search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    ஜெயலலிதாவை குற்றவாளி எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால் சிறைக்கு சென்றிருப்பார் என்று சொன்னவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்து உள்ளதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். #dinakaran #admk #pmk

    ஓசூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியை நான் பதிவு செய்யவில்லை. இதனால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றனர். எதற்காக நான் கட்சியை பதிவு செய்யவில்லை. நான் தனியாக கட்சி தொடங்கினால் நான் இரட்டை இலை சின்னத்திற்காக நடத்திய உரிமை போராட்டத்தை நடத்த முடியாது என்ற காரணத்தால் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினேன்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தான் தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர போகிறார்கள்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் தேசிய கூட்டுறவு, வங்கிகளில் வாங்கிய அனைத்து விவசாய கடன்கள், மாணவர்களின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் திருமண உதவியாக ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஆற்றுப்பாசனம், கிணற்று பாசனம் இல்லாத கிராமங்களில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி ஆழ்குழய் கிணறுகள் அமைக்கப்படும்.

    ஜாக்டோ- ஜியோ அமைப்பு உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். அரசு அலுவலகங்களில் அனைத்து சலுகை விலையில் உணவகம் அமைக்கப்படும். நெசவாளர்கள், மீனவர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகையும், முதியோர் உதவி தொகை ரூ.2 ஆயிரமாக வழங்கப்படும். இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு திட்டங்கள் உருவாக்கி தரப்படும்.

    ஜெயலலிதாவை குற்றவாளி எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால் சிறைக்கு சென்றிருப்பார். அவருக்கு மணி மண்டபம் கட்டக்கூடாது என்று பழித்து பேசியவர்களுடன், தற்போது அ.தி.மு.க.வினர் கூட்டணி வைத்துள்ளனர். அப்போது 37 தொகுதிகளில் வெற்றியை அளித்து, மோடி வேண்டாம் என மக்கள் தீர்ப்பளித்தனர்.

    ஆனால், தற்போது மோடி எங்களுக்கு தந்தை (டாடி) என அ.தி.மு.க.வினர் பேசி வருகின்றனர். மோடியல்ல யார் வந்தாலும் இனி இவர்களை காப்பாற்ற முடியாது. இடைத் தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை எனில் தமிழகத்தில் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு சின்னம் வழங்குவதில் இடையூறுகள் அளிக்கப்பட்டன. ஆனால் நாம் யாரையும் நாடாமல் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல், உச்சநீதிமன்றம் சென்று, பொதுசின்னமாக பரிசு பெட்டகத்தை பெற்றுள்ளோம். இந்த பரிசு பெட்டி அவர்களின் பணப்பெட்டியை வீட்டுக்கு அனுப்பப் போகிறது.

    அ.ம.மு.க.வை சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும், சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களும் தான் தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #admk #pmk

    பா.ஜனதா- அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஆறுமுகநேரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்பி பேசியுள்ளார். #Kanimozhi #bjp #admk

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் கனிமொழி எம்.பி. பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களிடையே தி.மு.க. கூட்டணிக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மத்திய மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கிவிட்டது. இந்த நாட்டின் பாதுகாவலன் என்று மோடி சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஆனால் அவரால் ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்த ஆவணங்களை கூட பாதுகாத்துக் கொள்ள இயல வில்லை.

    இவரது ஆட்சிக் காலத்தில் தான் நமது நாட்டின் 400-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை எதிர் நாட்டின் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் கொன்றுள்ளனர். இது தான் மோடி பாதுகாவலனாக இருப்பதின் லட்சணம். இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருவதால் அந்த நாடுகளுக்கு வேண்டுமானால் பாதுகாவலான இருக்கலாம்.

    மக்களை பிளவுபடுத்தி ஆட்சி நடத்தி வரும் மத்திய பா.ஜ.க ஆட்சியையும், அதன் பினாமியாக நடந்து வரும் தமிழகத்தின் அ.தி.மு.க ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நாசரேத் கே.வி.கே சாமி சிலை, சந்தி பஜார் பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி வந்தவுடன் நிச்சயமாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்காக பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். கருணாநிதி ஆட்சியின் போது விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. இப்போது விவசாய கடன், மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளனர். அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும்.

    10-வகுப்பு படித்துள்ள 1 கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் வேலை, 50 லட்சம் மக்களுக்கு மக்கள் நலபணியாளர் வேலை வழங்கப்படும். பெண்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு ரூ. 50 ஆயிரம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும். தி.மு.க. சொன்னதை செய்யும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Kanimozhi #bjp #admk

    அதிமுக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். #PremalathaVijayakanth #DMDK #ADMK

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி. இக்கூட்டணியை கண்டு மு.க.ஸ்டாலினும், மற்ற கட்சிகளும் பயந்துவிட்டன.

    இக்கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. பெண்களின் நலன் காக்க இக்கூட்டணி பாடுபடும். பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இரும்புக்கரம் கொண்டு இந்த கூட்டணி தடுக்கும். அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரவிடாமல் எங்களை தடுக்க தி.மு.க.வும், காங்கிரசும் முயன்று தோற்றுப்போய் விட்டன. துரோகிகளின் புகலிடம் தி.மு.க.

    தமிழக அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த வெற்றிக்கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி. இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதுபோல தேர்தல் முடிவு நமது வெற்றியை நிரூபிக்கும்.


    மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி பதவியேற்றவுடன் முதல் வேலையாக நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு பாடுபடுவோம். தமிழகத்தில் விவசாயிகளின் நலன்காக்க, ஏழை தொழிலாளர்களின் நலன்காக்க அனைத்து திட்டங்களையும் பெற்றுத்தருவோம். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். துளசியின் வாசம்கூட மாறலாம். ஆனால் தவசியின் வாக்கு மாறாது.

    விலைவாசியை குறைப்போம். தேர்தல் முடிந்ததும் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.2ஆயிரம் ஒவ்வொருவருடைய வீட்டுக்கும் தேடிவரும். எங்கள் வெற்றிக்கூட்டணிக்கு எதிரே உள்ளவர்கள் 2ஜி ஊழல் போன்றவற்றை செய்தவர்கள். 2011-ல் ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் இடையே தேவையற்ற பிரிவினையை உண்டாக்கியவர்கள் தி.மு.க.வினர்தான் என இங்கு முதன்முதலாக குற்றம் சாட்டுகிறேன். அதன் பிறகு இறைவனாக பார்த்து இப்போது எங்களை இணைத்து வைத்துள்ளார். இந்த கூட்டணி இனி தொடரும்.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #PremalathaVijayakanth #DMDK #ADMK

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் நாளை பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமி போட்டியிடுகிறார். 

    என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் டாக்டர் நாராயணசாமி கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆதரவு திரட்டி வந்தார். 
    என்ஆர்.காங்கிரஸ் சார்பில் நாளை முதல் தொகுதி வாரியாக தீவிர பிரசாரம் தொடங்க உள்ளது. நாளை காலை 7 மணிக்கு கனகசெட்டிகுளம் சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் அருகில் இருந்து பிரசாரம் தொடங்குகிறது. 

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று அவர் பிரசாரம் செய்கிறார். அவர் கங்கையம்மன் கோவில் தேரோடும் வீதி, பெரிய காலாப்பட்டு சந்திப்பு, சுனாமி குடியிருப்பு, பெரிய காலாப்பட்டு மீனவர் பகுதி, திடீர் நகர், சின்ன காலாப்பட்டு, நடுத்தெரு, பிள்ளைச்சாவடி சந்திப்பு, ஆதிதிராவிடர் குடியிருப்பு, கருவடிகுப்பம் பாரதிநகர், இடையன்சாவடி வழியாக கருமுத்து மாரியம்மன் கோவில், நாகம்மன் கோவில், நாவற்குளம், கடும்பாடி மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 

    இதைத்தொடர்ந்து புதுவையில் உள்ள 23 தொகுதிகளுக்கும், காரைக்கால், மாகி, ஏனாமிற்கும் சென்று ரங்கசாமி பிரசாரம் செய்ய உள்ளார்.
    நெசவுத்தொழிலை பாதுகாக்க அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பிரசாரத்தின் போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். #LSPolls
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றிபெறச் செய்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். அனைத்து சமுதாய மக்களின் ஆதரவை பெற்ற டாக்டர் கிருஷ்ணசாமிக்கு வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    நெசவு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, நெசவு தொழிலில் தற்போதுள்ள நூல் பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

    தொழிலாளர்களுக்கு விரைவில் கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நெசவாளர்கள் சங்கங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். நெசவு தொழிலை பாதுகாக்க டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றிபெற செய்ய வைத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்களுடன் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, சந்திரபிரபா எம். எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர்.
    பாராளுமன்ற தேர்தலில் தினகரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பரிசு பெட்டி சின்னமானது காலி பெருங்காய டப்பா என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். #LokSabhaElections2019 #ADMK #RBUdhayakumar
    மதுரை:

    தேனி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் உசிலம்பட்டி பகுதிகளில் இன்று கிராமம், கிராமமாக சென்று ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தார்.

    அவருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நீதிபதி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர். அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு மக்களுக்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறது. ஆனால் தி.மு.க.வினர் தனி நபர் விமர்சனம் செய்து ஓட்டு கேட்கிறார்கள். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    ஜெயலலிதா மீது வழக்குகளை போட்டு தொல்லை கொடுத்த தி.மு.க.வினர் இப்போது ஜெயலலிதா மீது பரிதாபம் காட்டுகிறார்கள்.

    மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் நடத்த பார்க்கிறார். அ.தி.மு.க.வை அழிக்கப்போவதாக கூறிய டி.டி.வி. தினகரன் வருகிற பாராளுமன்ற தேர்தலோடு காணாமல் போய் விடுவார். அவருக்கு “பரிசு பெட்டி” சின்னம் கிடைத்துள்ளது. அந்த பரிசு பெட்டி காலி பெருங்காய டப்பா. அது தோற்கிற சின்னம். இரட்டை இலை சின்னம் தான் வெற்றி மகுடம் சூடும் சின்னமாகும்.

    எனவே தேனி பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. பெறும் வெற்றி டெல்லியில் எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #ADMK #RBUdhayakumar
    கரூர் அருகே தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் பெண் வேட்பாளரை கத்தியை காட்டி மிரட்டிய அ.தி.மு.க.வினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #ADMK
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் லிங்கமநாயக்கன்பட்டியில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பெண்கள் சிலர் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த 2 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். தகாத வார்த்தைகளாலும் பேசினர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர்.

    அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 2 பேரும் காயமடைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 2 பேரையும் மீட்டு பள்ளப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதனிடையே தரக்குறைவாக பேசியதுடன், வேட்பாளருடன் வந்தவர்களை தாக்க வந்த 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் நள்ளிரவில் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்றனர்.

    பின்னர் வேட்பாளர் ஜோதிமணி போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அரவக்குறிச்சி பகுதி அ.தி.மு.க.வை சேர்ந்த திருமூர்த்தி (வயது 36), பெரியசாமி (26) ஆகியோர் என்னை தகாத வார்த்தைகளால் பேசி, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதனிடையே திருமூர்த்தி, பெரியசாமி தரப்பிலும் அரவக்குறிச்சி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தூண்டுதலின் பேரில் தி.மு.க. மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணியன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ்பாபு, லிங்கமநாயக்கன்பட்டி சிவா உள்பட 18 பேர் சேர்ந்து தங்களை தாக்கியதாக புகாரில் தெரிவித்து இருந்தனர்.

    இருதரப்பினர் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர். நள்ளிரவில் போலீஸ் நிலையம் முன்பு கட்சியினர் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #ADMK
    வேலூரில் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்கு என் மீது பழி போடுவதா? என்று ஏ.சி. சண்முகம் ஆவேசமாக கூறினார். #ITRaid #DuraiMurugan #ACShanmugam
    வேலூர்:

    வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று உள்ளது. இதற்கு நானும் பா.ஜனதா கட்சியும் தான் காரணம் என்று துரைமுருகன் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். சென்ற மாதம் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தது. நாங்கள் யார் மேலேயும் பழி போடவில்லை.


    அண்ணன் துரைமுருகன் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். அரசியல் நாகரிகம் கருதி நான் இதுவரை எதுவும் பேசவில்லை. நான் பேச ஆரம்பித்தால் துரைமுருகன் ஒரு மாதம் தூங்க மாட்டார்.

    இவர்களுக்கு எந்த நாட்டில் என்ன உள்ளது என்பதை நான் சொல்ல வேண்டியதாக இருக்கும்.

    பொதுவாக இந்த ரெய்டு எல்லாம் ஒருவர் போனில் பேசுவதை வைத்து தான் உளவுத்துறை மூலம் அறிந்து சோதனை நடைபெறும். இது கூட தெரியாமல் அடுத்தவர் மீது பழிபோடுவது மிக தவறு.

    இவ்வாறு அவர் கூறினார். #ITRaid #DuraiMurugan #ACShanmugam
    ராமதாசுக்கு அதிமுக கூட்டணியில் சிறிதுக்கூட விருப்பம் இல்லை எனவும் அன்புமணியின் கட்டாயத்தினால் தான் இந்த கூட்டணி ஏற்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். #UdhayanidhiStalin
    தர்மபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இன்று உதயநிதி ஸ்டாலின் தர்மபுரி 4ரோட்டில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது கூடிய கூட்டம் பிரசாரம் கூட்டம் போல் தெரியவில்லை. ஒரு மாநாட்டிற்கு வந்த கூட்டம் அலைகடலென திரண்டிருந்தனர்.

    இதுபோன்று நம்முடைய கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் மோடிக்கு எதிர்ப்பு அலை இருப்பதாகவும், மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு அலை இருப்பதாகவும் கருதுகிறேன்.

    மோடி ஆட்சி ஒரு மோசடி ஆட்சியாக திகழ்கிறது. கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி 5 வருடம் ஆட்சி முடிந்து அடுத்த ஆட்சியே வருகின்ற சூழ்நிலையில் இதுவரை ஒருவர் வங்கி கணக்கில் கூட பணம் போடவில்லை. அதற்கு பதிலாக நாமத்தைதான் போட்டுள்ளார்.

    புதிய இந்தியாவை கொண்டு வருகிறேன் என்று கூறி இரவில் அவர் மட்டும் முழித்து இருந்து ரூ.500, ரு.1000 நோட்டை செல்லாது என்று அறிவித்து இருந்தார்.

    இதன் பலனாக பாமர ஏழை மக்கள் ஏ.டி.எம். வாசலில் காத்திருந்ததுதான் மிச்சம். இப்படி காத்திருந்த ஏழை மக்களில் 150 பேர் இறந்துள்ளனர்.

    ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று மோடி அறிவித்தார். ஆனால், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கொண்டு வந்து 10 கோடி பேருக்கு வேலையிழக்க செய்தார். இதனை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களித்து வருகிற 18-ந் தேதி அன்று மோடியை கெட்டுஅவுட் செய்ய வேண்டும்.

    முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகிய 2 பேருக்கும் அந்த பதவி மோடி போட்ட பிச்சையாகும். அவர்கள் இந்த பதவியை பயன்படுத்திக் கொண்டு ஒக்கி, கஜா போன்ற புயலில் பாதிப்படைத்த மக்களுக்கு எந்தவித நிவாரணங்களும் வழங்கவில்லை.

    மேலும், ஸ்டெர்லைட் பிரச்சினையின் போது கூடிய மக்களை கலைப்பதற்காக 13 பேரை சுட்டு கொன்றது இந்த ஆட்சி. ஆனால், இதுவரை மோடியோ, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

    வெளிநாடுகளில் சுற்றி திரிந்த மோடி இந்த 5 வருடங்களில் பிரச்சினை காலங்களில் தமிழகத்திற்கு ஒரு தடவைக் கூட வரவில்லை. ஆனால் தேர்தல் வந்ததும், 3 முறை மோடி வந்து சென்றுள்ளார்.

    கடந்த மாதம் வரை துணை முதல்வரை டயர் நக்கி ஓ.பி.எஸ். என்றும், முதலமைச்சரை ஒரு வார்டு கவுன்சிலராக கூட தகுதியில்லாதவர் என்றும் கூறியவர் அன்புமணி ராமதாஸ். ஆனால், அவர்கள் தற்போது மோசடி கூட்டணியுடன் சேர்ந்து உள்ளனர்.

    மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று அவர் சென்ற தேர்தலின்போது கூறி வந்தார். தற்போது பார்க்கும்போது தடுமாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி என்று தெரிகிறது.

    ஒரு எம்.பி. சராசரியாக 80 சதவீதம் வருகை தரவேண்டும். ஆனால் அன்புமணி ராமதாஸ் இதுவரைக்கும் பாராளுமன்றத்தில் 40 சதவீதம் மட்டுமே வருகை தந்துள்ளார்.



    இதேபோன்று பாராளுமன்றத்தில் ஒரு எம்.பி. சராசரியாக தொகுதி வாரியாக 60 முதல் 65 கேள்விகளை எழுப்ப வேண்டும். ஆனால், அன்புமணி ராமதாஸ் இதுவரைக்கு வெறும் 12 கேள்விகளை மட்டுமே எழுப்பி உள்ளார்.

    அதுமட்டுமில்லாமல் தர்மபுரி பாராளுமன்ற பிரச்சினை குறித்து இதுவரை எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்பது தெரிகிறது.

    ராமதாசுக்கு இந்த கூட்டணியில் சிறிதுக்கூட விருப்பம் இல்லை. ஆனால் அன்புமணியின் கட்டாயத்தினாலோ அல்லது பணம் வாங்கியதலோ இந்த கூட்டணி ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    அன்புமணி ராமதாஸ் கடந்த தேர்தலின்போது நான் வெற்றி பெற்றால், தர்மபுரியில் வீடு எடுத்து தங்குவேன் என்று கூறினார். ஆனால் அவர் இங்கு ஒரு நாள் கூட தங்கவில்லை.

    மேலும், அவர் இந்த பகுதியில் தொழிற்பேட்டை அமைத்து 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி வாக்குறுதி கொடுத்தார் ஆனால் இங்கு ஒரு தொழில் நிறுவனம் கூட அமையவில்லை.

    ஆகவே, தி.மு.க. சார்பில் எனது தாத்தா கலைஞர் வழியில் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற வாக்குபடி செயல்பட்டு வருகிறார்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி நீட் தேர்வு, கல்வி கடன், விவசாய கடன் ஆகியவற்றை ரத்து செய்வோம். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச ரெயில், பஸ்பாஸ் வழங்கப்படும். டி.வி. கேபிள் கட்டணம் குறைப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்துவோம். அண்ணன் ராகுல்காந்தி 25 கோடி குடும்பங்களுக்கு ஒரு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறி உள்ளார். ஆனால், ஊழல் ஆட்சியை சேர்த்தவர்கள் இவற்றை தரமுடியாது என்று கூறி வருகின்றனர்.

    இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். ஏனென்றால் இதனை கூறியது மோடி அல்ல, ராகுல் காந்தி. சொன்னது சொன்னபடி நடைபெறும். 100 நாள் வேலை திட்டத்தை தற்போது உள்ள ஆட்சி 40 நாட்களாக குறைத்துள்ளது. மீண்டும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்கள் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.

    அம்மா வழியில் ஆட்சி செய்வோம் என்று கூறிக்கொண்டு வரும் எடப்பாடி ஆட்சி. ஜெயலலிதாவின மறைவு குறத்து இதுவரை எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் செயல்பட்டு வருகிறது.

    பொள்ளாச்சி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, நீட் தேர்வில் அனிதா இறப்பு என பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளுக்கு நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்திற்கும் தீர்வு காணப்படும்.

    இதனை அனைத்தையும் கருத்தில் கொண்டு தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை நீங்கள் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #UdhayanidhiStalin
    பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 12,13 மற்றும் 16 ஆகிய 3 தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். ராமநாதபுரம், கோவை, தேனி, சேலம் உள்பட 5 பிரசார கூட்டங்களில் அவர் பேச உள்ளார் #LokSabhaElections2019 #Modi
    சென்னை:

    பிரதமர் மோடி தமிழகத்தில் 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

    ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு திருப்பூர் மற்றும் கன்னியாகுமரியில் பிரசார கூட்டங்களில் பேசினார்.

    தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா 5 இடங்களில் போட்டியிடுகிறது. எனவே பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டும் வகையில் மோடி 3 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுகின்றார்.


    அடுத்த மாதம் (ஏப்ரல்) 12, 13 மற்றும் பிரசார நிறைவு நாளான 16 ஆகிய 3 தேதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். ராமநாதபுரம், கோவை, தேனி, சேலம் உள்பட 5 பிரசார கூட்டங்களில் அவர் பேச உள்ளார்.

    ராமநாதபுரம், கோவையில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், தேனியில் அ.தி.மு.க. வேட்பாளரையும் சேலத்தில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க வேட்பாளர்களுக்கும் அவர் ஆதரவு திரட்டுகிறார்.

    அவரது சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019 #Modi
    ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா தங்கிய வீட்டில் இளங்கோவன் குடியேறியது அ.தி.மு.க. தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. #Jayalalithaa #EVKSElangovan
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

    அப்போது அவர் தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள பங்களாவில் தங்கினார். சிங்கப்பூர் பங்களா என்று அழைக்கப்படும் அந்த வீட்டில் குடியேறி தினமும் ஆண்டிப்பட்டிக்கு பிரசாரம் செய்ய சென்றார்.

    இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அதன்பின் 2006-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் இந்த சிங்கப்பூர் பங்களாவில் தங்கியிருந்து வாக்கு சேகரித்தார்.

    ஜெயலலிதா தங்கியதால் அந்த பங்களா மிகவும் பிரபலம் ஆனது. அதை அம்மா வீடு என்றுதான் அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

    இந்த நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேனி என்.ஆர்.டி. நகரில் ஜெயலலிதா தங்கிய வீட்டில் குடியேறி உள்ளார். அங்கு தங்கியிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நடத்தி வருகிறார்.



    ஜெயலலிதா தங்கிய வீட்டில் இளங்கோவன் குடியேறியது அ.தி.மு.க. தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    இதுகுறித்து தேனி நகர அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தேனியில் உள்ள சிங்கப்பூர் பங்களாவில் அம்மாவை தவிர யாரும் குடியிருந்ததில்லை. அம்மா வாழ்ந்த வீடு என்பதால் கோயிலாக பார்க்க வேண்டிய இவ்வீட்டினை தாரை வார்த்து விட்டனர்.

    அம்மாவை கடுமையாக விமர்சித்த இளங்கோவன் அந்த வீட்டில் குடியேறி விட்டார். அம்மாவிற்கும், அ.தி.மு.க.விற்கும் சென்டிமெண்டாக ராசியான வீடு என்று இருந்த பங்களா பறிபோய்விட்டதே என அ.தி.மு.க. தொண்டர்கள் கலைப்படுகிறார்கள்.

    அம்மாவிற்காக கம்பீரமாக காத்து கொண்டிருந்த பிரசார வாகனம் இன்று காங்கிரஸ் கொடியுடன் நின்று கொண்டிருக்கிறது. #Jayalalithaa #EVKSElangovan
    பெரியகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் தொகுதி பெயரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாற்றி கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. #MinisterDindigulSrinivasan
    பெரியகுளம்:

    தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். பெரியகுளத்தில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது வேட்பாளர் பெயர் மற்றும் அவர் போட்டியிடும் தொகுதியின் பெயரை மாற்றி மாற்றி கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார்

    முதலில் ரவீந்திர குமார் என்றும் பின்னர் ரவீந்திரநாத்தாகூர் என்றும் கூறினார். தேனி பாராளுமன்ற தொகுதி என்பதற்கு பதிலாக பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி என்று மாற்றி கூறினார்.

    மேலும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பெயரை முதலில் மயில்வேல் என்றும் பின்னர் வேல் மயில் என்றும் கூறினார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எப்போது மேடையில் ஏறி பேசினாலும் சர்ச்சையான கருத்துகளை கூறுவது வழக்கம். பிரதமர் மன்மோகன் சிங் என்றும், மோடியின் பேரன் ராகுல்காந்தி என்றும் சர்ச்சையான கருத்துகளை கூறி வரும் நிலையில் நேற்று நடந்த கூட்டத்திலும் அமைச்சர் சீனிவாசன் பேசிய கருத்துகளால் சலசலப்பு ஏற்பட்டது. #MinisterDindigulSrinivasan
    ×