search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shukran சிறப்பு கட்டுரை"

    • ஒரு கிரகம் நீசம் பெறும் போது பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும்.
    • ஒரு கிரகம் அதன் உச்ச வீட்டில் இருக்கும் போது 100 சதவீதம் முழு பலம் பெறும்.

    ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வீடு உச்சமாகவும், அதன் நேர் எதிர் 180 டிகிரியில் உள்ள வீடு நீச்சமாகவும் வரும். கிரகங்கள் உச்ச வீட்டில் சஞ்சாரம் செய்யும் போது பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதன் வலிமையும் மிகுதியாக இருக்கும்.


    உச்ச கிரகங்களின் கதிர் வீச்சு பூமிக்கு மிகுதியாக கிடைக்கும். ஒரு கிரகம் நீசம் பெறும் போது பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும்.

    அதாவது ஒரு கிரகம் சூரியனை சுற்றி வரும் சுற்று வட்டப்பாதையில் இருந்து அதிக தொலைவு விலகி செல்லும் பொழுது சூரியனிடமிருந்து தான் பெற்ற ஒளியை பிரதிபலிக்க இயலாத தன்மையை குறிக்கும்.

    நீசம் பெற்ற கிரகத்தின் அதிர்வலைகள் பூமிக்கு குறைவாக இருக்கும். ஒரு கிரகம் அதன் உச்ச வீட்டில் இருக்கும் போது 100 சதவீதம் முழு பலம் பெறும். நீச்ச வீட்டில் அதன் பலத்தை முற்றிலும் இழக்கும்.

    ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.மனித வாழ்க்கைக்கு சந்தோஷம், இன்பம் தருகின்ற நிகழ்வுகள் அனைத்தும் சுக்ரனுடைய காரகத்திற்கு உட்பட்டது என்றால் மிகைப்படுத்தலாகாது.

    அதனால் தான் வாழ்க்கையில் நல்ல வீடு, மனை, வாகனம், நல்ல அழகான வாழ்க்கைத் துணை போன்ற அமைப்புகளோடு வாழ்பவர்களை பார்த்து அவனுக்கு என்ன சுக்கிர திசை நடக்கிறதா? என்று சொல்கிறார்கள்.

    இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இவர் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். தற்போது கோட்சாரத்தில் அசுர குருவான சுக்ரன் கன்னி ராசியில் 25.8.2024 முதல் நீசம் பெறுகிறார்.

    18.9.2024 வரை நீடிக்கும் இந்த கிரக நிலவரம் எந்த ராசிக்கு நன்மை தரப் போகிறது? எந்த ராசிக்கு தீமை வழங்கப் போகிறது? இந்த கட்டுரையில் கிரகங்கள் நீசம் பெறுவது நல்லதா? என்பது பற்றி பார்க்கலாம்.

    சுக்ரன்

    சுக்ரன் என்ற பெயரைக் கேட்டாலே மனதில் பரவசம் பெருகும். வயது வித்தியாசமின்றி ஒருவரின் மனதில் இன்ப அலைகளை பரவ விடுவதில் சுக்ரனுக்கு நிகர் சுக்ரனே. காதலுக்கும், காமத்திற்கும் அடிமையாகாத நபரை உலகில் பார்ப்பது அரிது.

    எல்லா மனிதனுக்கும் பொதுவான, சிற்றின்பமான காதல் மற்றும் காமத்தை கொடுக்கும் கிரகம் சுக்கிரன். சில நிமிடங்கள் நீடிக்கக்கூடிய சிற்றின்பமான, காதல், காமத்திற்கும் பெண் ஆசைக்கும் பல கோட்டைகள் சாம்ராஜ்ஜியங்கள் சரிந்துள்ளதை நாம் கேள்விப்பட்டு உள்ளோம்.

    அந்த காமத்தை, ஆசையை தூண்டுவது சுக்கிரன் தான். ஒரு மனிதனுக்கு அழகு, கவர்ச்சியை கொடுப்பதும் சுக்கிரன் தான். ஒருவருடைய திருமண வாழ்க்கை, காதல், காமம், அன்பு, எதிர்பாலின ஈர்ப்பு, உறவுகள், உறவுகளால் ஏற்படும் மகிழ்ச்சி, புற அழகியல் சார்ந்த விஷயங்கள், உலகியல் இன்பங்கள், சொகுசான வாழ்விற்கு தேவையான விஷயங்கள், ஆடம்பரமான வீடு, வாகனங்கள், அணிகலன்கள், போன்றவற்றிற்கு காரக கிரகம் சுக்கிரன்.


    சுக்கிரன், வாழும் வரை ஜாலியாக வாழ்ந்து விட்டு போக வைக்கும் கிரகம். பணம் மட்டும் இருந்தால் போதும், அதை எப்படி வேண்டு மானாலும், அனுபவித்து செலவழிக்க கூடிய கிரகம் சுக்ரன்.

    ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட முறையில், பணம் இருந்தாலும், சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க சுக்கிரனின் தயவு தேவை. அதனால் சுக போகத்தின் அதிபதி, சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் எல்லா நிலைகளிலும், கெடாமல் வலுப்பெற்று இருக்க வேண்டும்.

    அன்பான மனைவி, அழகான வீடு, ஆடம்பரமான கார், சொகுசான இன்பமய மான வாழ்க்கை இத்தனையையும் ஒருவருக்கு குறைவின்றி கொடுக்கும் கிரகம் சுக்கிரன்.

    சுக்ரன் பாவக, ஆதிபத்திய ரீதியாக வலுப்பெற்றால் பெரிய பொருளாதாரம் ஈட்டுதல், சுக்ரனின் காரகங்களான நவீனம், வாசனைப் பொருட்கள், உயர்ரக வாகனம், வீடு, இசை,கவிதை ஆர்வம், அலங்காரம், ஒப்பனை, நளினம் போன்றவற்றில் ஆர்வம் கூடும்.

    கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்து பெரிய உயரத்தையும் தொட வைக்கும். காரக, பாவக ஆதிபத்திய ரீதியாக சுக்ரன் பலம் குறைந்தால் நீசம் பெற்றால் வறுமை, தரித்திரம் போன்ற பாதிப்பு இருக்கும்.

    சம்பாத்தியம், ஆடம்பரம் என்ற எண்ணமே வராமல் செய்யும். ஒரு மனிதன் யோகமான வாழ்க்கை வாழ்ந்தால், அவனுக்கென்னப்பா சுக்கிர திசை, பிச்சுகிட்டு கொட்டுகிறது என்று படிக்காத பாமரனும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.

    உண்மையைச் சொன்னால் சுக்கிரன், எல்லோருக்கும் நல்ல பலனை அள்ளி கொடுத்து விடுவதில்லை. சுக்கிரன் தன்னுடைய நண்பர்களான புதன் , சனியின் லக்னங்களுக்கு யோக கிரகமாக வரும் பொழுது, அவருடைய திசையில் மிகச் சிறப்பான யோக பலன்களை கொடுக்கும்.

    சுக்கிரனின் பகை கிரகமான குருவிற்கு, சுக்கிரன் எந்த விதத்திலும் நல்ல பலனைத் தருவதில்லை. அதேபோல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் இரு பாவகத்திற்கு உள்ள பலன்களை நடத்தியே தீரும்.

    நீச்ச சுக்ரனால் ஏற்படும் பொதுவான பலன்கள் : 25.8.2024 முதல் 18.9.2024 வரை

    ஒரு கிரகம் நீசம் பெறும் போது இயல்பான தனது காரகத்துவ ஆதிபத்திய ரீதியான பலனை தரத் தவறுகிறது. நீச்சம் பெற்ற கிரகம் நீச்ச பங்கம் பெற்றால் நூறு மடங்கு ராஜயோகத்தை வழங்கி குப்பை மேட்டில் இருப்பவரை கோடிஸ்வர யோகம் வழங்கி மாளிகையில் வாழ வைக்கிறது.

    ஆண்களின் களத்திர காரகன் சுக்ரன் நீச்சம் பெறுவதால் அதீத திருமணத் தடை இருக்கும். வாழ்க்கைத் துணையால் மன உளைச்சல் மிகுதியாகும்.

    பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய முடியாது. பொன், பொருள் சேராது. நகைகள் அடமானத்திற்கு செல்லும். இனிமையான இல்லறம் அமையாது. தனித்த கிரகங்கள் வழங்கும் பலன்களை விட கூட்டு கிரகங்களால் உண்டாகும் பலன்களில் சாதகம், பாதகம் அதிகம் உண்டு. நீச்சம் பெற்று சுக்ரன் கேதுவுடன் இணைகிறார்.

    நீச்ச சுக்ரன் மேல் குருவின் 5-ம் பார்வையும் செவ்வாயின் 4-ம் பார்வையும் பதிகிறது. பொதுவாக கேதுவுடன் இணையும் கிரகம் தனது காரக, பாவக, ஆதிபத்திய ரீதியான பலன்களை முற்றிலும் இழக்கும். தற்போது கோட்சாரத்தில் நீசம் பெறும் கேதுவுடன் இணைந்த சுக்ரனை குரு மற்றும் செவ்வாய் பார்ப்பது சுபித்துச் சொல்லக் கூடிய பலன் அல்ல.

    அதே நேரத்தில் சுக்ரன் சித்திரை நட்சத்திரத்தில் நீசம் பெறுவார். 12.9.2024 முதல் 18.9.2024 வரையான 7 நாட்கள் மட்டுமே சுக்ரன் பரம நீசம். இந்த காலகட்டத்தில் திருமணம் சம்பந்தமான நிகழ்வுகளை தவிர்ப்பது நல்லது.

    இனி 12 ராசிக்கு நீச சுக்ரன் கேது+ குரு மற்றும் நீச சுக்ரன் கேது + செவ்வாய் இணைவால் ஏற்படும் பலன்களையும் பரிகாரங்களையும் காணலாம்.


    மேஷம்:

    ராசிக்கு 6-ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானமான கன்னியில் நீச சுக்ரன் கேது சேர்க்கை இருப்பதால் கடன் தொல்வை, நோய் தாக்கம் குறையும். மாற்றுமுறை வைத்தியம் பலன் தரும்.வீடு வாகன கடன் விண்ணப்பிக்க உகந்த காலம். திருமணத் தடை அதிகமாகும். குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்ல வேண்டும்.

    ரிஷபம்:

    ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி சுக்ரன் நீசம் பெற்று கேதுவுடன் இணைகிறார். பங்குச்சந்தை, காதல் தொடர்பான விசயங்களில் அவமானம் உண்டாகும். பூர்வீகம் தொடர்பான வம்பு வழக்குகள் இழுபறியாகும். பிள்ளைகளின் திருமணம் கல்வி போன்ற தேவைக்காக கடன் பெற நேரும்

    மிதுனம்:

    ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் கேதுவுடன் இணைகிறார். காதல் கை கொடுக்காது. ஆன்மீக நாட்டம் குறையும். பிள்ளைகளின் எதிர்காலம், அதிர்ஷ்டம், பூர்வீகம் பற்றிய சிந்தனை மிகுதியாகும். ஆரோக்கியம் தொடர்பான விசயங்களில் கவனம் தேவை

    கடகம்:

    ராசிக்கு 3ம்மிடமான சகாய ஸ்தானத்தில் பாதகாதிபதி சுக்ரன் நீசம் பெறுகிறார். பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். தாய்வழிச் சொத்தில் நிலவிய மாற்றுக் கருத்து மறையும். விவசாயிகளுக்கு, பண்ணை யாளர்களுக்கு சாதகமான பலன் உண்டு. முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்கு 2-ம்மிடமான தனம் வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் நீச்ச சுக்ரன் கேது சேர்க்கை உள்ளது. கற்ற கல்வியால் பயன் உண்டு. ஆசிரியர், ஜோதிடர், வங்கிப் பணியாளர்கள் தனித்திறமையுடன் மிளிர்வார்கள். அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள். ஞாபகசக்தி குறையும். பாகப் பிரிவினையை தவிர்க்க வேண்டும்.

    கன்னி:

    ராசியில் 2, 9 ம் அதிபதியாகிய சுக்ரன் நீசம் பெற்று கேதுவுடன் இணைகிறார். சிலர் பூர்வீகத்தை விட்டு எதிர்கால தேவைக்காக வெளியூர், வெளிநாடு செல்லலாம். பூர்வீகச் சொத்தில் சர்ச்சை உண்டு. பிள்ளைகளிடம் கவனமாக இருக்க வேண்டும். குலதெய்வ பிரார்த்தனைகளை ஒத்தி வைக்கவும்

    துலாம்:

    ராசி மற்றும் அஷ்டமாதிபதி சுக்ரன் ராசிக்கு 12ல் நீசம் பெற்று கேதுவுடன் இணைகி றார். சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் எதிரியை அதிகப்படுத்தும். தீய பழக்க வழக்கங்களால் நோய் ஏற்படும். நோய்க்கு வைத்தியம் செய்ய கடன் பெறுவார்கள். கடனுக்கு பயந்து நோய் கூடிக் கொண்டே போகும். முக்கிய பணிகளை ஒத்தி வைக்கவும்.

    விருச்சிகம்:

    ராசிக்கு 11-ம் மிடமான லாப ஸ்தானத்தில் நீச சுக்ரன் கேது சேர்க்கை உள்ளது. அயன சயன போகம் சிறந்த நிலையில் இருக்கும். சிலருக்கு முதல் மனைவி இருக்கும் போதே மறு திருமணம் நடக்கும். தம்பதிகளிடம் நெருக்கம் குறையும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. நம்பியவர்களே நம்பிக்கைத் துரோகம் செய்யலாம்

    தனுசு: ராசிக்கு 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் நீச சுக்ரன், கேது சேர்க்கை உள்ளது. பொருளாதார வெற்றி,வீடு மனை வாகனம் போன்றவை கிடைக்கும். தாயின் ஆரோக்கியம் சீராகும்.சிலருக்கு மறு திருமணம் நடக்கும். கடன், நோய் பாதிப்பு எதிரி தொல்லை குறையும். வராக்கடன்கள் வசூலாகும்.

    மகரம்:

    மகரம் ராசிக்கு 9-ம்மிடமான பாக்கிய ஸதா னத்தில் நீச சுக்ரன் கேது சேர்க்கை உள்ளது. காதலிப்பது தவறு என்ற உண்மை புலப்படும். நிலையான பொருள் வரவு இருக்காது. குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு குறையும். பதவி, புகழ், அந்தஸ்து குறையும்.

    கும்பம்:

    ராசிக்கு 8-ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் 4,9-ம் அதிபதி சுக்ரன் நீசம் பெற்று கேதுவுடன் இணைகிறார்.நிறைவான சொத்து சுகத்தையும் நிறைந்த லாபத்தையும் தாய் வழி உறவுகளின் அனுசரனையும், வழக்குகளில் வெற்றியையும் முன்னோர்களின் நல்லாசியையும் வழங்கும்.

    மீனம்:

    ராசிக்கு 7-ம்மிடமான களத்திர ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சுக்ரன் நீசம் அடைந்து வலு குறைவது மிகச் சிறப்பு. வாழ்க்கைத் துணையால் கூட்டாளிகளால் அதிர்ஷ்டம் உண்டு. புரிதலின்றி பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள். காதலில் வெற்றி உண்டு.. அலைச்சல் மிகுந்த பயணம் மிகுதியாகும்.


    பரிகாரம்

    புதனின் வீடான கன்னியில் சுக்ரன் நீசம். புதன் என்றால் புத்தி அறிவு. சுக்ரனுக்கு காமம் மற்றும் ஆசை காரகமாகும். புத்தி தெளிந்த இடத்தில் ஆசைக்கு இடமில்லை. ஆசை (காமம்) அதிகமுள்ள இடத்தில் புத்திக்கு இடமில்லை என்பது புலனாகிறது.

    நீச்ச சுக்ரனால் இன்னல்களை சந்திப்பவர்கள் வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

    ×