search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகை அணை திறப்பு"

    • விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
    • அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயர வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்துக்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

    இதன் மூலம் 5 மாவட்டங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். கடந்த 3 ஆண்டுகளாக வைகை அணையில் போதிய நீர் இருந்ததால் ஜூன் 2-ந் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தின் முதலே நீர்வரத்து குறைவாக இருந்ததால் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

    இருந்தபோதும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 51.71 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 706 கன அடி நீர் வருகிறது. நீர் இருப்பு 2223 மி.கன அடியாக உள்ளது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து இரு போக பாசனத்துக்காக பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் பாசன வசதி பெறும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. 45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மி.கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களான சங்கீதா, ஷஜீவனா, பூங்கொடி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டவுடன் விவசாயிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்த தண்ணீர் திறப்பின் மூலம் திண்டுக்கல் மாவட்ம் நிலக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட 1797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்துக்குட்பட்ட 16,452 ஏக்கர் வடக்கு வட்டத்துக்குட்ட 26,792 ஏக்கர் என இரு மாவட்டங்களிலும் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு குறுகிய காலப்பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் அடையுமாறு விவசாயிகளுக்கு 3 மாவட்ட கலெக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடியாகவும், நீர் இருப்பு 2005 மி.கன அடியாகவும் இருந்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 123.60 அடியாக உள்ளது. வரத்து 1200 கன அடி. திறப்பு 862 கன அடி. இருப்பு 3341 மி.கன அடி. கடந்த ஆண்டு இதே நாளில் பெரியாறு அணை நீர்மட்டம் 114.85 அடியாக இருந்தது. வரத்து 403 கன அடி. திறப்பு 112 கன அடி. இருப்பு 1702 மி.கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×