந்தியாவின் இதர மாநிலங்களிலும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன.

    அத்திட்டங்களில் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்", "நான் முதல்வன் திட்டம்", "கலைஞர் கனவு இல்லம் திட்டம்" ஆகிய மூன்றும் பிரிட்டன் நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 31,008 அரசுப் பள்ளிகளில் 18 லட்சத்து 54 ஆயிரம் மாணவ - மாணவியர் சூடான, சுவையான காலை உணவை உண்டு மகிழ்ச்சியுடன் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணிக் கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.

    இத்திட்டத்தை, தெலுங்கானா மாநில அரசு உள்பட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றுள்ளன. மேலும், கனடா நாட்டு பிரதமர் இத்திட்டத்தை வரவேற்று தம்முடைய நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளார்.

    'நான் முதல்வன்' திட்டத்தின் அடிப்படை நோக்கம் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதில் உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களில் 76.4 சதவீதம் என்ஜினீயரிங் மாணவர்களும், 83.8 சதவீதம் கலை மற்றும் அறிவியல் மாணவர்களும் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

    கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 149 இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் இளைஞர்களிடமும் பெற்றோரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

    வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன் வீடுகட்டுவதற்கான தொகையை அரசு அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தி பயனாளிகளே தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய இந்த 3 திட்டங்களையும் பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மக்களின் ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றிகண்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
    • பிரதமர் ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    பிரிட்டனில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பிரிட்டனின் புதிய பிரதமராக கீர் ஸ்டாமர் பதவியேற்றுள்ளார். இந்த தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் போட்டியிட்ட நிலையில், ஈழ தமிழ் பெண்ணான உமா குமரன் வெற்றி வாகை சூடியுள்ளார்.

    இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "ஸ்ட்ராட்போர்ட் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் உறுப்பினராகவும் பதவியேற்கும் உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழ் சமுதாயத்திற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

    பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், 19 ஆயிரத்து 145 வாக்குகளுன் வெற்றி பெற்றார். கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன் ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து வருகிறார்.

    • விபத்தில் காயமடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ரூபன் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
    • விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம் திருராமேஸ்வரம் கிராமம், கோட்டகச்சேரி பகுதியிலுள்ள கோவில் திருவிழாவிற்கு விளம்பரப் பதாகைகள் வைப்பதற்காக கடந்த 29.6.2024 அன்று இரவு சுமார் 11.30 மணியளவில் அக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் மதன்ராஜ் (வயது 15) என்பவர் விளம்பரப் பதாகைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது எதிர்பாராதவிதமாக அருகிலுள்ள மின்மாற்றியில் இரும்பு கம்பியுடன் கூடிய விளம்பர பதாகையில் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ரூபன் (19) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.2 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனின் பெற்றோருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும், கனடா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • காமராஜர் பிறந்தநாளான வரும் 15-ம் தேதி திருவள்ளூரில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளில் பலர் காலை உணவை தவிர்த்து சோர்வாக தினமும் பள்ளிக்கு வருவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கண்டார். அதனைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், காலை உணவுத் திட்டத்தை கொண்டுவருவதாக அறிவித்தார்.

    'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' என்ற பெயரிலான இந்த திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

    முதல்கட்டமாக, 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.33 கோடியே 56 லட்சம் செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

    காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் வருகை அதிகரித்ததுடன் அவர்களின் ஊட்டச்சத்தும், கற்றல் திறனும் மேம்பட்டதாக ஆய்வுகள் தெரிவித்தன. மேலும், அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும், கனடா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் கடல் தாண்டியும் பிரபலம் அடைந்த நிலையில், 2023-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்து 992 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் 15 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து, இந்த திட்டத்தை தமிழக ஊரகப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சட்டசபையிலும் எம்.எல்.ஏ.க்கள் பலர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

    இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 2 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.600 கோடியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், காலை உணவு திட்ட விரிவாக்கத்தை, மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜர் பிறந்த நாளான வரும் 15-ம் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டி.பிரபு சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க.வினரும் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    ×