search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயக்குமார் தனசிங்"

    • சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • நாங்குநேரி, திசையன்விளை பஜார், கரைசுத்துபுதூர், உவரி உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் கடந்த 2-ந்தேதி மாயமான நிலையில் நேற்று வீட்டருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த கே.பி.கே. ஜெயக்குமார் காண்டிராக்ட் தொழிலும் செய்து வந்தார். அவர் கடந்த 2-ந்தேதி மாயமான நிலையில் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அவரது கட்சி அலுவலகத்தில் எழுதி இருந்த கடிதம் சிக்கியது.

    30-ந்தேதியே காங்கிரஸ் கட்சியின் லெட்டர் பேடில் மரண வாக்குமூலம் என்று அவர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் இவர்கள் தான் காரணம் என சிலரது பெயரை குறிப்பிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் நேற்று எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது கை, கால்கள் பலகையில் மின் ஒயரால் கட்டப்பட்டிருந்ததால், அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர் ஆனந்தி, தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே கே.பி.கே. ஜெயக்குமார் தனது மருமகன் மற்றும் மொத்த குடும்பத்தினருக்கு என்று எழுதிய 2 கடிதங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், அவர் தொழில் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பலருக்கு பணம் கொடுத்த விபரங்கள் மற்றும் தான், யார் யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்த விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.

    அதோடு குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில், குடும்பத்தினர் யாரும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களை பழிவாங்க நினைக்க வேண்டாம். சட்டம் தனது கடமையை செய்யும் என கூறி உள்ளார்.

    தற்போது வரை போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் கூறுகையில், ஜெயக்குமார் தனசிங் சாவு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏ.டி.எஸ்.பி. கார்த்திகேயன், வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் தலைமையில் 7 தனிப்படைகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

    சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் கை, கால்கள் ஒயரால் கட்டப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கிடமாக யாராவது நடமாடினார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் கொலை செய்யப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அவரது சாவிற்கான காரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை விபரத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை தொடர போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


    இதற்கிடையே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார் உடலுக்கு இன்று காலை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து அவரது உடல் அவரது மகன் கருத்தையா ஜெப்ரினிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் அவரது சொந்த ஊரான திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூருக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    இதனையொட்டி உடல் கொண்டு செல்லப்படும் வழியில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி நாங்குநேரி, திசையன்விளை பஜார், கரைசுத்துபுதூர், உவரி உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வெளிப்படையாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
    • காவல்துறை பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மாயமான நிலையில் நேற்று இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    அவரது உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கே.பி.கே. ஜெயக்குமாரின் பூத உடலை அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் பெற்றுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கே.பி.கே. ஜெயக்குமார் ஒரு நல்ல மனிதர். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர். அவர் தற்போது உயிரிழந்துள்ளார் என்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வெளிப்படையாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் பல்வேறு சந்தேகங்கள் இருந்து வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் எந்த கட்சியின் பின்புலத்தில் இருந்தாலும், எவ்வளவு பெரிய தொழிலதிபராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இன்று மாலைக்குள் ஒரு நல்ல தகவல் வெளியே வரும் என்று மாவட்ட எஸ்.பி என்னிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது மரண வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் யாருடைய பெயர்கள் இருந்தாலும் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    எங்கள் கட்சியை சேர்ந்த வர்களாக இருந்தாலும் கூட காவல்துறை வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி வெளிப்படையாக விசாரணை மேற்கொண்டால் தான் இவர் உயிர் இழப்புக்கு யார் காரணம் என்பது வெளியே வரும்.

    மேலும் நாங்கள் கட்சி ரீதியாகவும் இதை விசாரித்து மேலிடத்திற்கு இந்த அறிக்கையை அனுப்புவோம். காவல்துறை விசாரணை என்பது தற்போது நடைபெற்று கொண்டிருப்பதன் காரணமாக மற்ற தகவல்கள் எங்களால் வெளியே தெரிவிக்க முடியாது.

    இதில் பணம் படைத்தவராக இருக்கலாம். மிகப்பெரிய அரசியல்வாதியாக கூட இருக்கலாம். அப்படி இருந்தாலும்கூட அவர்கள் மீதும் காவல்துறை பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் உள்ள தாக எங்கள் கட்சிக்காரர்கள் என்னிடம் தெரிவித்துள்ளா ர்கள். அதேபோன்ற புகைப்பட ங்களும் வெளியாகி உள்ளது. ஆகவே இதில் பெருத்த சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இந்த விசாரணை என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். மேலும் உயிரிழந்த ஜெயக்குமாரின் கை கால்கள் இரண்டும் கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து ஏதோ ஒரு சம்பவம் நடை பெற்றுள்ளதாக எங்களுக்கு தெரிகிறது.

    ஆகவே தான் நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்கி றோம் வெளிப்படையான விசாரணை மேற்கொண்டால்தான் இவருடைய உயிர் இழப்புக்கு காரணம் என்ன என்பது வெளியே தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கிள்ளியூர் ராஜேஷ் குமார், விஜய் வசந்த் எம்.பி., நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பண்டியன் மற்றும் திரளான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×