search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் தேர்வு முடிவில் தாமதம்"

    • ஆலோசனை விதிகள் மற்றும் அட்டவணை வெளியிடவில்லை.
    • கால நீட்டிப்பு கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பல் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு வெளி வந்தும் இன்னும் நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வில்லை.

    நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் மீது சி.பி.ஐ. நடவடிக்கை, சுப்ரீம் கோர்ட்டு வழக்கு என பல்வேறு பிரச்சினைகள் உருவாகி உள்ளன.

    நீட் தேர்வு குறித்து டெல்லியில் உள்ள மத்திய சுகாதார சேவை இயக்குனரகம் இன்னும் ஆலோசனை விதிகள் மற்றும் அட்டவணை வெளியிடவில்லை.

    அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்தால் தமிழகத்தில் மாணவர் சேர்க்கையை தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் எம்.பி.பி.எஸ். மட்டுமின்றி பல், இந்திய மருத்துவம், ஓமியோபதி, நர்சிங் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள், பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த படிப்புகளில் சேருவதற்கு இந்திய மருத்துவ கவுன்சில், ஏ.ஐ.சி.டி.இ. போன்ற மருத்துவ ஏஜென்சிகளிடம் இருந்து கால நீட்டிப்பு கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    அகில இந்திய மருத்துவ இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தும் மத்திய சுகாதார இயக்குனரகம் முதல் கட்ட கலந்தாய்வை முடித்ததும் தமிழகத்தில் முதல் சுற்று தொடங்கப்படும். அது 2-வது சுற்று தொடங்கும் போது நாங்கள் முதல் சுற்றை முடித்து விடுவோம். இதன் மூலம் மாணவர்கள் 2 சுற்றுகளிலும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று மருத்துவ கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நீட் தேர்வு முடிவு வெளி வந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் கலந்தாய்வு நடைமுறையை பின்பற்ற முடியாமல் மாநில அரசு உள்ளது. இதனால் மருத்துவ படிப்பில் சேருவதற்கு தகுதியான மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவர்கள் விரக்தி அடைந்துள்ளனர். கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்து இருக்கின்றனர்.

    இதற்கிடையே பொறியியல் படிப்பில் சேருவதற்கான நடைமுறைகளை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தொடங்கியுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த மாதம் 13-ல் தொடங்கி 30 வரை நடந்தது. அதையடுத்து ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.

    வருகிற 10-ந்தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் போது கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்.

    ×