search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது"

    தட்டாஞ்சாவடியில் 2 பேரை கத்தியால் குத்திய கல்லூரி பேராசிரியர் மற்றும் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது37), நேற்று முன்தினம் இரவு இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான குமார் என்பவரும் கோரிமேடு பட்டானூர் சுங்கச்சாவடி மையம் அருகே மதுஅருந்தி நண்பர் பிறந்த தினவிழாவை கொண்டாடினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    உற்சாக மிகுதியில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வளைந்து வளைந்து வந்தனர். தட்டாஞ்சாவடி பகுதியில் இதுபோன்று வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த தனியார் கல்லூரி பேராசிரியர் நைனார்மண்டபம் மூகாம்பிகை நகரை சேர்ந்த ஹேமச்சந்திரன் மற்றும் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த இவரது நண்பரான சாப்ட்வேர் என்ஜினீயர் வினோத்குமார் (32) ஆகியோர் தட்டிக்கேட்டனர்.

    இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ஹேமச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த கத்தியை எடுத்து தட்சிணாமூர்த்தியையும், குமாரையும் குத்தினார். மேலும் வினோத்குமார் அவர்களை கையால் தாக்கினார்.

    இதில் காயம் அடைந்த தட்சிணாமூர்த்தி, குமார் ஆகிய இருவரும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் தட்சிணாமூர்த்தி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். குமார் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து கல்லூரி பேராசிரியரான ஹேமச்சந்திரன் மற்றும் என்ஜினீயர் வினோத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் மேலும் 26 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் முழுவதும் மணல் கடத்தல், காட்டன் சூதாட்டம், சாராய விற்பனையை முற்றிலும் ஒழித்து சட்ட விரோதமாக செயல்படும் கும்பலை பிடித்து ஜெயிலில் அடைக்க எஸ்.பி. பர்வேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, கடந்த 3-ந்தேதி இரவு 10 மணி முதல் 4ந் தேதி காலை 6 மணிவரை மாவட்டம் முழுவதும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முடுக்கிவிடப்பட்டனர்.

    அந்த ஒருநாள் இரவு நேர வேட்டையில் மட்டும் மணல் கடத்தியது, சாராயம் விற்றது மற்றும் காட்டன் சூதாட்டம் நடத்தியது ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 22 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    அன்று ஒருநாள் மட்டும் மொத்தம் 28 வழக்குகள்பதிவு செய்யப்பட்டன. மேலும் 15 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்து, 2-வது நாளாக 4-ந் தேதி இரவு 10 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை போலீசார் மீண்டும் குற்றவாளிகளை பிடிக்க களமிறங்கினர்.

    அதன்படி, 2-வது நாள் வேட்டையில் மணல் கடத்தல், காட்டன் சூதாட்டம் மற்றும் சாராயம் விற்ற மேலும் 26 குற்றவாளிகள் பிடிபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி வேட்டை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொள்ள பயிற்சி அளிக்க முகாம் நடப்பதாக விளம்பரம் செய்த நிஷ்டை என்ற அமைப்பின் நிறுவனர் ஹீலர் பாஸ்கர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    கோவை:

    சமீபத்தில் திருப்பூரில் யுடியூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொண்ட பெண் பலியானார். இதனை அடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொள்ள கோவையில் இலவச பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இணையதளத்தில் ஒரு போஸ்டர் உலா வந்தது.

    இதனை அடுத்து, சுகாதாரத்துறைக்கு புகார் சென்றதை அடுத்து இந்த முகாம் நடத்தப்படுவது தடுக்கப்பட்டது. மேலும், இந்த முகாமை நடத்தும்  நிஷ்டை என்ற அமைப்பின் நிறுவனர் ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீசார் இன்று கைது செய்தனர்.
    ஆபாச படம் எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு பிளஸ்-1 மாணவியை மிரட்டிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
    போரூர்:

    வளசரவாக்கம், லட்சுமி நகரை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ஒருவரின் 16 வயது மகள், வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இவருக்கும், நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான விக்னேசுக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி விக்னேஷ் நெருங்கி பழகினார். அப்போது மாணவியை ஆபாசமாக படம் எடுத்து தனது செல்போனில் வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது செல்போனுக்கு விக்னேஷ் அனுப்பினார்.

    ஆபாச படங்களை வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். மேலும், மாணவியின் செல்போனுக்கு தொடர்ந்து அழைத்து தொல்லை கொடுத்து வந்தார்.

    இது பற்றி அறிந்த மாணவியின் தந்தை வடபழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், “விக்னேஷ் என்பவர் மகளை காதலிப்பதாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்து உள்ளார். தற்போது ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் நாச்சியம்மாள் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேசை கைது செய்தார்.
    செந்துறை அருகே முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதி கொண்டதால் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள உஞ்சினி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். அதேபகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர்கள் இருவருக்கும் அப்பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் எல்லை பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ரெங்கநாதன் மற்றும் தர்மலிங்கம் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 48) ஆகிய 2 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த 2 பேரும் அரியலூர், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இருப்புலிக்குறிச்சி போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அன்பழகன், அவரது தம்பி குணசேகரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, செல்வம் ஆகிய 4 பேரை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
    விடுதலை சிறுத்தை பிரமுகர் கொலைக்கு ஆயுதம் சப்ளை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கரையான்பேட் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது25), விடுதலை சிறுத்தை பிரமுகர். இவர் கடந்த 14-ந்தேதி மாலை மோட்டார் சைக்கிளில் கணுவாய்ப்பேட்டை வழியாக வீடு திரும்பிய போது பின்தொடர்ந்து வந்த கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து கொலையாளிகளான கணுவாய்ப்பேட்டை புதுநகரை சேர்ந்த அய்யனார் (22) உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையே விடுதலைசிறுத்தை பிரமுகர் இளவரசனை கொல்ல கொலையாளிகளுக்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் (23) என்பவர் சப்ளை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரனை போலீசார் தேடிவந்தனர்

    இந்த நிலையில் நேற்று இரவு கோட்டைமேடு பகுதியில் கத்தியுடன் பதுங்கி இருந்த ராஜேந்திரனை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் மீது ஏற்கனவே கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தகக்து.
    கன்னியாகுமரியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அம்பேத்கர் சிலை முன் நேற்று காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஒரு பெண் ஊழியருக்கு அந்த துறையின் உயர் அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரியை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு மாநில செயலாளர் ஜெய்சிங் தலைமை தாங்கினார். மாநில தலைவர் தினகரன், குமரி அலெக்ஸ், சுகின்ராபிக், அருளானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த 18 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    எழும்பூரில் வாலிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    ஆவடி ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோசஸ். இவர் எழும்பூர் எத்திராஜ் சாலை பஸ் நிறுத்தம் அருகில் காரில் சென்ற போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை மடக்கினார்.

    பின்னர் மோசசிடம் “நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி டிரைவிங் லைசென்ஸ் உள்ளதா?” என்று கேட்டு மிரட்டினார். ரூ.1000 தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    இதுபற்றி எழும்பூர் இன்ஸ்பெக்டர் சேட்டு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்தார். அவரது பெயர் நிஜாம் என்பது தெரிய வந்தது. போலி இன்ஸ்பெக்டரான அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
    இராமேஸ்வரம்:

    தமிழக - இலங்கை எல்லையான கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு விரட்டியடிப்பதும், கைது செய்யப்பட்டு வருவதும் தொடர்ந்து நடந்துவருகிறது.

    இந்நிலையில் கச்சத்தீவு அருகே ஒரு படகுடன் மீன்பிடித்து கொண்டிருந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை இலங்கை கடற்படை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை, புதிய சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    கொழும்பு:

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை, மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச்சென்றனர்.

    இந்தநிலையில்,  ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீது முதல்முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்குபதிய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும், கொழும்பு நீரியல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரூ.50 லட்சம் முதல் ரூ.1.50 கோடி வரை மீனவர்களுக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதனை கட்ட தவறினால் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும் புதிய சட்டத்தில் இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து நோட்டீசு வினியோகித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கோவை:

    கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    முதற்கட்டமாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. விரிவாக்கத்துக்காக நிலம் கொடுப்பவர்களுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டும், மாற்று இடம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தினர்.

    இதுதொடர்பாக நில உரிமையாளர்களுடன் அரசு அதிகாரிகள் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடியிருப்பு நிலத்துக்கு சதுர அடிக்கு ரூ.1500, விவசாய நிலத்துக்கு சதுர அடிக்கு ரூ.900-ம் வழங்கப்படும் என்றும், குடியிருப்பு நிலம் வைத்திருப்பவர்களுக்கு 3 சென்ட் மாற்று இடம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த சி.கே.ஜெயபிரகாஷ் (வயது 40), இருகூரை சேர்ந்த செந்தில் என்ற செந்தில்ராஜ் (47) ஆகிய இருவரும் விமான நிலைய விரிவாக்க பகுதியில் நோட்டீஸ் வினியோகித்தனர்.

    மக்கள் நல கூட்டமைப்பு என்ற பெயரில் வினியோகிக்கப்பட்ட அந்த நோட்டீசுகளில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை போதாது, பணத்தை தராவிட்டால் நிலத்தை தர மாட்டோம், இந்த அரசு அடக்கு முறை அரசு, ஸ்டெர்லைட், பசுமை சாலை எதிர்ப்பு போராட்டங்களை போல இங்கும் போராட்டத்தை தொடங்குவோம் என்று வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சின்னியம்பாளையம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தேவராஜ் பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதில் ஜெயபிரகாஷ், செந்தில் ஆகியோர் வதந்தியை பரப்பி பொது மக்களிடம் மத்திய, மாநில அரசுகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறியிருந்தார்.

    இதைத்தொடர்ந்து சி.கே.ஜெயபிரகாஷ், செந்தில் ஆகியேர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(ஏ)- இரு பிரிவினர் இடையே பிரச்சினையை ஏற்படுத்துதல், 505(2) -வதந்தியை ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இன்று இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இன்று பணமோசடி தடுப்பு பிரிவு முகமையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். #NajibRazak #Malaysia
    கோலாலம்பூர்:

    மலேசியா நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரீசன் தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டது. பிரதமர் நஜீப் ரசாக் பதவி இழந்தார்.

    அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அமைத்த கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமர் ஆனார். தேர்தலின் போதே அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

    அதேபோல, கடந்த இரு மாதங்களில் நஜீப் ரசாக் வீடு மற்றும் அலுவலகங்களில் பணமோசடி தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் பெட்டி பெட்டியாக நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.  

    கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை 150 போலீசார் கணக்கீட்டு வந்த நிலையில், அதன் மொத்த மதிப்பு 27.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பின் படி 188 கோடி 71 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்) என அறிவிக்கப்பட்டது. அவற்றில் 12 ஆயிரம் நகைகள்,  567 ஆடம்பர கைப்பைகள், 234 சன்கிளாசஸ் மற்றும் 423 விலையுயர்ந்த கைக்கடிகாரம் போன்றவை அடங்கும். 

    மேற்கண்ட குற்றச்சாட்டுகளை நஜீப் ரசாக் தரப்பு மறுத்து வந்தாலும், அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலை இருந்து வந்த நிலையில், இன்று அவர் பணமோசடி தடுப்பு பிரிவு முகமையால் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    நஜீப் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நாளை பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Malaysia #NajibRazak
    ×