search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.
    • பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாசிச அரசியல், மதவாத அரசியல், ஜாதி அரசியலை, முன்னெடுத்த பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.

    நாட்டு மக்கள் விரும்புவது நாட்டின் முன்னேற்றம், வளம், சமூக வளர்ச்சி, ஆகியவற்றை முன்னெடுத்த திராவிட நாயகன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக கட்டமைப்பு வளர்ச்சியைத்தான். இதனால் தான் இந்திய அளவில் 40-க்கு 40 தொகுதியிலும் வெற்றியினை பெற்று மகுடம் சூட்டி உள்ளனர்

    சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க. கட்சியுடன் பா.ம.க. கட்சி கூட்டணி சேர்ந்து, பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றியுள்ள முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினால் மட்டுமே வன்னிய மக்களுக்கு பல நல்லதிட்டங்களையும், சிறந்த இட ஒதுக்கீட்டையும் வழங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
    • உதவி சிறை அலுவலர்களுக்கு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பயிற்சியகத்தில் 9 மாத கால அடிப்படை பயிற்சி அளிக்கப்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 5 சிறை அலுவலர்கள் மற்றும் 44 உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    தற்போது பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள சிறை அலுவலர், உதவி சிறை அலுவலர்களுக்கு வேலூரில் அமைந்துள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பயிற்சியகத்தில் 9 மாத கால அடிப்படை பயிற்சி அளிக்கப்படும்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் டாக்டர். மகேஷ்வர் தயாள் கலந்து கொண்டனர்.

    • மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், மைசூர்-பெங்களுர், குற்றாலம், நவக்கிரக கோவில்கள் தொகுப்பு மற்றும் மூணார் என மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயண திட்டங்களும், சென்னை-மாமல்லபுரம், காஞ்சிபுரம்-மாமல்லபுரம், திருப்பதி, திருவண்ணாமலை, ஸ்ரீபுரம் தங்க கோவில், புதுச்சேரி என ஒரு நாள் சுற்றுலா பயண திட்டங்களும்.

    8 நாட்கள் பயணம் செய்யும் தமிழ்நாடு சுற்றுலா, கோவா-மந்த்ராலயம் சுற்றுலா பயண திட்டங்களும், 14 நாட்கள் பயணம் செய்யும் தென்னிந்திய சுற்றுலா பயண திட்டங்களும், யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இப்போது சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக 3 கோடி ரூபாய்எ மதிப்பிலான 35 இருக்கைகள் கொண்ட 4 பஸ்கள் மற்றும் 18 இருக்கைகள் கொண்ட 1 பஸ் என 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பஸ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பஸ்களில் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள குளிர்சாதன வசதி, மிதவை அமைப்பு வசதி, வாகனத்தின் இருப்பிடத்தை அறிய ஜி.பி.எஸ்.கருவி, ஒய்பை வசதி, ஒவ்வொரு இருக்கையிலும் போன் சார்ஜ் செய்யும் வசதி, 35 பயணிகளும் நீண்ட நாள் பயணத்திற்கான தங்கள் பொருட்களை தாராளமாக வைத்துக் கொள்ள மிகப்பெரிய அளவிலான பொருட்கள் வைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கா.ராமச்சந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் மணிவாசன், மேலாண்மை இயக்குநர் சமயமூர்த்தி கலந்து கொண்டனர்.

    • இரா. சம்பந்தன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
    • இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தன் இடத்தை எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது.

    சென்னை :

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

    தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர் சம்பந்தன். இறுதிமூச்சு வரையிலும் தமிழ்மக்களின் நலனுக்காகவே சிந்தித்தார். செயல்பட்டார். பாராளுமன்றவாதியாக அரைநூற்றாண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இலங்கையின் அரசியலில் பாரதூரமான தாக்கத்தைச் செலுத்தி வந்தன. இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக மிக நீண்டகாலம் அறவழியில் சம்பந்தன் போராடி வந்தார்.

    இந்தியாவோடும் தமிழ்நாட்டுடனும் மிகச் சிறந்த நட்புறவை சம்பந்தன் பேணி வந்தார். கலைஞர் அவர்களின் நண்பராகவும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் பல முறை அவரைச் சந்தித்து மிகவும் முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து சம்பந்தன் ஆலோசித்துள்ளார்.

    2015-ஆம் ஆண்டில் சம்பந்தன் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, "எனது அருமை நண்பர் நாவலர் அமிர்தலிங்கம் அவர்களுக்குப் பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது. இலங்கைத் தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவுகாலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கியிருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் நம்பிக்கையைத் தருகிறது" என்று கலைஞர் வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    2016-ஆம் ஆண்டு 13-ஆவது முறையாக கலைஞர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பந்தன் அவர்களும், "இதுவொரு சாதாரண சாதனையல்ல. எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனையாகும். இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு உங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தொடர வேண்டும்" என வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தன் அவர்களின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவு இலங்கை தமிழ் மக்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் பேரிழப்பாகும்.

    இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • தமிழ் நாடு அரசின் விண்வெளி கொள்கை அறிமுகம்.
    • ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    விண்வெளித்துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024 உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கொள்கையின் கீழ் குலசேகரப்பட்டினத்தை சுற்றி உள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை ஸ்பேஸ் பே (Space Bay) ஆக ஊக்குவித்து வளர்ச்சியை விரைவுப்படுத்த முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நான்கு மாவட்டங்களில் வளர்ச்சியை விரைவுபடுத்த நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. விண்வெளித்துறையில் அதிகரிக்கும் வளர்ச்சி, சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விண்வெளி கொள்கையை தமிழ் நாடு அரசு அறிமுகம் செய்கிறது.

    வலுவான தொழில்துறை, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்டவற்றை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    விண்வெளிக் கொள்கை தொடர்பாக தொழிற்துறையினர், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    • மரக்காணம் கள்ளச்சாராய பலி குறித்த சிபிசிஐடி விசாரணை என்ன ஆனது? இதுவரை விசாரணை நீண்டுகொண்டே இருக்கிறது.
    • காவல்துறை, உள்துறையை கையில் வைத்திருப்பது முதலமைச்சர் தான்.

    சென்னை:

    சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரத்தில் உண்மை வெளிவரவே சிபிஐ விசாரணை கோருகிறோம்.

    மரக்காணம் கள்ளச்சாராய பலி குறித்த சிபிசிஐடி விசாரணை என்ன ஆனது? இதுவரை விசாரணை நீண்டுகொண்டே இருக்கிறது. முடிவு இல்லை.

    எங்கும் கள்ளச்சாராயம். இதற்கெல்லாம் முழு பொறுப்பு திமுக அரசாங்கம், முதலமைச்சர் தான். காவல்துறை, உள்துறையை கையில் வைத்திருப்பது முதலமைச்சர் தான். இதற்கெல்லாம் அவர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

    துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அனைவரும் கேட்டார்கள். இது தொடர்பான துறை அமைச்சர் விளக்கம் கூட அளிக்கவில்லை.

    முதலமைச்சர் இந்த சம்பவத்தில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்கள் சொன்னார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரித்தால் முழு உண்மையும் வெளிவரும்.

    திமுக-வினர் கவனத்தை வளர்ச்சியில் செலுத்த வேண்டும். மதுவில் செலுத்தக்கூடாது என்று கூறினார்.

    • இந்திய அணி 2-வது முறை டி20 உலக கோப்பை-ஐ முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதை கொண்டாடுவதில் மகிழ்ச்சி!
    • இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ள இந்திய அணியினருக்கு ஒட்டுமொத்த நாடும் தலை வணங்குகிறது!

    சென்னை:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது. ஏற்கனவே 2007-ம் ஆண்டில் முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பையை டோனியின் தலைமையில் வென்று இருந்தது. 20 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வெல்வது இது 2-வது முறையாகும்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்ற நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    எங்கள் இந்திய அணி 2-வது முறை டி20 உலக கோப்பை-ஐ முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதை கொண்டாடுவதில் மகிழ்ச்சி!

    நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனை படைத்துள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்,

    17 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

    டி20 உலகக்கோப்பை 2024 இறுதிப் போட்டியின் கடைசி ஓவர்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. தலைசிறந்த டெத் ஓவர்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சூர்யகுமார் யாதவின் கேட்ச் அற்புதமானது. தொடக்கம் முதலே சிறப்பாக இந்திய அணி செயல்பட்டது. வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்,

    ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அற்புதமான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

    ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் எதிராக முரண்பாடுகள் இருந்தபோது, அணி கைவிடவில்லை, தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்றியது. இறுதியில் ஒரு மூச்சடைக்க கேட்ச் வெற்றியை உறுதிப்படுத்தியது!

    தொடர் முழுக்க சாம்பியன்களை போன்றே விளையாடினார்கள், இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில், டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் அற்புதமாக விளையாடி வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த ஐசிசி கோப்பையை வெல்வதற்கு நம்முடைய சாம்பியன் அணி முழு தகுதி பெற்றிருப்பது என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ளார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில்,

    கடும் நெருக்கடிகளை கடந்து ஆட்டத்தை வென்றெடுத்து இறுதியில் உலக கோப்பையை உறுதி செய்துள்ளது இந்திய அணி!

    மதம்-இனம் கடந்து இந்திய நாட்டிற்காக வியர்வை சிந்தி விளையாடி கனவுக்கோப்பையை கைப்பற்றி களத்தில் கண்ணீர் சிந்தியுள்ளனர் இந்திய வீரர்கள்!

    இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ள இந்திய அணியினருக்கு ஒட்டுமொத்த நாடும் தலை வணங்குகிறது! என்று தெரிவித்துள்ளார்.

    • காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் விவசாய பெருங்குடி மக்களுக்கு விரைவில் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
    • நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் 85 தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் 48 வேளாண்மை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இதன்மூலம், வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் விவசாய பெருங்குடி மக்களுக்கு விரைவில் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

    புதிதாக அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்ட தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் இப்பணியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுகளை வெளியிட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கியதற்காக முதலமைச்சருக்கும் தமிழ்நாடு அரசிற்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுகவின் நிலைப்பாடு வருத்தம் அளிக்கிறது.
    • ஒரு பக்கம் தேர்தல் தோல்வி, மறுபக்கம் சொந்த கட்சி நெருக்கடி, இவைகளால் அவை நிகழ்வுகளில் அதிமுக பங்கேற்கவில்லை.

    சென்னை:

    சட்டசபையில் அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுகவின் நிலைப்பாடு வருத்தம் அளிக்கிறது.

    * ஒரு பக்கம் தேர்தல் தோல்வி, மறுபக்கம் சொந்த கட்சி நெருக்கடி, இவைகளால் அவை நிகழ்வுகளில் அதிமுக பங்கேற்கவில்லை.

    * ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு திமுக தயார். ஆனால் அதிமுக தயாராக இல்லை என்று கூறினார்.

    • தமிழ்நாடு அமைதி மிகுந்த மாநிலமாக திகழ்கிறது.
    • எனது அமைச்சரவை சகாக்களால் தான் அரசுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாடு அமைதி மிகுந்த மாநிலமாக திகழ்கிறது.

    * திருவிழாக்களை எந்த பிரச்சனையும் இன்றி அமைதியாக நடத்தி காட்டி உள்ளோம்.

    * அறிவிக்கப்பட்ட 190 திட்டங்களில் 179 திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

    * குற்றங்களை குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    * தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் இந்திய அளவில் முதல் இடத்தை நோக்கி முன்னேறி வருகின்றன.

    * எனது அமைச்சரவை சகாக்களால் தான் அரசுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. அவர்களுக்கு நன்றி என்று கூறினார்.

    • கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள்.
    • கோவை-பொள்ளாச்சி, திருப்பூர்-நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு அளித்த பதில் உரையில் கூறி இருப்பதாவது:-

    இந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் 100 அறிவிப்புகள் உள்ளன. அதில் சிலவற்றை மட்டும் இப்போது அறிவிக்க விரும்புகிறேன். மீதமுள்ள அறிவிப்புகளை நான் படித்ததாகக் கருதி அவைக்குறிப்பில் சேர்த்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    * கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம், படப்பை, ஆதமங்கலம்புதூர், திருப்பரங்குன்றம் கோவில் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

    * அவை முன்னவர், நீர்வளத்துறை அமைச்சர் இன்று காலை நான் அவைக்கு வந்தவுடன், நெடுநாள் கோரிக்கை என்று தெரிவித்து, என்னிடம் ஒரு கோரிக்கையைக் கொடுத்தார். அதாவது, பேரணாம்பட்டில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார். அது நிச்சயமாகப் பரிசீலிக்கப்படும்.

    *கொளத்தூர், கேளம்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.

    * கோவை-பொள்ளாச்சி, திருப்பூர்-நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும்.

    * தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத்தொகை உயர்த்தப்படும். சிறப்பு இலக்குப் படையில் பணி யாற்றும் ஆளிநர்களுக்கும் அத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

    * ஊர்க்காவல் படையில் பணியாற்றும் ஆளிநர்கள் உயிரிழக்கும்போது அவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை நலன் மற்றும் கருணைக் கொடை நிதியில் இருந்து வழங்கப்படும் இழப்பீடு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும், காயமுற்றவர்களுக்கான நிதி 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

    * கோவை மாநகராட்சியை விபத்தில்லாத மாநகரமாக மாற்ற 5 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

    * தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் 5 கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் புதிய ஆயப்பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

    * தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1,500 தற்காப்பு உடைகளும், மீட்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறிய உபகரணங்களுடன் கூடிய 3,000 மீட்பு உடைகளும் 4 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    * ஏரல், கருமத்தம்பட்டி, மடத்துக்குளம், கோவளம், படப்பை, திருநெல்வேலி மாநகரம், புதுவயல் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் நிறுவப்படும்.

    * சமயபுரம், மேடவாக்கம், பெரம்பலூர், தியாகதுருகம், நீடாமங்கலம், கொளத்தூர் ஆகிய 6 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.

    அது மட்டுமல்ல; அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்களைச் சார்ந்துள்ள தாய், தந்தையரையும் பயனாளிகளாக சேர்த்திட வேண்டும் என்று காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களிடம் இருந்தும் கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன. அவற்றை உரிய முறையில் ஆராய்ந்து, அரசு அலுவலர்களைச் சார்ந்து வாழும் அவர்களது பெற்றோருக்கும் மருத்துவக் காப்பீட்டின் பலன் சென்றடையும் வகையில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் பெற்று, தற்போது நடைமுறையில் உள்ள புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைக்கப்படும். மேலும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறும் அரசு அலுவலர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை களைந்திட தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்திடவும், தேவைப்படும் நெறிமுறைகளை வழங்கிடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (45), நடுச்சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி (40), வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (35) மற்றும் மோகன் (30) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    ×