என் மலர்
நீங்கள் தேடியது "2025 புத்தாண்டு கொண்டாட்டம்"
- சுற்றுலா, வழிபாட்டுத் தலங்களில் தீவிர கண்காணிப்பு.
- புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாளை இரவு 7 மணிக்கு மேல் களைகட்டத் தொடங்கிவிடும்.
சென்னை:
2025-ம் ஆண்டு நாளை மறுதினம் (புதன்கிழமை) பிறக்கிறது. புத்தாண்டை உற்சாகமாக வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். ஓட்டல்கள், நட்சத்திர விடுதிகள், மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாளை இரவு (செவ்வாய்க்கிழமை) 7 மணிக்கு மேல் களைகட்டத் தொடங்கிவிடும்.
சென்னையில் மெரினா கடற்கரையில் நாளை இரவு 7 மணிக்கு மேல் மக்கள் ஒன்றுக்கூடி ஆடி-பாடி, நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், 'ஹேப்பி நியூ இயர்' என்று உற்சாக குரல் எழுப்பி மகிழ்ச்சியில் திளைப்பது வழக்கம்.
எனவே மெரினா கடற்கரையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வருபவர்கள் கடலில் இறங்கி குளிக்க அனுமதி இல்லை என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
எனினும் தடையை மீறி யாரும் கடலில் இறங்காத வகையில் கடற்கரை மணல் பரப்பில் தற்காலிக தடுப்புகளையும், கண்காணிப்பு கோபுரங்களையும் போலீசார் அமைத்து வருகின்றனர்.
மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல் அமைதியாக நடைபெற முன்னெச்சரிக்கையாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர். டிரோன் கேமராக்கள் மூலமாகவும் மக்கள் கூட்டத்தை போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
சென்னையில் உள்ள கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
புத்தாண்டையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை மறுநாள் (புதன்கிழமை) வரையில் சென்னையில் மட்டும் 18 ஆயிரம் போலீசார், ஊர்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு, ரோந்து, வாகன சோதனை போன்ற பணிகளில் ஈடுபட இருக்கின்றனர்.
புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
புத்தாண்டை கொண்டாட மக்கள் கூடும் முக்கிய சுற்றுலாத்தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார் தனிக்கவனம் செலுத்தி உள்ளனர். மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுப்பதற்காக முக்கிய சந்திப்புகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.
அதிவேகமாக மோட்டார் சைக்கிள், கார்களை ஓட்டினால் அபராதம், வழக்கு நடவடிக்கை பாயும் என்றும், மதுபோதையில் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆம்புலன்சு வாகனங்களை ஆங்காங்கே தயார் நிலையில் நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு போலீசார் தரப்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஆட்டம்-பாட்டம், கொண்டாட்டம் என்று களைகட்டும் நட்சத்திர விடுதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று போலீசார் தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள் அருகே யாரையும் அனுமதிக்க கூடாது.
மது அருந்தியவர்களை பாதுகாப்பாக தனி வாகனங்கள் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது போன்ற உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளது.
நாளை நள்ளிரவு தேவாலயங்கள், வழிபாட்டுத்தலங்களுக்கு பொதுமக்கள் அதிகம் பேர் செல்வார்கள் என்பதால், வழிப்பறி சம்பவங்கள் நேரிடாத வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட உள்ளனர்.
கடந்த ஆண்டு புத்தாண்டு பண்டிகையின் போது நள்ளிரவு 1 மணிக்குள் கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் போலீசார் விதித்திருந்த கடும் கட்டுப்பாடுகளால் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
- புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
- நகர சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர்.
நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருவதும், மறுபுறம் கிளம்பிச்செல்வதுமாக உள்ளனர். புத்தாண்டுக்கு ஒரு நாளே உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் நகர சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. விடுதி அறைகள் நிரம்பி வழிகிறது. ஓட்டல்களில் உணவுக்காக சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து சாப்பிட்டு செல்கின்றனர். நகரம் முழுவதும் முளைத்துள்ள சாலையோர உணகங்கள், சிற்றுண்டி கடைகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
நகர பகுதியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வாகனங்கள் ஊர்ந்துசெல்கிறது. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதை தடுக்க கடற்ரை சாலை, பாண்டிமெரீனா பகுதிகளில் தடுப்பு கட்டைகள் அமைத்துள்ளனர். போலீசார் கடலில் இறங்கி குளிப்பதை தடுத்து அறிவுறுத்தி வருகின்றனர்.

நேற்று காலை முதல் சண்டே மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. மாலை 5.30 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. விட்டு, விட்டு தொடர்ந்து பெய்த மழையால் நகரம், சண்டே மார்க்கெட்டில் கூடியிருந்த பொதுமக்கள் கலைந்தனர். கடற்கரை சாலையும் வெறிச்சோடியது.
தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சுற்றுலா பயணிகள் வெளியே செல்லமுடியாமல் ஓட்டல் மற்றும் விடுதிகளில் முடங்கி போனார்கள்.
வழக்கமாக புதுவையில் டிசம்பர் மாதம் குளிர் வாட்டும். கடந்த சில நாட்களாக புதுவையில் குளிர் அதிகரித்துள்ளது. ஆனால் 2 நாட்களாக அவ்வப்போது பெய்யும் மழையால் வியாபாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நாளை உச்சமாக இருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கெடுக்கும் வகையில் மழை பெய்யுமோ? என வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். அது மட்டுமின்றி, நட்சத்திர ஓட்டல்கள், மதுபார்கள் திறந்த வெளியில் பல்வேறு இசை, கலைநிகழ்ச்சிகள், மது, உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இவை மழையால் சீர்குலையுமோ? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு போலீசார் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளனர். கடற்கரைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை நிறுத்த 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பார்க்கிங்கை அறிந்து கொள்ள கி.யூ.ஆர். கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மையங்களிலிருந்து கடற்கரை சாலைக்கு செல்ல இலவச பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் 12.30 மணி வரை புத்தாண்டு கொண்டாட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
பார்களிலும், கேளிக்கை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும் இரவு ஒரு மணி வரை மது வழங்க கலால் துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
புதுவையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும், புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணியிலும் 300 போக்குவரத்து போலீசார் உட்பட 2 ஆயிரம் போலீசாரும், 500 தன்னார்வலர்களும் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு பணியிடங்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புத்தாண்டை வரவேற்க நாளை மாலை முதல் நள்ளிரவு வரை லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்பதால் கடற்கரை சாலையில் சி.சி.டி.வி. கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம், கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர்.
- புத்தாண்டை வரவேற்பது என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
- புத்தாண்டு அன்று திராட்சை உண்பது அதிர்ஷ்ட வருடமாக்கும் என்று நம்பப்படுகிறது.
புது வருடம் தொடங்கும்போது, கோவிலுக்குச் செல்வது, புதிய ஆடை உடுத்துவது, வீட்டில் சிறப்பு வழிபாடு செய்வது, சிறப்பு உணவு சமைப்பது என்பதெல்லாம் உலகெங்கும் இருக்கும் நடைமுறைப் பழக்கம்.
இருப்பினும், உணவில் மட்டும் வெவ்வேறு வகையான நம்பிக்கையுடன் புதுமையான உணவுகள் செய்து, சாப்பிட்டு, புத்தாண்டை வரவேற்பது என்பது, மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
அவ்வகையில் தமிழ் புத்தாண்டில் நமது பழக்கம், முக்கனிகள், நவதானியம், வெல்லம் வைத்து வழிபாடு செய்வதும், உணவில் வடை பாயசம் செய்வதும் பழக்கம் என்றால், தெலுங்கு வருடப் பிறப்பில் பச்சடி சிறப்பு உணவாக இருக்கிறது.
அதுபோல், கிரேக்க நாட்டில், புத்தாண்டு அன்று, வெங்காயத்தை கதவில் கட்டித் தொங்க விடுவதும், வெங்காயம் சமைத்து உண்பதும் வழக்கமாக உள்ளது. வெங்காயத்தில் உள்ள அடுக்குகள் போல், இனம் விருத்தி அடையும் என்றும், மறு பிறவி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இதேபோன்று, அதிகம் விதைகள் கொண்ட மாதுளையும் கருதப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில், 12 மாதங்களைக் குறிக்கும் வகையில், 12 பழங்கள் சாப்பிடுவதும், தொடர்ச்சியை குறிக்கும் வகையில் வட்ட வடிவத்தில் உள்ள கேக், பன், சாக்லேட் சாப்பிடுவதும் வழக்கம்.
அயர்லாந்து நாட்டில் புத்தாண்டு அன்று பட்டர் பிரட் உணவுகள் சிறப்புணவாக இருக்கிறது. பிலிப்பைன்சில் 13 வகையான, வட்ட வடிவத்தில் இருக்கும் பழங்கள் மட்டும் உணவில் வழங்கப்படுகிறது. சீனாவில், உடைந்து போகாத நீளமான நூடுல்ஸ் சாப்பிடுவது, வரும் வருடத்தில் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
ஸ்காண்டினேவியன் நாட்டில், வெள்ளி போன்று மின்னும் herring வகை மீன்கள் ( முரண் கெண்டை/ நுணலை) சாப்பிட்டால், அந்த வருடம் முழுவதும் அதிஷ்டம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இத்தாலியில், தங்க நாணயம் போன்று இருப்பதாகக் கருதப்படும் பருப்புகளை பன்றி யுடன் சமைத்து சாப்பிடுவது, புத்தாண்டு சிறப்பு உணவாக இருக்கிறது.
ஜப்பான் நாட்டில் மோச்சி அரிசியில் தயாரித்த கேக் சாப்பிடுவதும், அந்த அரிசியை கோவிலுக்கு வழங்குவதும் அந்த வருடத்தை சிறப்பாகக்கும் என்பது நம்பிக்கை.
ஸ்பெயின் நாட்டில், புத்தாண்டு முந்தைய நாள் மற்றும் புத்தாண்டு அன்று திராட்சை உண்பது அந்த வருடத்தை அதிர்ஷ்ட வருடமாக்கும் என்று நம்பப்படுகிறது.
தென் அமெரிக்காவில், புத்தாண்டு அன்று, அரிசி மற்றும் சிவப்பு பீன்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் Hoppin' John என்னும் உணவு உண்பது வழக்கமாக உள்ளது.
-வண்டார்குழலி ராஜசேகர்
- மெரினா, எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை.
- நாளை இரவு 10 மணி முதல் அனைத்து மேம்பாலங்களும் மூடப்படுகிறது.
புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அதன்படி, புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலை நாளை இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மூடப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
மெரினா, எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை. முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளன.
நாளை இரவு 10 மணி முதல் அனைத்து மேம்பாலங்களும் மூடப்படுகிறது.
கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட வருவோருக்கான வாகன நிறுத்தங்களுக்கான இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலா தலங்களில் கூட்டம் களைகட்டி உள்ளது.
- சுற்றுலா விடுதிகள் புத்தாண்டுக்கு முன்பாகவே முன்பதிவுசெய்யப்பட்டு விட்டன.
ஊட்டி:
உலகம் முழுவதும் இன்றிரவு 12 மணிக்கு 2025 புத்தாண்டு பிறக்கிறது. இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் களைகட்டி உள்ளது.
அதிலும் குறிப்பாக குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் ஆகிய பகுதிகளில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வந்தவண்ணம் உள்ளனர்.
நாளை புத்தாண்டு என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள லாட்ஜ்கள், ஓட்டல்கள், சுற்றுலா விடுதிகள் ஆகியவை புத்தாண்டுக்கு முன்பாகவே முன்பதிவுசெய்யப்பட்டு விட்டன. மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் அங்குள்ள விடுதிகளின் அறைகள் நிரம்பி வழிகின்றன.
இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் லாட்ஜ்களில் தங்கி உள்ளனர். தொடர்ந்து அவர்கள் சுற்றுலா வாகனங்கள் மூலம் குன்னூர், ஊட்டிக்கு வந்திருந்து அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதனிடையே நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலைரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து குன்னூர் முதல் ஊட்டி வரையிலான ரெயில் நிலையங்கள் தற்போது களைகட்டி காணப்படுகின்றன. மேலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ரெயில் நிலையத்தில் காத்திருந்து மலைரெயிலில் உற்சாகத்துடன் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால் அங்குள்ள வியாபார கடைகளில் விற்பனை சூடுபிடித்து உள்ளது. இதனால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- பூமி 24 நேர மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் ஒரு நிலையான நேரத்தைக் கொண்டுள்ளன.
- இந்தியாவில் இன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாக 41 நாடுளில் ஏற்கனேவே புத்தாண்டு பிறந்திருக்கும்.
366 நாட்களை நிறைவு செய்து இன்றுடன் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. 2025 புத்தாண்டை வரவேறக உலகம் தயாராகி வருகிறது.
பலருக்கு, புத்தாண்டின் தொடக்கமானது ஒரு வருடத்திற்கு விடைகொடுத்து மற்றொரு வருடத்தை வரவேற்கும் உணர்ச்சிகரமான தருணம்.
தீர்க்கரேகையின் அடிப்படையில், பூமி 24 நேர மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் ஒரு நிலையான நேரத்தைக் கொண்டுள்ளன.
எனவே இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது என்றாலும் உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டை வரவேற்கிறேன.

இந்திய நேரப்படி (IST) இந்தியா இயங்குகிறது. இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தை விட 5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது (UTC +5:30).
பூமியில் புத்தாண்டைக் கொண்டாடும் முதல் இடம் கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு. இது கிறிஸ்மஸ் தீவு என்றும் அழைக்கப்படுகிறது, இது பசிபிக் பெருங்கடல் பவளப்பாறை மற்றும் கிரிபாட்டி குடியரசின் ஒரு பகுதியாகும்.
இதனுடன் பசிபிக்கில் இருக்கும் டோங்கோ, சமோயா உள்ளிட்ட தீவுகளிலும் முதலாவதாகப் புத்தாண்டு பிறக்கிறது. அதாவது இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணியளவில் இங்கு புத்தாண்டு பிறந்துவிடுகிறது.

மக்கள் வசிக்காத அமெரிக்க அருகே சமோவா மற்றும் நியு தீவுகள் புத்தாண்டை வரவேற்கும் கடைசி இடமாக உள்ளன. இங்கு இந்திய நேரப்படி நாளை [ஜனவரி 1] மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது.
மேலும் இந்தியாவில் இன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாக 41 நாடுளில் ஏற்கனேவே புத்தாண்டு பிறந்திருக்கும். அந்த நாடுகளில் சில கிரிபாட்டி, சமோவா, டோங்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, ரஷ்யாவின் சில பகுதிகள், மியான்மர், ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகியவை அடங்கும்.

- பூமியில் புத்தாண்டைக் கொண்டாடும் முதல் இடம் கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு.
- இந்த தீவு இந்தியாவை விட துல்லியமாக 8.5 மணி நேரம் முன்னால் உள்ளது.
366 நாட்களை நிறைவு செய்து இன்றுடன் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. 2025 புத்தாண்டை வரவேற்க உலகம் தயாராகி வருகிறது. பலருக்கு, புத்தாண்டின் தொடக்கமானது ஒரு வருடத்திற்கு விடைகொடுத்து மற்றொரு வருடத்தை வரவேற்கும் உணர்ச்சிகரமான தருணம்.
தீர்க்கரேகையின் அடிப்படையில், பூமி 24 நேர மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் ஒரு நிலையான நேரத்தைக் கொண்டுள்ளன. எனவே இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது என்றாலும் உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டை வரவேற்கின்றன.
இந்திய நேரப்படி (IST) இந்தியா இயங்குகிறது. இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தை விட 5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது (UTC +5:30).
பூமியில் புத்தாண்டைக் கொண்டாடும் முதல் இடம் கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு. இது கிறிஸ்மஸ் தீவு என்றும் அழைக்கப்படுகிறது, இது மத்திய பசிபிக் பெருங்கடல் பவளப்பாறை மற்றும் கிரிபாட்டி குடியரசின் ஒரு பகுதியாகும். இங்கு இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணியளவில் கிரிட்டிமாட்டி தீவில் 2025 ஆம் வருடம் பிறந்துள்ளது.

இந்த தீவு இந்தியாவை விட துல்லியமாக 8.5 மணி நேரம் முன்னால் உள்ளது. இந்தச் சிறிய தீவில் உலகின் முதல் 2025 புத்தாண்டு பிறந்ததை ஒட்டி உள்ளூர் வாசிகள் பட்டாசுகள், இசை மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களுடன் அதை வரவேற்றனர்.
தீவு முழுவதும் உற்சாகமான மனநிலை பரவியுள்ளது. கிரிபாட்டி, சமோவா, டோங்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, ரஷ்யாவின் சில பகுதிகள், மியான்மர், ஜப்பான் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 41 நாடுகள் இந்தியாவுக்கு முன்னதாகவே புத்தாண்டை வரவேற்கிறது.
- கிரிபாட்டி, டோங்கா மற்றும் சமோவா ஆகியவை 2025 ஆம் ஆண்டு தொடங்கின.
- இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் அங்கு புத்தாண்டு பிறந்தது
366 நாட்களை நிறைவு செய்து இன்றுடன் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. 2025 புத்தாண்டை வரவேற்க உலகம் தயாராகி வருகிறது.
உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டை வரவேற்கின்றன.
இந்திய நேரப்படி (IST) இந்தியா இயங்குகிறது. இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரத்தை விட 5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது (UTC +5:30).
பூமியின் 2025 புத்தாண்டை முதலில் மத்திய பசிபிக் பெருங்கடலில் கிரிபாட்டி குடியரசின் அங்கமான கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டை வரவேற்றது. தொடர்ந்து கிரிபாட்டி, டோங்கா மற்றும் சமோவா ஆகியவை 2025 ஆம் ஆண்டு தொடங்கின.

இந்நிலையில் அதைத்தொடர்ந்து 52 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் 2025 பிறந்துள்ளது.
இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் அங்கு புத்தாண்டு பிறந்தது. நகரின் மையப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் விருந்துகள் என அங்கு கொண்டாட்டங்கள் கலை கட்டியுள்ளது. நியேசிலாந்து தலைநகர் சிட்னியிலும் புத்தாண்டு பிறந்து, மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைதொடர்ந்து டோக்கியோ, ஜப்பானிலும் புத்தாண்டு பிறந்தது.
- புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
- புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.
தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு பிறந்துள்ளது.
புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர். சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
'மாலைமலர்' சார்பில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
- மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம்.
- உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம்.
நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு பிறந்துள்ளது.
புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
இதையொட்டி த.வெ.க தலைவர் விஜய் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியதாவது:-
மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர்கள். மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம். உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை. சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
- அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்.
- ருசிகரமான அந்த கணிப்பு உங்களுக்காக
இன்று மலர்ந்துள்ள 2025-ம் ஆண்டு அதிக மகிழ்ச்சியும், இன்பமும் தர வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் எதிர் பார்ப்பு. அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று அவர்களது ஜாதகத்தை அலசி ஆராய்ந்து ஜோதிட ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் 2025-ல் எத்தகைய பலன் கிடைக்கும் என்று அதில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. ருசிகரமான அந்த கணிப்பு வருமாறு:-

பிரதமர் மோடி
பிரதமர் மோடிக்கு குருபகவான் 7-வது வீட்டில் இருக்கிறார். இதனால் அவர் அனைத்து துறைகளிலும் எடுக்கும் திட்டங்களும், முடிவுகளும் வெற்றிகளுடன் மேம்பாட்டை பெறும். மே மாதம் 29-ந்தேதி வரை அவருக்கு செவ்வாய், சனி தசாபுத்தி இருப்பதால் திடீர் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
என்றாலும் வருகிற மே மாதம் முதல் அவரது ஜாதகத்தில் புதன் திசை மிகவும் அனுகூலமாக இருக்கிறது. இது அவருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அதிக ஆதரவை பெற்று தந்து நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.
சனிப்பெயர்ச்சி அவருக்கு சிறப்பாக இருப்பதால் நாட்டின் நிதி மேம்பாட்டிலும் சர்வதேச அளவில் அவர் எடுக்கும் முயற்சிகளிலும் அபரிமிதமான வெற்றிகளை கொடுக்கும்.

அமித்ஷா
மத்திய மந்திரி அமித்ஷா ஜாதகத்தில் சனி 12-வது இடத்துக்கு செல்கிறார். அவரது அதிரடி நடவடிக்கை கள் நாட்டுக்கு நலன் பயப்பதாக இருக்கும். ஆனால் குரு பகவான் 3-வது வீட்டில் இருப்பதால் அவருக்கு ஆதரவாளர்கள் மூலம் திடீர் நெருக்கடியும், கோபமும் ஏற்படலாம்.
சனியும், குரு பகவானும் சரியான நிலையில் இல்லை. எனவே உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ராகுல்காந்தி
ராகுல் ஜாதகத்தில் சனி 4-வது இடத்தில் இருக்கிறார். ராகு பகவான் 9-வது வீட்டில் அமர்ந்துள்ளார். அதோடு தற்போது அவருக்கு ராகு திசையும் நடக்கிறது. இதனால் அவருக்கு எதிர்பாராத சவால்கள் வரக்கூடும்.
மே 14-ந்தேதிக்கு பிறகு அவருக்கு சில கிரக மாற் றங்கள் ஏற்படுகிறது. இத னால் தோழமை கட்சிகளின் ஆதரவும், நட்பும் மேம்படும். ஆனால் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் அவரது கிரக மாற்றங்கள் இருக்கின்றன.

பிரியங்கா
பிரியங்காவின் ஜாத கத்தில் வெள்ளி திசை நடக்கிறது. இதனால் அவரது முயற்சிகளில் திருப்தியும், வெற்றியும் உண்டாகும். மே 14-ந்தேதிக்கு பிறகு அவ ருக்கு அரசியலில் தனிப்பட்ட முறையில் பல்வேறு சவால் கள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தற்போது குரு பகவான் 11-வது இடத்தில் இருக்கிறார். இது அவருக்கும், அவர் எடுக்கும் முடிவுகளுக்கும் மிகவும் சாதகமான பலன்கள் பெறும். குறிப்பாக இந்த காலத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் தமிழ்நாட்டுக்கு மேலும் நன்மைகள் தருவதாக அமையும்.
என்றாலும் சனி பகவான் 8-வது இடம் மீன ராசிக்கு செல்வதால் உணவு வகைகளில் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி அவரது தசாபுத்திகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. இதன் காரணமாக அவர் எடுக்கும் முடிவுகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மறு மலர்ச்சி உண்டாக்கும் வகையில் அமையும்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஜாத கத்தில் தற்போது கிரக அமைப்புகள் அனைத்தும் மிக மிக சிறப்பாக அமைந்துள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு அரசியலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் மேற்கொள்ளப் போகும் பயணங்களுக்கு மிகப்பெரிய வெற்றியும் சாதனைகளும் காத்து இருக்கிறது.
சனி திசை உதயநிதி ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளுக்கு உரிய வெற்றிகளை தரும். சுக்கிர பகவானின் அமைப்பும் அவருக்கு மிகவும் அமோகமாக இருக்கிறது. இது அவருக்கு அரசியலில் கூடுதல் அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கும்.
குரு பகவான் அடுத்து மிதுன ராசிக்கு செல்ல இருப்பதும் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த கால கட்டத்தில் அவர் எடுக்கும் அதிரடி முடிவுகள் அனைத்து துறைகளிலும் நன்மையையும், திருப்தியையும் கொடுக்கும்.

எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமி ஜாதகப்படி 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் குரு பகவான் 11-வது இடத்தில் இருக்கிறார். இது அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் சவால்களையும், சாதனைகளையும் சம அளவில் பெற்றுத் தருவதாக இருக்கும்.
சனி பகவான் 8-வது வீட்டுக்கு செல்வதால் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அது போல உள் கட்சி விவகாரங்களிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
குரு பகவான் 4-வது வீட்டுக்கு செல்லும் போது பல புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குறிப்பாக அவரது தலைமையிலான அ.தி.மு.க.வில் பல புதிய அம்சங்களுடன் ஒற்றுமைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
சனி பகவான் மீன ராசிக்கு செல்லும்போது அரசியலில் அவர் எடுக்கும் முடிவுகள் ஆதாயத்தை கொடுக்கும். என்றாலும் அரசியல் முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஜாதகப்படி சனி பகவான் 8-வது வீட்டில் இருக்கிறது. இது அவரது அரசியல் பயணத்தை நேர்த்தியாக வைத்திருக்க உதவும்.
குரு பகவான் 12-வது வீட்டுக்கு மிதுன ராசிக்கு செல்வதால் விஜய் தனது அரசியல் பயணத்தில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியது இருக்கும். எதிர்பாராத நெருக்கடிகளை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.
தமிழகம் முழுவதும் இந்த கால கட்டத்தில் பிரசாரத்தை தொடங்கலாம். விஜய் ஜாதகப்படி சந்திரனின் அமைப்பு மிக மிக சாதகமாக இருக்கிறது. இது அவரது தமிழக வெற்றிக் கழக கட்சியை 2025-ல் மிகவும் வெற்றிகரமான வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

அண்ணாமலை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஜாதகப்படி குரு பகவான் 11-வது வீட்டில் இருக்கிறார். சனி பகவான் 9-வது வீட்டுக்கு செல்கிறார். இது அவருக்கு அரசியலில் அங்கீகாரத்தை பெற்றுத் தரும்.
சுக்கிர திசை இருப்பதாலும் புதன் தசை அனுகூலமாக இருப்பதாலும் கட்சியை அவர் கட்டுப்கோப்புடன் வைத்து இருப்பார். சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இந்த கால கட்டங்கள் அவருக்கு சாதகமாக உள்ளன.

கனிமொழி
கனிமொழி எம்.பி.க்கு ஜென்ம சனி கால கட்டம் இது. மார்ச் மாதத்துக்கு பிறகு அவரது ஜாதக அமைப்பில் மாற்றம் ஏற்படும். அது அவரது கட்சி பணிகளை மேன்மைப் படுத்தும்.
குரு பகவானின் மாற்றம் வரும்போது அவருக்கு அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிக முக்கிய திருப்பங்கள் ஏற்படும். மக்கள் மத்தியில் அவருக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சசிகலா
சசிகலா ஜாதகப்படி சனி 12-வது இடத்திலும், குரு பகவான் 3-வது இடத்திலும் இருக்கிறார்கள். இது அவ ருக்கு தொடர்ந்து நெருக்கடி களையும், சவால்களையும் கொடுத்து கொண்டே இருக் கும். இதனால் இந்த கால கட்டத்தில் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
குரு பகவான் 4-வது இடத்துக்கு செல்லும் போது அவருக்கு சாதகமான சூழ்நிலை அமையும். அ.தி.மு.க.வை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற அவரது முயற்சிக்கு வெற்றி கிடைக்கலாம்.
- ரேசில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்க கூடாது என அறிவுறுத்தல்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக சென்னை காவல்துறை பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
குறிப்பாக, பைக் வீலிங், ரேஸ் உள்ளிட்டவற்றில் ஈடுபட போலீசார் தடை விதித்திருந்தனர். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மதுபோதை, அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், சாலையில் ரேஸ் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து 242 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பைக்குகளுக்கு அபராதம் விதிக்காமல் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.