search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாங்குரோவ் காடு தீ"

    • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வீராம்பட்டினம் முகத்துவாரம் அருகே மாங்குரோவ் காட்டில் ஏற்பட்ட தீயை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

    சுனாமி பேரழிவின் போது, கடற்கரையில் வளர்ந்திருந்த அடர்ந்த மாங்குரோவ் காடுகள் தடுப்புச் சுவராக நின்று சுனாமி அலைகளை தடுத்து, கரையோரம் வாழும் மக்களை காத்தன. இதனால், சுனாமிக்கு பிறகு தமிழகம், புதுச்சேரி கடற்கரையோரம் மாங்குரோவ் காடுகள் வளர்க்க அரசுகள் பரிந்துரை செய்தது.

    இதையடுத்து, தேங்காய்த் திட்டு துறைமுக பகுதியில் ஏற்கனவே இருந்த மாங்குரோவ் காடுகளுடன், புதிதாக பல இடங்களில் மாங்குரோவ் செடிகள் நட்டு வளர்க்கப்பட்டன. அவை சிலரது சுயநலத்தால் தற்போது அழிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தேங்காய்த் திட்டு துறைமுகத்தின் தெற்கு பக்கம் வீராம்பட்டினம் கரையோரம் மாங்குரோவ் மரங்களுடன், கருவேல மரங்களும் சேர்ந்து வளர்ந்து இருந்தது.

    இதற்கிடையில், அரசு இடத்தில் இருந்த கருவேல மரங்கள் மற்றும் மாங்குரோவ் மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் யாரோ அழித்து ஒரே இடத்தில் குவித்து வைத்து இருந்தனர். நேற்று இரவு வெட்டி குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்கள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதில் அருகில் இருந்த கருவவேல மரங்களும் மற்றும் மாங்குரோவ் மரங்களும் தீயில் கருகியது.

    புதுச்சேரி மற்றும் கோரிமேடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரம் அருகே கரையோரம் பல ஏக்கரில் இருந்த மாங்குரோவ் காடுகள் ஏற்கனவே அழிந்து விட்டது.

    தற்போது, வீராம்பட்டினம் முகத்துவார பகுதியில் திடீரென மரங்கள் தீப்பற்றி எரிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மரங்கள் அல்லது காய்ந்த சருகுகள் தானாக எரிய வாய்ப்பு இல்லை. எனவே, இதுகுறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×