search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன உயிரினங்கள்"

    • தேசிய பறவைகளான மயில் மதுரையில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.
    • கடந்த 9 ஆண்டுகளில் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்து உள்ளது.

    மதுரை:

    தமிழகத்தில் பல்வேறு சிறப்புகளையும் பெருமையும் கொண்ட பழமையான மதுரை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது.

    இந்த மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் மதுரை வனக்கோட்டத்தில் மதுரை, சோழவந்தான், உசிலம்பட்டி, மதுரை வன உயிரினச் சரகம், மதுரை சமூக நலக் காடுகள் சரகம், திருமங்கலம் சமூக நலக்காடுகள் சரகம் ஆகியவை உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.

    இந்த வனச்சரகப் பகுதிகளில் அழகர்மலை, நாகமலை, யானைமலை, கொட்டாம்பட்டி, சோழவந்தான், பாலமேடு, அழகர்கோவில் மலை ஆகிய சிறுசிறு மலைகள் உள்ளது.

    இங்கு அடர்ந்த வனப்பகுதிகள் இல்லாததால் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை, புலி, யானை போன்ற பெரிய வனவிலங்குகள் மதுரை மாவட்டத்தில் இல்லை என்றாலும் மான், காட்டுப் பன்றிகள், குரங்குகள், முயல்கள் உள்ளிட்ட சிறுசிறு வன விலங்குகளும், பறவைகளும் அதிக அளவில் வசிக்கின்றன.

    கடந்த 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உசிலம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன உயிரினங்களும், பறவைகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை விட தேசிய பறவைகளான மயில் மதுரையில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மர்மமான முறையில் மயில் உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

    இது தொடர்பான தகவலை அறியும் வகையில் மதுரை வனக்கோட்டத்தில் கடந்த 2015 முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை எத்தனை வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது? எத்தனை வன விலங்குகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது? எத்தனை வனவிலங்குகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டது? என்ற விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மதுரை வனக்கோட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பம் வந்தது.

    இது தொடர்பாக அளித்துள்ள பதில் பல்வேறு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 9 ஆண்டுகளில் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்து உள்ளது.

    மதுரை வன கோட்டத்தை பொறுத்தவரை மயில், காட்டு மாடு, காட்டுப்பன்றி, புள்ளிமான், குரங்கு உட்பட 28 அரிய வகை உயிரினங்கள், பறவைகள் ஊர்வன வகைகள் உயிரிழந்துள்ளது.

    இதில் அதிகபட்சமாக மயில் 435 உயிரிழந்ததுள்ளது. அதேபோல் புள்ளிமான் 258, காட்டு மாடு 71, காட்டுப்பன்றி 43, குரங்கு 40 என மொத்தமாக சுமார் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் 93 வன உயிரினங்கள் சாலை விபத்தின் மூலம் மட்டும் உயிரிழந்துள்ளது.

    மதுரை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் வன விலங்குகளுக்கு விஷம் வைத்ததாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வன உயிரினங்கள் உயிரிழக்க என்ன காரணம்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள வனக்கோட்ட அலுவலகம், வயல்வெளிகளில் மயில்களுக்கு விஷம் வைத்தல், சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்வெளிகளில் வனவிலங்குகள் சிக்கி பலியாகிறது.

    அரிய வகை உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுதல், வன விலங்குகள் வேட்டையாடிய அதன் இறைச்சி மற்றும் விலங்குகள் கறி தொடர்பான பொருட்களை விற்பனை செய்வதை கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வயல்வெளிகளில் நெற்பயிரை உண்ண உணவு தேடி வரும் மயில்களை விஷம் வைத்து கொலை செய்யும் சம்பவம் மதுரை அதை சுற்றியுள்ள பகுதியில் அதிகரித்துள்ளது.

    தமிழ்நாடு வனத்துறை சார்பாக உயிரினங்கள் வேட்டையாடுதல் மற்றும் வன உயிரினங்கள் குற்றம் தொடர்பாக கண்காணிக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு வன மற்றும் வன உயிரினங்கள் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு அமைக்கப்பட்டு அதற்கு கீழ் நான்கு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு மண்டல வாரியாக வன காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வேட்டையாடும் முன்பாகவே அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மேலும் வனவிலங்குகள் வேட்டையாடுவது தொடர்பாக வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு வேட்டையாடும் சம்பவங்கள் அரங்கேறிய பகுதிகளில் வன அதிகாரிகளுடன் தொடர்ந்து கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மதுரையில் சிவப்பு பகுதி என்று அறியக்கூடிய பகுதிகளில் அதிக வனவிலங்குகள் உயிரிழந்த பகுதிகளாக மதுரை ரெயில் நிலையம், சூர்யா நகர் ஆண்டார்கொட்டாரம் உள்ளிட்டவற்றில் அதிக அளவு மயில்கள் இறந்துள்ளது. சிவரக்கோட்டை, திருமங்கலம், கள்ளிக்குடி, உசிலம்பட்டி பகுதியில் புள்ளி மான்கள் உயிரிழப்பு அதிகம் உள்ளது. உசிலம்பட்டி, சோழவந்தான், பாலமேடு, உள்ளிட்ட பகுதியில் காட்டுப்பன்றி உயிரிழப்பு அதிகம் உள்ளது.

    மேலும் தமிழ்நாடு வனத்துறை சார்பாக இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டதன் மூலம் பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும், படிப்படியாக வனவிலங்குகள் மீது தாக்குதல் மற்றும் வனவிலங்குகள் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மனிதர்களின் வாழ்வியல் முறைகள்,வன விலங்குகள், காடுகளை சார்ந்தே இருந்துள்ளது.

    இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை நிற்கக்கூட நேரமில்லாமல் எந்திர மயமாகி விட்டதால் வனவிலங்குகள், காடுகளின் மதிப்பு தெரியவில்லை. காடுகளையும், அதில் வாழும் விலங்குகளையும் பாதுகாக்க தவறியதால் தற்போது சுற்றுச்சூழல், காடுகள், வனவிலங்குகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளும், காடுகளும் ஒன்றையொன்று சார்ந்தது. இதில் ஒன்று அழிந்துவிட்டால் மற்றொன்று தானாக அழிந்து விடும்.

    அதனால் இந்த வன விலங்குகளை பாதுகாக்க வனவிலங்கு காப்பகங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்களும் ஒத்துழைப்புகள் நல்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் தருண்குமார் கூறுகையில், வறட்சி காலங்களில் சாலை விபத்து மூலம் வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் வனவிலங்குகள் அருந்தும் வகையில் உணவுகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சாலையை கடக்கும் குறிப்பிட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் வன விலங்குகளை உயிரிழக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு பணியை தீவிர படுத்தப்பட்டுள்ளது. வேட்டையாடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது வன விலங்குகள் வேட்டையாடும் சம்பவங்கள் படிப்படியாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ×