என் மலர்
நீங்கள் தேடியது "struggle"
- பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும்
- பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும்
இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு, சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும், திருநங்கை களை பெண்களாக கருத முடியாது என்றுதீர்ப்பு அளித்துள்ளது.
அதே சமயம், பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டங்கள் நடைபெற்றது. திருநங்கை உரிமைகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் அமைப்பினர், லண்டன், எடின்பர்க்கில் பேரணி நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள வாக்குரிமை பெற்ற மில்லி சென்ட் பாசெட் சிலை உள்பட 7 சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- 7 மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை.
தஞ்சாவூர்:
காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.
மாநில பொதுச் செயலாளர்கள் சாமி. நடராஜன் , மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை மதிவாணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சங்கர், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில நிர்வாகிகள் முஹம்மது அலி, சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், மாதவன், துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் வீர. மோகன் நன்றி கூறினார்.
கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூரில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்பட 7 மாவட்டங்களில் இருந்து விவசாய சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டிலே குறிப்பாக காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.
உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினார்.
மேலும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். முதலமைச்சரின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
நேற்றைய தினம் டெல்டாவிலிருந்து நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டது.
அதாவது வாக்குறுதி மட்டுமே கொடுத்துள்ளார்கள். ரத்து செய்வோம் என்கிற அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இதனை முழுமையாக நம்ப முடியாது. ஏனென்றால் டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கொடுத்துள்ள எழுத்துப்பூர்வ மான வாக்குறுதிகளை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.
அதுபோல் நிலக்கரி சுரங்கம் ரத்து என்கிற வாக்குறுதி ஆகி விடுமோ என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. இதனால் மத்திய பா.ஜ.க.வின் வாக்குறுதிகளை நம்ப மாட்டோம்.
எனவே இந்த மாத இறுதிக்குள் நிலக்கரி சுரங்கம் அமைப்பது ரத்து என்ற அறிவிப்பை அதிகாரபூர்வமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் மே மாதம் முதல் வாரத்தில் மீண்டும் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி மத்திய அரசுக்கு எதிரான வலுவான போராட்டங்களை முன்னெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டுறவு துறையில் காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.
- வேளாண் உபகரணங்களை வாடகைக்கு விடும் திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும்.
மெலட்டூர்:
சாலியமங்களத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது .
மாவட்ட துணை செயலாளர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாய கடன் வழங்குதல், உரம் வழங்குதல், குறுவை தொகுப்பு திட்டம், பொங்கல் தொகுப்பு உள்பட அவ்வப்போது அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
கூட்டுறவு துறையில் காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படா மல் உள்ளது.
இதனால் ஆட்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது .
இந்நிலையில் வேளாண் உபகரணங்களை விலைக்கு வாங்கி கூட்டுறவு சங்கம் மூலம் வாடகைக்கு விடும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு வங்களில் போதுமான ஊழியர்கள் இல்லை.
அதனால் இத்திட்டத்தை கைவிட கோரி தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கி ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு உடனடியாக இத்திட்ட த்தை கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் ஒன்றிய நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 2022-23ம் கல்வி ஆண்டில் 8 மாணவர்கள் படித்தனர்.
- உதவி ஆசிரியர் தனக்கு பணி மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.
குஜிலியம்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள வடுகம்பாடி ஊராட்சி பண்ணைப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1962ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அதிக மாணவர்கள் எண்ணிக்கையுடன் செயல்பட்டு வந்த இந்த பள்ளி பின்னர் படிப்படியாக தரம் குறையத் தொடங்கியது.
கடந்த 2022-23ம் கல்வி ஆண்டில் 8 மாணவர்கள் படித்தனர். கடந்த ஆண்டு இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இந்திரா என்பவர் பொறுப்பேற்றார். இவர் 8 ஆண்டுகளாக இடை நிலை ஆசிரியர் பணியில் உள்ளார். கிராமத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் சார்பில் எல்.இ.டி. டி.வி. ஒன்று இந்த பள்ளியில் வாங்கி வைக்கப்பட்டது. மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் டேபிள், சேர், பீரோ, கரும்பலகை மற்றும் பள்ளிக்கு தேவையான பொருட்கள் போன்றவையும் வாங்கி கொடுக்கப்பட்டன.
தலைமை ஆசிரியர் இந்திரா வருகைக்கு பின் அவரது நடவடிக்கை மற்றும் செயல்பாடுகள் பிடிக்காததால் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் புகார் தெரிவிக்க ஆரம்பித்தனர்.
மாணவர்களை தரக்குறைவாக பேசியதால் தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த ஆண்டு படித்த 5 மாணவர்களையும் பெற்றோர்கள் வேறு பள்ளியில் சேர்த்து விட்டனர்.
நடப்பு கல்வியாண்டில் இந்த பள்ளியில் ஒருமாணவர் கூட இல்லை. ஆனால் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என 2 பேர் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். உதவி ஆசிரியர் தனக்கு பணி மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இந்நிலையில் மாணவர்களே இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் எதற்கு? என்றும், தலைமை ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வட்டார கல்வி அலுவலர் தெரிவிக்கையில், தலைமை ஆசிரியரை மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
பண்ணைப்பட்டி ஊர் முக்கிய நிர்வாகி தெரிவிக்கையில், கிராமப்புற மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த பள்ளி தற்போது தலைமை ஆசிரியரின் அடாவடியால் முற்றிலும் அதன் நோக்கம் செயல்படாமல் முடங்கிப் போய் உள்ளது. எனவே அவரை மாற்றினால் குழந்தைகள் பள்ளியில் சேர்வார்கள். இல்லையெனில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார். இச்சம்பவத்தால் பண்ணைப்பட்டி கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- இருளப்பபுரம் சந்தை தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது.
- சில வியாபாரிகள் சந்தைக்கு வந்து கடை அமைத்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி வியாபாரமும் நடைபெற்று வருவதால் காலை முதல் மதியம் 1 மணி வரை இந்த மார்க்கெட் பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் நெருக்கடியாக உள்ளது போன்ற காரணங்களை கூறி மீன் மார்க்கெட்டை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோது, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீன் மார்க்கெட்டை மாற்றுவதற்காக சென்றனர். அந்த இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் என்றும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள், ஜே.சி.பி. எந்திரம் மூலமாக வியாபாரிகள் கடை வைக்க முடியாத அளவிற்கு மணல்களை கிளறி விடும் நடவடிக்கையை எடுத்தனர். அவர்களுடன் வாக்குவாதம் செய்த வியாபாரிகள், தோண்டப்பட்ட குழிகளில் இறங்கி நின்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட வியாபாரிகள், மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துறை அதிகாரிகளை சந்திக்கப் போவதாக கூறினர். அதன்படி அவர்கள் அதிகாரிகளை சந்தித்து பேசினர். இதில் இருளப்பபுரம் சந்தை தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பேரில் இன்று சில வியாபாரிகள் சந்தைக்கு வந்து கடை அமைத்தனர். இருப்பினும் கூட்டம் குறைவாகவே இருந்தது.
கடை அமைத்துள்ள வியாபாரிகள் கூறுகையில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தை செயல்பட்டு வருகிறது. தற்காலிக அனுமதியை நிரந்தரமாக பெற முயன்று வருகிறோம். அரசு எங்கள் விசயத்தில் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
- நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது.
- என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.
திருவெறும்பூர்:
திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஐ.டி. கல்லூரி அமைந்துள்ளது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.
கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் தற்போது பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் மாணவிகள் விடுதியில் வை-பை வசதி ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி கதிரேசன் விடுதிக்குள் சென்றார்.
அப்போது தன்னந்தனியாக விடுதி அறையில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் அவர் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடி வந்தார். மேலும் தனக்கு நேர்ந்த அநீதியை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.
இது விடுதியில் தங்கி பிடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே விடுதி பெண் வார்டனிடம் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டார். அப்போது அவர், ஆடைகள் சரியாக அணியாத காரணத்தினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என அவரை கண்டித்ததாக தெரிகிறது.
இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் அகிலா மாணவ-மாணவிகளிடம் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது. இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட விடுதி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மாணவிகள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து என்.ஐ.டி. கல்லூரி மாணவிகளிடம் எஸ்.பி. வருண்குமார், கல்லூரி இயக்குநர் அகிலா பேச்சுவார்த்தை நடத்தி, விடுதி காப்பாளர் மன்னிப்பு கேட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
போராடிய மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் என்.ஐ.டி. நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
- தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கும் கீழ் சென்று விட்டதால், வேளாண்மைக்கு புத்துயிரூட்டுவது சாத்தியமற்றதாகி வருகிறது.
- ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டமாகவும், வேலை வாய்ப்பற்ற பின்தங்கிய மாவட்டமாகவும் திகழும் தருமபுரி மாவட்டத்தை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதை செயல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தருமபுரி மாவட்ட மக்கள்நலன் காக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 4.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. ஆனால், அதில் 1.96 லட்சம் ஹெக்டேர், அதாவது 43.52 சதவீதம் நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெற்றவை. மீதமுள்ள 56.48 சதவீதம் நிலங்களில் மழையை நம்பி தான் விவசாயம் நடைபெறுகிறது. அதனால், தருமபுரி மாவட்ட வேளாண் குடும்பங்கள் நிலம் இருந்தும் பாசன ஆதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதனால், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டு, 3 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் வேலை தேடிச் சென்றுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கும் கீழ் சென்று விட்டதால், வேளாண்மைக்கு புத்துயிரூட்டுவது சாத்தியமற்றதாகி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணை, கேசரகுழிபள்ளம் அணை, சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை, தொப்பையாறு அணை, நாகாவதி அணை, பஞ்சப்பள்ளி அணை, வரட்டாறு அணை, வள்ளிமதுரை அணை, வாணியாறு அணை ஆகிய 10 அணைகளும் வறண்டு கிடக்கும் நிலையில், அந்த அணைகளில் மட்டுமின்றி, 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1230 நீர்நிலைகளிலும் நிரப்பி ஆண்டு முழுவதும் உழவு செய்வதை உறுதிப்படுத்துவதற்கான உன்னத திட்டம் தான் தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டம் ஆகும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை செல்லும் பாதையிலேயே இந்தத் திட்டத்திற்காக குழாய்களை அமைத்து தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு இடையே நீர் செல்லும் பாதை மன்னர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்டிருப்பதால் சில ஏரிகளில் நிரப்புவதன் மூலம் அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்ல முடியும்.
ஒட்டுமொத்த மாவட்டமும் பயன் பெறும் தருமபுரி-காவிரி உபரி நீர்த் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.650 கோடியை செலவழிக்க அரசு மறுக்கிறது.
தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டமாகவே தொடர்வதை அனுமதிக்க முடியாது. தருமபுரி மாவட்டத்தின் உழவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோளையும் ஏற்று, தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அக்டோபர் 4-ந் தேதி வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பா.ம.க. அழைப்பு விடுத்திருக்கிறது. தருமபுரி மாவட்டத்தின் வளமான எதிர்காலத்திற்காக நடத்தப்படும் இந்த அறவழிப் போராட்டத்திற்கு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழு ஆதரவு கொடுத்து, தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனக் கோருகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த 2-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
- உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 5 ஆண்டாக தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ஒழுங்கு முறை மின்சார ஆணைய அனுமதி பெற்று மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதேபோல நடப்பு நிதியாண்டிலும் கடந்த பிப்ரவரி மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதன்பிறகு மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்படும். பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால், மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கட்டண உயர்வை பரிசீலிக்கும்படி அரசு சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிறகு முன்தேதியிட்டு கடந்த ஜூன் 16-ந்தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.
இதற்கு புதுவை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. அன்றைய தினம் மாலையில் 200 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 85 பைசா மானியம் வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இந்த மானியம் கண்துடைப்பு மோசடி என இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், இந்தியகம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், துணை செயலாளர் சேதுசெல்வம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன் மற்றும் கம்யூனிஸ்டு (எம்.எல்.) இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
- பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
- சீனிவாச ராவ் எம்.எல்.ஏ.வின் நடத்தையால் தெலுங்கு தேசம் கட்சிக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளதாக கட்சித் தொண்டர்கள் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டம், சித்தேலாவை சேர்ந்தவர் கோலிகாபுடி சீனிவாச ராவ். இவர் தற்போது தெலுங்கு தேசம் கட்சி திருவூர் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சீனிவாச ராவ் அதே பகுதியை சேர்ந்த பெண்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச வீடியோ மற்றும் படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும் செல்போனில் ஆபாச வார்த்தைகளை பேசியதால் பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவரது நடத்தையால் ஆத்திரம் அடைந்த பெண்கள் சித்தேலாவில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெண்களுக்கு ஆபாச வீடியோ, படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வரும் சீனிவாச ராவ் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவரை எம்.எல்.ஏ பதவியில் இருந்து சஸ்பெண்டு செய்ய வேண்டும். சீனிவாச ராவை தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
சீனிவாச ராவ் எம்.எல்.ஏ.வின் நடத்தையால் தெலுங்கு தேசம் கட்சிக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளதாக கட்சித் தொண்டர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் கட்சி பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
- போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கும் நிர்வாகத்தை கண்டித்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்கள் சாம்சங் நிறுவனத்தின் செல்போன்களை சாலையில் போட்டு உடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
- மயிலம் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- மறியல் போராட்டம் காரணமாக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே அவ்வையார்குப்பம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் முறையாக வழங்காததால் இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக திண்டிவனத்திற்கு சென்றுக் கொண்டிருந்த அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைப்பிடித்து பஸ் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மயிலம் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் பல்வேறு பணிகளுக்காக சென்ற பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பஸ்சில் சிக்கி தவித்தனர்.
- விசாரணையின் அடிப்படையில் பிரசவம் பார்த்த டாக்டர் ரம்யாவை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- டாக்டர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
குத்தாலம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா மரத்துறையைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 28) என்பவருக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை சுயநினைவின்றி இருந்தது.
இதனால் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்தது என்று கூறி பெற்றோர், உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பெற்றோர் உறவினர்களிடம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பானுமதி விசாரணை நடத்தினார். பின்னர் விசாரணையின் அடிப்படையில் பிரசவம் பார்த்த டாக்டர் ரம்யாவை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
டாக்டர்களிடம் உரிய விசாரணை செய்யாமல் பெற்றோர்கள் உறவினர்களிடம் விசாரணை செய்ததன் அடிப்படையில் டாக்டர் ரம்யா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று மயிலாடுதுறையில் புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் 21 டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் டாக்டர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து அவசர சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகிறது. ஆனால் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவம் பார்ப்பதற்காக நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் காலை 7:00 மணி முதல் தற்போது வரை நோயாளிகள் காத்து கிடைக்கின்றனர்.
மேலும் சிகிச்சைக்கு வந்த முதியவர்கள் என ஏராளமானோர் டாக்டர்கள் இல்லாததால் திரும்பி வேறு மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.