search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • உங்கள் மண்ணின் மைந்தர் அவர். மக்களோடு மக்களாக, மக்கள் பணி யாற்றும் மக்கள் தொண்டர் தான் அன்னியூர் சிவா.
    • கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது!

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தனது பேச்சை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் பேசி இருப்பதாவது:-

    விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

    வரும் ஜூலை 10-ந் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. ஆற்றல் மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்துக்கு, உங்கள் உள்ளம் கவர்ந்த உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் மண்ணின் மைந்தர் அவர். மக்களோடு மக்களாக, மக்கள் பணி யாற்றும் மக்கள் தொண்டர் தான் அன்னியூர் சிவா.

    1986-ம் ஆண்டு முதல், அன்னியூர் சிவாவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தடம் மாறாத-நிறம் மாறாத கலைஞரின் உடன் பிறப்புகளில் அவரும் ஒருவர். தலைவர் கலைஞரின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், "தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கும் ரத்த நாளங்களில் ஒருவர்".

    * விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக-

    * ஒன்றுபட்ட மாவட்டத் தலைமைப் பொதுக்குழு உறுப்பினராக-

    * அன்னியூர் கூட்டுறவு விவசாய வங்கித் தலைவராக-

    * மாநில விவசாய அணி துணைச் செயலாளராக என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், தற்போது விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்.

    இப்படிப்பட்ட அன்னியூர் சிவாவை, விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி வையுங்கள் என்று அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன். அன்போடு மட்டுமல்ல; உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

    நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது!

    * 1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்கள். இந்த மாதத்தில் இருந்து புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப் போகிறோம்!

    * மகளிருக்குக் கட்டணமில்லா பஸ் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.

    * 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலமாக, இளைஞர்கள் அனைத்து வேலைகளையும் பெற தகுதி உள்ளவர்களாக உயர்த்தப்பட்டு வருகிறார்கள்.

    * 'புதுமைப்பெண் திட்டம்' மூலமாக, அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக் கல்விக்கு வரும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது.

    * இதே மாதிரி, மாணவர்களுக்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் மூலமாக தரப் போகிறோம்.

    இப்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதாவது ஒரு நேரடி பலன் கிடைக்கும் வகையில், நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது.

    திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றாலே, சமூகநீதி அரசு! இது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்!

    * பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்துறையை உருவாக்கியதே தலைவர் கலைஞர் தான்.

    * வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கிய ஆட்சி, தி.மு.க. ஆட்சி!

    * பட்டியலின சமூகங்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்த ஆட்சி, தி.மு.க. ஆட்சி.

    * அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை, 'சமத்துவ நாளாக' அறிவித்திருக்கிறோம்!

    * கழகம் வளர்த்த கொள்கைக் குன்றான ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.

    * 1987-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் பலியான சமூகநீதிப் போராளிகளுக்கான நினைவகம் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

    இது இரண்டையும் சீக்கிரமே விழுப்புரத்தில் நான் திறந்து வைக்க இருக்கிறேன்.

    * கழகத் துணைப் பொதுச்செயலாளரும் உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடியும், மறைந்த சட்டமன்ற உறுப்பினரான புகழேந்தியும் இந்த மாவட்டத்துக்கும், தொகுதிக்கும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.

    எல்லா மக்களுக்கும் பொதுவான மக்கள் நலத்திட்டங்கள் தொடர, உங்களின் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.

    சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க. கூட்டணியை தோற்கடிப்பது மூலமாக, சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கழகத்தின் உண்மைத் தொண்டரான அன்னியூர் சிவா என்ற சிவசண்முகம், விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கும் உண்மையான சட்டமன்ற உறுப்பினராக இருப்பார்!

    மறவாதீர், உங்கள் சின்னம் உதயசூரியன்! வாக்களிப்பீர் உதயசூரியன்!

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்ட பயனாளிகளிடம் பேசினார்.
    • முதல்வரின் முகவரி துறையின் நீங்கள் நலமா திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசி கருத்துகளை கேட்டறிந்தார்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட திட்டம் தான், 'மக்களைத் தேடி மருத்துவம்'. இத்திட்டத்தை, 2021 ஆகஸ்ட் 5-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் தொடங்கிவைத்தார். தொற்றா நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று, மாதந்தோறும் மருந்து, மாத்திரைகள் வழங்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    பெண்களின் சுயமரியாதையை காக்கவும், அவர்களது உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைசெயலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டறியும் 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6-ந்தேதி தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து அரசு திட்ட பயனாளிகளிடம் வீடியோ காலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார்.

    மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்ட பயனாளிகளிடம் பேசினார். முதல்வரின் முகவரி துறையின் நீங்கள் நலமா திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசி கருத்துகளை கேட்டறிந்தார். பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்றவர்களை தொடர்பு கொண்டு முதலமைச்சர் பேசினார்.

    பயனாளிகளிடம் திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களை கேட்டறிந்த முதலமைச்சர், அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சரியான நேரத்திற்கு வந்து சேர்கிறதா, எந்த தேதியில் பணம் வருகிறது, எவ்வளவு தொகை வருகிறது, எந்த வகையாக வந்தடைகிறது, ஏதேனும் குறை உள்ளதா, அலுவலகத்தில் அதிகாரிகள் நன்றாக நடத்துகொள்கிறார்களா? என்ற விவரங்களை கேட்டறிந்தார்.

    • திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன.
    • விடியா அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது?

    சென்னை:

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம்.

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன.

    சம்பந்தப்பட்ட இடத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்ட காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டு, அதிமுக ஐடி பிரிவு சுட்டிக்காட்டிய பிறகும், இந்த விடியா திமுக அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாகவே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணமும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரமும் கண்ட பிறகும் எந்த பாடமும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே? உங்கள் விடியா அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது?

    கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து விழுப்புரம் சரகத்தில் நடைபெறுவதற்கு காரணமான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என்று தெரிவித்துள்ளார்.

    • முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் இன்று நேரில் ஆய்வு
    • புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி அன்று தருமபுரிக்கு வருகை தருகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாளையம் புதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் வருகிற 11-ந் தேதி காலை தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

    பாடு பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் இன்று ஆய்வு செய்தார்.

    ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெரும் துறைகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளையும், மேடை அமைய உள்ள இடத்தினையும், பயனாளிகளை அழைத்து வரும் வாகனங்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகளையும், பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் குறித்தும் அமைச்சர், துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் 3 முறை வருகை புரிந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தருமபுரி மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார்.

    குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் மற்றும் வத்தல்மலை மலை வாழ்மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான பஸ் வசதி, சாலை வசதி மற்றும் அரசு தலைமை மருத்துவ மனையில் கூடுதல் கட்டிடங்கள் என பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் வருகிற 11-ந் தேதியன்று ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மக்களை நாடிச் செல்லும் தமிழக அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தருமபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த விழாவில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய பஸ்களை தொடங்கி வைத்தல், விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்களையும் அறிவிக்க உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நீட் எனும் சமூக அநீதிக்கு எதிரான தி.மு.க.வின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள்.

    சென்னை:

    'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தி.மு.க. மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய 'எக்ஸ்' தளப் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    நீட் எனும் சமூக அநீதிக்கு எதிரான தி.மு.க.வின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள்.

    இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

    • இன்று நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
    • திருமணத்திற்கு பின்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார். தற்போது இவர் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

    அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே சமயம் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்.
    • தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாஞ்சோலையில் 16 மணி நேர வேலை, குடியிருப்புகளை பழுது பார்க்காதது உள்ளிட்ட 20 பிரச்சனைகளை முன்நிறுத்தி கடந்த 1997-ம் ஆண்டு புதிய தமிழகம் போராட்டம் நடத்தியது.

    மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 6 தலைமுறையாக 1929-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்கள் தாங்களாகவே முன்வந்து விருப்ப ஓய்வு பெறுவதாகவும், கடந்த 15-ந்தேதி முதல் பணிநிறைவு பெற்று விட்டதாகவும், அடுத்த மாதம் 7-ந்தேதிக்குள் வீடுகளை காலி செய்யவும் அந்த தனியார் நிறுவனம் தவறான செயலை செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

    மாஞ்சோலையை விட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 45 நாட்களில் வெளியேற வேண்டும் என தனியார் நிறுவனம் நிர்பந்தப்படுத்தி உள்ளது. தொழிலாளர்கள் தங்களை வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறி இதுகுறித்து புகார் தெரிவிக்க மாவட்ட கலெக்டரிடம் சென்றனர். ஆனால் அவர் அவர்களை உதாசீனப்படுத்தி உள்ளார்.

    முதலமைச்சர் மக்களின் எல்லா பிரச்சனைகளையும் நேரடியாக பார்க்க முடியாது. முதலமைச்சருக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பாக இருக்க கூடியவர் கலெக்டர்தான். ஆனால் அவரே தொழிலாளர்களை உதாசீனப்படுத்தியது தவறு.

    ஐ.ஏ.எஸ். படித்தவர் தொழிலாளர்களிடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார். பேசி முடிக்க வேண்டிய செயலை பிரச்சனையாக்கி உள்ளார். எனவே மாஞ்சோலை விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட வேண்டும். தேவைப்பட்டால் கலெக்டரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் தொழிலார்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்காத போது அவர்களிடம் தனித்தனியாக பேசி கடிதம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தனியார் நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்” என்ற அறிவிப்பு.
    • திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நடந்து முடிந்த இந்தப் சட்டபேரவை தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கும் தமிழ்மக்களுக்கும் பெரும் பயன்கள் தந்திடும் சில முக்கிய அறிவிப்புகளைச் சட்டப்பேரவை விதி 110 மூலம் வெளியிட்டு வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

    அதில் வருகிற இரண்டு ஆண்டுகளில் "முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்" மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்"-என்றும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு கிராமங்களின் வளர்ச்சியில் திராவிட மாடல் அரசின் அக்கறையை வெளிப்படுத்தினார்.

    75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்" என்ற அறிவிப்பு, ஓசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அறிவிப்பு, திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக சேதாரம் அடைந்துள்ள 6746 அடுக்குமாடி குடியிருப்புகளை 1149 கோடி மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்தல் ஆகிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புகளுக்கும் வழிவகை செய்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி 110 அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம் என்றும், எப்பொழுதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்பதைச் சொல்லிலும் செயலிலும் நிலை நாட்டியுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
    • கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இந்த கடினமான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
    • பாஜக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சனையை தேர்தல் நேர முழக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த கோரியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளை விடுவிக்கவும், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த கோரியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், சமீப வாரங்களில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகக் கவலைபடத் தெரிவித்துள்ளதோடு, IND-TN-10 MO 1379 மற்றும் IND-TN-09-MO-2327 என்ற பதிவெண்களைக் கொண்ட இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும் இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படருகளிலும் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் 1-7-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    1974 ஆம் ஆண்டிலிருந்தே, அப்போதைய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை நிலவுவதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தனது 27-6-2024 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை கோடிட்டுக் காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், தி.மு.க. தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது என்பதையும், தனது எதிர்ப்பை தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு இது சம்பந்தமாக மாநில அரசடன் முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்திய உரிமைகளுக்கும் நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத் தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்பொதைய ஒன்றிய அரசு தான் என்று தனது கடிதத்தில் அழுத்தத்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

    தனது தலைவரும் அப்போதைய தி.மு.க. தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தூக்கல் செய்து, அதில் 'ஒன்றிய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பிற்கு முரணானதாக இருக்கும்போது. கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறியிருந்ததை முதலமைச்சரி அவர்கள் நமது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

    தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சனையை தேர்தல் நேர முழக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் . தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தாத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும் எனத் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வலையில் மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரக்கினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைக்கர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • 63 தமிழ்நாடு மாநிலச் சட்டங்கள், என மொத்தம் 100 சட்டப் புத்தகங்களை வெளியிட்டார்.
    • தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம், தமிழ்நாடு விளம்பரப் பொருள்களின் கட்டாயத் தணிக்கைச் சட்டம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவினை முன்னிட்டு, தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 37 மையச் சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு மாநிலச் சட்டங்கள், என மொத்தம் 100 சட்டப் புத்தகங்களை வெளியிட்டார்.

    மையச் சட்டப் புத்தகங்களின் பட்டியல், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013, இந்திய அரசுச் சின்னம் (முறையற்று பயன்படுத்தப்படுவதைத் தடை செய்தல்) சட்டம், 2005, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம் 2005.

    பேரழிவினைச் சமாளித்தல் சட்டம் 2005, பெற்றோர்களையும் மூத்த குடிமக்களையும் பேணுதல் மற்றும் அவர்களின் நல் வாழ்வு சட்டம், 2007, பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாத்தல் சட்டம் 2012, சாலை வழி சரக்கூர்திச் சட்டம் 2007.

    முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம் 2019, மையக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்களின் பணி நிலைப் பிரிவில் ஒதுக்கீடு) சட்டம், 2019, சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலைத் தடைசெய்தல் மற்றும் உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டம் 2003.

    தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகச் சட்டம் 2018, மாற்றுப்பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019, தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம், தமிழ்நாடு விளம்பரப் பொருள்களின் கட்டாயத் தணிக்கைச் சட்டம்.

    தமிழ்நாடு திரைப் படங்கள் தொடர்பான விளம்பரங்களைக் கட்டாய மாகத் தணிக்கை செய்தல் சட்டம், தமிழ்நாடு மருந்துப் பொருள்கள் மற்றும் பிற பண்டகப் பொருள்கள் (சட்ட விரோதமாக வைத்தி ருத்தல்) சட்டம், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றச் சட்டம் உள்ளிட்டவை அடங்கும்.

    மேற்கண்ட 100 சட்டப் புத்தகங்களையும், தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இருந்து (www.tn.gov.in) பதிவிறக்கம் செய்து பயன் படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுஉள்ளது.

    • சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை.
    • தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன்.

    சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது.

    சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை.

    எனவே, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

    ×