search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ், வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவி தொகையாக ரூ.1,500 வழங்க வலியுறுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #ADMK #ADMKmanifesto
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.



    இந்த தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்க வலியுறுத்தப்படும். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல்மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். காவிரி, கோதாவரி ஆறுகள் இணைப்பு திட்டத்தை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்க அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மதம் மாறினாலும் சாதிரீதியான இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும்படி கவர்னரிடம் வலியுறுத்தப்படும். பொது சிவில் சட்டதை அமல்படுத்தக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். #LSPolls #ADMK #ADMKmanifesto
    தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. #LokSabhaElections2019 #ParliamentElections
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

    இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

    இதுகுறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படும். வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.



    வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் 4 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும். அதுபோல் அதிகபட்சம் அலுவலக வளாகத்துக்குள் 3 கார்கள் மட்டுமே வேட்பாளருடன் வரலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (23 மற்றும் 24-ந் தேதிகளில்) விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது.

    வேட்புமனு தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் 26-ம் எண் விண்ணப்பத்தில் கூடுதல் தகவல்கள் கோரப்பட்டு உள்ளன. இதற்கான விதிகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.

    அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் 5 ஆண்டுகளுக்கான தனது வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். (முன்பு ஒரு ஆண்டு வருமான வரிக்கணக்கு). இந்து கூட்டுக்குடும்ப சொத்துக்கள், வெளிநாட்டில் உள்ள சொத்து விவரங்கள் ஆகியவற்றையும் சேர்த்து அந்த விண்ணப்பத்தில் காட்ட வேண்டும்.

    வேட்புமனு தாக்கல் செய்பவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ, ஏதாவது வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டு இருந்தாலோ அதையும் அவர் சுட்டிக்காட்ட வேண்டும்.

    அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதில் இருந்து வாக்குப்பதிவு நடப்பதற்கு முன் 3 முறை பிரபல நாளிதழ்கள், டி.வி. சேனல்களில் தன் மீதான வழக்கு விவரங்கள் பற்றிய விளம்பரங்களை வேட்பாளர் கொடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் விரைவில் தமிழகம் வர இருக்கிறார். இவ்வாறு கூறினார்.

    இதற்கிடையே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தேர்தல் அறிக்கையை இன்று காலை வெளியிடுகின்றன. #LokSabhaElections2019 #ParliamentElections #TamilnaduByElection #Nomination

    40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பா.ஜ.க.வினர் கடுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள் என்று, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார். #aiadmkalliance
    பெரம்பலூர்:

    பா.ஜ.க.வின் திருச்சி பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், திருச்சி, கரூர், சிதம்பரம் (தனி) உள்ளிட்ட 10 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதற்கு திருச்சி கோட்ட பொறுப்பாளர் சிவசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 

    இதையடுத்து இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல், இரண்டொரு நாளில் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு மூலம் முறைப்படி அறிவிக்கப்படும். தமிழகத்தில் 5 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட்டாலும், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பா.ஜ.க தொண்டர்கள் கடுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள்.

    இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைவரது நோக்கமும் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்பதே. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு கவலைக்குரிய பிரச்சினை தான் என்றாலும், பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களைச் சொல்லி வாக்கு சேகரித்து, அத்தொகுதியில் மக்களிடம் வெற்றி வாய்ப்பைப் பெறுவோம். பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு அதிகப்படியான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #aiadmkalliance
    தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #parliamentelection #dmkalliance
    சென்னை:

    அதிமுக, திமுக தலைமையில் தமிழகத்தில் இரு மெகா கூட்டணிகள் இந்த முறை அமைந்துள்ளது. இந்த கூட்டணி போக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரன் கட்சியும் தனியாக களமிறங்குகிறது. பிற இதர கட்சிகளும் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத மிகவும் முக்கியமான தேர்தலாக இது உள்ளது. அரசியல் கட்சிகள் வெற்றியை பெற தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களையும் அதிமுக கூட்டணி 5 இடங்களையும் கைப்பற்றும் என டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 52.20 சதவித வாக்குகளையும், அதிமுக, பா.ஜனதா., பாமக, தேமுதிக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 37. 20 சதவித வாக்குகளையும், மற்ற கட்சிகள் 10.60 சதவித வாக்குகளை கைப்பற்றும் என கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களையும் கம்யூனிஸ்ட் கூட்டணி 3 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் 22 இடங்களையும் தெலுங்கு தேசம் 3 இடங்களையும் கைப்பற்றும். தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 13 தொகுதிகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒரு தொக்தியிலும், பா.ஜனதா கூட்டணி 2 தொகுதியிலும், மற்றவை ஒரு தொகுதியிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #parliamentelection #dmkalliance
    அதிமுக கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. #LSPolls #ADMK #Manisfesto
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் வேலைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக தலைமை நேற்று அறிவித்தது.

    இந்நிலையில், அதிமுக கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. #LSPolls #ADMK #Manisfesto
    திமுக தலைவர் முக ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் எதிர்வரும் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். #LSPolls #ADMK #RajaKannappan #DMK #MKStalin
    சென்னை:

    அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். பொதுப்பணி துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் மின்துறை ஆகியவற்றின் பொறுப்புகளையும் வகித்து உள்ளார்.

    இவர் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை 2000ம் ஆண்டில் தொடங்கினார்.  2001ம் ஆண்டில் தி.மு.க.வுக்கு அவர் ஆதரவு வழங்கினார்.  தி.மு.க. கூட்டணியில் ராஜகண்ணப்பன் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  அவர் இளையான்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டார்.  ஆனால் கட்சியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.  இதையடுத்து, அவர் தி.மு.க.வுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்தார்.



    இந்நிலையில், அண்ணா அறிவாலயத்துக்கு இன்று மாலை சென்ற ராஜ கண்ணப்பன், திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்தார். பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ கண்ணப்பன், 'திராவிட இயக்கத்தின் பூமியான தென் மாவட்டங்களில் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன்' என குறிப்பிட்டார். #LSPolls #ADMK #RajaKannappan #DMK #MKStalin
    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள வடுகப்பட்டி பகுதியில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் சிக்கிய ரூ.17.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள வடுகப்பட்டி பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்தனலட்சுமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து அவர் வைத்திருந்த பையில் சோதனையிட்டனர். அப்போது அதில் ரூ.17 லட்சத்து 47 ஆயிரத்து 800 இருந்தது.

    அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தும் போது அவர் வீரடிப்பட்டியை சேர்ந்த அய்யப்பன் என்பதும், அந்த பணத்தை கந்தர்வக்கோட்டையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அருள் என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாகவும் கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, வெளிநாட்டு பணத்தை பண பரிமாற்றம் செய்து, அதனை உரியவரிடம் ஒப்படைத்து கமி‌ஷன் பெறுவதற்காக பணத்தை கொண்டு சென்றதாகவும் கூறினார்.

    இருப்பினும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்ததால் அந்த பணத்தை வருமான வரித்துறையிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அ.தி.மு.க. பிரமுகர் அருளிடமும் விசாரணை நடத்த உள்ளனர். #LSPolls

    அதிமுக தேர்தல் பிரசாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமைக் கழகத்தில் ஆலோசனை நடத்தினர். #ADMK #EdappadiPalaniswami #OPS
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. 18 சட்ட சபை இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலும் வெளியானது.

    அடுத்த கட்டமாக தேர்தல் பணி, பிரசார வியூகம் பற்றி அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    முதல்-அமைச்சர், துணை முதல்வர் ஆகியோர் தேர்தல் பிரசார தேதி தேர்தல் ஏற்பாடு ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. இன்று மாலை அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது. #ADMK #EdappadiPalaniswami #OPS

    ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. - தி.மு.க. சார்பில் அண்ணன்-தம்பி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். #ADMK #DMK

    ஆண்டிப்பட்டி:

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து காலியாக உள்ள 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தம்பியும், தி.மு.க. சார்பில் அவரது உடன் பிறந்த அண்ணனும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் லோகிராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 1987-ம் ஆண்டு முதல் கட்சியில் பணியாற்றி வரும் இவர் கிளைச் செயலாளர், ஒன்றிய செயலாளர், யூனியன் தலைவர் என பல பதவிகளை வகித்துள்ளார்.

    இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் அவரது உடன் பிறந்த அண்ணன் மகாராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் கடந்த 1973-ம் ஆண்டு முதல் தி.மு.க.வில் பணியாற்றி வருகிறார். ஆண்டிப்பட்டி யூனியன் பெருந்தலைவராகவும் இருந்துள்ளார்.

    தமிழகத்தில் வேறு எந்த தொகுதியிலும் இல்லாத புதுமையாக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதி.மு.க. - தி.மு.க. சார்பில் எதிர்எதிர் அணிகளில் அண்ணன், தம்பி களத்தில் மோதுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #DMK

    சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சி இன்று இரவு அறிவித்துள்ளது. #ByPoll #ADMK
    சென்னை:

    அதிமுக சார்பில் 18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

    பூந்தமல்லியில் ஜி வைத்தியநாதனும், பெரம்பூரில் ஆர்.எஸ்.ராஜேஷும், திருப்போரூரில் எஸ்.ஆறுமுகம், சோளிங்கரில் ஜி சம்பத்தும், குடியாத்தத்தில் கஸ்பா ஆர்.மூர்த்தியும், ஆம்பூரில் ஜே.ஜோதிராமலிங்கராஜாவும், ஓசூரில் சத்யாவும், பாப்பிரெட்டிப்பட்டியில் கோவிந்தசாமியும், 

    அரூரில் சம்பத்குமாரும், நிலக்கோட்டையில் தேன்மொழியும், திருவாரூரில் ஜீவானந்தமும்,  தஞ்சாவூரில் ஆர்.காந்தியும், மானாமதுரையில் நாகராஜனும், ஆண்டிப்பட்டியில் லோகிராஜனும், பெரிய குளத்தில் முருகனும், சாத்தூரில் ராஜவர்மனும், பரமக்குடியில் சதன் பிரபாகரும், விளாத்திகுளத்தில் சின்னப்பனும்  போட்டியிடுகின்றனர். #ByPoll #ADMK
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று இரவு அறிவித்துள்ளார். #LSPolls #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக-வுக்கு 5, தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    தமாகா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்ஆர் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
     
    இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து, அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, திருவள்ளூரில் டாக்டர் வேணுகோபாலும், தென் சென்னையில் ஜெயவர்தனும், காஞ்சிபுரத்தில் மரகதம் குமரவேலும், கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமியும், திருவண்ணாமலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஆரணியில் ஏழுமலையும், சேலத்தில் கே.ஆர்.எஸ்.சரவணனும், நாமக்கல்லில் காளியப்பனும், ஈரோட்டில் வெங்கு என்ற ஜி.மணிமாறன், திருப்பூரில் எம்.எஸ்.எம்.ஆனந்தனும், நீலகிரி தியாகராஜன், பொள்ளாச்சி சி.மகேந்திரன், கரூரில்  தம்பிதுரையும், பெரம்பலூரில் என்.ஆர்.சிவபதியும், சிதம்பரத்தில் பொ.சந்திரசேகர், மயிலாடுதுறையில் எஸ். ஆசைமணியும், நாகப்பட்டினம் ம.சரவணனும், மதுரையில் விவிஆர் ராஜனும், தேனியில் ரவீந்திரநாத் குமாரும், திருநெல்வேலியில் மனோஜ் பாண்டியனும் போட்டியிடுகின்றனர். #LSPolls #ADMK
    அதிமுக தலைமைக் கழகத்தில் 18 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. #ADMK

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 18 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் இன்று காலை நடைபெற்றது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து, தொகுதி நிலவரம், கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தனர்.

    யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    18 தொகுதிக்கும் மொத்தம் 311 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். அவர்கள் அனைவரும் இன்று நேர்காணலில் பங்கேற்றனர்.

    நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறுகையில் யார் வேட்பாளர் என்பதை நேரடியாக தெரிவிக்காமல் கட்சி நிறுத்தும் வேட்பாளரை கருத்து வேறுபாடுகளை மறந்து வெற்றி பெற செய்யபாடுபட வேண்டும் என்று பொதுவான ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவித்தனர்.

    நேர்காணல் நிகழ்ச்சி பகல் 12.30 மணிக்கு முடிவடைந்ததும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்டச் செயலாளர்களுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அ.தி.மு.க. தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளதால் யாரும் சோர்வாகிவிடக் கூடாது. நமக்கு வெற்றிதான் முக்கியம். அதற்கேற்ப பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டதாக மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்தனர். #ADMK

    ×