search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரகரேசப்பெருமான் ேகாவில்"

    • தேவர்கள் அனைவரும் இனித் தங்கள் கவலைத் தீர்ந்தது என்று மகிழ்ந்திருந்தனர்.
    • அதன் பின்பு முருகப் பெருமான் அவதரிக்கும் நேரத்தை எதிர்நோக்கி இருந்தனர்.

    இத்திருக்கோவில் சிவகாஞ்சிப் பகுதியில் ஏகம்பரநாதர் கோவிலுக்குத் தெற்கிலும், தான் தோன்றீசுவரர் கோவிலுக்கு வடக்கிலும், பாண்டவதூதப் பெருமாள் கோவிலுக்குத் தென் கிழக்கிலும், ஏகாம்பரநாதர் சன்னதி வீதிக்கு மேற்கிலும் அமைந்துள்ளது.

    இத்திருக்கோவில் சோழர் காலக் கட்டட அமைப்பு கொண்டுள்ளது.

    தூங்கானை மாடம் என்று கூறப்படும் கஜப்பிரஷ்ட வடிவில் அமைந்துள்ளது.

    பெரிய மதில் சுவர்களைக் கொண்டும், அழகிய நந்தவனத்தைக் கொண்டும், அமைதியான சூழ்நிலையில் குளு குளு மர நிழலில் அமைந்துள்ள திருக்கோவில் ஆகும்.

    முன்னொரு காலத்தில் தாரகன் என்ற அசுரன் ஒருவன் இருந்தான்.

    அவன் சிவபக்தன். சிவனை வேண்டிக் கணக்கற்ற வரங்களைப் பெற்றான்.

    அதினினும் மேலாக, சிவபெருமானுக்கு அவதரிக்கும் மகனால் தான், தனக்கு மரணம் நேர வேண்டும் என்றும் ஒருவரத்தைப் பெற்றான்.

    இதனால் அவன் தேவர்களை கொடுமைப்படுத்தினான்.

    இதை தாங்காத தேவர்கள் பிரமனிடம் முறையிட்டனர்.

    தட்சனின் யாகத்தில் உடலைத் துறந்த தாட்சாயணி பர்வத ராஜனுக்கு மகளாகப் பிறந்து, வளர்ந்து சிவபெருமானை அடைய மவுனத் தவம் இருந்து வந்தாள்.

    சிவபெருமான், உமையைப் பிரிந்த காரணத்தினால் மன அமைதி இன்றி இமயமலைச் சாரலில் இருந்தார்.

    அச்சமயம் சனகாதி முனிவர்கள் ஈசனைச் சந்தித்து யோகத்தை உபதேசம் செய்ய வேண்டும் என்று வேண்ட, சிவபெருமான் அவர்களுக்கு உபதேசிக்கும் முகமாக மோனத்தில் அமர்ந்தார்.

    இதை அறிந்த பிரமன், தேவர்களின் குறை தீர வேண்டுமானால் உமாபதியும்உமை அன்னையும் திருமணம் செய்து சேர்ந்தால் தான் மகன் பிறப்பான் என்று அறிந்து சிவனின் தவத்தைக் கலைக்க முயற்சிக்கிறார்.

    மன்மதனை அனுப்பி அவரின் மனதில் காம உணர்ச்சியை உண்டாக்க முயற்சித்தார்.

    ஆனால் முடியவில்லை. அம்முயற்சி தோல்வி அடைந்தது.

    பின்பு, மன்மதன் சிவபெருமானின் நெற்றிக்கண் திறப்பினால் எறிந்து சாம்பலாக, உடன் மன்மதனின் மனைவி ரதிதேவி சிவபெருமானிடம் சென்று அழுது, புலம்பினாள்.

    தேவர்களின் துயரம் தீரவே தன் கணவர் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூற, ஈசன் அவளைத் தேற்றி உன் பார்வைக்கு மட்டும் உன் கணவன் தென்படுவான் என்று கூறி அனுப்பி வைத்தார்.

    நிஷ்டை கலைந்ததும், ஈசனுக்கும், உமை அன்னைக்கும் ஆனந்தமாகத் திருமணம் நடைபெற்றது.

    தேவர்கள் அனைவரும் இனித் தங்கள் கவலைத் தீர்ந்தது என்று மகிழ்ந்திருந்தனர்.

    அதன் பின்பு முருகப் பெருமான் அவதரிக்கும் நேரத்தை எதிர்நோக்கி இருந்தனர்.

    ஆனால் அது நடைபெறுவதாகத் தெரியவில்லை. ஆதலால் சிவபெருமானை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

    உடனே சிவபெருமான் 1000 சூரியர் ஒன்று கூடினால் தோன்றும் ஒளியைப் போல் பிரகாசிக்கும் தம்முடைய சக்தியை வெளிப்படுத்தி, பருகுங்கள் என்றார்.

    அக்கினி தேவன் அச்சக்தியைப் பெற்று பருகினான்.

    பருகியதும் தேவர்கள் அனைவரின் உடலும் கடுமையான வெப்பத்தால் தாக்குற்று தடுமாறினர்.

    இதனால் வருத்தம் அடைந்த தேவர்கள் மீண்டும் சிவனிடம் சென்று வேண்ட, அதற்குச் சிவன் தேவர்களை நோக்கி, பூவுலகில் எமக்கு மிகவும் பிடித்த காஞ்சிப்பதியில் முன்னாள் சுரன் என்ற அரக்கன் ஆவியொழிய நாம் ஒரு லிங்கத்தைத் தாபித்து உள்ளோம்.

    சுரகரீசர் என்ற பெயரில் விளங்கும் அந்த லிங்கத்தை வழிபட்டால் உங்களைத் தகிக்கச் செய்யும் இந்த வெப்ப நோய் நீங்கிவிடும், பின்பு மேருமலைக்குச் சென்று நாம் அளித்த சக்தியை வெளிப்படுத்துங்கள் உங்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று அருளினார்.

    சிவபெருமான் கூறியபடி தேவர்கள் அனைவரும் காஞ்சிப்பதியை அடைந்து சுரகரீச தீர்த்தத்தில் நீராடி, தூய்மையான உள்ளத்தோடு சுரகரீசரை வழிபட்டனர். அந்தக் கணமே அவர்களை வருத்தி வந்த வெப்ப நோய் நீங்கியது.

    இத்தலத்து ஈசனை குபேரன் வணங்கியதாக ஒரு செய்தியும் உண்டு. இச்செய்தியை ஒத்திருப்பது போல் மூலவர் அறைக்கு வெளி அறையில் குபேரனின் திருஉருவச் சிலையும், அடுத்த வெளியறையில் அவனுடைய இரண்டு பெரும் நிதியங்களான சங்கநிதி, பதும நிதி என்ற இந்த நிதிகளின் திருவுருவங்களும் இத்திருக்கோவிலுள் உள்ளன.

    பவுர்ணமி அன்று இரவு குபேரனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வந்தால் செல்வம் நம்மை வந்து அடையும் என்ற கருத்து நிலவுகிறது.

    அதன்படி பக்தர்களும் அபிஷேக ஆராதனைகளைச் செய்கின்றனர்.

    ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் இந்த ஆலயத்தை நிர்வகிக்கிறார்கள். கும்பாபிஷேகம் நடந்து 40 ஆண்டுகள் ஆகி விட்டதால் ஆலயம் மெருகு குலைந்துள்ளது.

    ×