search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகள் மோசடி"

    • போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.
    • 26 கிலோ நகைகளை கையாடல் செய்தது தெரியவந்தது.

    திருப்பூர்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 34). இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கிக்கிளையில் மேலாளராக இருந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக அங்கு வேலை பார்த்து வந்த ஜெயக்குமார், கடந்த ஜூலை மாதம் எர்ணாகுளம் பாலரிவட்டம் கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அவர் இன்னும் அங்கு பொறுப்பேற்கவில்லை.

    இதற்கிடையே, கோழிக்கோட்டில் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி கிளைக்கு இர்ஷாத் என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டார். அவர் அந்த கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை மறு மதிப்பீடு செய்தபோது, கடந்த ஜூன் மாதம் 13-ந்தேதி முதல் ஜூலை 6-ந்தேதி வரை அடகு வைக்கப்பட்டிருந்த ரூ.17 கோடி மதிப்பிலான நகைகளில் போலி நகைகள் இருப்பது தெரியவந்தது.

    உடனே மேலாளர் இர்ஷாத், இதுகுறித்து வடகரை போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், கோழிக்கோடு கிளையில் ஏற்கனவே மேலாளராக இருந்து இடமாற்றப்பட்ட ஜெயக்குமார், பாலரிவட்டம் கிளையில் பொறுப்பேற்காமல், இருக்குமிடமும் தெரியாமல் இருந்து வந்ததால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதனால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஜெயக்குமார் தெலுங்கானாவில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஜெயக்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.

    பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ஜெயக்குமார் திருப்பூரை சேர்ந்த அவரது நண்பரும் தனியார் வங்கி மேலாளருமான கார்த்திக் உதவியுடன், கோழிக்கோடு பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த ரூ.17 கோடி மதிப்புள்ள 26 கிலோ நகைகளை கையாடல் செய்தது தெரியவந்தது. அந்த நகைகளை கார்த்திக் உதவியுடன், திருப்பூர் புஷ்பா சந்திப்பில் உள்ள தனியார் வங்கியில் 17 நபர்களின் பெயரில் வைத்து பணம் பெற்றுள்ளார். அதிகாரிகளை நம்ப வைக்க ஜெயக்குமார் கோழிக்கோடு வங்கியில் போலி நகைகளை வைத்துள்ளார். புதிய மேலாளரின் தணிக்கையில் அவர் சிக்கிக்கொண்டார்.

    இதையடுத்து கேரள போலீசார் ஜெயக்குமாரை திருப்பூர் அழைத்து வந்து தனியார் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 496 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் பல்வேறு வங்கிகளில் கையாடல் செய்த நகைகளை அடகு வைத்துள்ளார். அதனை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் தனியார் வங்கி மேலாளர் கார்த்திக்கையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தையொட்டி இன்று காலை முதல் திருப்பூர் தனியார் வங்கியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ×