search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக"

    • முல்லைப்பெரியாறு அணை நமது சொத்து.
    • முல்லைப்பெரியாறு பாசன உழவர்களின் நலனைக் காக்க தமிழக அரசு வாதிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வயநாடு நிலச்சரிவால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கூறினாலும் கூட, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக செய்யப்படும் பரப்புரைகளுக்கு கேரள அரசின் மறைமுக ஆதரவு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

    முல்லைப்பெரியாறு அணை நமது சொத்து; அதன் நீரை பயன்படுத்திக் கொள்வதும், அணையை வலுப்படுத்தி அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதும் நமது உரிமை. இதில் தமிழ்நாடு அரசு எத்தகைய சமரசத்தையும் செய்து கொள்ளக்கூடாது.

    அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைப்பது, அணை அமைந்துள்ள நிலத்தின் குத்தகை ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வது ஆகியவை தொடர்பான இரு வழக்குகளிலும் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, முல்லைப்பெரியாறு பாசன உழவர்களின் நலனைக் காக்க தமிழக அரசு வாதிட வேண்டும்.

    இன்னொருபுறம், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். பேபி அணையை வலுப்படுத்துவதன் மூலமாகவே இதை சாத்தியமாக்க முடியும். ஆனால், அதற்குத் தடையாக உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி மறுக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கிலும் சாதகமான தீர்ப்பைப் பெற்று அணையை வலுப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
    • நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்ட நிலையில் அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தருமபுரியைச் சேர்ந்த மாணவிக்கு ஜம்மு-காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாணவி தருமபுரியிலிருந்து சென்னை வந்து விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டு சென்றிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    பல முறை சுட்டிக்காட்டியும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்த தவறுகளையே சரி செய்ய முடியாத தேசிய தேர்வு வாரியம், முதுநிலை நீட் தேர்வை எவ்வாறு சரியாக நடத்தும்? என்ற வினா எழுகிறது.

    இளநிலை நீட் தேர்வாக இருந்தாலும், முதுநிலை நீட் தேர்வாக இருந்தாலும் வினாத்தாள் கசிவு, தேர்வு மைய ஒதுக்கீட்டில் குழப்பம், தேர்வுகளில் முறைகேடு என பல புகார்கள் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனால், நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்ட நிலையில் அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு.
    • பழவந்தாங்கலில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் கஞ்சா புகைத்தது அதிர்ச்சி அளிக்கிறது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 2023-ம் ஆண்டு துபாய் சென்ற முதலமைச்சர் ரூ.6100 கோடி மூதலீடு ஈர்க்க கையெழுத்திட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் சென்ற முதல்வர் ரூ.3440 கோடி ஒப்பந்தம் செய்தார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை. சென்னையில் நடந்த முதலீட்டார் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது என தெரியவில்லை. எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்று தெரிவிக்கவேண்டும்.

    வன்னியகளுக்கான இட ஒதுக்கீட்டில் தி.மு.க.வின் துரோகத்தை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு வெளியிட்ட தகவல்கள் திரிக்கப்பட்டவையாகும். 35 ஆண்டுகால வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். தகவல்களின் கால அவகாசம் ஒரே மாதிரி இல்லை. இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று முடிவெடுத்த தி.மு.க. தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது.

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கவேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. இதை உச்சநீதிமன்றமும், பாட்னா உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. வருகிற 13-ந் தேதி நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கவேண்டும்.

    தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்ற சட்டத்தை வணிகர்கள் மதிக்க வேண்டும் என்று அமைச்சர் சாமிநாதன் எச்சரித்தும் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. இதற்கான தமிழைத்தேடி என்று சென்னை முதல் மதுரை வரை பயணம் செய்தேன். அப்போதே அரசு வணிகர்களுக்கு அறிவுறுத்தியது. குறிப்பிட்ட காலத்திற்குள் பெயர் பலகை தமிழில் உள்ளதை அரசு உறுதி செய்யவேண்டும்.

    சென்னை, பழவந்தாங்கலில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் கஞ்சா புகைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசாரின் சோதனையில் 10 ஆயிரம் கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என சொல்லப்பட்டும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்றால் இதற்கு காவல்துறை உடந்தை என்றே தெரிகிறது. காவிரி ஆற்றில் மணல் குவாரிகளை மூடவேண்டும். காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராததற்கு மணல் கொள்ளையே காரணமாகும். பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும்.

    மீனவர்கள் 22 பேரில் 19 பேரை விடுதலை செய்த இலங்கை 3 பேருக்கு தலா ரூ 40 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இலங்கை அரசின் இந்த தண்டனை கண்டிக்கத்தக்கதாகும். எனவே இரு நாட்டு மீனவர்களும் காலங்காலமாக மீன் பிடிக்கும் இடத்தில் மீன் பிடிக்க இரு நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

    கந்து வட்டி கொடுமையால் திருப்பத்தூரில் தாய் , மகள் இருவர் தற்கொலை செய்து கொண்டார். இவரின் கணவர் ஜோலார்பேட்டையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. எனவே கடுமையான தண்டனைகளுடன் புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்றவேண்டும்.

    தமிழகத்தின் உண்மையான மேம்பாடும், அமைதியையும்பெற அனைத்து சமூகமும் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும். இதுவே வலிமையான, வளமாக, அமைதியான சமூகத்தை உருவாக்க முடியும்.

    இட ஒதுக்கீடு ஆணையத்திற்கு காலக்கெடு நிர்ணயித்து இருப்பது பம்மாத்து வேலையாகும். வக்பு வாரிய சட்டம் திருத்தம் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • மாணவருக்கு கஞ்சா விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • காவல்துறை ஒத்துழைப்புடனேயே கஞ்சா வணிகம் நடக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையை அடுத்த பழவந்தாங்கல் அரசு பள்ளியில் கஞ்சா புகைத்ததாக பிடிபட்ட மாணவர், நீண்ட காலமாகவே அப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதும், அவரிடம் பல கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பள்ளிக்கு மிக அருகிலேயே, பழவந்தாங்கல் ரெயில் நிலையம் அருகில் கஞ்சா விற்கப்படுவதாகவும், அங்கிருந்து தான் மாணவர் கஞ்சா வாங்கியதாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாணவருக்கு கஞ்சா விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருவது குறித்தும், அதைத் தடுக்க வேண்டியதன் தேவை குறித்தும் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இது தொடர்பாக இரு முறை நேரில் சந்தித்து போதைப் பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்கும்படி வலியுறுத்தினேன். ஆனால், எந்த பயனும் இல்லை.

    பழவந்தாங்கல் பள்ளிக்கு அருகில் மட்டும் தான் இந்த நிலைமை என்று கூற முடியாது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பள்ளிகளில் இதே நிலை தான். அப்படியானால், ஒவ்வொரு முறையும் கஞ்சா வேட்டை பெயரளவுக்குத் தான் நடக்கிறது. காவல்துறை ஒத்துழைப்புடனேயே கஞ்சா வணிகம் நடக்கிறது என்று தான் கருத வேண்டியுள்ளது. இதை தமிழக அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. கஞ்சா போதைக்கு பள்ளி மாணவர்கள் அடிமையாகாமல் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

    எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
    • தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ’’கிளப்”களிலும் உறுப்பினர் அல்லாதவர்களிடம் கூடுதல் கட்டணம் பெற்றுக் கொண்டு மது வழங்கப்படுகிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னையில் உள்ள 5 தனியார் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விதிகளை மீறி மது வணிகம் செய்யப்பட்டதாகக் கூறி ரத்து செய்யப்பட்ட அவற்றின் குடிப்பக உரிமங்கள் 48 மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் இன்றியமையாத தேவைகள் தொடர்பான விவகாரங்களில் முடிவெடுப்பதில் எல்லையில்லா கால தாமதம் செய்யும் தமிழக அரசு, நட்சத்திர விடுதிகளுக்கு குடிப்பக உரிமம் வழங்குவதில் மட்டும் இவ்வளவு வேகமும், ஆர்வமும் காட்டியது மர்மமாக உள்ளது.

    சென்னையிலுள்ள தனியார் 5 நட்சத்திர விடுதிகளில் அமைந்துள்ள குடிப்பகங்களில், அந்த விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், சர்ச்சைக்குரிய விடுதிகளில் வெளியாட்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவற்றின் குடிப்பக உரிமங்கள் கடந்த சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை சரியானது தான்.

    ஆனால், அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக ரத்து செய்யப்பட்ட குடிப்பக உரிமங்கள் மீண்டும் வழங்கப்பட்டது எப்படி? குடிப்பகங்களில் எந்த விதிமீறலும் நடக்கவில்லையா? அல்லது மது வணிகம் என்பது 'தமிழகத்தின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் ஒரே வழி' என்பதால் நட்சத்திர விடுதிகளின் குடிப்பகங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதா? என்பது குறித்து தமிழக அரசு தான் விளக்கமளிக்க வேண்டும்.

    ஐந்து நட்சத்திர விடுதிகளில் மட்டுமின்றி, சென்னையிலும் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ''கிளப்"களிலும் உறுப்பினர் அல்லாதவர்களிடம் கூடுதல் கட்டணம் பெற்றுக் கொண்டு மது வழங்கப்படுகிறது. இதுவும் விதிமீறல் தான். தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதுவரையிலும் கூட மது வணிகத்தில் எந்த விதிமீறலையும் அனுமதிக்கக் கூடாது. எனவே, தமிழ்நாட்டில் மது வணிகத்தில் விதிகளை மீறும் அனைத்து கிளப்கள் மற்றும் விடுதிகளின் குடிப்பக உரிமங்களை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் சாதிகளின் வலிமையை கணக்கிடுவது அல்ல.
    • சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமூகநீதியில் தமிழகம் பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயம் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான். ஆனால், அந்த பெருமை அச்சாணி இல்லாத தேரைப் போலத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தத் தேர் எப்போது கவிழும் என்பது தெரியாது. ஏனெனில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று 2010-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை தமிழக அரசு இன்னும் செயல்படுத்தாத நிலையில், அதை எதிர்த்து புதிய வழக்குகள் தொடரப்பட்டிருப்பது தான். அவ்வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, எந்த நேரமும் 69 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து இருக்கிறது. அதைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை வெளியிடுவது தான்.

    கல்வியிலும், சமூகநிலையிலும் பின்தங்கிக் கிடக்கும் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதது எந்த அளவுக்கு மோசமான சமூகநீதியோ, அதை விட மோசமான சமூகநீதி அந்த சமூகங்களின் மக்கள் தொகைக்கு பொருந்தாத வகையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான். அதை விடக் கொடுமை, சூறைத் தேங்காயை உடைத்து வலிமையுள்ளவர்கள் பொறுக்கிக் கொள்ளுங்கள் என்பதைப் போல, நூற்றுக்கணக்கான சாதிகளை ஒரே பிரிவில் அடைத்து, மிகக் குறைந்த அளவிலான இட ஒதுக்கீட்டைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பது. இவை இரண்டுமே உண்மையான சமூகநீதி அல்ல.

    சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் சாதிகளின் வலிமையை கணக்கிடுவது அல்ல. மாறாக, ஒவ்வொரு சமூகத்தின் கல்வி, சமூக நிலையை கணக்கிடுவது தான். இந்திய மானுடவியல் கணக்கெடுப்பு நிறுவனம் கடந்த 1985 முதல் 1992 வரை 7 ஆண்டுகள் நடத்திய கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 364 சாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த சாதிகள் குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்து அவர்களுக்கு சமூக நீதி வழங்குவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம்.

    எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும். நாம் கொடுக்கும் அழுத்தம் ஆட்சியாளர்களை அசைத்துப் பார்க்கும். அந்த நம்பிக்கையுடன் தமிழகத்தின் அனைத்து சமுதாயங்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மாவட்ட அளவில் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதிநிதியாக செயல்படுவார்.
    • தொகுதி செயலாளர் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் களச் செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா ஒரு தொகுதி செயலாளர், ஒரு தொகுதி தலைவரை நியமிக்க கட்சித் தலைமை தீர்மானித்திருக்கிறது. இது குறித்த அறிவிப்பும், நியமனங்களும் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    மாவட்ட செயலாளர், தொகுதி செயலாளர்களின் செயல்பாடுகளில் ஒருவருக்கொருவர் குறுக்கிடாமல் தடுக்க அவர்களுக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட அளவில் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதிநிதியாக செயல்படுவார்.

    உறுப்பினர் சேர்க்கை, கட்சி அமைப்புகளை கட்டி எழுப்புதல். கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மாவட்ட அளவில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கட்சியினர் எதிர்கொள்ளும் சிக்கல்களை களைதல், அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் நிலையிலான அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பங்கேற்று கட்சியின் நிலைப்பாடுகளை தெரிவிக்க வேண்டும்.

    தொகுதி செயலாளர் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாவட்ட தலைவர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    தேர்தல் பணிகளை தொகுதி அளவில் மாவட்ட தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து மேற்கொள்வார்.

    ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 250-300 என்ற அளவில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி குழுக்களை அமைப்பதற்கு தொகுதி செயலாளர் தான் பொறுப்பாவார். மாவட்ட செயலாளரின் உதவியுடனும், மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளின் ஒருங்கிணைப்புடன் இந்த பணியை தொகுதி செயலாளர்தான் மேற்கொள்ள வேண்டும்.

    தேர்தல் பணிகளை மேற்கொள்ளுதல், வாக்குச்சாவடி குழுக்களை அமைத்தல் ஆகியவற்றில் தொகுதி செயலாளருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும். எனினும், மாவட்ட செயலாளர் ஏதேனும் ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை வழங்கினால் அதை தொகுதி செயலாளர் செவிமடுக்க வேண்டும்.

    ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவிலான நிர்வாகிகளை தொகுதி செயலாளர் அடையாளம் கண்டு, கட்சித் தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

    தொகுதி செயலாளர், தொகுதி தலைவர் ஆகி யோரை கட்சித் தலைமை நேரடியாக நியமிக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
    • வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நிலை உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் 2500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவிலான நிலத்தில், 3500 சதுர அடி வரையிலான பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த மாதம் கொண்டு வந்தது. அதற்கான கட்டணங்கள் 100 சதவீத வரை உயர்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பிற அளவிலான கட்டிடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது.

    சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும். கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. எனவே வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி விளையாட்டுத் திடலில் விடுதி கட்டுவது கண்டிக்கத்தக்கது.
    • திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டுத் திடலில் விடுதி கட்டுவதை கைவிட வேண்டும்.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில்,

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டுத் திடலில் மாணவர்களுக்கான விடுதி கட்ட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. விளையாட்டுத் திடலின் பயன்பாட்டை அழித்து விட்டு விடுதி கட்டக் கூடாது என்று அப்பகுதியில் உள்ள முன்னாள் மாணவர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் நான் திட்டக்குடி சென்றபோது முன்னாள் மாணவர்கள் என்னை சந்தித்தும் கோரிக்கை விடுத்தனர். மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி விளையாட்டுத் திடலில் விடுதி கட்டுவது கண்டிக்கத்தக்கது.

    திட்டக்குடி அரசு ஆண்கள் பள்ளியின் விளையாட்டுத் திடலை அந்தப் பள்ளியின் மாணவர்கள் மட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள பிற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவர்களும் விளையாடுவதற்காக பயன்படுத்தி வந்தனர். நகர மக்களும் நடைபயிற்சிக்காக விளையாட்டுத் திடலை பயன்படுத்தி வந்தனர். விளையாட்டுப் பயன்பாட்டுக்காக உள்ள திடலை வேறு பயன்பாட்டுக்காக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டுத் திடல் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். தனியார் பள்ளிகளில் விளையாட்டுத் திடல் இல்லாத சூழலில் அவற்றுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது அரசு பள்ளியில் பயன்பாட்டில் இருக்கும் விளையாட்டுத் திடலை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது விதிகளுக்கு எதிரானது ஆகும். திட்டக்குடி நகரில் குறிப்பிடும்படியாக விளையாட்டுத் திடல்கள் இல்லாத நிலையில், இந்தத் திடலும் மூடப்பட்டால் மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியும், மக்களின் நடைபயிற்சியும் பாதிக்கப்படும்.

    மாணவர்களுக்கான விடுதி தி.இளமங்கலத்தில் செயல்பட்டு வந்தது. அங்கு விடுதியை நடத்துவதில் சிக்கல் இருந்தால் திட்டக்குடியில் வேறு இடத்தில் விடுதியை கட்டலாம். பள்ளிக்கு அருகிலேயே அரசுக்கு சொந்தமான இடம் இருந்தால் கூட அங்கு விடுதியை கட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை. விடுதி கட்ட வேறு இடங்கள் இருக்கும் நிலையில் அவற்றையெல்லாம் விட்டு விட்டு பள்ளியின் விளையாட்டுத் திடலில் தான் விடுதி கட்டுவோம் என அரசு பிடிவாதம் பிடிக்கக் கூடாது.

    திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டுத் திடலில் விடுதி கட்டுவதை கைவிட வேண்டும்; விளையாட்டுத் திடல் தொடர்ந்து அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 7-ஆம் தேதி மாலை 3.00 மணிக்கு திட்டக்குடி பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பா.ம.க. சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர் மருத்துவர் இரா கோவிந்தசாமி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    • கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
    • கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட PFI அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளின் இல்லங்களிலும் சோதனை தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்த பா.ம.க. முன்னாள் நகர செயலாளரான ராமலிங்கம் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
    • சான்றிதழ்களை முறையாக சரிபார்க்கத் தவறிய அதிகாரிகள் தான் காரணம்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதில் நிகழ்ந்த குளறுபடிகளுக்கு தேர்வர்கள் எந்த வகையிலும் காரணமல்ல. அவர்களின் சான்றிதழ்களை முறையாக சரிபார்க்கத் தவறிய அதிகாரிகள் தான் காரணம். எனவே, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்ட 36 தேர்வர்கள் அதிகாரிகள் சிலர் கொடுத்த அழுத்தத்தால் பணியில் சேர்க்கப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்த விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    தேர்ச்சி சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட 127 பேரும் தாங்கள் படித்த கல்வி நிறுவனங்களில் இருந்து உண்மைத்தன்மை சான்று பெற்று கொடுத்து இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியில் சேர அனுமதிக்க வேண்டும்; அதற்கு வாய்ப்பில்லை என்றால் அவர்களுக்கு தகுதிக்கேற்ற வேறு 2ஏ தொகுதி பணி வழங்கப்பட வேண்டும். அதுவரை மற்றவர்களுக்கு முதலமைச்சரின் கைகளால் பணி நியமனச் சான்று வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வாழ்வாதாரம் தேடி சிறியகடைகள் நடத்துவோரிடம் கூட இந்த அளவுக்கு கட்டணக் கொள்ளை நடத்துவதை மன்னிக்கவே முடியாது.
    • திமுகவுக்கு மக்கள் விரைவில் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னையில் மாத வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கும் குறைவாக ஈட்டுவோரிடம் வசூலிக்கப்படும் தொழில் வரியை 35% வரையிலும், சிறிய அளவிலான கடைகள் நடத்துவதற்கான வணிக உரிமக் கட்டணத்தை 100% வரையிலும் உயர்த்தி மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் இந்த வரி மற்றும் கட்டண உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    மாத வருமானம் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை உள்ள பணியாளர்களுக்கான தொழில் வரியை 35% வரை உயர்த்தியுள்ள சென்னை மாநகராட்சி, அதற்கும் கூடுதலாக ஊதியம் பெறுவோருக்கான தொழில்வரியை உயர்த்தவில்லை. அதேபோல், பெரிய அளவிலான நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி இறைக்கும் சென்னை மாநகராட்சி, தேநீர்க் கடைகள், மருந்துக் கடைகள், முடி திருத்தும் கடைகள் போன்றவற்றுக்கான உரிமத் தொகையை ரூ.10 ஆயிரம் ஆகவும், வேறு சில கடைகளுக்கான உரிமத் தொகையை ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தியிருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. வாழ்வாதாரம் தேடி சிறியகடைகள் நடத்துவோரிடம் கூட இந்த அளவுக்கு கட்டணக் கொள்ளை நடத்துவதை மன்னிக்கவே முடியாது.


    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் தான் 175% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஆனால், மாநகர மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படுவதில்லை. 2500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவில் வீடுகளை கட்ட விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெறும் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு சலுகை வழங்குவதாகக் கூறி அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி 1000 சதுர அடியில் வீடு கட்டுவதற்கான கட்டணம் ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பயன்களை விட பாதிப்புகளே அதிகம்.

    சென்னையில் ஏழைகளோ, நடுத்தர மக்களோ வாழவே கூடாது என்ற எண்ணத்துடன் அவர்கள் மீது தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வரி உயர்வு மற்றும் கட்டண உயர்வுகளை சுமத்தி வருவது மனிதத்தன்மையற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்து விட்டோம், இனி மக்களின் தயவு தேவையில்லை என்ற அதிகார மமதையுடன் செயல்படும் திமுகவுக்கு மக்கள் விரைவில் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    ×