search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் மட்டம்"

    • கடல் மட்டம் உயருவது என்பது 2-வது பிரச்சினைதான்.
    • கடலில் உப்புத்தன்மை கலப்பது அதிகமாகும். கடல் மட்டம் பெரிய அளவுக்கு உயராது.

    சென்னை:

    தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 31-வது நிறுவன தினத்தையொட்டி, ஆழ்கடல் நுண்ணுயிர்கள் தொடர்பான கடல்சார் நுண்ணுயிர் களஞ்சிய இணையதளத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் நடந்தது. இதில் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலநிலை மாற்றம் என்பது கடும் சவாலாகத்தான் இருக்கிறது. வளிமண்டலம் மட்டும் வெப்பம் அடையவில்லை. கடலும் அதிகளவில் வெப்பம் அடைகிறது. கடலின் மேற்பரப்பில் மட்டும் இந்த வெப்பம் காணப்படவில்லை. ஆழ்கடல் வரை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. அவ்வாறு ஆழ்கடலில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பது பற்றியும் ஆய்வு செய்து வருகிறோம்.

    2 கி.மீ. ஆழம் வரை எவ்வளவு வெப்பம் இருக்கிறது? உப்புத்தன்மை எப்படி உள்ளது? இது எந்தெந்த இடங்களில் மாறுகிறது? என்பது பற்றியெல்லாம் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளோம்.

    நிலப்பரப்பில் வெப்ப அலை என்று சொல்வது போல, இப்போது கடல் பகுதியிலும் வெப்ப அலை (மரைன் ஹீட் வேவ்) ஏற்படுகிறது. இந்த வெப்ப அலை கடலில் ஏற்படுவதால், அந்த இடங்களுக்கு மீன்கள் கூட்டம் வராது. இந்த வெப்ப அலை எங்கு? எப்போதெல்லாம் வரும்? என்பது பற்றிய முன்னறிவிப்பை செய்து வருகிறோம். முன்பெல்லாம் இந்த வெப்ப அலை சில நாட்களுக்கு மட்டுமே வரும். ஆனால் இப்போது சில வாரங்களுக்கு நீடிக்கிறது. இதுதான் காலநிலை மாற்றத்தின் தாக்கம். காலநிலை மாற்றத்தை பற்றி பேசும் போது கடலை தவிர்த்துவிட்டு பேச முடியாது.

    கடல் வெப்ப அலையால், வெப்ப அளவு அதிகரிக்கும். அந்த நேரத்தில் புயல் எதுவும் கடந்து வந்தால், புயலின் அடர்த்தி அதிகரித்துவிடும். அதுபோன்ற நேரங்களில் வானிலை முன்னறிவிப்பை கணிப்பது மிகவும் கடினமாகிவிடும். கடல் வெப்ப அலையால் பவளப்பாறைகள் அழிந்துவிடும். அதனை மீண்டும் புதுப்பிக்க அதிக ஆண்டுகள் ஆகும். கடல் வெப்ப அலையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

    முன்பெல்லாம் மேகக்கூட்டங்கள் உருவானால் 50 முதல் 100 கி.மீ. தூரத்துக்கு பரந்துவிரிந்து குறைந்த அடர்த்தியுடன் வரும். ஆனால் இப்போதெல்லாம், அதிக உயரத்தில் மேகக்கூட்டங்கள் உருவாகுகிறது. பரந்து விரிந்து வரும் அளவும் குறைகிறது. அதனால் குறுகிய நேரத்தில் அதிக மழையை ஓரிடத்தில் கொடுத்துவிடுகிறது. அதாவது நீரை பிடித்து வைக்கும் அளவு வளிமண்டலத்தில் அதிகரிப்பதால், வெப்பமும் அதிகரிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனையடுத்து, 'சென்னையில் கடல் மட்டம் உயரும் என்று சொல்கிறார்களே? அது உண்மையா?' என்று கேட்டதற்கு, 'அரசுகளுக்கு இடையேயான காலநிலை மாற்றக்குழு (ஐ.பி.சி.சி.) அளித்த அறிக்கையின்படி, 2100-ல் உலகம் எப்படி இருக்கும்? என்பதை சொல்லியுள்ளது. அந்த மாடலின் அடிப்படையில் பயப்படத் தேவையில்லை. கடலில் உப்புத்தன்மை கலப்பது அதிகமாகும். கடல் மட்டம் பெரிய அளவுக்கு உயராது. கடலில் உப்புத்தன்மை அதிகமாவதுதான் பெரிய பிரச்சினை. கடல் மட்டம் உயருவது என்பது 2-வது பிரச்சினைதான்' என்றார்.

    • 2040ம் ஆண்டுக்குள் சென்னையின் நிலப்பரப்பில் ஏறக்குறைய 7% மூழ்கிவிடும்
    • 1987 முதல் 2021 வரை சென்னையின் கடல் மட்டம் 6.79 மி.மீ உயர்ந்துள்ளது.

    கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் அபாயம் குறித்து பெங்களூருவைச் சேர்ந்த அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP) ஆய்வு செய்தது.

    கடல் மட்டம் உயருவதால், சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மும்பை, திருவனந்தபுரம், கொச்சி, மங்களூரு, விசாகப்பட்டினம், கோழிக்கோடு, ஹல்டியா, பனாஜி, பூரி, உடுப்பி, பரதீப், யானம் ஆகிய 15 நகரங்கள் பாதிக்கப்படும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கடல் மட்டம் உயர்வதால் 2040ம் ஆண்டுக்குள் சென்னையின் நிலப்பரப்பில் ஏறக்குறைய 7% மூழ்கிவிடும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    சென்னையில் உள்ள அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவுத்திடல், மைலாப்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் நினைவு சின்னம், பள்ளிக்கரணை ஈரநிலம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் கடல் மட்ட உயர்வு காரணமாக அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

    2040 ஆம் ஆண்டில் சென்னையின் 7.29% பகுதி (86.6 சதுர கிமீ) கடலில் மூழ்கும் என்றும், 2060 ஆம் ஆண்டில் 9.65% பகுதி (114.31 சதுர கிமீ) கடலில் மூழ்கும் என்றும், 2100 ஆம் ஆண்டில் 16.9% (207.04 சதுர கிமீ) பகுதி கடலில் மூழ்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட பெருநகரம் சென்னை ஆகும். மேலும், சென்னை உலகில் 35 வது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும்.

    1987 முதல் 2021 வரை சென்னையின் கடல் மட்டம் 6.79 மி.மீ உயர்ந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் சென்னை நகரின் கடல் மட்டம் 0.66 மி.மீ அதிகரித்து வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    2040 ஆம் ஆண்டுக்குள் தூத்துக்குடியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

    2100 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் 74.7 செ.மீ வரை கடல்மட்டம் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக மும்பை நகரில் கடந்த 30 ஆண்டுகளில் கடல் மட்டம் 44.4 மி.மீ வரை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மும்பை நகரின் கடல் மட்டம் 3.1 மி.மீ அதிகரித்து வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ×