search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக நீதி மறுப்பு"

    • காலக்கெடு நீட்டிப்பதால் எந்த பயனும் இல்லை.
    • வன்மத்தின் காரணமாகவே உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்று 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

    அதன்பின் 10 மாதங்கள் கழித்து 12.01.2023-ம் வன்னியர்களுக்கு உள் இடஓதுக்கீடு வழங்குவது பற்றி 3 மாதங்களில் பரிந்துரைக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டது.

    ஆனால், வழங்கப்பட்ட கெடுவுக்குள் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த அறிக்கையை ஆணையம் தாக்கல் செய்யாத நிலையில், அடுத்தடுத்து 6 மாதங்கள், 3 மாதங்கள், 6 மாதங்கள் என மேலும் 15 மாதங்களுக்கு கூடுதல் காலக்கெடு வழங்கப்பட்டது.

    ஒட்டு மொத்தமாக வழங்கப்பட்ட 18 மாதக் கெடுவும் ஜூலை 11-ம் நாளுடன் முடிந்து விட்டது. இப்போதும் அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் தான் ஓராண்டு கூடுதல் கெடு வழங்கப்பட்டுள்ளது.

    இவை எந்த அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டது? கால நீட்டிப்பு கோருவதற்காக ஆணையம் கூறிய காரணம் என்ன?

    ஆணையம் எந்தக் காரணமும் கூறவில்லை என்றால், காலநீட்டிப்பு வழங்கப்பட்டது ஏன்? ஆணையம் நீட்டிய இடத்தில் கையெழுத்து போடும் அளவுக்கு அரசு பலவீனமடைந்து விட்டதா?

    வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அடுத்த ஓராண்டு காலத்தில் அது என்னென்ன பணிகளைச் செய்யும்? என்பது போன்ற வினாக்களை தமிழக அரசு கேட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த எதிர்வினாவும் கேட்காமல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரியவாறே ஓராண்டு காலநீட்டிப்பை அரசு வழங்கியுள்ளது.

    மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்த நிலைப்பாட்டின்படி தமிழக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தப்போவதில்லை என்றும் மத்திய அரசும் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.

    இவை நடக்காத நிலையில், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையத்திற்கு காலக்கெடு நீட்டிப்பதால் எந்த பயனும் இல்லை.

    இது அரசுக்கும், ஆணையத்திற்கும் தெரியும். ஆனாலும் நீ அடிப்பது போல அடி, நான் அழுவதைப் போல அழுகிறேன் என்று தமிழக அரசும், ஆணையமும் இணைந்து வன்னியர் சமூகநீதிக்கு எதிராக நாடகமாடுகின்றன.

    இன்னொருபுறம் வன்னியர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த தரவுகளே இல்லை என்று ஆணையம் கூறியுள்ளது.

    ஆனால், வன்னியர்கள் 10.50 சதவீக்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் கூறுகிறார். அப்படியானால் ஆணையம் கூறுவது பொய்யா? இல்லை, அமைச்சர் கூறுவது பொய்யா?

    அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட முதல் தொகுதி தேர்வுகளில் கூட வன்னியர்களுக்கு 5 சதவீதத்துக்கும் குறைவான பிரதிநிதித்துவம் தான் கிடைத்திருக்கிறது. இது உள்ளிட்ட அனைத்துத் தரவுகளும் தமிழக அரசிடமும், ஆணையத்திடமும் உள்ளன.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிடக் கூடாது என்பதற்காக தரவுகள் இல்லை என்று கூறி அரசு ஏமாற்றுகிறது. அதன் நாடகத்திற்கு ஆணையமும் துணை போகிறது.

    வன்னியர்களால் வளர்ந்த தி.மு.க., இப்போது வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் மற்றும் வன்மத்தின் காரணமாகவே உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது.

    தி.மு.க.வின் இந்த நாடகங்களை உழைக்கும் பா.ம.க. நன்றாக அறிவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×