search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமூர்த்திமலை கோவில்"

    • 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
    • 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    அமணலிங்கேஸ்வரர் கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தை மற்றும் ஆடி மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமானது என்பதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.

    அத்துடன் அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் வருவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.

    அதுமட்டுமின்றி அமாவாசைக்கு முன்தினம் திருமூர்த்தி மலைக்கு மாட்டு வண்டிகளில் வருகின்ற பக்தர்கள் இரவு முழுவதும் கோவில் மற்றும் அணைப்பகுதியில் தங்கி கொள்கின்றனர். பின்னர் காலையில் எழுந்து அருவிக்கு சென்று குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னர் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு திரும்பிச் செல்வார்கள்.

    அந்த வகையில் இன்று திருமூர்த்தி மலையில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு வழிபாடு மற்றும் நாளை நடைபெற உள்ள ஆடி அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முதல் பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து குவிந்தனர். களைப்படைந்த மாடுகளுக்கு பெருமாள் கோவில் அருகில் வண்டிகளுடன் ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்தி மலை பகுதியில் மாட்டு வண்டிகள் அதிக அளவில் காணப்படுகிறது.

    ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பக்தர்கள் அதிக அளவில் திருமூர்த்திமலைக்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் திருமூர்த்திமலை பகுதியில் 3 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணியில் உடுமலை சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×