search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • நீட் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து எதிர்த்து வருகிறோம்.
    • நீட் தேர்வு முறைகேடுகளால் பல ஆண்டுகாலம் உழைத்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. நீட் முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2017-ம் ஆண்டு நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது.

    * நீட் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து எதிர்த்து வருகிறோம்.

    * நீட் விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை நிலவி வருகிறது.

    * மருத்துவ துறையிலும் சுகாதார குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது.

    * முனைவர் அனந்த கிருஷ்ணன் பரிந்துரையின்பேரில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய அடித்தளமிட்டவர் கருணாநிதி.

    * நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கிய நிலையில் மருத்துவப்படிப்பு மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது.

    * நீட் தேர்வு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் அண்மைக்காலமாக எழுந்து வருகின்றன.

    * நீட் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

    * அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் அரங்கேறிய சம்பவங்கள் மாணவர்களின் நம்பிக்கையை நிலை குலையச் செய்துள்ளன.

    * நீட் தேர்வு முறைகேடுகளால் பல ஆண்டுகாலம் உழைத்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    * நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் இந்தியாவின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.

    • குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தி வருகிறது.
    • நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது,

    இன்று MSMEDay!

    நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS), பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்கப் புத்தொழில் நிதி (TN SC/ST Fund), சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகள், தமிழ்நாடு தென்னை நார்க் கொள்கை 2024, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை – 2023

    உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தி வருகிறது.

    புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் MSME-க்கள் இன்னும் பெரும்பங்காற்றத் தேவையான ஊக்குவிப்பையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம்! என்று கூறியுள்ளார்.

    • இளைய சக்தியான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.
    • ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில் 110-வது விதியின் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப்போகும் மாபெரும் அறிவிப்பு ஒன்றையும், தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்போகும் அறிவுலகம் வரவேற்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்தபிறகு, தமிழ்நாடு அனைத்து  துறைகளிலும் வளர்ந்து வருகிறது. அதில் மிக முக்கியமானது பெருந்தொழில்கள். வளர்ச்சிமிகு தமிழ்நாடாகவும், அமைதிமிகு தமிழ்நாடாகவும் இருப்பதால், தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருந்து தொழில் தொடங்குவதற்கு வந்து கொண்டே இருக்கிறார்கள்.

    இந்த தொழில் நிறுவனங்கள் மூலமாக தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சி அடைகிறது என்பது மட்டுமல்ல; தமிழ்நாட்டின் இளைய சக்தியான இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

    2022-ம் ஆண்டிற்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 'நம்பர்-1' மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

    புதுதொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில், 2020-ம் ஆண்டில் கடைசி நிலையில் இருந்த தமிழ்நாடு, தற்போது சிறந்த செயற்பாட்டாளர் அந்தஸ்தை பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

    இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டிற்குள் 'ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக' உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காக, தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து வருவதை இதன்மூலம் அறியலாம்.

    அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களை பரவலாக உருவாக்கி வருகிறோம். இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது.

    இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரத்தினை, தமிழ்நாட்டின் முக்கியமான பொரு ளாதார வளர்ச்சி மையமாக உருவாக்கு வதற்காக, அங்கு நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில், ஓசூர் நகரத்திற்கான ஒரு புதிய பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு, அது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஓசூர் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என இந்த அரசு கருதுகிறது.

    ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்பதனை இந்த மாமன்றத்தில் நான் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அடுத்து, 2-வது அறிவிப்பை வழங்க விரும்புகிறேன். திராவிட இயக்கம் என்பது மாபெரும் அறிவியக்கம். அதனால் தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல் தலைமை நிலையத்துக்கு பேரறிஞர் அண்ணா, 'அறிவகம்' என்று பெயர் சூட்டினார்.

    தற்போதைய தலைமை நிலையத்துக்கு 'அறிவாலயம்' என்று பெயர் சூட்டினார் கலைஞர்.

    திராவிட முன்னேற்ற கழகம் எங்கெல்லாம் கிளை பரப்பியதோ, அங்கெல்லாம் படிப்பகங்கள் உருவாக்கப்பட்டன. அரசியல் இயக்கமாக மட்டுமல்லாமல், தமிழ் இலக்கிய இயக்கமாகவும் வளர்ந்தது.

    வாசிப்பதற்கும் சுவாசிப்பதற்கும் வேறுபாடு காணமுடியாத வாழ்க்கை வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. பாதி வரை படித்த புத்தகங்களின் மீதியை படிப்பதற்கு ஏதுவாக அறுவை சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னவர் பேரறிஞர் அண்ணா.

    அந்த பேரறிஞரின் நூற்றாண்டைக் கொண்டாடி மகிழ்ந்த தலைவர் கலைஞர், கோட்டூர்புரத்தில் எட்டு மாடிகள் கொண்ட, ஒரே நேரத்தில் 1200 பேர் உட்கார்ந்து படிக்கிற வகையில், 3 லட்சத்து 33 ஆயிரம் சதுர அடிகள் கொண்ட நூலகத்தை உருவாக்கி, அதற்கு 'அண்ணா நூற்றாண்டு நூலகம்' என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தார்.

    அந்த வகையில், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்களும் நூலகங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த மதுரையில் 15-7-2023 அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு, என்னால் திறந்து வைக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் வாழ் பொதுமக்களுக்கும் இளைய தலைமுறைக்கும் பயன்படும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம், கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தோம். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    அந்த வரிசையில் காவிரி கரையில் அமைந்த மாநகரமான திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்பதை இந்த அவைக்கு மட்டற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அது அமைந்திடும். தினந்தோறும் திட்டங்கள் தீட்டும் நாளாக, விடியும் நாளாக, விடியல் தரும் நாளாக உருவாக்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடம் தேர்வு செய்யப்பட்டு, கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
    • கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாட்டின் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இந்த விமான நிலையம் ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

    முன்னதாக சென்னையின் 2-வது விமான நிலையத்தை கட்டுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதற்காக காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு அவற்றை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

    எனினும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியதில் இருந்தே மனு அளித்து வந்த கிராம மக்கள், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    மத்திய, மாநில அரசுகள் இணைந்து உருவாக்கும் இந்த விமான நிலையத்துக்கான பணிகள் அடுத்தக்கட்டத்திற்கு செல்லாமலே உள்ளது. இந்த நிலையில், ஓசூரில் புதிய விமானம் நிலையம் கட்டுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    விமான நிலையம் பற்றிய அறிவிப்பு மட்டுமே வெளியாகி உள்ள நிலையில், இதற்காக இடம் தேர்வு செய்வது, அதனை கையகப்படுத்துவது என அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளியாகும். அதிக தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமாக ஓசூர் இருக்கிறது.

    எனினும், ஓசூரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்களே அங்குள்ள நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், 2 ஆயிரம் ஏக்கரில் ஓசூரை சுற்றி எத்தனை கிராமங்கள் இடம்பெறும், அந்த கிராமங்கள் எவை என்பது தற்போதைக்கு தெரியவில்லை.

    நிலம் தேர்வானதும், அங்குள்ள மக்கள் வேறொரு இடத்திற்கு செல்ல வலியுறுத்தப்படுவர். இது தொடர்பாக மக்களுக்கு நோட்டீஸ் வழங்குவது, பத்திரிகை செய்தியாக தெரிவிப்பது போன்ற நடைமுறைகள் அரசு சார்பில் பின்பற்றப்படும்.

    இதைத் தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்த வருவாய் துறையை சேர்ந்த நில எடுப்பு அதிகாரிகள் தனியே நியமிக்கப்படுவர். இவர்களை வைத்து நிலம் கையகப்படுத்தப்படும். மாநிலத்திற்கு புதிய விமான நிலையம் கட்டுவதில் அரசு இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதை அரசு எப்படி கையாளும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இந்த நிலையில், ஓசூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பு அந்த மாவட்ட மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

    • திருச்சி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் எனும் மாபெரும் அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
    • திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் டெல்டா மாவட்ட மக்களின், இளைஞர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

    சென்னை:

    திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக சட்டப்பேரைவையில் 110 விதியின் கீழ் இன்று அறிவித்துள்ளார். இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் "திருச்சி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்" எனும் மாபெரும் அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.

    அறிவார்ந்த சமுதாயத்தின் அடையாளச் சின்னத்தை திருச்சியில் கட்டமைக்கும் முதலமைச்சருக்கு, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கு திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் டெல்டா மாவட்ட மக்களின், இளைஞர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

    • முழுமையான தகவல்களை உள்வாங்கி பேசி இருக்கவேண்டும். தவறான தகவல்களை கூறி மக்களை குழப்பியுள்ளார்.
    • முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மீது உரிமை மீறல் பிரச்சனையை பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டுவருவார்கள்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போ அவர் கூறியதாவது:-

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசு, மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். வன்னியர்களின் வாக்குகளை வாங்கிய தி.மு.க. இட ஒதுக்கீடு மூலம் பிரதிநிதித்துவம் பெறுவதை தி.மு.க. விரும்பவில்லை. இதற்கு தி.மு.க. சொல்லும் காரணம் சரியானது அல்ல. கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிய நிலையில் உள்ளதை புள்ளி விவரங்களின் மூலம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தி.மு.க. கூறியதை பா.ம.க., வன்னியர் சங்கம் ஏற்காது. இதற்காக நான் மாபெரும் போராட்டங்களை நடத்தியுள்ளேன். தற்போது வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்க கோரி மாபெரும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

    10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால் வன்னியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இப்படி ஒரு பொய்யான தகவலை அவர் கூறியுள்ளார். உயர்கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படாமல் இருந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ( வன்னியர்) வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து முழுமையான தகவல்களை உள்வாங்கி பேசி இருக்கவேண்டும். தவறான தகவல்களை கூறி மக்களை குழப்பியுள்ளார்.

    முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மீது உரிமை மீறல் பிரச்சனையை பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டுவருவார்கள். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சி.பி. ஐ. விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். இது குறித்து பா.ம.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    இதில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் தி.மு.க. தான் காரணம். சாராயத்தை அறியாமல் இருந்த ஒரு தலைமுறைக்கு 1972-ம் ஆண்டு அறிமுகம் செய்தது தி.மு.க.தான் காரணம். எனவே முழு மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்தவேண்டும். நெல்லுக்கு தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை குறைவு. குவிண்டால் ஒன்றுக்கு ரூ 800 உயர்த்தி தரவேண்டும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டலாம் என்று கூறியது இரு மாநில உறவுவை கெடுக்கிறது. 22 அணைகள் கட்டியபின்பு இனி அணை கட்டினால் பாலாறு பாலைவனமாகும். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுப்பதில்லை. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. சட்டப்பேரவை 100 நாட்கள் நடத்தவேண்டும். சட்டப்பேரவை நிகழ்வுகளை அடுத்தகூட்டத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
    • 2022-ம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    * திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இதில் முதன்மையானது தொழில் துறை.

    * உலகம் முழுவதும் இருந்து பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருகிறார்கள்.

    * இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    * 2022-ம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது.

    * புத்தொழில் வளர்ச்சியில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    * மின் வாகனங்கள் உற்பத்தியில் ஓசூர் முக்கிய பங்காற்றி வருகிறது.

    * ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியம் என அரசு கருதுகிறது.

    * ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.

    * கோவையில் அறிவிக்கப்பட்ட நூலக கட்டுமான பணி விரைவில் தொடங்கும்.

    * திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றார்.

    • முதலமைச்சரின் ராஜினாமாதான் அவர்களின் நோக்கம்.
    • மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்த, வலிமை மிக்கதாக இருக்கும்.

    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவிலில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாதத்திற்குரியது. காங்கிரசை பொறுத்தவரை மதுவிலக்கு என்பதில் உறுதி யாக உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க., கட்சிகள், கள்ளக்குறிச்சி மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கிறீர்களா அல்லது அந்த மரணத்தை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் செய்கிறீர்களா என்பது தெரியவில்லை.

    இந்த கட்சிகள் தங்களின் மது கொள்கையை வெளிப்படுத்த மறுக்கின்றன. இந்த கட்சிக்காரர்கள் எல்லாம் அந்த ஊரில் மது விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அழகிரி, ஸ்டாலினை வீழ்த்த மதுவை கையில் எடுத்திருக்கிறார்கள். முதலமைச்சரின் ராஜினாமாதான் அவர்களின் நோக்கம். பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மக்கள் மீது இல்லை. இந்த அரசு நீடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்த, வலிமை மிக்கதாக இருக்கும்.

    தவறு செய்தவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். குற்றவாளிகளை பாதுகாக்க வில்லை. குற்றத்தை நியாயப்படுத்தவில்லை. சரியான பாதையில் அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என்கின்ற கருத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    இவ்வாறு அழகிரி கூறினார்.

    • மத்திய அரசு இனியும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக நடத்திட வேண்டும்.
    • தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சாதிவாரிக் கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்டை உடனே நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் இடஒதுக்கீட்டுக்கு அடிப்படையான சாதிவாரிக் கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு இனியும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக நடத்திட வேண்டும்.

    ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணமாக இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கவனத்தில் கொண்டு அதற்கான முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்!

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை 01.09.2024 முதல் நடைமுறைக்கு வரும்.

    தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி 2024-25 ஆம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் காரீப் 2024-25 நெல் கொள்முதல் பருவத்திற்கு ஆதார விலையுடன் ஊக்கத்தொகையும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (26.06.2024) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், கடந்த 2023-2024 காரீப் கொள்முதல் பருவத்தில் 25.06.2024 வரையில் 3,175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,72,310 விவசாயிகளிடமிருந்து 29,91,954 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.6,442.80 கோடி விற்பனை தொகையாக வழங்கப்பட்டது ஆகிய விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும், அதே அடிப்படையில், இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2024-2025 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

    இந்த ஆண்டு 12.06.2024 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட இயலாத சூழ்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவைத் தொகுப்பு திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்திட உத்தரவிட்டார்.

    இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் விவசாயிகளின் நலன் கருதி காரீப் 2024-2025 பருவத்திற்கான நெல் கொள்முதலினை 01.09.2024 முதல் மேற்கொள்ள மத்திய அரசை, இவ்வரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க மத்திய அரசு தமிழ்நாட்டில் காரீப்2024-2025 பருவத்திற்கான நெல் கொள்முதலினை 01.09.2024 முதல் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

    மத்திய அரசு அண்மையில் காரீப் 2024-2025 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300/-என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2.320/- என்றும் நிர்ணயித்துள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, 2024-2025 காரீப் கொள்முதல் பருவத்திற்கு (Kharif Marketing Season) சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து வழங்கிடவும், அதன்படி விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2.405/- என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450/- என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தவிட்டுள்ளார்.

    இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை 01.09.2024 முதல் நடைமுறைக்கு வரும்.

    அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, அடுத்துவரும் 2025-26 நிதியாண்டில், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500/- என்ற வீதத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • ராகுல்காந்தி முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "புதிய பதவிக்கு தேர்வாகியுள்ள எனது சகோதரர் ராகுல் காந்தியை இந்தியா வரவேற்கிறது. மக்களவையில் அவரது குரல் தொடர்ந்து வலிமையாக ஒலிக்கட்டும்" என்று பதிவிட்டு வாழ்த்தினார்.

    இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிவை பகிர்ந்து ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

    அதில், "தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்" என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

    • தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கு எடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
    • முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தைக் காங்கிரஸ் பேரியக்கம் வரவேற்கிறது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கூறினார்.

    சென்னை:

    மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார்.

    அப்போது பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் கருத்து. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கு எடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.

    இதையடுத்து, தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி ஆதரவு தெரிவித்தனர்.

    இந்தியாவில் வேலைவாய்ப்புக்கும் சமூக நீதிக்கும் முதல் முதலில் குரல் எழும்பியது தமிழ்நாட்டில் இருந்துதான். மத்திய அளவில் சமூக நீதிக்கு எதிரான, உண்மைக்குப் புறம்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 2011ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை எதற்காக மத்திய அரசு அறிவிக்கவில்லை. இதுவே இவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்பதற்கு அடையாளம். முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தைக் காங்கிரஸ் பேரியக்கம் வரவேற்கிறது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கூறினார்.

    "வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 10.5 % இட ஒதுக்கீடு செல்லாது என்ற நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. மத்திய அரசுக்கு அனுப்பப்படும் தமிழ்நாடு அரசின் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான தரவுகளைத் தமிழ்நாடு அரசே திரட்டவேண்டும் என எம்.எல்.ஏ. வேல்முருகன் வேண்டுகோள் விடுத்தார்.

    இதையடுத்து அவை உறுப்பினர்கள் தீர்மானத்தின் விவாதத்தில் பங்கேற்று பேசி ஆதரவு தெரிவித்தனர்.

    இதன்பிறகு, நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    ×