search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனந்திரும்புங்கள்"

    • மனந்திரும்பி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
    • தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்

    "மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது" (மத்தேயு 4:17).

    ஒரு காலத்தில் இயற்கையின் அழகை கண்டு ரசித்து வாழ்ந்த மனிதர்கள், இன்று இயற்கையின் அழிவைக் கண்டு கலக்கம் அடைகின்றனர். சிறிது சிறிதாக பூமி தன்நிலை இழந்து மனிதர்கள் வாழத் தகுதியில்லாத சூழ்நிலை வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படக்கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    எப்படிப்பட்ட சூழ்நிலையில் மனிதர்கள் வாழ்ந்தாலும், நாம் வாழ்வதற்கு தகுதியான இன்னொரு இடம் உண்டு. ஒருநாள் அனைவரும் அங்கு ஒன்றுகூடி வாழ்வோம் என்ற எதிர்பார்ப்பு எல்லா மனிதர்களுக்குள்ளும் உள்ளது. அவ்விடம் பரலோகம், மோட்சம், சொர்க்கம் என பல பெயர்களில் பலராலும் அறியப்படுகிறது.

    பரிசுத்த வேதாகமம் 'பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது' என்று கூறுகிறது. அதாவது பரலோக ராஜ்ஜியம் அருகில் இருக்கிறது அல்லது நமக்கு நெருங்கிய தூரத்தில் உள்ளது. இது குறுகிய காலத்தைக் காட்டுகிறது. எனவே சீக்கிரம் தாமதிக்காமல் மனந்திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கிறது.

    'நீதிமான்களை அல்ல, பாவிகளையே மனந்திரும்புவதற்கு அழைக்க வந்தேன்' (மத்தேயு 9:13) என்று இயேசு கூறுகிறார்.

    இந்த உலகில் துன்மார்க்கமாக வாழ்கிறவர்களை யாரும் விரும்புவது இல்லை. பொதுவாக எல்லா மனிதர்களுமே நல்லவர்களாக, நற்குணங் களோடு, சமுதாயத்தில் மிகுந்த மதிப்போடு, உயர்ந்த நிலையில் இருப்பவர்களையே விரும்புவர். ஆனால் இயேசு மட்டுமே பாவிகளை தேடி இந்த உலகிற்கு வந்தார். ஏனென்றால் அவர் பாவிகளையும் நேசிக்கிறார்.

    சிலர் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு தேவைக்காக காத்திருந்து அது நிறைவேறாது போகும்போது அந்த விரக்தியினால் ஏற்படும் கவலை, பயம் போன்ற உணர்வுகளோடு வாழ்கின்றனர். சிலர் அதில் இருந்து விடுபட வழி தெரியாமல் தவறான பாதையில் செல்கின்றனர். சிலர் மதுவுக்கும், மாதுக்கும் அடிமையாகி விடுகின்றனர்.

    ஆரம்பத்தில் சிறியதாக தோன்றிய பாவங்கள், பின்னர் அதில் இருந்து விடுபட நினைத்தாலும் முடியாதபடி அவர்களை அடிமைப்படுத்தி விடுகிறது. `பாவத்தில் இருந்து விடுபட்டு வெளியே வர நினைக்கிறேன், என்னால் முடியவில்லை' என்று பலர் கூறுவதை கேட்கலாம். இப்படிப்பட்டவர்கள் மனந்திரும்பி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

    பாவிகள் தங்களுடைய பாவத்திலேயே வாழ்வது அவருக்கு விருப்பம் அல்ல. அவர்கள் மனம் திரும்பி வாழ வேண்டும். மனிதன் தன் சுய முயற்சியால் பாவத்தில் இருந்து விடுபட முடியாது. ஆனால் இயேசுவிடம், 'இயேசுவே நான் பாவம் செய்யாமல் வாழ விரும்புகிறேன் எனக்கு உதவி செய்யும்' என்று அவரை அழைத்தால் அவர் நிச்சயமாக உதவி செய்வார்.

    'மனம் திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்'. (எசேக்கியேல் 18:32).

    'தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்' (நீதிமொழிகள் 28:13) என வேதம் கூறுகிறது. ஆனால் யாரிடம் அறிக்கையிட்டு மனந்திரும்ப வேண்டும்?

    'நீர் சர்வ வல்லவரிடத்தில் மனம் திரும்பினால் திரும்ப கட்டப்படுவீர்' (யோபு 22:23) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.

    நாம் யாரிடம் நம்முடைய பாவங்களை சொல்லுகிறோம்? யாரிடம் மனந்திரும்புகிறோம்?

    நம்மில் சிலர் பாவத்திற்கு பரிகாரம் என்று புண்ணிய தலங்களுக்கு செல்வதும், தன்னை வருத்திக்கொள்வதும் உண்டு. பாவ பழக்கங்களால் இடிக்கப்பட்டு பழையதாகி போனது போன்ற நிலைமையில்உள்ள ஒருவருடைய வாழ்க்கையை திரும்ப கட்டப்பட வேண்டும் என்றால், சர்வ வல்லவராகிய இயேசு கிறிஸ்துவிடம் தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்து மனம் திரும்ப வேண்டும்.

    அப்பொழுது அவனுக்கு கர்த்தருடைய கண்களில் இரக்கம் கிடைக்கும். தான் இழந்து போன தொழில், நிலம், செல்வம், சரீர சுகம் போன்ற உலக ஆசீர்வாதங்கள் மட்டுமல்லாது, அவனது ஆத்துமா மரணத்துக்கு நீங்கலாக்கி கர்த்தருடைய இரக்கத்தால் பாதுகாக்கப்படும்.

    நம்முடைய மனம் குற்றமில்லாது இருக்க வேண்டும். 'மனுஷனுடைய இதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலை பாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்ட தனங்களும், கபடும், காம விகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதுகேடும் புறப்பட்டு வரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனை தீட்டுப்படுத்தும்' (மாற்கு 7:21-22) என்று இயேசு கூறினார்.

    இப்படியான பாவங்கள் நம் இதயத்துக்குள் இருந்து புறப்பட்டு நம்மை தீட்டுபடுத்தாதபடிக்கு நம்மை காத்துக் கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே நம்மிலும் இருக்க வேண்டும் (பிலிப்பியர் 2:5).

    நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறவேண்டும். பரலோக வாழ்க்கையைக் குறித்த உணர்வு வேண்டும் என்பதே கர்த்தருடைய விருப்பம்.

    எனவே நாம் சர்வ வல்லவராகிய நம்முடைய கர்த்தரிடத்தில் மனந்திரும்பி சகல ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொள்வோம்.

    ×