search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • எதிர்க்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் சபையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல.
    • இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது.

    சென்னை :

    தமிழக சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப்பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர், குறிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். தாங்களும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

    ஆனாலும், மக்கள் பிரச்சனையைப் பற்றி சட்டசபையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் சபையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல.

    பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அ.தி.மு.க. மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால், நாம் இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் தி.மு.க. நிலைப்பாடு.
    • 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது.

    சென்னை:

    10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் சட்டசபையில் நடைபெற்றபோது, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி இந்த கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    அதன்படி இன்று சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    * சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம்.

    * சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் தி.மு.க. நிலைப்பாடு.

    * 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது.

    * மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்.

    * சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவது தான் முறையாக இருக்கும்.

    * மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    * தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கு எடுப்பை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.

    இதையடுத்து தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் பேசினர்.

    அப்போது, முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆதரவு தெரிவித்தார்.

    • வெறும் வார்த்தையாக அல்ல, ஆதாரங்களோடு தான் அவைக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
    • ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம்.

    சென்னை:

    முதல்-அமைசசர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இளைஞர் நலனை, இளைஞர் எதிர்காலத்தை, இளைஞர்களின் மேன்மையை எப்போதும் மனதில் வைத்து திட்டங்களைத் தீட்டி வருவது திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை. இளைய சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மிக மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறோம். அதனை அடிப்படையாகக் கொண்ட அறிவிப்பைத்தான் இப்போது வெளியிட விரும்புகிறேன்.

    வளமான அரசாக, அமைதியான அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் வளம் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அதன்மூலம் நமது இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றிடவும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறோம். நமது மாணவச் செல்வங்களுக்குத் தரமான பள்ளிக் கல்வியையும் உயர்கல்வியையும் அளிக்கின்றோம்.

    அத்துடன் அவர்களது வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கல்வியின் மூலமாக ஒரு அறிவுசார் பொருளாதாரத்தை நாம் உருவாக்கி வருகிறோம்.

    இவற்றை மனதில் கொண்டு உருவாக்கப் பட்டவைதான் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள். அடுத்த தேர்தலை அல்ல, அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் அரசுதான் நமது திராவிட மாடல் அரசு.

    கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 நபர்களுக்குப் பல்வேறு அரசுத்துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.

    அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    அரசுத் துறைகளில் மட்டுமல்லாது, பெருந்தொழில் மற்றும் குறு, சிறு நிறுவனங்களின் மூலமாகவும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளோம்.

    நமது அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்பு களின் காரணமாகவும், மிகச்சிறப்பான முறையிலே நடத்தி முடிக்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைக்கப் பெற்ற பெரும் முதலீடுகள் காரணமாகவும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெறும் வார்த்தையாக அல்ல, ஆதாரங்களோடு தான் இதனை இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

    தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் ஒன்றிய அரசின் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்டது.

    இது ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஓர் அமைப்பாகும். இந்த நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 77 லட்சத்து 78 ஆயிரத்து 999 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.

    இதுமட்டுமின்றி, என்னுடைய கனவுத் திட்டம் என்று நான் எப்போதும் பெருமையோடு குறிப்பிடக் கூடிய "நான் முதல்வன் திட்டம்" மூலமாகச் சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டு வருகிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலமாக இதுவரை, 3 லட்சத்து 6 ஆயிரத்து

    459 நபர்களுக்குத் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சத்து ஆயிரத்து 596 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.

    இந்த இரண்டையும் சேர்த்து, தமிழ்நாடு அரசின் முயற்சியினால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், மொத்தம் 5 லட்சத்து 8 ஆயிரத்து 55 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    'நம் இளைஞர்கள்தான் நம் பலம். அவர்கள்தான் நமது எதிர்கால வளத்திற்கு அடிப்படையானவர்கள்!' இதனை உணர்ந்த காரணத்தி னால், தமிழ்நாடு அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

    அரசுப் பணியினை எதிர் நோக்கி இருக்கும் ஆயிரக் கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியினை பேரவையில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 41 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும்.

    அதாவது வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும்.

    இவற்றை மொத்தமாக சேர்த்துப் பார்க்கையில், 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து அமைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜூலை 1-ம் நாள் முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சி தொடங்க உள்ளது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் க.நந்தகுமார் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I-க்கான பணிகளில் மொத்தம் 95 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், 14 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    பணிநியமன ஆணைகள் பெற்றுக்கொண்ட பயிற்சி அலுவலர்களுக்கு வரும் ஜூலை 1-ம் நாள் முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சி தொடங்க உள்ளது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் க.நந்தகுமார் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய நீதியரசர் கோகுல்தாஸ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது
    • எதிர்க்கட்சித் தலைவர் அப்போது முதலமைச்சராக இருந்தபோது, அவர் மீது சி.பி.ஐ. விசாரணை கொண்டுவரபட்டதை அவர் மறந்திருக்க மாட்டார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இதே அவையில் கடந்த 20.6.2024 அன்று ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இந்த அவையிலே விரிவாகப் பேசியிருக்கிறார்கள். அதற்கு நானும் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறேன்.

    அன்றையதினம் அவையில் இருந்து, முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது கருத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும். மாறாக, தேவையற்ற பிரச்சனையை அவை கூடியதும் கிளப்பினார்கள்.

    அவையினுடைய விதி முறைப்படி, கேள்வி நேரம் முடிந்ததற்குப் பிறகுதான் மற்ற அலுவல்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படித்தான் விதி இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விதிமுறையை மீறி, உடனடியாக அந்தப் பிரச்சனையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று இங்கே ஒரு பெரிய ரகளையே செய்திருக்கிறார்கள்.

    கேள்வி-பதில் நேரம் முடிந்ததும் கள்ளக்குறிச்சி பிரச்சனையைப் பற்றித் தான் விவாதிக்கப் போகிறோம் என்று சபாநாயகர் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லியும், அதையும் மீறி அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு, ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு அப்படி நடந்து கொண்டார்கள்.

    அதற்குப்பிறகு நீங்கள் வேறு வழியில்லாமல் அவர்களை அன்றைக்கு அவையிலிருந்து வெளியேற்றியிருக்கிறீர்கள். அதற்குப்பிறகுதான் நான் அன்றைக்கு அவைக்கு வந்தேன்; வந்ததற்குப்பிறகு இதைக் கேள்விப்பட்டவுடன், மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறபோது எதிர்க்கட்சி, அதுவும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அவையில் இருக்க வேண்டும்;


    எனவே மறுபரிசீலனை செய்து இதை சரிசெய்ய வேண்டுமென்று நான் உங்களிடத்திலே வேண்டுகோள் வைத்தேன். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அவர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதித்தீர்கள். ஆனால், அதற்குப்பிறகும் அதையும் ஏற்றுக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் இந்த அவைக்கு வந்து ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு இப்ப டிப்பட்ட காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    வேறு ஒன்றுமல்ல; பாராளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது. அது அவர்களுடைய மனதை உறுத்துகிறது; கண்ணை உறுத்துகிறது. அதை மக்களிடமிருந்து எப்படி மாற்றுவது என்பதற்காக இந்தக் காரியத்தைத் திட்டமிட்டு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்த போது, அதற்கு என்னென்ன பரிகாரம் செய்யப்போகிறோம் என்பதைப் பற்றியெல்லாம் நான் பல்வேறு விளக்கங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

    கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய நீதியரசர் கோகுல்தாஸ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது; சி.பி.சி.ஐ.டி. வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளது; உள்துறைச் செயலாளரையும், டி.ஜி.பி.யையும் ஆய்வு செய்து, உடனடியாக அறிக்கை தரச் சொல்லி இருக்கிறேன்; குற்றவாளிகளில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; பலர் தேடப்பட்டு வருகிறார்கள்;

    கள்ளச்சாராயம், விஷச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன; இறந்தோர் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் தரப்பட்டு, பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கை பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது; மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டு உள்ளார்; மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்; மதுவிலக்கை கவனித்து வந்த ஏ.டி.ஜி.பி. கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை 24 மணி நேரத்தில் இந்த அரசு எடுத்திருக்கிறது என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

    இதற்கிடையில் நேற்றைய தினம் கூட ஆர்ப்பாட்டங்களெல்லாம் செய்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டம் செய்வது என்பது நியாயம தான். ஜனநாயகத்தில் எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கிறது. ஜனநாயகத்திலே இருக்கக்கூடிய உரிமை அது. யார் வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் செய்யலாம். அது நியாயமான முறையில் ஆர்ப்பாட்டமாக இருந்தால், அரசு அதற்கு அனுமதி அளிக்கும். ஆனால், அந்த ஆர்ப்பாட்டத்திலேகூட திரும்பத் திரும்ப சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று பேசியிருக்கிறார்கள்.

    இதே எதிர்க்கட்சித் தலைவர் அப்போது முதலமைச்சராக இருந்தபோது, அவர் மீது சி.பி.ஐ. விசாரணை கொண்டுவரபட்டதை அவர் மறந்திருக்க மாட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எதிர்க்கட்சித் தலைவர் மீது ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி, அதிலே முறைகேடு நடந்திருக்கிறது; அதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்று நீதிமன்றத்திற்குச் சென்றபோது, அதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சி.பி.ஐ. மீது நம்பிக்கை இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு, அந்தச்சவாலை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சி.பி.ஐ. மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான், அதற்குத் தடை உத்தரவு வாங்கிய வீராதி வீரர்தான் இன்றைக்கு இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இதுகுறித்து சபாநாயகர்தான் முடிவெடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • 3 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • பெண்களுக்கான திட்டத்தை அரசு மக்களிடம் கொண்டு செல்லும்போது சமூகத்தில் மாற்றம் ஏற்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்.

    * அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் அரசு தி.மு.க. அரசு.

    * தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின், 32 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

    * 65,483 பேர் கடந்த மூன்று ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    * உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    * 3 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * 2026 ஜனவரிக்குள் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    முன்னதாக, நெல்லையில் சிபிஎம் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருவேறு சமூகத்தை சேர்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்யப்பட்டு அது தொடர்பான புகைப்படம் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது. மணமகள் வீட்டார்கள் சிபிஎம் அலுவலகத்தை சேதப்படுத்தி உள்ளார்கள். இந்த சம்பவத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    புதிய சட்டத்தை கொண்டு வருவதை விட, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதே சரியானது.

    கல்வி, வேலைவாய்ப்பில் சமூகம் உயரும்போது, இதுபோன்ற குற்றங்கள் குறையும்.

    பெண்களுக்கான திட்டத்தை அரசு மக்களிடம் கொண்டு செல்லும்போது சமூகத்தில் மாற்றம் ஏற்படும். புதிய சட்டங்களுக்கான தேவையும் குறையும்.

    இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

    • மீண்டும் மீண்டும் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் அ.தி.மு.க. செயல்படுகிறது.
    • ஆர்ப்பாட்டம் செய்ய எல்லா கட்சிகளுக்கும் இடமும், உரிமையும் உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் உத்தரவை அடுத்து அவைக் காவலர்கள் அ.தி.மு.க. வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றினர்.

    இதன்பின், சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    * அவை கூடியதும் தேவையற்ற பிரச்சனைகளை அ.தி.மு.க.வினர் கிளப்புகின்றனர்.

    * கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கடந்த 20-ந்தேதி சபையில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    * வேண்டுமென்றே திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அ.தி.மு.க.வினர் முயற்சி.

    * மீண்டும் மீண்டும் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் அ.தி.மு.க. செயல்படுகிறது.

    * மக்களவை தேர்தல் தோல்வியால் அதிமுக விரக்தியில் செயல்படுகிறது.

    * கள்ளக்குறிச்சி சம்பவத்தின் உண்மையை அறிய நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    * கள்ளக்குறிச்சியில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    * பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

    * ஆர்ப்பாட்டம் செய்ய எல்லா கட்சிகளுக்கும் இடமும், உரிமையும் உள்ளது.

    * நியாயமான ஆர்ப்பாட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்கிறது.

    * இந்த விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
    • அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

    முன்னாள் பிரதமர் நீதி காவலர் வி.பி.சிங்-கின் 94-வது பிறந்தநாளான இன்று அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    வி.பி.சிங் சிலை நிறுவப்பட்ட பிறகு அரசு சார்பில் முதல் பிறந்தநாளான இன்று மரியாதை செலுத்தப்பட்டது.

    • உதயநிதி ஸ்டாலின் கூட விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கூறிய அனைவரும் நன்றி கூறும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒ. பன்னீர்செல்வம், தமிழிசை சௌந்தரராஜன், சீமான், தொல். திருமாவளவன், அன்புமணி இராமதாஸ், டி.டி.வி. தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவரான விஜய்க்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தை ஆளும் திமுகவிலிருந்து யாரும் வாழ்த்து சொல்லவில்லை. குறிப்பாக தமிழ் திரைத்துறையில் நடிகராக தயாரிப்பாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கூட விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லை.

    நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து சொல்லி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை.

    ஆனால் விஜயின் இந்த வாழ்த்து செய்திகளே ஒருகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளானது.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக விஜய் அவரது எக்ஸ் பக்கத்தில் திமுக அரசிற்கு எதிராக பதிவிட்டதும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து பேசியதும் திமுக அரசிற்கு நெருக்கடியை உருவாக்கியது.

    இதனால் தான் விஜய்க்கு திமுகவிலிருந்து யாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

    • மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக் காட்டியது போன்று மீனவர்களை கைது செய்தல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்வதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அச்சமுதாயத்தினரிடையே மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் கடந்த 22.06.2024 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள். IND- TN-10-MM-84, IND-TN-10-MM-88 IND-TN-10-MM-340 எண்களைக் கொண்ட மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் தெரிவித்துள்ளார்.

    எனவே, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர். ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும் அடிப்படைத் தேவைகளையும் வழங்கிட அனுமதி தர வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்களை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • பா.ஜ.க. கூட்டணியில் தான் பா.ம.க. உள்ளது.
    • சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடப்பில் உள்ளதாகவும், சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

    இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    இப்போது பா.ஜ.க. கூட்டணியில் தான் பா.ம.க. உள்ளது. பா.ஜ.க.வுடன் பேசி நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தான் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்.

    ஏற்கனவே இடஒதுக்கீடு அமல்படுத்தி நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண வேண்டுமென்றால், சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் விரைந்து நடத்தப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊரக சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • 3 ஆண்டில் 16,000 கி.மீ., நீளமுள்ள சாலை, மேம்பால பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் 4-வது நாளான இன்று கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

    வில்லிவாக்கம் பகுதியில் பணிபுரியும் மகளிருக்கான மகளிர் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

    இதையடுத்து 110 விதியின் கீழ் அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் தொடர்ந்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம்.

    * ஊரக சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    * கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி சாலை மேம்பாட்டை தமிழக அரசு செய்து வருகிறது.

    * பேருந்து செல்லும் சாலை, குக்கிராமங்களை இணைக்கும் சாலைகளை மேம்படுத்த அரசு தொடர்ந்து முன்னிலை அளிக்கிறது.

    * தரமான சாலைகள் கிராப்புற மக்களின் வருமானத்தை உயர்த்துவதாக அமைகிறது.

    * கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 8 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊராட்சி, ஒன்றிய சாலைகளை மேம்படுத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

    * 3 ஆண்டில் 16,000 கி.மீ., நீளமுள்ள சாலை, மேம்பால பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    * கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது

    * 2 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள 10 ஆயிரம் கி.மீ. சாலைகள் ரூ.4000 கோடியில் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.

    ×