search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகளில் சொற்பொழிவு"

    • மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் மாநில தலைவர் சரவணன், மகாவிஷ்ணு மீது புகார் அளித்துள்ளார்.
    • சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிசம்பர்-3 இயக்கத்தின் தலைவர் தீபக் புகார் அளித்துள்ளார்.

    அரசு பள்ளிகளில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையம் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய 2 இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் மாநில தலைவர் சரவணன், மகாவிஷ்ணு மீது புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிசம்பர்-3 இயக்கத்தின் தலைவர் தீபக் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகார் மனுக்களில், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டப்படி மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திரும்புவதாக வெளியான தகவலையடுத்து போலீசார் விமான நிலையத்துக்கு சென்று நேற்று இரவு விசாரித்தனர்.
    • ஒருவேளை மகாவிஷ்ணு இன்று சென்னை திரும்பாவிட்டால் அவரிடம் விசாரணை நடத்துவது எப்படி? என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் என்கிற அமைப்பை சேர்ந்த மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாக கூறி உரையாற்றினார்.

    அவரது பேச்சில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தது. கடந்த பிறவியில் பாவம் செய்தவர்களே மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என்கிற மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு சைதாப்பேட்டை பள்ளியில் வைத்து மாற்றுத்திறனாளியான பார்வையற்ற ஆசிரியர் சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மகா விஷ்ணுவுக்கும், ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு தொடர்பாக மகா விஷ்ணு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க தலைவர் வில்சன் சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் வன்கொடுமை சட்டப்படியும், ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்பிரிவு 72(அ)-வின் படியும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே மகா விஷ்ணு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் நான் தப்பி ஓடிவிட்டதாக தகவல் பரப்புகிறார்கள். எங்கேயும் நான் ஓடி ஒளியவில்லை. ஆஸ்திரேலியாவில் இருக்கும் நான் இன்று சென்னை வருகிறேன். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மகாவிஷ்ணுவின் வருகைக்காக காத்திருக்கும் போலீசார் அவர் சென்னை வந்து இறங்கியதும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதன்பிறகு அவர் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியும்? என்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

    மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திரும்புவதாக வெளியான தகவலையடுத்து போலீசார் விமான நிலையத்துக்கு சென்று நேற்று இரவு விசாரித்தனர். அப்போது மகாவிஷ்ணு என்கிற பெயரில் வெளிநாடுகளில் இருந்து யாரும் வருவதற்கான எந்த விவரங்களும் கிடைக்கவில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

    ஒருவேளை மகாவிஷ்ணு இன்று சென்னை திரும்பாவிட்டால் அவரிடம் விசாரணை நடத்துவது எப்படி? என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள். மதுரையை சேர்ந்த இவரது இயற்பெயர் மகா. பரம்பொருள் பவுண்டேசன் என்கிற அமைப்பை தொடங்கியுள்ள இவர் தனது பெயருக்கு பின்னால் விஷ்ணு என்கிற பெயரை சேர்த்துக் கொண்டு சொற்பொழிவாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    • கல்வி சாராத நிகழ்ச்சி எதையும் பள்ளிகளில் நடத்தக்கூடாது என்று அந்த அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நேற்று உடனடியாக விசாரணையை தொடங்கினார்.

    சென்னை:

    சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 28-ந்தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காலையில் அசோக்நகர் பள்ளியிலும், மாலையில் சைதாப்பேட்டை பள்ளியிலும் இந்த சொற்பொழிவு நடத்தப்பட்டது.

    பரம்பொருள் அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் இந்த இரு பள்ளிகளிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார். காலையில் அசோக்நகர் பள்ளியில் அவர் சொற்பொழிவு நடத்திய போது வேத மந்திரங்கள் பற்றி பேசியதாக தெரிய வந்துள்ளது.

    அந்த வேத மந்திரங்களை அவர் மாணவிகளை திரும்ப சொல்ல சொல்லி பேசியதாகவும் கூறப்படுகிறது.

    மாலையில் சைதாப்பேட்டை அரசு பள்ளியில் பேசும்போது, "பாவம், புண்ணியம், மறுபிறவி, குருகுல கல்வி" ஆகியவை பற்றி மகாவிஷ்ணு பேசினார். முன் ஜென்மங்களில் பாவங்கள் செய்தவர்கள் தான் மறுபிறவியில் மாற்றுத்திறனாளிகளாக பிறக்க நேரிடுகிறது என்று பேசினார்.

    இதற்கு அந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியரான சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவுக்கும், ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. மாணவிகளை நல்வழிப்படுத்துவது பற்றியே சொற்பொழிவாளர் பேச வேண்டும் என்று ஆசிரியர் சங்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    28-ந்தேதி சைதாப்பேட்டை பள்ளியில் நடந்த இந்த சர்ச்சை முதலில் வெளியில் தெரியவில்லை. இந்த நிலையில் பரம்பொருள் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளில் மகாவிஷ்ணு பேசியதை எடிட் செய்து கடந்த 4-ந்தேதி சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    அதன் பிறகுதான் மகா விஷ்ணுவின் பேச்சு சர்ச்சையாக வெடித்தது. நேற்று முன்தினம் இதுபற்றி சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று அசோக் நகர் பள்ளியில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்றிருந்தார்.

    அப்போது அவரிடம் இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. இதையடுத்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , "இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரித்து தகவல் அளித்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே மகா விஷ்ணுவை சர்ச்சைக்குரிய வகையில் பேச அனுமதித்ததற்காக அசோக்நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, சைதாப்பேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் ஆகிய இருவரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதோடு தமிழ்நாடு முழுக்க பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.

    கல்வி சாராத நிகழ்ச்சி எதையும் பள்ளிகளில் நடத்தக்கூடாது என்று அந்த அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த விவகாரம் கடும் சர்ச்சையாக உருவெடுத்து இருக்கிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பள்ளி கல்வித்துறை செயலாளர் மதுமதி சென்னை பள்ளிகளில் நடந்த சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பற்றி விரிவான விசாரணை நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனுக்கு அறிவுறுத்தினார். மேலும் விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இதையடுத்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நேற்று உடனடியாக விசாரணையை தொடங்கினார். அசோக்நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசியிடம் முதலில் விசாரணை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது.

    அசோக்நகர் பள்ளியில் இந்த நிகழ்ச்சியை நடத்த சொன்னது யார்? என்ன நோக்கத்துக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது? என்று 2 கேள்விகள் அடிப்படையில் விசாரணை நடந்தது. அப்போது தலைமை ஆசிரியை தமிழரசி, "வழக்கமாக வாரம் தோறும் மாணவிகளுக்கு நல்வழி சொற்பொழிவு நடத்தப்படுவது உண்டு. அந்த அடிப்படையில்தான் இந்த சொற்பொழிவு நடத்தப்பட்டது. ஆன்மிகம் சார்ந்து எதுவும் பேசவில்லை" என்று விளக்கம் அளித்தார்.

    அதுபோல சைதாப்பேட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம், மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் சைதாப்பேட்டை பள்ளி ஆசிரியர் சங்கர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் போது என்ன நடந்தது என்பது பற்றி பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் முழுமையாக கேட்டறிந்தார்.

    இதைத் தொடர்ந்து மேலும் 2 அல்லது 3 பேரிடம் அவர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார். இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் அடுத்த வாரம் தொடக்கத்தில் அவர் விசாரணையை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர் 2 அரசு பள்ளிகளில் நடந்த ஆன்மிக சொற்பொழிவுகள் பற்றி அறிக்கை தயார் செய்ய உள்ளார்.

    தமிழக அரசிடம் அந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதால் 3 நாட்களில் அவர் அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டமிட்டு உள்ளார்.

    எனவே இந்த சர்ச்சை விவகாரத்தில் அடுத்த வாரம் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. பள்ளி கல்வித்துறை வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் இதுவரை நடத்திய விசாரணை மற்றும் ஆய்வுகள் மூலம் பள்ளி கமிட்டியில் உள்ள ஒரு நபர் பரிந்துரை செய்ததன் மூலம் மகா விஷ்ணு சென்னையில் உள்ள 2 அரசு பள்ளிகளில் பேச வாய்ப்பு பெற்றது தெரியவந்துள்ளது. அது பற்றியும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் பள்ளிகளில் பேசுவதற்கு சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. யூடியூப் சேனலில் பிரபலம் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பணம் கொடுத்து சொற்பொழிவு செய்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

    இதுபற்றியும் பள்ளி கல்வித்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு புதிய அறிவுறுத்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "பள்ளிகளில் சொற்பொழிவாற்ற தகுதியானவர்களை மட்டுமே அழைக்க வேண்டும். கல்லூரிகளில் அறிவார்ந்த பேராசிரியர்கள் உள்ளனர். அவர்களை அழைத்து பேச வைக்கலாம்.

    விஞ்ஞானிகளை அழைக்க வேண்டும் என்றால் இஸ்ரோவில் இருக்கும் விஞ்ஞானிகளை அழைத்து வந்து பேச வைக்கலாம். பேச வருபவர்கள் யார் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ×