search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடஒதுக்கீடு ரத்து"

    • இந்த அரசாணை சேவை மருத்துவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
    • அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் பறிபோவதை தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டு செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு, 15 வகையான மேற்படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    இந்தியாவிலேயே மிகச்சிறந்த உட்கட்டமைப்பைக் கொண்டு பொது சுகாதாரத் துறையில் தமிழகம் வலுவாக இருப்பதற்கு பேருதவி புரிபவர்கள் அரசு மருத்துவர்கள். அப்பேற்பட்ட சேவை மருத்துவர்களின் மருத்துவக் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் இந்த "திடீர் அரசாணை" அவர்களுக்கு பேரதிர்ச்சி அளிப்பதோடு, இது சமூக நீதிக்கே எதிரானது.

    தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் குறிப்பாக புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் (மருத்துவம் அல்லாத சிறப்பு பிரிவு, காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, தோல் சிகிச்சை பிரிவு, மனநலம் சிகிச்சை பிரிவு) தேவை உள்ள நிலையில் இந்த அரசாணை சேவை மருத்துவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

    ஆகவே, அரசு மருத்துவமனைகளில் சேவை புரிந்து வரும் மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான 50% இடஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்த அரசாணையை உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டுமென்றும், அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் பறிபோவதை தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

    ×