search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகபஞ்சமி"

    • நாகபஞ்சமி ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கொண்டாடப்படுகிறது.
    • ஜாதகத்தில் உள்ள நாக தோஷம் விலகும்.

    வட இந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவிலும் தவறாமல் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஒன்றாக இருக்கிறது, 'நாக பஞ்சமி' விரதம். இது ஒவ்வொரு ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதியில் கொண்டாடப்படும் ஒப்பற்ற நிகழ்வாகும். இந்த நிகழ்வு வந்ததற்கான காரணத்தை இங்கே பார்க்கலாம்.

    ஒரு சமயம் பரீட்சித் மகாராஜா வனத்திற்கு வேட்டையாடச் சென்றார். அப்பொழுது தன்னுடைய படைகளை விட்டுப் பிரிந்து நீண்ட தூரம் சென்று விட்டார். இந்நிலையில் அவருக்கு தாகம் அதிகம் எடுத்ததால், தண்ணீரைத் தேடினார்.

    ஓரிடத்தில் மகாசந்தர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் யார் என்பதை அறியாத பரீட்சித் மன்னன், அவரிடம் சென்று குடிக்க தண்ணீர் கேட்டான். ஆனால் அந்த முனிவர் அசைவற்ற நிலையில் தியானம் செய்து கொண்டிருந்தார்.

    இதனால் கோபம் கொண்ட மன்னன், அருகில் இறந்து கிடந்த ஒரு பாம்பை அவரது கழுத்தில் போட்டு விட்டு, அங்கிருந்து சென்றுவிட்டான்.

    மகாசந்த முனிவரின் மகன், சிறந்த சிவ யோகி ஆவார். அவர் தன் தந்தைக்கு நடந்த அநீதியை யோக சித்தியின் மூலம் அறிந்தார். பின்னர், "என் தந்தை யோகத்தில் இருக்கும் பொழுது, அவரது கழுத்தில் பாம்பை போட்டு அவமதித்தவன் யாராக இருந்தாலும், 'தட்சகன்' என்ற நாகம் கடித்து ஏழு நாட்களுக்குள் இறந்து விடுவான்" என்று சாபமிட்டார்.

    பரீட்சித் மகாராஜா, தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் பற்றி அறிந்தார். சர்ப்பத்தின் கடியில் இருந்து தப்பிக்க நாகசம் என்ற பட்டினத்தில் ஒரு கோட்டையை கட்டி, அதில் பாதுகாப்பாக இருந்தார். மணி, மந்திர, ஔஷதங்களில் சிறந்தவர்கள் அனைவரும் தன்னை சுற்றி இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

    7-வது நாள் பரீட்சித் மகாராஜாவை கடிப்பதற்காக, நாகங்களின் தலைவனான தட்சகன், வயதான வேதியர் உருவம் எடுத்து வந்து கொண்டிருந்தான். இதற்கிடையில் மகாராஜாவை நாகத்தின் விஷத்தில் இருந்து காப்பாற்றுபவர்களுக்கு லட்சம் பொன் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதைக் கேட்ட கஸ்யபன் என்ற மந்திரவாதியும் அங்கே வந்து கொண்டிருந்தான். வழியில் தட்சகனும், கஸ்யபனும் சந்தித்துக் கொண்டனர்.

    மந்திரவாதியை சந்தித்த தட்சகன், தான் யார் என்பதை அவனிடம் கூறி தன்னுடைய வலிமையைக் காட்டினான். எதிரே இருந்த பசுமையான ஆலமரத்தை தட்சகன் கடிக்க, அடுத்த நொடியே அந்த ஆலமரம் எரிந்து சாம்பலானது.

    அதைப் பார்த்த மந்திரவாதி, மந்திர ஒலியால் தீர்த்தமாக மாறியிருந்த நீரை, எரிந்துபோன ஆலயமரத்தின் மீது தெளித்தான். மறுநொடியே அந்த ஆலயம் பழையபடியே பசுமையாக உருமாறியது.

    மந்திரவாதியின் வலிமையை உணர்ந்த தட்சகன், "கர்மவினையால் பரீட்சித் மகாராஜா இறக்க வேண்டும். அவன் தருவதாக சொன்ன லட்சம் பொன்னை நான் உனக்கு தருகிறேன், பெற்றுக்கொள்" என்று கூறி, லட்சம் பொன்னை கொடுத்து, மந்திரவாதியை திருப்பி அனுப்பினான்.

    பின்னர் தட்சகன், மகாராஜா தங்கியிருந்த கோட்டையை அடைந்து, அங்கிருந்த காவலர்களிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்டான். ஆனால் அவர்கள், 'யாரும் அரசனை சந்திக்க முடியாது' என்று கூறி மறுத்துவிட்டனர்.

    உடனே தட்சகன், காமரூப சக்தி உள்ள ஒரு நாகத்தை, ஒரு வேதியராக மாற்றினான். பின்னர் தான் ஒரு புழுவாக மாறி பழம் ஒன்றில் போய் அமர்ந்து கொண்டான். அந்த வேதியர், காவலர்களிடம், "நாங்கள் மன்னனுக்காக தரும் மந்திரித்த பிரசாதத்தை அவரிடம் கொடுங்கள்" என்று கூறி பழக்கூடையை வழங்கினார்.

    அதை எடுத்துச் சென்று மகாராஜாவிடம், காவலர்கள் கொடுத்தனர். அதில் இருந்த கனியை எடுத்து மன்னன் சாப்பிட்டான். அப்போது அதனுள் புழுவாக இருந்த தட்சகன், பரீட்சித் மகாராஜாவை கடித்ததும், அவர் இறந்தார்.

    பரீட்சித் மகாராஜா இறந்ததும், அவருடைய மகன் ஜனமேஜயனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. அவர் காசி தேசத்து அரசனான சுவர்ண வர்ணாகரன் மகள் வபுஷ்டை என்பவளை திருமணம் செய்து கொண்டான்.

    ஒரு முறை ஜனமேஜயன் அரசவைக்கு, உத்துங்கர் என்ற முனிவர் வந்தார். அவர், "அரசே.. உனக்கு எதிரிகளே இல்லை என நினைத்துக் கொண்டிருக்கிறாயா?. உன் தகப்பனாரைக் கொன்ற தட்சகனை பற்றி உனக்குத் தெரியாதா?" எனக்கூறினார். பின்னர், "நீ ஒரு மிகப்பெரிய சர்ப்ப யாகம் செய்து தட்சகனை அழிக்க வேண்டும்" என்றார்.

    அதைக் கேட்ட ஜனமேஜயன், "என்னால் சர்ப்பங்களின் தலைவனான தட்சகனை அழிக்க முடியுமா?" என கேட்க, அந்த முனிவரோ, "மன்னா.. உனக்கு தெரியாது. ஏற்கனவே நாகங்களுக்கு சாபம் உண்டு. எனவே நீ தைரியமாக அந்த யாகத்தை செய்" என்றார். அந்த சாபத்தைப் பற்றியும் மன்னனிடம் கூறினார்.

    காசியப முனிவரின் மனைவிகளில் இருவர், கத்ரு மற்றும் வினதை. ஒரு சமயம் இவர்கள் இருவரும் வானில் உச்சைஸ்ரவஸ் என்ற குதிரையைக் கண்டனர். அந்த குதிரை கருப்பு நிறம் என்றாள், கத்ரு. வினதையோ அது வெள்ளை நிறம் என்று கூறினாள். இது அவர்களுக்குள் போட்டியாக மாறியது.

    அப்போது கத்ரு, தன் பிள்ளைகளை அழைத்து, "ஓ சர்ப்பங்களே.. நீங்கள் விரைந்து சென்று, உச்சிஸ்ரவரஸ் குதிரையில் போய் ஒட்டிக் கொள்ளுங்கள். அப்போது அது கருப்பாக தெரியும்" என்றாள். அதற்கு சில நாகங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால் பல நாகங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோபம் கொண்ட கத்ரு, தனக்கு உதவி செய்ய மறுத்த பிள்ளைகளை நோக்கி, "நீங்கள் அனைவரும் பின்னாளில் ஒரு மன்னன் செய்யும் யாக குண்டத்தில் விழுந்து அழிவீர்கள்" என்று சாபமிட்டாள்.

    உத்துங்கர் முனிவரிடம் இருந்து நாகங்களின் சாபத்தை அறிந்த ஜனமேஜயன், யாகம் செய்ய முன்வந்தான். யாகம் தொடங்கிவிட்டது. அப்போது தட்சகன் ஓடிச் சென்று இந்திரனை சரணடைந்து, அவனுடைய ஆசனத்தைச் சுற்றிக் கொண்டான்.

    ஜனமேஜயன் யாகம் செய்யச் செய்ய, அந்த குண்டத்தில் வானில் இருந்து பல பாம்புகள் வந்து விழுந்தன. யாகத்தின் சக்தி, தட்சகனையும் குண்டத்தை நோக்கி இழுத்தது. இதனால் இந்திரனின் ஆசனமும், இந்திரனும் தட்சகனுடன் சேர்ந்து பூமிக்கு வந்தனர்.

    அப்பொழுது இந்திரன், ஜரக்காரு முனிவரின் புதல்வரான ஆஸ்திகர் என்ற முனிவரை நினைத்து தியானம் செய்தார். உடனே ஆஸ்திக முனிவர் யாகசாலைக்கு வந்து, "தர்மாத்மாவான நீ இதை செய்ய வேண்டாம். இந்த யாகத்தை நிறுத்து" என்று ஜனமேஜயனை கேட்டுக்கொண்டார்.

    அவரது வேண்டுகோளை ஏற்று, உத்துங்க முனிவரும், ஜனமேஜய மகாராஜாவும் யாகத்தை நிறுத்தினர். இந்த நிகழ்வு நடந்தது நாக பஞ்சமி அன்றுதான். எனவே ஆண்டுதோறும் அந்த நாளில் நாக பஞ்சமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    நேபாளத்தில் நாக பஞ்சமி மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படும். அன்றைய தினம் நாகங்களை பூஜிப்பதால், ஜாதகத்தில் உள்ள நாக தோஷம் விலகும். அதோடு விஷத்தால் ஏற்படும் அபாயங்கள் நீங்கும்.

    ×