search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ட்ரோபிகானா"

    • எவ்வளவு மது அருந்தினாலும் சப்பென இருப்பதாக ஆதங்கம்.
    • உண்மையான சரக்கா? போலி சரக்கா? என்று பலர் புலம்பல்.

    சென்னை:

    டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா, பீர் என பலவகை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ட்ரோபிகானா வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, ஓல்டு சீக்ரெட் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி ஆகியவற்றை வாங்கி குடிக்கும்போது போதை உடனே ஏறுவதில்லை என்றும் எவ்வளவு மது அருந்தினாலும் 'சப்பென' இருப்பதாக பலர் ஆதங்கப்பட்டனர்.

    இது உண்மையான சரக்கா? அல்லது போலி சரக்கா? என்றும் பலர் புலம்ப தொடங்கினார்கள். இதுபற்றிய தகவல் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெரியவந்தது. அவர்களும் இந்த 3 வித மதுபானங்களின் தரத்தை ஆய்வு கூடத்தில் பரிசோதித்து பார்த்தனர்.

    அதில் 3 வித மதுபானத்திலும் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பீர் வகைகளுக்கு ஆயுள் காலம் 6 மாதம். ஆனால் போதை தரக்கூடிய மது வகைகளுக்கு ஆயுள் காலம் கிடையாது.

    ஆனால் மதுவில் ஆல்கஹால் அளவு 42.84 சதவீதம் இருக்க வேண்டும். அதைவிட குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால் அதை கடைகளில் விற்க கூடாது.

    இந்த நிலையில் வீரன் ஸ்பெஷல் பிராந்தி (பேட்ச் எண் 082/2024) வி.எஸ்.ஓ.பி. ட்ரோபிகானா (பேட்ச் எண். 013/2020), ஓல்டு சீக்ரெட் பிராந்தி (பேட்ச் எண். 837/2018) ஆகியவை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அந்த மது பாட்டில்களை மது பிரியர்களுக்கு விற்க வேண்டாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் கடைக்காரர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

    அது மட்டுமின்றி இந்த மது வகைகள் விற்பனைக்கு உகந்தது அல்ல என்பதால் கடைகளில் இருப்பு இருந்தால் அதை மதுபான கிடங்குக்கு திரும்ப ஒப்படைக்குமாறு கடைக்காரர்களை டாஸ்மாக் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    ஆனாலும் பல கடைகளில் அதற்குள் மது பாட்டில்களை விற்பனை செய்துவிட்டனர். சில கடைகளில் மீதம் உள்ள மது பாட்டில்களை திரும்பப் பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் இருந்து கடை ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

    ×