search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொற்களில் கவனம்"

    • சொற்களைச் சூத்திரம்போல் பயன்படுத்த வேண்டும்.
    • கவனத்துடன் ஆற்றல் சிதைந்து போகாமல் கையாள வேண்டும்.

    சொற்களைச் சூத்திரம்போல் பயன்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டுள்ள வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! அதைத் தொழுது படித்திடடி பாப்பா!" என்பார் மகாகவி பாரதி. உலகின் எல்லா மொழிகளிலும் சொற்கள் சிறந்த பெருமைக்கு உரியவைதான் என்றாலும், சொற்களின் இனிமை, அருமை, தொன்மை, புதுமை, பெருமை, எளிமை, பொருண்மை போன்ற தன்மைகளின் அடிப்படையில் உயர்வான இடத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியது தமிழ்ச் சொல் என்கிறார் பாரதி.

    அதிலும் உயர்ந்த இடத்தில் என்றால், அச்சொற்களைப் பயன்படுத்தும் போதெல்லாம், பயபக்தியோடு வணக்கத்துடன் பயன்படுத்த வேண்டும் என்கிறார். சொல்லுக்கு அவ்வளவு ஆற்றல் இருக்கிறது அதனைக் கவனத்துடன் ஆற்றல் சிதைந்து போகாமல் கையாள வேண்டும்.

    "ஒரு சொல் கொல்லும்! ஒரு சொல் வெல்லும்!" என்பது நமது பழந்தமிழ்ப் பழமொழி. கவனக்குறைவாகக் கையாண்டு விட்டால் வெல்லுகிற சொல்கூடக் கொல்லுகிற சொல்லாக மாறிவிடும் என்பதற்கு அன்றாட நடைமுறைதொட்டு அக்கால வரலாறுவரை நிறையச் சான்றுகள் உண்டு.

    பாண்டிமாதேவியின் காணாமற்போன காற்சிலம்பு ஒன்றுடன் கள்வன் ஒருவன் பிடிபட்டான் என்கிற தகவலைக் கேட்டவுடன், "கள்வனைக் கொன்றச் சிலம்பு கொணர்க!" எனப் பாண்டியமன்னன் கூறியதாகச் சிலப்பதிகாரத்தில் ஒரு செய்தி உண்டு.

    சிலம்பு காணாமற்போன பதற்றத்தில் இருந்த பாண்டியன் செவியில் கள்வனும் சிலம்பும் கிடைத்துவிட்டன என்று விழுந்த செய்தி, மேலும் பரபரப்பை அதிகப்படுத்தியதால், 'கள்வனைக் கொண்டு அச்சிலம்பைக் கொணர்க!

    அந்த திருடனோடு சிலம்பையும் கொண்டு வாருங்கள்! என்பதற்குப் பதிலாக, நாக்குத் தடுமாறக், "கொன்று" அச்சிலம்பு கொணர்க என்று வந்துவிட்டது. இந்தச் சொல் தடுமாற்றம், விசாரிக்கப் படாமலேயே கோவலனைக் கொலைக்களப்பட வைத்துவிட்டது;

    பாண்டிய மன்னனை நீதி தடுமாற வைத்து அவனது உயிரையும் அவனது மனைவியின் உயிரையும் காவு வாங்கி விட்டது.

    "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!"

    என்கிற வள்ளுவம். சொல்லுகிற சொல்லெல்லாம் வெல்லுகிற சொல்லாக இருக்க வேண்டும். வெல்லுகிற சொல்லிலும் பிறிதோர் சொல்லைப் போட்டால், அதனைச் சமப்படுத்தி நிரப்பிவிடும் சொல்லாகவும் இருக்கக் கூடாது.

    " மந்திரம்போல் சொல்லின்பம் வேண்டுமடா!" என்பது பாரதி வலியுறுத்தும் சொற்களின் உறுதித்தன்மை. சொற்கள் இனிமை பயப்பதாய் இருக்கவேண்டும்; அதே நேரத்தில் மந்திரம்போலச் சக்தியூட்டப்பெற்ற ஆற்றல்மிக்க சொற்களாகப் பயன் விளைவிப்பவையாக இருக்க வேண்டும்.

    சொற்களைக் கல்வியறிவினாலும் சிந்தனை ஊற்றத்தாலும் பெருக்கத் தெரிந்த அறிஞர்களும் ஞானிகளுமே நிறைமொழி மாந்தர்கள் எனப் போற்றப்படுவார்கள். அவர்களின் திருவாயிலிருந்து கிளம்பி வருகிற சொற்களெல்லாம் உடனடிப் பயன் விளைவிக்கிற சொற்களாகத் திகழ்வதால், அவை மந்திரச் சொற்களாகப் போற்றப் படுகின்றன.

    நல்ல சிந்தனையாளர்கள், நல்லெண்ணம் கொண்ட பெரியோர் வாயிலிருந்து வருகின்ற எல்லாச் சொற்களுமே மந்திரச் சொற்களாகும். ஏனெனில் அச்சொற்களின் நோக்கம் உலக மக்களின், உலக உயிரினங்களின் நன்மை கருதியதாகவே இருக்கிறது.

    நம்மிடமிருந்து அன்றாடம் புறப்பட்டு வருகிற சொற்கள் பலதிரப்பட்டவையாக இருக்கின்றன. பெரும்பாலான சொற்கள் அர்த்தமற்ற சொற்களாக இருக்கின்றன; இவை நம்முடைய அறிவீனத்தை, முட்டாள் தனத்தை வெளிப்படுத்துகின்றவையாகவே அமைந்து விடுகின்றன.

    இவற்றைக் கேட்போர் எளிதில் நம்மைப் புத்தியற்றவர்கள் என விலக்கிவிட வாய்ப்பு உண்டு. சில சொற்கள் நம்முடைய கவலைகளை, இயலாமையைச், சோகங்களைச் சுமந்து வருகிற சொற்களாக இருக்கின்றன.

    இவற்றைக் கேட்போர் நம்மீது கழிவிரக்கம் கொண்டு நம்மைப் பாவப்பட்டவர்களாகக் கருத வேண்டும் என்பதற்காகவே சொல்லப்படுவது. சிலருடைய சொற்கள் அவர்களுடைய தற்பெருமையையும் ஆணவத்தையும் பறைசாற்றுபவையாக இருக்கும்.

    பல சொற்கள் நமது எரிச்சல்களையும் கோபங்களையும் தீக்கனைகளாகத் தாங்கிகொண்டு வெளி வரும். கோபமும் எரிச்சலும் கொள்பவரையும் நோய்ப்படுத்திவிடும்; கேட்கிறவரையும் காயப்படுத்திவிடும்.

    "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

    இனமென்னும்

    ஏமப் புனையைச் சுடும்"

    நமக்கு வருகிற கோபத்தால் நாம் பாதிக்கப்படுவதோடு, நாம் வெளிப்படுத்துகிற சுடுசொற்கள் நமக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக் கூடிய உறவினர், நட்பினர் யாவரையும் நம்மைவிட்டு நீங்கும்படிச் செய்து விடும் என்கிறார் திருவள்ளுவர்.

    கையில், பழுத்த சுவையான கனிகள் இருக்கும்போது, சுவையற்ற, கசக்கின்ற, துவர்க்கின்றை காய்களை யாராவது தேடிச்சென்று பறித்து உண்பார்களா? அதைப்போன்றது தான் நமது அன்னைத் தமிழில் உய்ர்வான அழகிய தமிழ்ச்சொற்கள் எண்ணற்றவை இருக்கத் தீய சொற்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவது.

    'இன்சொலால் ஈரம் அளைஇ' என்ற தொடரில் ஒவ்வொரு மனிதனும் இன்பம் விளைவிக்கின்ற ஈரமான சொற்களையே பேசவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

    அதனால்தான் நாம் பேசுவதற்குப் பெரிதும் பயன்படுகிற நாக்கை எப்போதும் ஈரப்பதத்திலேயே வைத்திருப்பதற்காக உமிழ்நீரில் அதனை ஊறிக்கொண்டே கிடக்கும் வண்ணம் கடவுள் செய்திருக்கிறார்.

    மனத்தில் எண்ணும்போது கோபமாகவும் வேகமாகவும் சொற்கள் கிளம்பி வந்தாலும் நாக்கும் அன்னங்களும் இருக்கின்ற வாய்ப்பகுதியைத் தாண்டும்போது, அவற்றின் சூடு தணித்து இனிமையாக வெளியேற்றப்பட வேண்டும்.

    ஒருவரை ஒருவர் இணைத்துக்கொள்ளச் சொற்கள் இணைப்புப் பாலங்களாக இருக்கின்றன. அவற்றைத் தடித்த சொற்களற்ற அன்புப் பாலங்களாக அமைத்துக்கொள்ள வேண்டியது மனிதநேயமுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். ஒன்றை நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.

    அருகருகே இருவர் நின்று பேசிக்கொண்டிருந்தால், இயல்பான பேச்சு என்றால் அது சத்தமற்ற பேச்சாக இருக்கும்; கோபமாகப் பேசிக்கொண்டிருந்தால் சத்தம் கூடியதாக இருக்கும். ஒலியளவு கோபத்தில் கூடுவதற்குக் காரணம், அவர்கள் உடலளவில் அருகருகே இருந்தாலும், மனத்தளவில் வெகுதொலைவிற்குப் பிரிக்கப்பட்டு விட்டதாக நினைப்பதே காரணம்.

    'நான் இயல்பாக இருக்கும்போது நல்ல நல்ல கனிவான சொற்களையே பேசுகிறேன்; ஆனால் கோபம் வந்துவிட்டால், இந்தக் கெட்ட கெட்ட சொற்களெல்லாம் எங்கிருந்துதான் எனக்குள் வருகின்றனவோ தெரியவில்லை.

    கோபத்தில் தடித்த சொற்களைத் தாறுமாறாய்ப் பேசிவிட்டுப், பிறகு அதற்காக எவ்வளவு வருத்தப்பட்டாலும், மன்னிப்புக் கேட்டாலும் தீர்வே கிடைப்பதில்லை' என்று வருத்தப்படலாம். வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குமுன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது வாழ்க்கையில் மிகமிக முக்கியம்.

    `நெல்லைக் கொட்டினால் அள்ளிவிட முடியும்; சொல்லைக் கொட்டினால் அள்ளவே முடியாது' என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. ஒரு கிராமத்தில் ஓர் இளைஞன் கோபமே படக்கூடாது என்பதில் மிகவும் கட்டுப்பாடோடு இருந்தான். ஒருநாள் கண்மண் தெரியாமல் கோபம் வந்து விட்டது.

    வீட்டு வாசலில் உட்கார்ந்து போகிற வருகிறவர்கள் எல்லோரையும் பார்த்து, வாய்க்கு வந்தபடித் திட்டித் தீர்த்துக் கொண்டே இருந்தான். மாலை வந்தது; இரவும் வந்தது. ஒருவாறு கோபம் தணிந்தது.

    வீட்டிற்குள் சென்று இரவு உணவைச் சாப்பிட்டு விட்டுப் படுக்கையில் படுத்து யோசிக்கத் தொடங்கி னான். காலையில் இருந்து நாம் திட்டிய சொற்களை எப்படித் திரும்பப் பெறுவது?. பதிலொன்றும் பிடிபடவில்லை; உறங்கி விட்டான்.

    மறுநாள் காலை எழுந்தவுடன் கிராமத்திற்கு அருகிலிருந்த ஒரு வனத்திற்குள் சென்றான். அடர்ந்த வனத்திற்குள் ஒரு துறவி தவமிருந்து கொண்டி ருந்தார். அவர் முன்னே நின்று வணங்கினான் இளைஞன்.

    கண்விழித்துப் பார்த்த துறவி என்ன விஷயம்? என்று கேட்டார். நேற்றுத், தான் கோபமாக இருந்த செய்தியையும், அதனால் தெருவில் போகிற வருகிறவர்களை எல்லாம் திட்டிக்கொண்டே இருந்ததையும் கூறினான்.

    கோபம் தீர்ந்தவுடன், திட்டிய சொற்களை எல்லாம் திரும்பப் பெறுவது எப்படி? என யோசித்ததாகவும், வழி தெரியாததால் துறவியிடம் வழிகேட்க வந்திருப்பதாகவும் கூறினான் இளைஞன், துறவி சிரித்துக்கொண்டே, அங்கே கீழே கிடந்த ஒரு கூடையைக் காட்டி, " அதை எடுத்துக்கொள். இந்த வனம் முழுவதும் சென்று ஆங்காங்கே உதிர்ந்து கிடக்கும் பறவைகளின் இறகுகளைப் பொறுக்கிக், கூடையை நிரப்பிக்கொள்.

    பிறகு உனது கிராமத்திற்குச் செல். அங்குள்ள முச்சந்தியில் இறகுகள் உள்ள கூடையைக் கவிழ்த்துக் கொட்டிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் இங்கே வா!.

    திட்டிய வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதற்கான வழியைச் சொல்லுகிறேன்!" என்றார்.

    கூடையோடு வனத்திற்குள் சென்ற இளைஞன், வெகு சிரத்தையோடு, உதிர்ந்து கிடந்த பறவைகளின் இறகுகளைப் பொறுக்கிக் கூடையை நிரப்பினான்.

    பிறகு கிராமத்து முச்சந்திக்குச் சென்று கூடையிலுள்ள இறகுகளைக் கொட்டிவிட்டு, வெறும்கூடையோடு திரும்பிப் பார்க்காமல் துறவி இருக்கும் இடம் வந்து சேர்ந்தான்; நண்பகல் நேரம் ஆகியிருந்தது.

    இளைஞனைப் பார்த்த துறவி, "இப்போது வழி சொல்லுகிறேன்; அதற்குமுன் நீ மீண்டும் கூடையோடு கிராமத்து முச்சந்தி வரை சென்று, அங்கு நீ கொட்டிவிட்ட பறவை இறகுகளை மீண்டும் அள்ளிக்கொண்டு வர வேண்டுமே!" என்றார்.

    சலித்துக்கொண்டே இளைஞன் கிராமத்தை நோக்கிச் சென்றான்; சென்ற இளைஞன் மாலை நேரமாகியும் திரும்பாததைக் கண்ட துறவி, அவனைத் தேடிக் கொண்டு கிராமத்து முச்சந்திக்குச் சென்றார்.

    அங்கே கொட்டிவிட்டு வந்த இறகுகளைக் காணாது வெறுங்கூடையோடு விழித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான் இளைஞன். சிரித்துக்கொண்டே துறவி சொன்னார், கோபத்தில் உதிர்த்துவிட்ட சொற்களையும், பறந்துவிட்ட பறவைகளின் இறகுகளையும் திரும்பப் பெறவே முடியாது.

    நாம்தாம் சொற்களைப் பேசும்போதே கவனமாக இருக்க வேண்டும்!".

    சொற்கள் மொழியின் அடையாளங்கள் மட்டுமல்ல; அவை அவற்றைப் பேசுகிற மனிதர்களின் குணங்களை அடையாளப்படுத்துகிற குறியீடுகளும் ஆகும்.

    'அவனுடைய பேச்சு வார்த்தைகளும், பழக்க வழக்கங்களும் அவன் சரியில்லாதவன் என்பதைக் காட்டுகின்றனவே!' என்று மனிதர்களை எளிதில் அடையாளம் கண்டு ஒதுக்கிவிடுவார்கள் அறிஞர்கள்.

    சொற்களில் பணிவு, அன்பில் கனிந்த கனிவு, உறுதியும் உண்மையும் வெளிப்படும் நேர்மை, கோபமும் எரிச்சலும் கலவாத கருணை, எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்லும் பரந்த மனப்பான்மை, எளிமையாய் எல்லார்க்கும் விளங்கும் தன்மை, சொற்களைக் கேட்டவுடனேயே செயல் நிகழ்ந்துவிட்டது போன்ற பலனளிக்கும் நம்பகம்.. இவை எப்போதும் வாய்க்கட்டும்.

    சொற்களை வெறும் வாய் சொற்களாக மட்டும் உதிர்க்காமல், மனத்தின் அடியாழத்திலிருந்து புறப்பட்டுவரும் அன்பின் வார்த்தைகளாக மடைமாற்றம் செய்தால் எல்லாச் சொற்களும் நலம் விளைவிக்கும் சொற்களே!. உணர்ச்சிகளுக்குக் கடிவாளம்!; வார்த்தைகளில் கவனம்! ; வாழ்க்கை முழுவதும் வசந்த வரவு.

    தொடர்புக்கு 9443190098

    ×