search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    தமிழகத்தில் அ.தி.மு.க. வின் அலை வீசுகிறது என்றும், மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருவதாகவும் பால்வளத்துறை அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். #ministerrajendrabalaji #admk #TNElections2019

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார்.

    அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வாக்களித்து வருகின்றனர். சாத்தூர் தொகுதி உள்பட அனைத்து இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்கள்.

    நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அலை வீசுகிறது. மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருகிறார்கள.

    தமிழகத்தில் பணப் புழக்கம் அதிகமாக உள்ளது என்ற கேள்விக்கு பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். தேர்தலுக்காக மக்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    வருமானவரித்துறை, ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஆளும் கட்சியினர் மீது எதிர்க்கட்சிகள் சொல்லுவது புதிதல்ல. அ. ம.மு.க., தி.மு.க. கட்சிகள் மீது மக்கள் எதிர்ப்பு உள்ளது. தினகரன் நாட்டை கொள்ளையடிப்பதற்காகவே கூட்டத்தை கூட்டியுள்ளார்.

    சாத்தூர் அ.ம.மு.க. வேட்பாளர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 43 லட்சத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. கொள்ளையடிக்கவே இருவரும் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்.

    ஆட்சியை மத்தியிலும் மாநிலத்திலும் கவிழ்ப்பேன் என திரிகிறார். பிரசாரத்தில் ஸ்டாலின் குணாதிசியம் தெரிந்தது. மக்கள் நலனில் அக்கறை இல்லை. மீண்டும் மோடி பிரதமராக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #admk #TNElections2019

    மதுரை உள்பட 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். #ministersellurraju

    மதுரை:

    மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரி வாக்குச் சாவடியில் இன்று காலை குடும்பத்துடன் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சித்திரை திருவிழா காலத்திலும் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். தேர்தலை பொறுத்தவரை மத்தியில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்று தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு மக்களை சந்தித்தோம்.

    தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. அரசு வளர்ச்சி திட்டங்களையும், நலத்திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறது. இந்த அரசுகளுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் வகையில் மக்கள் வாக்களித்து வருகிறார்கள்.

    எனவே மதுரை உள்பட 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministersellurraju

    தேர்தல் விதியை மீறி வாக்குச்சாவடி முன்பு பிரசாரம் செய்த மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக வலியுறுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #Dayanidhimaran
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாபு முருகவேல், தலைமை தேர்தல் ஆணையருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை 10 மணிக்கு ஓட்டு போட்டார். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆட்சி மாற்றத்திற்காக தான் வாக்களித்ததாகவும், அதேபோல் மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



    இதன்மூலம் அவர் தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி வாக்காளர்களிடம் கேட்பது தெளிவாகி உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதும் தெளிவாகிறது. எனவே, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Dayanidhimaran
    பெரியகுளம் செவன்த்டே பள்ளியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வாக்கை பதிவு செய்தார். #Loksabhaelections2019 #OPS
    பெரியகுளம்:

    தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு நாளான இன்று செவன்த்டே மெட்ரிக்பள்ளியில் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி தனது மகன் ரவீந்திரநாத்குமார், ஆகியோருடன் வாக்குப்பதிவை செலுத்தினார்.



    முன்னதாக இந்த மையத்தில் எந்திரம் பழுது காரணமாக 40 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமானது. அதன்பிறகு பழுது நீக்கப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இந்த மையத்தில் காலை முதலே கைக்குழந்தையுடன் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


    துணைமுதல்வரும், அவரது மகனும் வரிசையில் வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

    இதேபோல் தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் கம்பம் அருகில் உள்ள நாராயணத்தேவன்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.



    இதுகுறித்து தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில், ஏராளமான இடங்களில் மின்னணு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்களிக்க தாமதமாகியுள்ளது. எனவே வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றார்.  #Loksabhaelections2019 #OPS

    கும்பகோணத்தில் இன்று கொடி- தோரணங்களை அகற்றுவதில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று இரவு முதல் பறக்கும் படையினர் விடிய விடிய பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா? என்று கண்காணித்து வருகின்றனர். மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்கிறார்களா? என்றும் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கொடி- தோரணங்களை அகற்றுவதில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது.

    கும்பகோணத்தில் இன்று காலை நடந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கும்பகோணம் நகர் பகுதிகளில் உப்புக்கார தெருவில் தேர்தல் விதிமுறைகளை மீறி அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகளின் கொடி தோரணங்கள் அகற்றப்படவில்லை என்று தி.மு.க. நகர செயலாளர் சுப.தமிழழகன் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் அதிகாரியான கும்பகோணம் ஆர்.டி.ஓ. விடம் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் கொடிகள் அகற்றவில்லை என்று கூறி அங்கு இன்று காலை சாலை மறியல் செய்ய தி.மு.க.வினர் முயன்றனர். அப்போது அங்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் வந்தனர். இதனால் திடீரென அ.தி.மு.க.- தி.மு.க. வினருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    இதற்கிடையே தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தும் கொடிகள் அகற்றப்படாததால் கொடிகளை அகற்ற தி.மு.க.வினர் முயன்றனர்.

    இதை அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கட்சி கொடிகளை போலீசாரே அகற்றி இரு தரப்பினருக்கும் சமரசம் செய்து வைத்து கொடிகளை அப்புறப்படுத்தினர்.

    இதனால் தி.மு.க.வின் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    போடி அருகே ஓட்டுக்கு பணம் வழங்காததை கண்டித்து மக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அ.ம.மு.க. சார்பில் தங்கதமிழ் செல்வனும் களத்தில் உள்ளனர்.

    இதனால் தேனி பாராளுமன்ற தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. வெற்றியை எட்டி பறிப்பதில் 3 கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போடி டவுன் 1-வது வார்டு புதூர் பகுதியில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக தெரிகிறது. பணம் பெற்றவர்கள் இது குறித்து மற்றவர்களிடம் தெரிவிக்கவே பணம் கிடைக்காதவர்கள் போடி-குரங்கணி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரிடம் ஒரு தரப்பினருக்கு மட்டும் பணம் கொடுத்து விட்டு எங்களுக்கு பணம் தரவில்லை என கூறினர்.

    இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த போலீசார் ஓட்டுக்கு பணம் வாங்குவது சட்டப்படி குற்றமாகும். அதற்காக சாலை மறியல் ஈடுபடக்கூடாது என அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேட்டியளித்ததாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #ADMK #MKStalin
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் இன்று ஒரு மனு அளிக்கப்பட்டது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், இது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி 16-ந்தேதி மாலை 6 மணி முதல் அமைதி காலம் கடை பிடிக்கப்படுகிறது. இந்த விதியை கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் மு.க.ஸ்டாலின் இன்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளார். இது தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு எதிரானது.


    எனவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #ADMK #MKStalin
    இறுதி கட்ட பிரசாரத்திலும் வேட்பாளரின் பெயரை மாற்றி கூறி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சையை ஏற்படுத்தினார். #Loksabhaelections2019 #DindigulSreenivasan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று மணிக்கூண்டில் இறுதிகட்ட பிரசாரம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், பா.ம.க. வேட்பாளர் ஜோதி முத்துவுக்கு பதிலாக சோலைமுத்து என்றார். இதை கேட்டதும் வேட்பாளர் அதிர்ச்சியடைந்து அமைச்சரை திரும்பி பார்த்தார். உடனே சுதாரித்துக் கொண்டு ஜோதிமுத்துவுக்கு வாக்களியுங்கள் என்றார்.

    அதன் பின் இந்தியாவில் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் பட்டியலை சொல்லும் போது மம்தா பானர்ஜி, சரத்பவார் என்பதற்கு பதிலாக சரத்குமார் என்றார். இதனால் அருகில் இருந்த தொண்டர்கள் அவரை ஏறிட்டு பார்த்தனர். பின்னர் சரத்பாபு என்றார். இதனால் கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்ற மேடையிலேயே மாம்பழம் சின்னத்துக்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என பேசினார். அதன் பிறகு நடந்த பல பிரசார கூட்டங்களிலும் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்டார். இறுதி கட்ட பிரசாரத்திலும் வேட்பாளர் பெயரை மாற்றி கூறியதோடு மட்டுமின்றி நடிகர்கள் பெயரையும் சேர்த்து கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. #Loksabhaelections2019 #DindigulSreenivasan
    தமிழகத்தில் தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் செயலாற்றும்படி கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளனர். #LokSabhaElections2019
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் அறிவித்துவிட்ட அந்த வினாடியில் தொடங்கி வெற்றிச் சான்றிதழை பெற்று கழகத்தின் தலைமையகத்தில் கொண்டுவந்து காணிக்கையாக்குவது வரை அயராது சுழன்று உழைக்கும் அர்ப்பணிப்பு உள்ள தொண்டர்களால் நிறைந்து வழியும் ஒரே நிகரற்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

    தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அம்மா வழியிலான நல்லாட்சி தொடர்வதற்கும், தேசத்தின் பிரதமராக பாரத தேசத்தின் கறைபடாத காவலரான நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடர்வதற்கும் வாய்ப்பு தாருங்கள் என்று மக்களையெல்லாம் சந்தித்து தேசத்திற்கான நன்மையை எடுத்துரைத்திருக்கிறோம். தமிழகமெங்கும் நமக்கு ஆதரவு பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கோப்புப்படம்

    ஏழை, எளிய நடுத்தர மக்களை இமையாகக் காக்கும் பொறுப்புணர்வு என நல்லாட்சிக்கு இலக்கணம் வகுத்த வண்ணம் நாட்டின் பிற மாநிலங்களும் நம்மையே பின்பற்றும் அளவுக்கு, கழக அரசு கொண்டு வரும் சாதனைகளை தமிழக மக்கள் உளமாற போற்றுகிறார்கள்.

    அதே வேளையில் சூழ்ச்சியையே பிழைப்பாகக் கொண்டு தகிடுதத்தங்களையே பொழுதெல்லாம் செய்து, நரித்தனங்களையே அட்டவணையாக்கி, பொய்யும், புரட்டுமே பொழுதாகக்கொண்டு மக்களை திசை திருப்ப வெறிகொண்டு அலையும் எதிர்க்கட்சிகளை நாம் விழிப்போடு இருந்து தடுத்திட வேண்டும்.

    தேர்தல் ஜனநாயகத்தில் கழகத் தொண்டர்களை மிஞ்சுவதற்கு இந்த காந்தி தேசத்தில் இணையில்லை என்பதனை மெய்பிக்கும் விதமாக, நாற்பத்தாறு வயது கட்சி, முப்பது ஆண்டுகள் தமிழகத்தில் முடிசூடி வழிநடத்துகிறது என்றால் கழகத் தொண்டர்களின் தேர்தல் பணிகள் எத்தகையது என்பதை உணர்த்தும் விதமாக, கூட்டணி இயக்கங்களின் தொண்டர்களோடு ஒற்றுமை அரண் அமைத்து ஒட்டுமொத்த வெற்றியை கொய்வதற்கு ஒன்றரைக் கோடி சிப்பாய் படையும் சத்திய பிரமாணம் மேற்கொள்ள வேண்டும்.

    கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி முகவர்களும், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் வாக்குகளை எண்ணி முடிவு அறிவிக்கும் வரை அங்கேயே மிகுந்த விழிப்புணர்வோடு இருந்து கடமை ஆற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். நமதருமை கழகக் கண்மணிகள் அனைவரும் இப்பணியில் விழிப்போடு செயல்பட்டால், நாளைய திருநாடும் நமதாகும். நாற்பது தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் வெற்றிகள் அனைத்துமே நமக்கென ஆகும் என்பது சத்தியம்.

    பானை பொங்குகிற நேரம். நம் பாசத்திற்குரிய தொண்டர்கள் செய்யும் கடமையில் உச்சக்கட்ட விழிப்புணர்வைக்கொண்டு செயலாற்ற வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

    18.4.2019 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலிலும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு,  இரட்டை இலை சின்னத்திலும்; தோழமைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முறையே, தாமரை, மாம்பழம், முரசு, ஆட்டோ ரிக்சா, ஜக்கு சின்னங்களிலும் வாக்குகளை அளித்து, வேட்பாளர்கள் அனைவரையும் மாபெரும் வெற்றிபெறச் செய்யுமாறு  வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #LokSabhaElections2019 #OPS #EPS
    தென்சென்னை தொகுதியில் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த பெருமைக்குரிய 102 வயது மூதாட்டி வாழ்கிறார். #Loksabhaelections2019
    சென்னை:

    தேர்தல் களம் பரபரப்பும், சுவாரஸ்யமும் நிறைந்தது. அது வெளிப்படும்போது மக்கள் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படும்.

    நாளை மறுநாள் (18-ந் தேதி) 17-வது பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களையும் பார்த்தவர்களும், ஓட்டளித்தவர்களும் இருப்பது அரிது.

    தென்சென்னை தொகுதியில் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த பெருமைக்குரிய கண்ணம்மாள் என்ற மூதாட்டி வாழ்கிறார். 102 வயதாகும் அவர் பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன்களை பார்த்தவர். கந்தன்சாவடி அண்ணா நெடுஞ்சாலையில் வசித்து வருகிறார்.

    அந்த பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தனுக்கு ஆதரவு திரட்டி வரும் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் இன்று கண்ணம்மாள் வீட்டுக்கு சென்றார். தள்ளாத வயதிலும் தன்னை பார்க்க வருபவர்களை அடையாளம் பார்த்து அவர்களிடம் பேசுகிறார். அவரிடம் பாட்டி ஓட்டு கேட்க வந்திருக்கிறோம் என்றதும் உற்சாகத்தில் பேச தொடங்கினார்.

    பேராண்டி, அந்த காலத்தில் இருந்தே ஓட்டு போடுகிறேன். அப்பெல்லாம் இப்படி கிடையாது. இப்ப திருவிழா மாதிரி நடக்குதே... என்று கூறி சந்தோஷப்பட்டார். அவரிடம் பிளாஸ்டிக்கால் ஆன இரட்டை இலை சின்னத்தை கொடுத்து பாட்டி மறக்காம இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க என்றதும் கண்ணம்மாளின் கண்களில் அப்படி ஒரு ஆனந்தம். “மவராசன் எம்.ஜி.ஆர். அவருக்கு நிறைய தடவை இரட்டை இலையில் ஓட்டு போட்டிருக்கேன். நீங்களும் அந்த மவராசன் சின்னத்துக்குத்தான் ஓட்டு கேட்டு வந்திருக்கீங்களா... கண்டிப்பா இரட்டை இலைக்கு போடுவேன்பா என்றார்.

    102 வயதிலும் எம்.ஜி.ஆரையும் அவர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னத்தையும் கண்ணம்மாள் பாட்டி நினைவில் வைத்திருந்ததை பார்த்ததும் வாக்கு கேட்டு சென்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் மெய்சிலிர்த்து போனார்கள்.

    இதுபற்றி கே.பி.கந்தன் கூறும்போது, இதுதான் இரட்டை இலையின் வெற்றி. இது வெறும் சின்னம் மட்டுமல்ல, மக்களின் எண்ணம். எந்த காலத்திலும் அவர்கள் உணர்வில் இருந்து இரட்டை இலை மறைய போவதில்லை என்றார். பின்னர் கண்ணம்மாளிடம் ஆசி பெற்று அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். #Loksabhaelections2019
    அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். #LokSabheElections2019 #ChandrababuNaidu
    சென்னை:

    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது. அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம். பிரதமர் மோடி நாட்டுக்கு துரோகம் செய்கிறார். டெல்லியில் விவசாயிகள் போராடியபோது பிரதமர் மோடி சந்தித்து பேசினாரா?



    அனைத்து விவிபேட் இயந்திரங்களையும் சரிபார்க்க முடியாது என்கிறது தேர்தல் ஆணையம். பல்வேறு வளர்ந்த நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விலக்கிக் கொண்டனர். தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முன்வரவில்லை. உலகில் 10 சதவீத நாடுகளே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றன

    தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு மத்திய அரசு பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறது. மோடி அரசின் கைப்பாவையாக அதிமுக அரசு மாறிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் சந்திரபாபு நாயுடு புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. #LokSabheElections2019 #ChandrababuNaidu
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அம்மாப்பேட்டை பட்டை கோவிலில் இருந்து நடந்து சென்ற படியே சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். #Loksabhaelections2019
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. அதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 22-ந் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கினார்.

    கடந்த 25 நாட்களாக தமிழகம் முழுவதும் வாகனத்தில் நின்ற படியும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    ஏற்கனவே சேலம் நெய்க்காரப்பட்டியில் நடந்த சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற அவர் கடந்த 14-ந் தேதி கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று கே.ஆர்.எஸ். சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுவதால் சேலத்தில் தங்கி உள்ள எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை சேலத்திலேயே முடிக்க திட்டமிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை அம்மாப்பேட்டை பட்டை கோவிலில் இருந்து நடந்து சென்ற படியே சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். கடை வீதியில் ஓட்டு சேகரித்தார். அவர் அண்ணா சிலை அருகே பிரசாரம் மேற்கொண்டார்.

    பிற்பகலில் திருச்சி மெயின் ரோட்டில் ஜவுளிக்கடை பஸ்டாப்பில் தொடங்கி சீலநாயக்கன்பட்டி வரை நடந்து சென்று அவர் வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இதையொட்டி அவர் பிரசாரம் செய்யும் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Loksabhaelections2019 #EdappadiPalaniswami
    ×