search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி ராஜினாமா கடிதம்"

    • ராஜினாமா செய்ததாக கடிதம் ஒன்று வாட்ஸ் அப் குழுக்களில் வைரலாகி வருகிறது.
    • காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பாராளுமன்ற தேர்தலின்போது சிக்கபள்ளப்பூர் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளரும், முன்னாள் மந்திரியுமான டாக்டர் சுதாகர் ஒரு ஓட்டு கூடுதலாக பெற்றால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதீப் ஈஸ்வர் கூறினார்.

    இந்த நிலையில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 8 லட்சத்து 22 ஆயிரத்து 619 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரக்ஷா ராமையா 6 லட்சத்து 59 ஆயிரத்து 159 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

    இந்த நிலையில் சிக்பள்ளாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரதீப் ஈஸ்வர் எப்போது ராஜினாமா செய்வீர்கள் என பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இதனிடையே அவர் ராஜினாமா செய்ததாக கடிதம் ஒன்று வாட்ஸ் அப் குழுக்களில் வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில் கொடுத்த வாக்குறுதி தவறக்கூடாது என்ற பழமொழியை சிறுவயது முதலே வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வருகிறேன். பாராளுமன்ற தேர்தலில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் டாக்டர் சுதாகர் ஒரு ஓட்டு கூடுதலாக பெற்றால் ராஜினாமா செய்வேன் என சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக கூறினேன்.

    எனது தொகுதியில் சுதாகர் கிட்டதட்ட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால் எனது எம்.எல்.ஏ. பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த கடிதம் விவகாரம் காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இது குறித்து எம்.எல்.ஏ.வின் உதவியாளர் கூறுகையில், பிரதீப் ஈஸ்வர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ராஜினாமா கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது போலியானவை. அவர் ராஜினாமா செய்யவில்லை. அவரை கிண்டல் செய்வதற்காக இந்த கடிதத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் என்றார்.

    ×