search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
    • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் வழங்கப்படவில்லை.

    காவிரிப் படுகையில் சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவ்வாறு அணை கட்டுவதால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தி வைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த கடிதத்தில் தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமோ, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், தமிழ்நாடு நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளவாறு, இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம், கேரளாவின் பவானி மற்றும் அமராவதி (பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் அடங்கிய முழு விவரங்களை அளிக்க வேண்டுமென்று முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

    இந்தப் பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு இவ்விவரங்கள் மிகவும் தேவை என்பதால், இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்கவும், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை இந்தப் பணியைத் நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    • விபத்தில் காயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
    • விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் திருவம்பலபுரம் கிராமம் தோட்டபள்ளி அருகில் நேற்று அதிகாலை டிரக்கர் வாகனமும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்ட விபத்தில் டிரக்கர் வாகனத்தில் பயணம் செய்த திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கரைசுத்துபுதூர் கிராமம், தெற்கு புலிமான்குளத்தைச் சேர்ந்த சந்தனகுமாரி மற்றும் முத்துச்செல்வி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

    மேலும் இவ்விபத்தில் காயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னைக்கு அருகில் கூகுள் பிக்சல் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • தகவல் தொழில்நுட்பத்துறையில் உயர்கல்வி பெற்றுள்ள தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    சென்னை:

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் தொழிற்சாலை தமிழகத்தில் முதல் முறையாக அமைகிறது. கூகுள் நிறுவன அதிகாரிகள் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முன் வந்துள்ளார்கள்.

    சென்னைக்கு அருகில் கூகுள் பிக்சல் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னைக்கு வர உள்ளனர்.

    தகவல் தொழில்நுட்பத்துறையில் உயர்கல்வி பெற்றுள்ள தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மோடி தமிழர் இன வெறுப்பை காட்டியிருப்பது மிகவும் கீழ்த்தரமானதாகும்.
    • ஒட்டுமொத்த தமிழர்களிடம் வெளிப்படையான மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "ஒரிசாவில் தேர்தல் பரப்புரை செய்த பிரதமர் நரேந்திரமோடி, பூரி ஜெகந்நாதர் கோவிலினுடைய கருவூலத் திறவுகோல் தமிழ்நாட்டிலிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி, தனது அரசியல் தன் இலாபத்துக்காக பன்னிரண்டு கோடி தமிழ்த்தேசிய இன மக்களையும், அவர்களது வரலாற்றுத்தாயகமான தமிழ்நாட்டையும் கொச்சைப்படுத்திப் பேசியிருக்கும் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகிற்கு நாகரீகத்தையும், பண்பாட்டையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் கற்றுத் தந்த மரபார்ந்த இனம் தமிழ்ப்பேரினமாகும். மானத்தையும், வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி, அறத்தின் வழிநின்று வாழ்கிற பெருங்கூட்டத்தினர் தமிழர்கள் நாங்கள்.

    அத்தகைய இனக்கூட்டத்தின் மீது போகிறப் போக்கில் திருட்டுப்பழியைச் சுமத்த நினைக்கும் பிரதமர் மோடியின் பேச்சு அற்பத்தனமானதாகும்.

    தமிழ்நாட்டுக்குப் பரப்புரைக்கு வருகிறபோதெல்லாம் தமிழ்மொழியையும், தமிழர்களையும் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, ஒரிசாவில் தமிழர்களை இழிவாகக் காட்ட நினைக்கிறாரென்றால், எவ்வாறு இதனைச் சகித்துக் கொள்ள முடியும்?

    தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டதெனும் துணிவில், தனது உண்மை முகத்தை வெளிக்காட்டத் தொடங்குகிறாரா பிரதமர் மோடி? இவ்வளவு நாட்களாக இசுலாமிய மதவெறுப்பை உமிழ்ந்துப் பரப்புரை செய்தவர், இப்போது அத்தோடு சேர்த்து தமிழர் இன வெறுப்பையும் காட்டியிருப்பது மிகவும் கீழ்த்தரமானதாகும்.

    ஆகவே, தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிக்கும் விதமாகப் பேசிய நரேந்திரமோடி, தனது பேச்சினை உடனடியாகத் திரும்பப் பெற்று, ஒட்டுமொத்த தமிழர்களிடம் வெளிப்படையான மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையெனில், இதற்கான எதிர்விளைவுகளை வருங்காலத்தில் பாஜகவானது தமிழ்நாட்டில் எதிர்கொள்ள நேரிடுமென எச்சரிக்கிறேன்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

    • காவலர் ஆறுமுகப்பாண்டியை, இதுபோன்று துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?
    • முதலமைச்சரின் மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

    சென்னை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அரசுப்பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில் நடத்துனரும், போலீஸ்காரரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    இதையடுத்து போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில்,

    கடந்த 2021-2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், காவலர் ஆறுமுகப்பாண்டியை, இதுபோன்று துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

    முதலமைச்சரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

    உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்துக்காக, ஆறுமுகப்பாண்டி மீது துறை ரீதியான நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


    • திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பு உறுதி செய்யப்படும்.
    • அடுத்த மாதம் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் 'நான் முதல்வன் திட்டம்' உள்பட பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் கடந்த பட்ஜெட் தொடரின் போது தமிழகத்தில் வறுமையை குறைக்கும் விதமாக முதல்வரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அப்போது தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த திட்டத்துக்காக ரூ.27,922 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என்றும் அடுத்த 2 ஆண்டுகளில் இது ஏறக்குறைய 5 லட்சம் ஏழைக்குடும்பங்களை வறுமையில் இருந்து உயர்த்த இந்த திட்டம் உதவும் என்றும் தெரிவித்திருந்தார்.

    தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சமூக நல திட்டங்களால் வறுமையை குறைப்பதில் மிகச்சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டு வந்தாலும் தாயுமானவர் திட்டம் மூலம் மிகவும் வாடிய நிலையில் வசிக்கும் ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றம் அடைய செய்வதே இத்திட்டத்தின் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் வறுமையை குறைப்பதில் மிகச்சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் 'நிதி ஆயோக்' சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் சதவீதம் தமிழகத்தில் 2.2 சதவீதம் மட்டுமே என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனாலும் வாடிய நிலையில் வாழும் ஏழை குடும்பங்களை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆதரவற்றோர், தனித்து வசிக்கும் முதியோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் என சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்படுவார்கள்.

    அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

    அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் வழியாக மாநிலம் முழுவதும் மிகவும் ஏழ்மையில் உள்ள குடும்பங்கள் கண்டறியப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பு உறுதி செய்யப்படும். அது மட்டுமின்றி முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் ஏழை குடும்பங்களை எந்த அடிப்படையில் எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பது பற்றி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பயிற்சியும் அளிக்க இருக்கிறோம்.

    அடுத்த மாதம் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இந்த திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். அதன் பிறகு இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே 2 அமைச்சர்கள் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.
    • அமைச்சர்களை சேர்ப்பதும், நீக்குவதும் இலாக்காக்களை மாற்றி அமைப்பதும் முதலமைச்சர் முடிவு என்பதால் அவர் என்ன நினைக்கிறார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியாகி புதிய அரசு அமையும் போது தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றத்தை கொண்டு வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    தேர்தல் தொடங்குவதற்கு முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது தேர்தலில் வாக்குகள் குறைந்தால் சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் தான் பதில் சொல்ல வேண்டும். யாராக இருந்தாலும் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி இருந்தார்.

    இப்போது தி.முக. கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருந்தாலும் தேர்தல் வேலைகளில் சரிவர செயல்படாதவர்கள் பற்றியும் புகார்கள் சென்றுள்ளன.

    அந்த வகையில் 10 அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் சொல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    இதனால் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் ஒருவித கலக்கத்துடனேயே உள்ளனர். யார் யாருக்கு இலாகா மாறுமோ என்ற அச்சத்தில் சந்தோஷமின்றி மன இறுக்கத்திலேயே உள்ளனர்.

    இந்த நிலையில் தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே 2 அமைச்சர்கள் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.


    இது பற்றி தி.மு.க. வட்டாரத்தில் பேசும் பொருளாக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் உடல்நலம் காரணமாகவும் செயல்பாடுகளாலும் அமைச்சரவையில் இருந்து மாற்றப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமின்றி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வசம் உள்ள மணல் குவாரி, சுரங்கங்கள் மற்றும் கனிம வளத்துறையை வேறு ஒரு அமைச்சருக்கு பிரித்துக் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    மணல் குவாரி மற்றும் கனிமவளத்துறையில் நடந்த புகார்கள் காரணமாக அமலாக்கத்துறை விசாரணை தீவிரமாகி வரும் நிலையில் இந்த மாற்றங்களை செய்ய முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாவும் தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    ஆனால் அமைச்சர் துரைமுருகன் கனிம வளத்துறையை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றே தெரிகிறது. அதற்கு பதிலாக நீர்வளத்துறையை வேண்டுமானால் அவர் விட்டுக் கொடுப்பார் என்ற தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    இதற்கு முன்பு நிதித்துறையை கவனித்து வந்த தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவருக்கு மத்திய நிதியமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையை மாற்றி அமைக்கும் போது எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வான சேலத்தை சேர்ந்த பனமரத்துப்பட்டி ராஜேந்திரனை அமைச்சரவையில் சேர்க்க வாய்ப்புளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    அமைச்சர்களை சேர்ப்பதும், நீக்குவதும் இலாக்காக்களை மாற்றி அமைப்பதும் முதலமைச்சர் முடிவு என்பதால் அவர் என்ன நினைக்கிறார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

    • மக்களை இனம், மதம், மொழி மற்றும் சாதியின் பெயரால் பிளவுபடுத்துவதில், திமுக நிபுணத்துவம் வாய்ந்தது.
    • பிரிவினையை ஒதுக்கி வைப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.

    சென்னை:

    ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடியின் கருத்துக்கு, "தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்" என்றும் "வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவிற்கு பதிலடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    தமிழகத்திற்குள்ளும், வெளியிலும் நடக்கும் சம்பவங்கள் குறித்து எதுவுமே அறியாமல், நிலைய வித்வான்கள் சூழ்ந்த குழிக்குள்ளே வசிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒடிசாவில் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி பேசியதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது துரதிர்ஷ்டவசமானது.

    மக்களை இனம், மதம், மொழி மற்றும் சாதியின் பெயரால் பிளவுபடுத்துவதில், திமுக நிபுணத்துவம் வாய்ந்தது என்பதையும், அந்தப் பிரிவினையை ஒதுக்கி வைப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்பதையும், மு.க.ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


    • தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
    • மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பரில் கோவையில் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாவது கட்டம் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    இந்த முகாமில் பெறும் மனுக்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15-ம் தேதிக்குள் தீர்வு காணப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி
    • திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒடிசா மாநிலத்தில் பிரதமர் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி. ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.

    வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா? வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "ஜெகந்நாதர் ஆலயக் கருவூலம் தொடர்பாக நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்த்து ஒட்டுமொத்த ஒடிசா மக்களும் கோபத்தில் உள்ளனர். அந்தக் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டதென மக்கள் கூறுகின்றனர்.இதைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்? கொண்டுபோனவர்கள் யார்? இப்படிப்பட்டவர்களை நீங்கள் மன்னிப்பீர்களா?" என்று மோடி பேசியுள்ளார். 

    • ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.
    • தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    "தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்"

    "வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்"

    தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை - கோட்பாடுகள் - செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும் - மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல!

    முன்னதாக, உத்தரப் பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார். மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களைத் தூண்டிவிடும் செயல் ஆபத்தானது என்று எனது கண்டனத்தை அப்போதே தெரிவித்து இருந்தேன். சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டிய அரசியல் தலைவரே பகையுணர்வைத் தூண்டுவது தவறு என்றும் கூறியிருந்தேன். ஆனாலும் தமிழ்நாட்டு மக்களை மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தைப் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ளவில்லை.

    ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக்கிறார். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் புரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.

    ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது?

    ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா?

    தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா?

    தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

    தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்!

    வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்! என்று தெரிவித்துள்ளார்.

    • மொழிக்காக தங்கள் இன்னுயிரையே ஈந்த தீரமிகு இனம் நமது தமிழினம்.
    • தமிழுக்குத் தொண்டு செய்வோர் தாழ்வதில்லை.

    சென்னை:

    மல்லை தமிழ் சங்கத்தின் 15-வது ஆண்டு விழாவையொட்டி அதன் தலைவர் மல்லை சத்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்ச் சமூகத்தின் சிறந்த ஆளுமைகளை ஆண்டுதோறும் தேர்வு செய்து பெருந்தமிழன், பெருந்தச்சன், மாமல்லன் ஆகிய விருதுகளை வழங்கி வரும் மல்லை தமிழ்ச் சங்கத்தின் பெருந்தொண்டை உளமாரப் பாராட்டுகிறேன்.

    இதுபோன்ற அமைப்புகளால்தான் தமிழின் வேரும், விழுதுகளும் வலுப்பெற்றும், வளம் பெற்றும் யாராலும் வீழ்த்த முடியாத வலிமையுடன் திகழ்கின்றன.

    மொழிக்காக தங்கள் இன்னுயிரையே ஈந்த தீரமிகு இனம் நமது தமிழினம். அத்தகைய தீரமும், வீரமும் என்றென்றும் குன்றாமல் இருக்க மல்லைத் தமிழ்ச் சங்கம் போன்ற தமிழ் அமைப்புகளின் தொண்டறமும், தொடர் பணியும் என்றென்றும் தேவை.

    மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் 15-வது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும் அன்பர்களுக்கும், விழாவில், "பெருந்தமிழன் விருது" பெறும் வி.ஐ.டி. நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், "பெருந்தச்சன்" விருது பெறும் மரபுக் கட்டிடக் கலைஞர் பா.குமரேசன், மாமல்லன் விருது பெறும் கிராண்ட் மாஸ்டர் ஷிகான் கனகராஜ் ஆகிய மூன்று பேராளுமைகளுக்கும், இந்த அமைப்பையும், விழாவையும் சிறப்புற நடத்தும் மல்லை சத்யாவுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.தமிழுக்குத் தொண்டு செய்வோர் தாழ்வதில்லை.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×