search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங்"

    • ஆகஸ்ட் 2-வது வாரம் வரை விண்ணப்பிக்க அவகாசம்.
    • அரசு மற்றும் ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு

    சென்னை:

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் ஏற்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் நீட் தேர்வு முடிவு வெளியான பிறகும் அகில இந்திய மருத்துவ இடங்கள் கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    நீட் மறுதேர்வு நடை பெறுமா? நடைபெறாதா? என்று கேள்விகள் மாணவர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஒரு மாதமாக நீடித்து வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தர வின்படி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கூடியும், குறைந்தும் மாற்றமாகி உள்ளது.

    புதிய திருத்தப்பட்ட நீட் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து நீட் தேர்வு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    இதையடுத்து அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான (15 சதவீதம்) அட்டவணையை மருத்துவ ஆலோசனைக் குழு இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.

    அதன்படி ஆகஸ்ட் 14-ந்தேதி அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. 3 சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

    முதல் சுற்று ஆகஸ்ட் 14 தொடங்கி 27-ந் தேதி வரையிலும் 2-வது சுற்று செப்டம் பர் 5 முதல் 10-ந் தேதி வரையிலும் நடைபெறு கிறது. 3-வது சுற்று செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது.

    அதன் பின்னர் விடுபட்ட காலியிட சுற்றுக்கான கலந்தாய்வு அக்டோபர் 16 முதல் 20-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவ ஆலோசனைக் குழு அட்டவணை வெளியிட்டதை தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் மருத்துவ கல்வி இயக்ககம் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்குவதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்துள்ளது.

    தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலின் அடிப்படையில் அறிவிப்பானை ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளது. எந்தெந்த தேதியில் விண்ணப்பிக்கத் தொடங்கி முடிக்க வேண்டும் என்ற விவரம் இணையதளம் வழியாக தெரிவிக்கப்படும்.

    தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அதிக மாணவர்கள் பெற்று இருப்பதால் கடுமையான போட்டி ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் 4 ஆயிரம் மாணவர்கள் பெற்று இருப்பதால் அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு வாய்ப்பு குறைகிறது.

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று இருப்பதால் 600-க்கு குறைவாக பெற்ற மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பது சவாலாக உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ந் தேதி தொடங்கு வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவினருக்கு முதலில் தொடங்கி நடைபெறும். உத்தேச தேதியாக இதனை மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆகஸ்ட் 2-வது வாரம் வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்படும். அதன் பின்னர் விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.

    இன சுழற்சி அடிப்படையில் ரேங் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட வில்லை. கடந்த முறை இருந்த மருத்துவ இடங்களே உள்ளன. 3 தனியார் மருத்துவ கல்லூரிகள் புதிதாக வருவதன் மூலம் அரசு மற்றும் ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    ×