search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94372"

    மறைமலைநகர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள ரெயில் நகர் பகுதியில் உள்ள மறைவான இடத்தில் ஒரு சில நபர்கள் கஞ்சா வைத்திருப்பதாக மறைமலை நகர் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மறைமலைநகர் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு மறைமலைநகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 29), என்பவர் கையில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    நாகையில் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? என போலீசாரும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகை நகர் பகுதியில் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரிய கடைத்தெரு பகுதியில் சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் அந்தணப்பேட்டையை சேர்ந்த முகமது பயாஸ் (வயது 26) என்பதும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளுக்கு வினியோகம்செய்ய மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது பயாசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 10 கிலோ புகையிலை பொருட்களையும் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    ஊத்தங்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை போலீசார் கல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய வேலு (வயது 46), சிவன் (46), சுரேந்திரன் (31), ராமு (42), பார்த்திபன் (39), சலீம் (31), பசுபதி (38), செரீப் (32), பழனி (35), சிவம் (26), சுபாஷ் (37), ஜான்பாஷா (43) ஆகிய 12 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 ஆயிரத்து 570 மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    மொரப்பூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொரப்பூர்:

    மொரப்பூர் அருகே உள்ள ராணிமூக்கனூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு வீட்டில் பதுக்கி வைத்து மது விற்று கொண்டு இருந்த முரளி (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று கம்பைநல்லூரில் பெட்டிக்கடையில் மது பதுக்கி வைத்ததாகவும், மது குடிக்க அனுமதித்ததாகவும் பரமானந்தம் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சிபுரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 6 பேரை, சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பாராட்டினார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள கீழ்கதிர்பூரில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல் பணியில் இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மணிகண்டனை மிரட்டி பணத்தை பறிக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்ற மணிகண்டனை மர்ம கும்பல் கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் பெட்ரோல் பங்க்கில் ஊழியரை வெட்டியது செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த சதீஷ், கரையாஞ்சாவடியை சேர்ந்த இமானுவேல், பாலாஜி ராஜா, பிரவீன், ஜெகன்ராஜ், மதியழகன் ஆகியோர் என்பது தெரிந்தது.

    அவர்கள் 6 பேரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர். சம்பவம் நடந்த 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பாராட்டினார்.

    ஆர்எஸ்எஸ் பிரமுகர் சஞ்சித் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தலைமை அதிகாரி ஆர்.விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:
     
    கேரளாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் சஞ்சித் (26). இவர் பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளியில் கடந்த 15-ம் தேதி அன்று காலை 9 மணியளவில் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், சஞ்சித்தை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியது.

    இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய சஞ்சித் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சஞ்சித்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    காரில் வந்து தனது கணவரை கொன்றவர்களை தன்னால் அடையாளம் காண முடியும் என்று சஞ்சித்தின் மனைவி கூறியிருந்தார்.
    சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா என்கிற பயங்கரவாத இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும், "கைது செய்யப்பட்ட நபர், ஆர்எஸ்எஸ் பிரமுகர் சஞ்சித் கொலையில் நேரடியாக தொடர்புடையவர்.  மேலும் மூன்று நபர்கள் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்று பாலக்காடு காவல் துறை தலைமை அதிகாரி ஆர்.விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

    போளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் போலீசார் வசூர் கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த ராஜபாளையத்தை சேர்ந்த தண்டபாணி மகன் கார்த்திக் (வயது 19), ஆலங்காயத்தை அடுத்த புலவர்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பரமேஷ் (19) என்பதும், மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சை அருகே 6 மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை:

    தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 45), இவர் அரசு மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் முத்துகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன்படி நேற்று இரவு அங்கு சென்ற போலீசார் கோபிநாத்தை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் நடுக்காவேரியைச் சேர்ந்த கலியராஜ் மகன் வேல்முருகன் என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வேல்முருகன் வீட்டை சோதனை செய்தபோது 176 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மேலும் போலீசார் வேல்முருகனிடம் விசாரணை நடத்தியதில் கோபிநாத் வீட்டில் இருசக்கர வாகனத்தை திருடி மறைத்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு 6 இரு சக்கர வாகனங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் நடுக்காவேரி போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    ஓசூர் அருகே வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் தேர்பேட்டையை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இவர் ஓசூரில் சீதாராம்மேடு அருகில் நடந்து சென்றபோது 2 பேர் வழிமறித்து செல்போனை பறித்தனர். அப்போது, சசிக்குமார் கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்து அந்த 2 பேரையும் பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஓசூர் பார்வதி நகர் குமார் (வயது 25), கும்பாரபேட்டை அஜய்குமார் (24) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    நல்லம்பள்ளி அருகே மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நல்லம்பள்ளி:

    நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த குப்புசாமி (வயது63). இவர் நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகம் பகுதியில் மதுபாட்டில்கள் விற்றபோது ரோந்து சென்ற அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    மதுரையில் ஆட்டோவில் பேட்டரிகள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை நகரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.

    இதன்படி தெற்கு துணை கமி‌ஷனர் தங்க துரை உத்தரவின் பேரில் திலகர் திடல் உதவி கமி‌ஷனர் பழனிகுமார் மேற்பார்வையில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் அந்தந்தப் பகுதிகளில் ரோந்து சென்று வருகின்றனர்.

    ஆரப்பாளையம் கண்மாய்க்கரையை சேர்ந்தவர் ஆனந்த் (30), ஆட்டோ டிரைவர். இவர் வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி இருந்தார். மர்ம நபர் ஆட்டோவில் இருந்த 2 பேட்டரிகளை திருடுவது தெரியவந்தது.

    இதனை தற்செயலாக கவனித்த ஆனந்த், ‘திருடன், திருடன்’ என்று கூச்சல் போட்டார். அந்த பகுதிக்கு தனிப்படை போலீஸ் தற்செயலாக ரோந்து சென்றது.

    ஆனந்தின் அலறல் சத்தம் கேட்டதும் தனிப்படை போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து கரிமேடு போலீஸ் நிலையத்தில் விசாரித்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் அவர் ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி தெருவை சேர்ந்த செல்வம் (47) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    ராயக்கோட்டை அருகே அம்மன் கோவிலில் நகை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டை அருகே உள்ள எடவனஅள்ளி கிராமத்தில் பாஞ்சாலியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலின் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், கோவிலில் இருந்த 3 பவுன் நகைகளை திருடிச் சென்றார். இது குறித்து ஊர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அத்திப்பள்ளி பக்கமுள்ள சின்ன தாசரஅள்ளியை சேர்ந்த லட்சுமணன் (வயது 35) என்பவா் நகையை திருடியது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    ×