search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    அரசு நிலங்களை கையகப்படுத்த வேண்டுமென்றால் சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட வேண்டும், பொது மக்களின் கருத்தறியும் கூட்டங்களை நடத்த வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் தொடர்பான சிறப்பு வாய்ந்த சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தம் தொடர்பான விதிகளும் உருவாக்கப்பட்டன.

    ‘அரசு நிலங்களை கையகப்படுத்த வேண்டுமென்றால் சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட வேண்டும், பொது மக்களின் கருத்தறியும் கூட்டங்களை நடத்த வேண்டும், மறு குடியமர்த்தம் செய்யப்படும் மக்களுக்கு வீடுகளை கட்டித் தர வேண்டும், அவர்களுக்கு அரசு வழிகாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் இல்லாமல் நியாயமான இழப்பீட்டை வழங்க வேண்டும்’ உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

    நரேந்திர மோடி அரசு 2014-ல் பதவி ஏற்றதும் அந்த சட்டத்தில் இருந்த மக்களுக்கு சாதகமான அம்சங்களை எல்லாம் மாற்றி விட்டு அதை கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக திருத்தம் செய்து ஒரு சட்ட மசோதாவை கொண்டு வந்தது. அதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் காலாவதியாகி விட்டது.

    ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அந்தத் திருத்தங்களை மாநில அரசுகள் கொண்டுவந்தன. பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளில் அ.தி.மு.க. ஆட்சி இருந்த தமிழ்நாட்டில் மட்டும் ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது 2015-ல் அந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி

    ஆனால் அதை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என 2019-ல் அறிவித்தது.

    அதன்பின்னர் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசு மீண்டும் அதே சட்டத் திருத்தங்களை 2013-ம் ஆண்டுக்கு முன் தேதியிட்டுக் கொண்டு வந்தது. அந்த சட்டத் திருத்தத்தையும் எதிர்க்கட்சிகளும் விவசாய அமைப்புகளும் எதிர்த்தன. வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால், அந்த சட்டம் செல்லுபடியாகும் என நீதிமன்றம் கூறிவிட்டது.

    அந்த மக்கள் விரோத சட்டம்தான் இப்போதும் நடைமுறையில் உள்ளது. எடப்பாடி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் தான் சேலம் எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது என்பதையும், தற்போது நடைமுறையில் இருக்கும் அந்த சட்டம் தி.மு.க., வி.சி.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரானதாகும் என்பதையும் தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு சுட்டிக் காட்டுகிறோம்.

    எனவே அந்தச் சட்டத்தைத் தொடர்ந்து அனுமதிப்பது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த கேடு விளைவிப்பதாகவே இருக்கும். ஆதலால், சட்டமன்ற கூட்டத்தொடர் வரை காத்திருக்காமல் ஒரு அவசர சட்டத்தின் மூலம் அந்த சட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்... மதுரை சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.100 கோடி ஊழல்

    மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, வாழ்வாதார உதவியாக ரூ.5,000 கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    சென்னை:

    எதிர்க்கட்சி தலைவரும், முன்ளாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க. சார்பில் சென்னை மாநகர், சென்னை புறநகர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை நீர் சூழ்ந்து மூழ்கிய இடங்களை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

    மிக கனமழையினால், மாநிலத்தின் அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அணைகளில் இருந்தும், ஏரிகளில் இருந்தும் உபரி நீர் அப்படியே ஆறுகளில் திறந்துவிடப்படுவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், வேளாண் நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலைகள் நீரில் மூழ்கி உள்ளதோடு, தரைப்பாலங்கள், சிறு சிறு தடுப்பணைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

    நான், பொதுமக்களையும், விவசாயிகளையும் நேரடியாக சந்தித்த போது, அவர்கள் தெரிவித்த முக்கியமான கருத்துக்கள் வருமாறு:-

    * தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிற்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன.

    * மேலும், வாழை, மரவள்ளிக்கிழங்கு, மக்காச் சோளம், கம்பு உள்ளிட்ட பிற பயிர் வகைகளும் பெருமளவு பாதிப்படைந்துள்ளன. இதற்கான நிவாரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    * யூரியா உரங்கள் வரலாறு காணாத உச்ச விலைக்கு விற்கப்படுகின்றன.

    * விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு, டீசல் விலை உயர்வின் காரணமாக, வேளாண் செலவுகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

    நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்


    * மேலே குறிப்பிடப்பட்டுள்ள பயிர் உற்பத்திக்கான செலவுகள் உயர்ந்துள்ளதால் அரசு நிவாரணமாக அறிவித்துள்ள, முழுமையாக சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 என்பதை உயர்த்தி, ஹெக்டேருக்கு ரூ.40,000ஆகவும், நெற்பயிர் மறுசாகுபடி செலவு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038 என்பதை, ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

    * இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதையும் மாநில அரசு அதிகாரிகளோ, அமைச்சர் பெருமக்களோ நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை.

    *பாதிப்படைந்த வீடுகள், கால்நடைகள் போன்றவைகள் கணக்கெடுக்கப்படவில்லை; நிவாரணமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை; சுகாதாரமான குடிநீர் வழங்கப்படவில்லை.

    *அரசு வெள்ள நிவாரணத்திற்கு ஒதுக்கியுள்ள 300 கோடி ரூபாய், சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைக்க மட்டுமா? அல்லது விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தையும் உள்ளடக்கியதா என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை.

    * மேலும், முந்தைய ஆட்சியில் நிவாரணத் தொகையாக அதிகபட்சம் 2 ஹெக்டேர் என்று இருந்ததை மாற்றி, மழை வெள்ளத்தால் சேதமடைந்த நிலப்பரப்பு முழுவதற்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால், இப்போது இந்த அரசு அறிவித்த நிவாரண அறிவிப்பில் எவ்வளவு நிலம் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை.

    *இதுவரை, சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் மருத்துவ முகாம்களோ, கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்களோ நடத்தப்படவில்லை. முக்கியமாக, கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

    * இன்னும் வெள்ள நீர் வீடுகளைச் சூழ்ந்துள்ளதால், வெள்ளம் பாதித்த பெரும்பான்மையான மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு வெள்ள நிவாரணமாக, அம்மா அரசால் கடந்த முறை வழங்கியது போல, வாழ்வாதார உதவித்தொகையையும், அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும் கோரினர்.

    இந்த தி.மு.க. அரசு, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    * நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.40,000 நிவாரணமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    * மறுசாகுபடி செலவிற்காக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.12,000 நிவாரணமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    * பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சுகாதாரமான குடிநீரை உடனடியாக வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும், முக்கியமாக தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலைகளையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

    *மழையினால் பாதிக்கப்பட்ட ஊரகச் சாலைகள் உட்பட அனைத்து சாலைகளையும் உடனடியாக சீர் செய்ய வேண்டும்.

    *மறு உழவுப் பணிகளுக்குத் தேவையான விதைகள், உரங்கள் போன்றவை நியாயமான விலையில், தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    *எந்தவிதமான நிபந்தனையுமின்றி கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் சுணக்கமின்றி விவசாயப் பணிகளை மேற்கொள்ள வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும்.

    *மழையினால் சேதம் அடைந்த வீடுகள், உயிரிழந்த கால்நடை மற்றும் கோழிகளுக்கான இழப்பீட்டினை உடனடியாக அறிவித்து வழங்க வேண்டும்.

    * பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக மருத்துவ முகாம்களை நடத்தி, மக்களுக்கு சிகிச்சை அளித்திட வேண்டும். மேலும், கால்நடைகளுக்கும் மருத்துவ முகாம் நடத்திட வேண்டும்.

    *மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, வாழ்வாதார உதவியாக ரூ.5,000 கொடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும்.

    இந்த தி.மு.க . அரசு செய்யத்தவறியதாக நாங்கள் எதைக் கூறினாலும், இப்போதுதான் ஆட்சிக்கு வந்ததாகக் கூறுகின்றனர். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள்தான். ஏற்கெனவே, அமைச்சர்களாக இருந்தவர்கள்தான் இப்போதும் உள்ளனர்.

    இனியாவது இந்த அரசு விழித்துக் கொண்டு, இயற்கைப் பேரிடர் காலங்களில் அ.தி.மு.க. அரசு எப்படி திறம்பட செயலாற்றி, மக்களின் துயரைப் போக்கியதோ, அப்படி உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது பற்றியும், உட்கட்சி தேர்தலை நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
    சென்னை:

    தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உள்ளாட்சி தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளும் ஆயத்த பணிகளை செய்ய தொடங்கி உள்ளன.


    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது பற்றியும், உட்கட்சி தேர்தலை நடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    கிளைக் கழகம் முதல் மாவட்ட செயலாளர்கள் வரையிலான பொறுப்புகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.


    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வினியோகம் பா.ஜ.க.வில் தொடங்கியது. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை மற்றும் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர்.

    மாநகராட்சி தேர்தல் பணிக்குழு தலைவரும், சென்னை பெருங்கோட்ட உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளருமான கராத்தே தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    இதையடுத்து கே.அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிட 500-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளதா?, அதற்கு தகுதியான நபராக உள்ளாரா? என்பதை அறிவதற்காகத்தான் விருப்ப மனு பெறப்படுகிறது.

    தேர்தல் தேதி அறிவித்த பின்னர், கூட்டணி கட்சியினருடன் கலந்து பேசி, எந்த இடங்களில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்படும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையிலும் அதிக இடங்களில் போட்டியிட்டு, அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க. தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தற்போது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, மற்ற அனைத்தும் முடிவு செய்யப்படும்.

    பாஜக - அதிமுக

    பிரதமர் மோடியின் பெருந்தன்மையின் காரணமாக வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற காலத்தில் விவசாயிகள் இந்த சட்டத்தை ஒட்டுமொத்தமாக ஏற்கக்கூடிய சூழல் வரலாம்.

    அவ்வாறு, விவசாயிகள் வேண்டும் என்று கேட்டால் இந்த சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்றதில் வெற்றி, தோல்வி என்பது இல்லை.

    பாலியல் குற்றங்கள் செய்தால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என மக்களுக்கு புரியவந்தால் குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு பயம் ஏற்படும். காவல் துறை குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் தற்போது 6 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
    சென்னை:

    டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு அ.தி.மு.க.  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்கான திட்டமிடல், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    வார்டு மறுவரையறையையும், வாக்காளர்களின் முன் அனுமதியின்றி நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ஆர்.எம். பாபு முருகவேல் மாநில தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    இன்னும் ஓரிரு மாதங்களுக்குள்ளாக நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை ஒட்டி தமிழக தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் அனைத்து கட்சி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    அதில் அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர்களும், தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு தங்களுடைய மேலான கருத்துக்களையும் ஆட்சேபனைகளையும் தெரிவித்தனர். அதை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் பதிவு செய்து கொண்டனர். ஆனால், எங்களின் ஆட்சேபனைகளின் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்பட வில்லை.

    மாறாக தேர்தல் ஆணையம் வாய்மொழி உத்தரவாக வார்டு மறுவரையறை, வாக்காளர் பட்டியல் திருத்தமும் செய்வதற்குண்டான உத்தரவை பிறப்பித்து இருப்பதாக அறிகிறோம். இந்த வார்டு மறுவரையறை ஆனது எந்தவிதமான செயல்முறை உத்தரவு அல்லது அரசு உத்தரவு இன்றி வாய்மொழி உத்தரவாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகிறோம்.

    குறிப்பாக அவர்களுக்கு பாதகமான வார்டில் இருந்து சாதகமான வார்டில் இருக்கும் சில குறிப்பிட்ட வாக்காளர்களை தி.மு.க.வுக்கு ஆதரவான செயல்பாடாகவும், அந்தந்த பகுதியிலுள்ள தி.மு.க. நிர்வாகிகளுக்கு சாதகமாகவும் வார்டு மறுவரையறை, வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2016 முதல் 2018 வரை முறையான அரசு அறிவிப்பு அறிவித்து சட்டத்திற்கு உட்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்டு வார்டு மறுவரையறை செய்து முடிக்கப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு இருக்கும் போது தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்க கூடிய தி.மு.க.விற்கு சாதகமான வார்டு மறுவரையறை, வாக்காளர் பெயர் நீக்கம், சேர்த்தல் முழுவதுமான சட்டத்திற்கு முரணானது.

    காரணம் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் அந்தந்த உரிய வாக்காளர்களின் அனுமதியின்றி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகிறோம்.

    எனவே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய வார்டு மறுவரையறை, வாக்காளர் பட்டியல் திருத்தம் எந்தவிதமான வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் இருப்பதாக நாங்கள் அறிகிறோம். இது முழுவதுமான ஜனநாயக விரோதப் போக்காக நாங்கள் பார்க்கிறோம்.

    குறிப்பாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் வாக்காளர்களின் அனுமதியின்றி அவர்களுக்கு தெரியாமல் ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டிற்கு குறைந்தபட்சம் 30-ல் இருந்து 80 வாக்காளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இது எந்தவிதமான செயல்முறை உத்தரவு, அரசு அறிவிப்பு, தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத் தன்மையும் இல்லாத ஒரு செயலாக கருதப்படுகிறது.

    இந்த சட்டத்திற்கு புறம்பான வாக்காளர் பட்டியல் திருத்தம் தி.மு.க.வின் வெட்கப்படக்கூடிய செயல்களில் ஒன்று. வார்டு மறுவரையறை வாக்காளர் பட்டியல் திருத்தம் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் இதற்கு உதாரணமாக பல உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இருக்கிறது.

    இந்த தீர்ப்புகளை பின்பற்றி நடந்து கொள்வதும், நடந்து கொள்ள வைப்பதும் தமிழக தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. இந்தப் பொறுப்புக்கு தேர்தல் ஆணையர் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

    மேலும், வார்டு மறுவரையறை முடிந்தபிறகு அதை மீண்டும் செய்வதும் வாக்காளர் பட்டியல் வாக்காளர்கள் முன் அனுமதி இன்றி நடைபெறுவதும் தேவையற்ற ஒன்று. இது எதைக் காட்டுகிறது என்றால் தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான ஆதரவு தி.மு.க.விற்கு இருக்காது என்பதை உணர்ந்த தி.மு.க. அரசு தமிழக தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கைப்பாவையாக மாற்றி தேர்தலில் தங்களின் தொடர் தில்லுமுல்லுகளை எதிர்வரும் தேர்தலிலும் நடைமுறைப்படுத்தலாம் என எண்ணி இருப்பதாக நாங்கள் அறிகிறோம்.

    அதேபோல நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல புகார்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தோம். அதன்மீது எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்படவில்லை.

    இது தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்பதை காட்டிலும் ஆளுங்கட்சியை தவிர்த்து மற்றவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது என்பதை காட்டுகிறது.

    எனவே இந்த புகாரின் மீது உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு நடைபெற்றுக்கொண்டிருக்க கூடிய வார்டு மறுவரையறையையும், வாக்காளர்களின் முன் அனுமதியின்றி நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய வாக்காளர்பட்டியல் திருத்தத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தை நாடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சுத்தமான அம்மா குடிநீரின் உற்பத்தியை தி.மு.க. அரசு முழுமையாகவே நிறுத்திவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகள் கிடைத்திட வேண்டும் என்ற அடிப்படையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 100 அம்மா மருந்தகங்களை தொடங்க உத்தரவிட்டார்.

    “ஆடத்தெரியாத ஒருவர் கூடம் கோணல்” என்று சொல்வது போல், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றத் தெரியாத இந்த அரசு, நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி, அம்மாவின் அரசால் நிறைவேற்றப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா கண்டு வருகிறது.

    அம்மா சிமெண்ட் விற்பனைக்கு மூடு விழா செய்துவிட்டு, பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியவுடன், வலிமை சிமெண்ட் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது இந்த தி.மு.க. அரசு.

    அம்மா குடிநீர்

    பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சுத்தமான அம்மா குடிநீரின் உற்பத்தியை முழுமையாகவே நிறுத்திவிட்டது இந்த தி.மு.க. அரசு.

    அம்மா மினி கிளினிக் மற்றும் அம்மா நடமாடும் மருத்துவமனைகளுக்கு மூடு விழா செய்துவிட்டு, மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியவுடன் அம்மாவின் அரசு கொண்டு வந்த இந்த திட்டத்திற்கு இல்லம் தேடி மருத்துவம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது இந்த அரசு.

    ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், பருப்பு, காய்கறி, சிமெண்ட் போன்ற மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது அம்மாவின் அரசு, மாநில விலை நிலைப்படுத்தும் நிதியைப் பயன்படுத்தி மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்று வந்ததை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

    ஆனால் இந்த தி.மு.க. அரசு, தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மட்டுமல்லாமல், அம்மாவின் அரசு ஏற்கனவே மக்களுக்கு நிறைவேற்றிய பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா செய்த நிலையில் இப்போது நிதிச் சுமையை காரணம் காட்டி அம்மா மருந்தகங்களையும் மூட முடிவு செய்துவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன.

    தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிதி ஆதாரத்தைப் பெருக்கவும் இரண்டு வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் என்ன செய்கின்றன? அரசுக்கு என்னென்ன ஆலோசனைகள் வழங்கின? என்று தெரியவில்லை.

    மக்கள் நல அரசு என்றால் மக்களின் நலனைக் காக்கும் அரசு. ஆனால் இந்த அரசோ மக்களின் நலத்திட்டங்களைப் பறிக்கும் அரசாக உள்ளது. நிதி நிலைமையை மேம்படுத்தி, வருவாயைப் பெருக்க வழி தெரியாமல் தவிக்கும் இந்த கையாலாகாத அரசு, அம்மா அரசால் தொடங்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    மக்களின் உயிர் காக்கும் தரமான மருந்துகளை சலுகை விலையில் விற்கும் அம்மா மருந்தகங்களை மூடி, தனியார் மருந்தகங்களை லாபம் கொழிக்க அனுமதிக்கும், மக்கள் நலனுக்கு எதிரான இந்த முடிவை அரசு உடனே கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    தமிழக அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையினை பரிசீலித்து, நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நேரடித் தேர்வாக நடத்தாமல், ஆன்லைன் தேர்வாக நடத்திட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    சென்னை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுமார் 20 மாதங்களுக்கும் மேலாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காமல் மூடப்பட்டிருந்தன.

    சுமார் 15 மாதங்களுக்கு மேலாக ஆன்லைன் வகுப்புகள் கூட நடத்தப்படாமல் இருந்தன. பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

    தற்போது தமிழ்நாட்டில் கொரோனா நோய் பாதிப்பு குறைந்து வருவதாகத் தெரிவித்த மாநில அரசு, படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை படிப்படியாகத் திறந்து வருகிறது.

    இச்சூழ்நிலையில் கல்லூரிகள் திறந்து சுமார் 2½ மாதங்களே ஆனதாலும், முழுமையாக நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், பண்டிகைக் காலம், பருவமழை என்று கல்லூரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்கப்படுவதாலும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்குரிய பாடங்களை ஆசிரியர்கள் முழுமையாக முடிக்கவில்லை என்றும், எனவே செமஸ்டர் தேர்வுக்கு முன் நடத்தப்படும் மாதிரி தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

    மேலும், இந்த செமஸ்டருக்கான சிலபஸ் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை என்றும், டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் மாதம் என்ன பாடம் நடத்தப்பட வேண்டும் என்ற பாடத்திட்டம் (சிலபஸ்) கல்லூரி பேராசிரியர்களுக்குக்கூட இதுவரை வழங்கப்படவில்லை என்றும், செய்திகள் வருகின்றன.

    கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பல மாவட்டங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.

    எனவே, அனைத்து கல்லூரி மாணவ, மாணவியரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனரா? என்றும், அனைத்து மாணவர்களும் கல்லூரிகளுக்கு வந்து பாடம் கற்கிறார்களா? என்பதையும் இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் நேரடி தேர்வு நடத்தினால்தான் மாணவச்செல்வங்கள் முழு திறமையோடு தேர்வை எதிர் கொள்ள முடியும்.

    இந்த அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையினை பரிசீலித்து, நடைபெற உள்ள இந்த ஒரு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நேரடித் தேர்வாக நடத்தாமல், ஆன்லைன் தேர்வாக நடத்திட வேண்டும் என்றும், மாணவ, மாணவியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறவேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி பகுதியில் மழையால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
    புவனகிரி:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடலோர பகுதியான கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கனமழை கொட்டி தீர்த்தது.

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரலாறு காணத மழை பொழிந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர், மக்காசோளம் தண்ணீரில் மூழ்கியது. 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமானது.

    குறிப்பாக சிதம்பரம், புவனகிரி பகுதியில் மழையால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்

    அதன்படி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை புவனகிரி வந்தனர். புவனகிரியில் உள்ள திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் பாண்டியன் எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். 


    தமிழ்நாட்டிற்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கையை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், புதிய அணை கட்டுவது தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் இடம் தரக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக்கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுது பார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்ட பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கும் கேரள அரசு எந்தவித இடையூறும் அளிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பேபி அணையை பலப்படுத்தும் வகையில் அதற்குக் கீழுள்ள 23 மரங்களை வெட்டுவது தொடர்பான கருத்துரு கம்பம் நீர் ஆதாரத்துறையின் செயற்பொறியாளரால் கேரள வனத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனைப் பரிசீலித்த பெரியாறு புலிகள் காப்பக கிழக்குக் கோட்ட துணை இயக்குநர் தமிழ்நாட்டிற்கு குத்தகைக்கு விடப்பட்ட முல்லைப்  பெரியாறு பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட பரிந்துரை செய்த கேரள அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன விலங்கு காப்பாளருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

    இதன் அடிப்படையில் கேரள அரசின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் அங்குள்ள 15 மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி அளித்தார்.

    இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள அரசிற்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்த செய்தி அனைத்து பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்தது. இதற்கு மறுநாளே, கேரள மாநில வனத்துறை அமைச்சர் மரங்களை வெட்ட அனுமதி கொடுத்தது தனக்கு தெரியாது என்றும், கேரள முதல்-மந்திரிக்கோ, நீர் பாசனத்துறை மந்திரிக்கோ, வனத்துறை மந்திரிக்கோ எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    மரங்களை வெட்ட அனுமதி அளித்த ஆணை வெளிவந்த மறுவினாடியே கேரள முதல்-மந்திரிக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்-அமைச்சர் அதற்கு பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து மவுனமாக இருப்பது வியப்பாக இருக்கிறது.

    கேரளாவுக்கு ஆதரவான மனநிலையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் இருப்பதாக பொது மக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் நினைக்கும் சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

    ஆனால் தமிழ்நாட்டின் உரிமை என்று வரும்போது அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.க்களாக, அமைச்சர்களாக இருக்கின்ற அனைவருக்கும் உண்டு. இந்த வி‌ஷயத்தில் மவுனம் சாதிப்பது என்பது தமிழ்நாட்டின் உரிமையை கேரளாவுக்கு அடகு வைத்ததற்கு சமம்.

    முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதோடு, இது குறித்து அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வருவதாக கூறப்படுகிறது. அப்போது இதுகுறித்து வலுவான வாதங்களை தமிழ்நாட்டின் சார்பில் எடுத்துரைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, பேபி அணையை வலுப்படுத்த கேரள அரசு இடையூறு அளிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ஆண்டுக்கணக்கில் இடையூறு அளித்து வரும் கேரள அரசை தட்டிக் கேட்க வேண்டும் என்றும், மரங்களை வெட்டுவதற்கான அனுமதி ஆணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற கேரள அரசை வலியுறுத்த வேண்டும்.

    இந்த பிரச்சனை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கையை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், புதிய அணை கட்டுவது தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் இடம் தரக்கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பெருமழையின் காரணமாக டெல்டா பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நெல் குண்விடால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும், கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது அது குறித்து வாய்மூடி மவுனம் காக்கும் அரசாக, தி.மு.க. அரசு விளங்குகிறது.

    தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்கள் கடந்த நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான, நெல்லுக்கான ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,015 என்றும், 10 விழுக்காடு பிழிதிறன் கொண்ட கரும்புக்கான ஆதார விலை டன்னுக்கு ரூ.2,900 என்றும், அதற்கு குறைவான பிழிதிறன் கொண்ட கரும்பு டன்னுக்கு ரூ.2,755 என்றும் தான் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மற்ற வாக்குறுதிகளை போல் நெல் மற்றும் கரும்புக்கான ஆதார விலை வாக்குறுதியை ஆட்சியின் முடிவில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற முடிவில் தமிழக அரசு இருந்தால் அது விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்காது. இதுகுறித்த தி.மு.க.வின் வாக்குறுதி என்பது தற்போதைய கால கட்டத்திற்கு தான் பொருந்தும்.

    விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று திறந்தவெளியில் வைக்கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துவிட்டன.

    அதே போல் அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து முளைத்து விட்டன. இவற்றை தவிர்க்கும் பொருட்டு தேவைப்படும் இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    மேலும் பெருமழையின் காரணமாக டெல்டா பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி உரிய ஆய்வு செய்து, பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

    வாக்களித்த விவசாயிகளை வஞ்சிக்காமல், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரு.2,500 ஆகவும், கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரமாகவும் உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    அதே போல் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டுவரும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனுக்குடன் கொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை உடனடியாக வழங்கி, விவசாயிகளை விரக்தியில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழக விவசாயிகள் சார்பிலும், அ.தி.மு.க.வின் சார்பிலும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தும் முடிவில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    கம்பம்:

    முல்லை பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை நிலை நாட்ட வலியுறுத்தி தேனி மாவட்டம் கம்பத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 15 வருட சட்ட போராட்டங்களை நடத்தினார். கடந்த 2000-ம் ஆண்டு அணை பலவீனமாக இருப்பதாகவும், நீர்மட்டத்தை 136அடிக்கு மேல் தேக்க கூடாது என்று கேரள அரசு தொடர்ந்து கூறி வந்தது. ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடியதையடுத்து 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பை வழங்கியது.

    அதன்படி 142 அடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம். பேபி அணை, சிற்றணைகளை பராமரிப்பு செய்த பிறகு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என தெரிவித்தது. மேலும் அணை பராமரிப்புக்கு தமிழகம் செல்லும்போது அதற்கு கேரளா போதிய ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் தெரிவித்தது. ஆனால் கேரளா மீண்டும் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136அடிக்கு மேல் உயர்த்த முடியாத அளவுக்கு திருத்தம் கொண்டு வந்தது.

    அணை பலவீனமாக இருப்பதாகவும், எனவே நீர்மட்டத்தை உயர்த்த கூடாது என்று கூறிய கேரள அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு 17 பரிசோதனைகள் முல்லை பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அணையின் பாதுகாப்பு குறித்து தெரிவிக்கையில், பூகம்பமே வந்தாலும் முல்லை பெரியாறு அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தனர். 2013-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய அதே ஆண்டில் 142 அடிவரை அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டது. இதன்மூலம் தென்மாவட்ட விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பேபி அணையை சீரமைக்க ரூ.6½கோடி நிதியும் ஒதுக்கீடு செய்தார்.

    அணை பராமரிப்புக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்கு கேரளா அனுமதி அளிக்கவில்லை.

    முல்லை பெரியாறு அணையை திறப்பதற்கு, தமிழகத்திற்கு மட்டுமே உரிமை உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 139 அடியை எட்டுவதற்கு முன்பாகவே கேரள அமைச்சர்கள் சென்று தண்ணீரை ஏன் வெளியேற்றினார்கள் என்று கேட்டால் அமைச்சர் துரைமுருகன் சம்மந்தமில்லாமல் பதில் அளிக்கிறார்.

    முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் செயல்படும் தி.மு.க அரசுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தும் முடிவில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். 5 மாவட்ட விவசாயிகளை திரட்டி அ.தி.மு.க சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    ×