search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே ஆர் பி அணை"

    • தொழிற்சாலை கழிவுநீர் கலந்த நீரால் அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.
    • அணையில் மீதம் உள்ள மீன்களை பிடிக்க முடியாத அளவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த மழைநீருடன், அங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயன கழிவுநீரும் சேர்ந்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்க தண்ணீர் வந்தது.

    கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 15-ந் தேதி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கு வந்தது. தொழிற்சாலை கழிவுநீர் கலந்த நீரால் அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் மீன் பிடிப்பவர்கள் கவலை அடைந்தனர்.

    இந்த தண்ணீர் அணையின் ஷட்டர் பகுதி வரையில் சென்ற நிலையில் நேற்று காலை 7 டன் அளவிற்கு மீன்கள் அணையில் செத்து மிதந்தன. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

    கடந்த வாரம் அணைக்கு வந்த கழிவுநீர் கலந்த நீரால் மீன்கள் செத்தன. நேற்று முன்தினம் இரவிலும் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன. தற்போது யாருமே அணைக்கு செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அணையில் மீதம் உள்ள மீன்களை பிடிக்க முடியாத அளவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மீன் பிடி தொழிலை நம்பி உள்ள 500-க்கும்மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இது தொடர்பாக மீன் வளத்துறை உதவி இயக்குனர் ரத்னம் கூறியதாவது:-

    ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறந்திருக்கலாம். அணையில் இருந்து நீரை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளோம். ஆய்வு முடிவுக்கு பிறகே மீன்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×