என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சகிலா"
- அ.தி.மு.க. தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் மீண்டும் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வமும் குரல் எழுப்பி வருகிறார்.
- ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் வீட்டிலேயே அனைத்து முக்கியமான அரசியல் முடிவுகளையும் எடுத்து வந்தார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்த கட்சி பிளவுகளை சந்தித்து தடுமாறிக் கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையும் எட்டிப்பிடித்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வருகிறார்.
இரட்டை தலைமையாக ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து செயல்பட்ட பழனிசாமி பின்னர் அவரையும் ஓரம் கட்டினார். இப்படி அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் வெளியேற்றப்பட்ட பிறகு நடைபெற்றுள்ள அனைத்து தேர்தலிலும் அந்த கட்சி தோல்வியையே தழுவியுள்ளது.
இது தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வரும் சசிகலா எனது தலைமையில் அ.தி.மு.க. ஒன்றுபட்டு செயல்படும் என்று கூறி வருகிறார். ஆனால் அதற்கான நேரம் காலம் எதையும் அவர் குறிப்பிடவில்லை. எப்போது பேட்டி அளித்தாலும் எனது தலைமையில் நிச்சயம் அ.தி.மு.க. மீண்டும் வலிமை பெறும் என்று மட்டும் கூறி வருகிறார்.
இதனால் அ.தி.மு.க.வை மீட்க சசிகலா ரகசிய திட்டம் வைத்துள்ளாரோ என்கிற எண்ணம் அனைவரது மனதிலுமே இருந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அரசியல் களத்தில் செயலாற்றி வரும் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் இணைந்து சசிகலாவும் செயல்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் அது போன்று அவர் யாருடனும் கைகோர்க்கவில்லை. தனியாகவே அறிக்கை வாயிலாக அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
பாராளுமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சசிகலா தேர்தல் தோல்வி பற்றி அ.தி.மு.க.வினர் யாரும் கவலைப்பட வேண்டாம். நிச்சயம் நாம் எழுச்சி பெறுவோம் என்று ஏற்கனவே கூறியிருந்தார். அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தனித்தனியாக விண்ணப்ப படிவம் போன்ற கடிதத்தையும் அவர் அனுப்பி வைத்திருந்தார். இதனால் சசிகலா அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க ரகசிய திட்டங்களை தீட்டி செயலாற்றி வந்தார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் சசிகலா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொண்டர்களை சந்தித்து பேச உள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சசிகலாவின் ஆதரவாளர்கள் சென்னை வர உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் மீண்டும் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வமும் குரல் எழுப்பி வருகிறார். இது போன்ற சூழலில் தான் சசிகலாவின் தொண்டர்கள் சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த சந்திப்பின் போது தொண்டர்களிடம் ஒன்றுபட்ட அ.தி.மு.க. தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கேட்டு அதிரடி காட்டவும் சசிகலா முடிவு செய்துள்ளார். இதனால் சசிகலாவின் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பாக சசிகலாவின் தீவிர ஆதரவாளர் ஒருவர் கூறும்போது, அரசியல் களத்தில் அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் சின்னம்மா கட்சிக்கு தலைமை தாங்கினால் நிச்சயம் அ.தி.மு.க.வை மீட்டெடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
ஆனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் இதனை அடியோடு மறுக்கிறார்கள். சசிகலாவின் சந்திப்பு தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவரிடம் கருத்து கேட்டபோது அவர் ஆவேசமாக பதில் அளித்தார். சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் அவருக்கு எந்தவித பலனையும் கொடுக்கப் போவதில்லை.
அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்று அவர் கூறி வருவது புரியாத புதிராக உள்ளது. அ.தி.மு.க. தற்போது ஒன்றுபட்டு தான் உள்ளது. எந்த பிளவுமும் இல்லை. நாங்கள் சசிகலாவிடமிருந்து அ.தி.மு.க.வை மீட்டெடுத்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிச்சயம் அ.தி.மு.க. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எனவே மீண்டும் சசிகலாவை இணைக்கு நினைக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை என்றார்.
இதனால் சசிகலாவின் தொண்டர்கள் சந்திப்பு அவருக்கு எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது? என்பது தெரியவில்லை. அதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் வீட்டிலேயே அனைத்து முக்கியமான அரசியல் முடிவுகளையும் எடுத்து வந்தார். அப்போது ஜெயலலிதாவுடன் சசிகலா உடன் இருந்தார். அந்த வீட்டுக்கு நேர் எதிரிலேயே சசிகலா புதிய வீட்டை கட்டி குடியேறி உள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி முதல் இந்த வீட்டில் வசித்து வரும் அவர் இதுவரை அரசியல் சார்ந்த சந்திப்புகளை நடத்தியது இல்லை. நாளை மறுநாள்தான் அவர் தொண்டர்களை சந்தித்து அரசியல் தொடர்பான கருத்துக்களை கேட்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்