search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்"

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி.
    • மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் ஆளுங்கூட்டணியின் தோல்விக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையிலான விரிசல் அதிகரித்துள்ளது.

    முதலமைச்சர் ரங்கசாமியின் செயல்பாடுகளால்தான் தேர்தலில் தோல்வியடைந்தோம். எனவே முதலமைச்சருக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்றும் பா.ஜனதா அமைச்சர்களை மாற்ற வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரி மெக்வால், அமைப்பு செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்தும் புகார் கூறினர். மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க முயற்சித்தனர். ஆனால் நேரம் கிடைக்கவில்லை.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் பா.ஜனதா மேலிட பார்வையாளர் சுரானா முயற்சியும் தோல்வியடைந்தது.

    இந்த நிலையில் புதுவை சட்டசபையில் இன்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    புதுவை சட்டசபைக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஓரணியாக வந்தனர். முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, சட்டசபை வளாகத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்று நல்லாட்சி அளித்து வருகிறார். அவர் தலைமையில் நடந்த நிதி ஆய்வுக்குழு கூட்டத்தில் புதுவை முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை. புதுவையில் பா.ஜனதா மீது மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடு முதலமைச்சர் ரங்கசாமி செயல்பட்டு, பட்ஜெட் தாக்கல் செய்வது வருத்தம் அளிக்கிறது.

    ஆந்திரா, பீகாருக்கு பல கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. அவர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முன்பாக ஒரு வாரம் டெல்லியில் முகாமிட்டு, ஒவ்வொரு துறை அமைச்சரையும் சந்தித்து மாநில வளர்ச்சிக்காக நிதி ஒதுக்க கோரினர். அந்த அடிப்படையில்தான் மத்திய அரசு நிதியை வாரி வழங்கியுள்ளது.

    புதுவை முதலமைச்சரும் மாநிலம் வளர்ச்சியடைய வேண்டும் என நினைத்திருந்தால், மத்திய அரசின் நிதிஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு நமக்கு தேவையான நிதியை பெற்றிருக்க முடியும்.

    ஒவ்வொரு மத்திய அமைச்சர்களையும் துறை வாரியாக சந்தித்து ஒவ்வொரு திட்டத்தின் மூலமாகவும் ரூ.50 கோடி என பெற்றிருந்தால்கூட புதுவை மாநில பட்ஜெட் தொகையை விட கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி கிடைத்திருக்கும்.

    பிரதமர் பதவியேற்பு, நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளை புறக்கணிப்பது, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்ற பொய்யான கூற்றை மக்களிடையே உருவாக்குவதன் மூலம் புதுவையில் பா.ஜனதா மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் நோக்கத்தில் முதலமைச்சர் ரங்கசாமி செயல்பட்டு வருகிறார்.

    புதுவையில் அளவுக்கு அதிகமான ரெஸ்டோபார்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ.க்களை கலந்து ஆலோசிக்காமல் அனுமதி வழங்குகிறார். மருத்துவமனை, அரசு பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் உள்ள இடங்களில் ரெஸ்டோபார் அமைக்க அனுமதி வழங்கியதுதான் முதல்- அமைச்சர் ரங்கசாமி 3 ஆண்டு செய்த சாதனை.

    முதல்- அமைச்சர் மத்திய அரசை நேரடியாக சந்தித்து, மாநில வளர்ச்சிக்கான முழு நிதியையும் பெற்று புதுவையை ஒரு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×