search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோமசூக்த வலம்"

    • நித்ய பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும் என்பது நியதி.
    • திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் வழிபாடு செய்ய வேண்டும்.

    பிரதோஷம் என்றால் மாலையில் சூரிய அஸ்தமன வேளையான மூன்றே முக்கால் நாழிகைகளை (4.30 மணி முதல் 6 மணி வரை) குறிக்கும். இந்த நித்ய பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும் என்பது நியதி. ஆனால் எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. எனவே குறைந்தபட்சம் மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் வழிபாடு செய்ய வேண்டும்.

    ஈசன் ஆலகால விஷத்தை உண்டு மயக்கம் தீர்ந்து எழுந்து நந்தியின் கொம்புகளுக்கு நடுவே கால்பதித்து நடனமாடிய நேரம் பிரதோஷ வேளை, திரயோதசி திதி. ஈசனின் நடனம் கண்டபின் தேவர்களின் மன பயம் நீங்கியது.

    மகிழ்ச்சி பிறந்தது. அதன்பின்னரே அவர்களுக்கு அமிர்தம் கிடைத்து சாகா வரம் பெற்றனர். எனவே, பிரதோஷ வேளையில் ஈசனை தரிசனம் செய்பவர்களுக்கும் பயம் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும் என்பது ஐதீகம். பிரதோஷ தினத்தன்று மாலையில் சிவாலயத்தில் கூடும் கூட்டமே இதற்கு சான்று.

    சோமசூக்த வலம்

    மாதம் இருமுறை வரும் பிரதோஷ நாள்களில் வழிபட முடியாதவர்கள் ஓர் ஆண்டில் அபூர்வமாக வரும் சனிக் கிழமை பிரதோஷத்தன்று வழிபாடு செய்வது அவசியம். ஒரு சனிப்பிர தோஷத்தன்று வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். அதனால்தான் அதை பிரதோஷங்களின் தலைவன் என்னும் விதமாக மகாபிரதோஷம் என்று அழைக்கிறார்கள்.

    மகாபிரதோஷத்தின் விசேஷம்

    முதன்முதலில் ஈசன் பிரதோஷ வேளையில் ஆனந்த நடனமிட்டது ஒரு சனிக் கிழமையில்தான். சனிப்பிரதோஷ வேளையில் சகல தேவர்களும் ஈசனின் சன்னிதியில்தான் கூடியிருப்பார்கள். ஈசனை தேவர்களும் வழிபாடு செய்வார்கள் என்பதால் அந்த வேளையில் ஈசனும் அவரின் வாகனமான நந்தியும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார்கள். அப்போது கேட்கும் வரங்களை எல்லாம் ஈசன் அருள்வார் என்கின்றன ஞான நூல்கள்.

    நந்தியே இந்தப் பிரபஞ்சத்தின் முதல் சீடன், முதல் குரு. ஈசனிடம் பிரபஞ்ச ரகசியங்களைக் கற்ற சீடனான நந்தி, பிரபஞ்சத்துக்கே குருவாகவும் திகழ்கிறார். இந்த உலகில் குருவின் கருணையைப் பெறாமல் ஈசனின் திருவடியைச் சரணடைய முடியாது.

    எனவே உயிர்கள் அனைத்தும் சிவனைச் சரணடைய வகை செய்து அருள் செய்பவர் நந்தி பகவான். மண்ணுலகின் ஒவ்வொருவருக்கான குருவை அடையாளம் காட்டி வழி நடத்துபவர். அப்படி ஒரு ஞான குரு அமையப் பெறாதவர்கள் இந்த மகாபிரதோஷ வேளையில் நந்தியிடம் வேண்டிக்கொண்டால் விரைவில் உங்களுக்கு ஞான குரு கிடைப்பார். சிவ நெறியில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள்.

    மேலும் காரியத்தடை நீங்குதல், கடன் தீர்ந்து செல்வ வளம் சேர்தல், பகை அழிந்து வெற்றிகள் குவிதல் என இந்த உலகில் நாம் மகிழ்வோடு வாழத் தேவையான அனைத்தையும் நமக்கு அருளும் வழிபாடு மகா பிரதோஷ வழிபாடு.

    மகா பிரதோஷத்தன்று சிவாலய தரிசனம் மிகவும் முக்கியம். ஈசன் ஆனந்த நடனம் புரியும் தன்மையில் அருள்வார். தவறாமல் கோவிலுக்குச் சென்று நந்திக்குப் பின் நின்று அதன் கொம்புகளின் வழியாக ஈசனை தரிசனம் செய்ய வேண்டும்.

    ஆலயம் செல்லும்போது குறைந்தபட்சம் கையில் மலர்களோ, வில்வ இலைகளோ கொண்டு செல்லுங்கள். ஏக வில்வம் சிவார்ப்பணம் என்பது பெரியவர்கள் வாக்கு. பக்தியோடு ஒரு வில்வ இலை சமர்ப்பித்தாலே ஈசன் மனம் மகிழ்ந்து கேட்கும் வரம் தருவார்.

    வாய்ப்பிருப்பவர்கள் நந்தியின் அபிஷேகத்துக்கு உரிய பொருள்களை சமர்ப்பிக்கலாம். பசும்பால் மிகவும் சிறந்தது. நெய், தேன், சந்தனம், மஞ்சள் சமர்ப்பணம் செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும்.

    தவறாமல் திருமுறைகளைப் பாராயணம் செய்ய வேண்டும். சிவபுராணம் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு. மகா பிரதோஷ காலத்தில் ஒருமுறை பாராயணம் செய்தாலே பலநூறுமுறை பாராயணம் செய்த புண்ணிய பலன் கிடைக்கும்.

    பிரதோஷ வேளையில் ஆலயத்தில் சோமசூக்த பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதாவது நந்திக்குப் பின் இருந்து சிவனை தரிசனம் செய்துவிட்டுப் பின் பிரதட்சிணமாகக் கோமுகி வரை வலம் வர வேண்டும். பின் கோமுகியைக் கடக்காமல் இடமிருந்து வலமாகத் திரும்பி சுற்றிவர வேண்டும். இவ்வாறு சிவநாமத்தைச் சொல்லியபடி வலம் வந்து வேண்டிக்கொண்டால் மனதின் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும். வாழ்வில் இருந்த துக்கங்கள் நீங்கும்.

    ஆலயம் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே பிரதோஷ வேளையில் விளக்கேற்றி சிவபுராணமும், கோளறு பதிகமும் பாராயணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் வீட்டில் செல்வமும் உணவும் நிறைந்திருக்கும். அந்த வேளையில் வீட்டில் செய்யக் கூடாத சிலவற்றை அறிந்து தவிர்க்க வேண்டும்.

    குறிப்பாக பிரதோஷ வேளையில் உறங்கக் கூடாது. அதிலும் சனி மகாபிரதோஷ வேளையில் உறங்குவது பாவம். இரவு வேலை செய்பவராக இருந்தால் கூட இந்த வேளையில் விழித்திருக்க வேண்டும். அவ்வாறு விழித்திருந்து சிவ தியானம் செய்தாலே புண்ணியம் என்கிறார்கள்.

    வழிபாடு செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. பிற தீய பழக்கங்களை மேற்கொள்ளக் கூடாது. தீய சொற்களைப் பேசக் கூடாது. நற்செயல்கள் செய்பவர்களை பழித்துப் பேசித் தடுக்கக் கூடாது என்கின்றன ஞான நூல்கள்.

    சனி தோஷம் தீர்க்கும் சனிப்பிரதோஷம்

    சனிக்கிழமை சனி பகவானுக்குரியது. இந்த நாளில் செய்யும் சிவ வழிபாடு சனி பகவானின் அருட்பார்வையைப் பெற்றுத்தரும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி நடக்கும் மகரம், கும்பம், மீனம், கடகம், விருச்சிகம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சனிப்பிரதோஷம் அற்புதமான பரிகார தினமாகும்.

    இந்த நாளில் சிவனுக்கு நல்லெண்ணெய்யில் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தோஷம் முற்றிலும் விலகும். சகல நன்மைகளும் கைகூடும். எனவே இந்த நாளில் தவறாமல் சிவ வழிபாடு செய்து சகல நன்மைகளையும் பெறுவோம்.

    ×