search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.1.5 கோடி சேதம்"

    • குடோனின் உரிமையாளர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    திருமழிசை:

    சென்னை திருமழிசையை அடுத்த கோலப்பன்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு அலுவலகம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வைக்கப்பட்டு இங்கிருந்து விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    குஜராத்தை சேர்ந்த இந்த குடோனின் உரிமையாளர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதையடுத்து பூந்தமல்லி பகுதியை சேர்ந்த முத்து என்பவர் நிர்வாக மேற்பார்வையாளராக இருந்து இந்த குடோனை கவனித்து வருகிறார்.

    நேற்று மாலை 6.30 மணியளவில் திடீரென்று இந்த குடோன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்டதும் அங்கு தங்கி இருந்த ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

    இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூந்தமல்லியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தீ அடுத்தடுத்த இடங்களுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதையடுத்து கூடுதலாக கிண்டி, அம்பத்தூர், ஆவடி, கொருக்குப்பேட்டை வியாசர்பாடி உள்ளிட்ட 12 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அருகே இருந்த மற்றொரு சோப்பு ஆயில் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த குடோன்களுக்கும் தீ பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதைத்தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரை நிரப்ப கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டது. சுமார் 6 மணி நேரம் போராடி நள்ளிரவு 12.30 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.

    இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக தகவல் வெளியாகி உள்ளது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என வெள்ளவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×