search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பதில் எந்த இழுபறியும் கிடையாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #ADMK #MinisterJayakumar #DMDK #BJP #Amitshah
    சென்னை:

    திருவான்மியூரில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பதில் எந்த இழுபறியும் கிடையாது. எல்லாம் நல்லது நடக்கும். கூட்டணி முடியும் நேரம் முடியும்.

    தற்போது அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைந்து வருகிறது. இது வெற்றி கூட்டணியாக மாறும். கடந்த தேர்தலின்போது 37 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது ‘நாற்பதும் நமதே’ என்பதே எங்கள் கோ‌ஷம் ஆகும்.

    விஜயகாந்தை சந்தித்த பிறகு மு.க.ஸ்டாலின் கூறுகையில், இதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கூறி இருக்கிறார். அவர் பயத்தின் உச்சத்தில் உள்ளார். அதனால் தான் வாய் குழறுகிறது. ஸ்டாலினின் இன்றைய நிலை இதுதான்.

    எங்களை பொறுத்த வரை ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து விட்டோம். பலம் பொருந்திய சக்தி வாய்ந்த மெகா கூட்டணியாக உள்ளோம். இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வருவதற்கு ஆயத்தமாகி வருகிறது.

    அந்த கட்சிகள் அ.தி.மு.க. அணிக்கு போகக்கூடாது என மு.க.ஸ்டாலின் எல்லா முயற்சிகளையும் செய்கிறார். அது எடுபடப்போவதில்லை.



    எங்களது அணிக்கு தேசிய முற்போக்கு கூட்டணி என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறுவது பற்றி எனக்கு தெரியாது. அ.தி.மு.க. என்பது ஒரு மாபெரும் இயக்கம். ஆரம்பத்தில் இருந்து அ.தி.மு.க. தலைமையில் தான் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நான் பா.ஜனதா கட்சியை மட்டும் சொல்லவில்லை. இந்த கூட்டணிக்கு பெயர் கொடுப்பதை அ.தி.மு.க. கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterJayakumar #DMDK #BJP #Amitshah
    மக்கள் பிரச்சினைகளை கவனிக்காமல் ரஜினிகாந்த் முதல்வர் பதவிக்கு மட்டும் ஆசைப்படுவது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். #seeman #rajinikanth #parliamentelection

    சென்னை:

    சீமான், ஆர்.கே.சுரேஷ் இருவரும் இணைந்து அமீரா என்ற படத்தில் நடிக்கிறார்கள். மலையாள நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பூஜை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும் நடிகருமான சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் சீமான் பேசியதாவது:-

    “இது தமிழ் தலைப்பு அல்ல தான். ஆனால் இஸ்லாமிய பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை. அதனால் அமீரா என பெயர் வைத்துள்ளோம். படங்கள் இயக்கினாலும் அரசியல்வாதியாக இருந்தாலும் ஒரு நடிகனாகத் தான் நம்மை சட்டென அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

    திரையுலகத்தை நாங்கள் ஒரு வலிமைமிக்க கருவியாக பார்க்கிறோம். அது வெறும் பொழுதுபோக்கு சாதனம் அல்ல. நடிகர்கள் நாடாளக்கூடாது என்று சொல்லும் சீமான் திரைத் துறையில் இருந்துதானே வந்திருக்கிறார் என பலரும் கேட்கிறார்கள்.

    நான் எனது ரசிகர்களை சந்தித்து அவர்களை தொண்டர்களாக மாற்றி கட்சியைத் துவங்கவில்லை. என்னுடைய பிறப்பு, வளர்ப்பு, பாதை, பயணம் எல்லாமே வேறு. கமல் ரஜினி இவர்களெல்லாம் திரைப்படத்துறையில் இருந்து வருகிறார்கள்.

    தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கட்சி என்பது இப்போதுதான் இவர்களுக்கு தெரிந்ததா? இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ரஜினிகாந்திடம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களை ஏன் சென்று சந்திக்கவில்லை எனக் கேட்டால் நான் இன்னும் முழு நேர அரசியலுக்கு வரவில்லை என்கிறார்.

    அப்படியானால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்கு எதற்காக சென்றார்? எந்த நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக் கொள்ளமாட்டேன் ஆனால் சட்டமன்ற தேர்தலில் நின்று நேராக முதல்-அமைச்சர் நாற்காலியில் தான் போய் உட்காருவேன் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

    தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஓட்டு போடுங்கள் என்றுசொல்லும் ரஜினிகாந்த் அதை யார் தீர்ப்பார் என தன் பின்னால் இருப்பவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் அல்லவா? அப்படி செய்தால் தான் அவருக்கு பெயர் வழிகாட்டி. அவருக்கு பெயர்தான் தலைவன்.


    உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்துவிட்டுப் போங்கள் என்று சொல்வதற்கு ஒரு தலைவன் தேவை இல்லை. நடுநிலை வகிக்கிறேன் என இப்படிக் கூறுவது ஒரு மேம்போக்கான அறிவிப்பு.

    அதைத்தான் நாம் விமர்சிக்கிறோம். அடுத்ததாக நான் சிலம்பரசனை வைத்து எடுக்கப்போகிற படம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அதனால்தான் நான் சினிமாவை ஒரு துப்பாக்கி போல, ஒரு கோடாரி போல, ஒரு அரிவாள் போல பயன் படுத்துகிறேன்.

    நாங்களும் பேசாமல் இருந்து விடுகிறோம். தேர்தலில் தனியாக நிற்கிறீர்களே என்கிறார்கள். நான் தனியாக நிற்பதால் யாருக்கு நட்டம்? மற்ற கூட்டணிகளுக்கு நட்டம் என்றால் அதை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? இப்போது அவர்கள் அமைப்பது கூட்டணியா? இல்லை. வெறும் நோட்டணி.. சீட்டணி.. என்னையாவது விடுங்கள்.. அப்படி என்றால் மக்களுக்கு நம்பிக்கையானவர்கள் யார் தான் என சொல்லுங்கள்.. தனியாக நின்று விட்டுப் போகிறேன்’.

    இவ்வாறு அவர் பேசினார். #seeman #rajinikanth #parliamentelection

    காஞ்சிபுரத்தில் மார்ச் 1-ந்தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் மோடி மற்றும் கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்று பேசுகிறார்கள். #PMModi #ADMK #BJP
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வர உள்ளதால் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உள்ளார்.

    மாநிலம் வாரியாக சென்று அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. என்றாலும் தொகுதி பங்கீட்டுக்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

    கடந்த மாதம் 27-ந்தேதி மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய மோடி அப்போது தேர்தல் பிரசார கூட்டத்திலும் பேசினார். இதைத் தொடர்ந்து இந்த மாதம் (பிப்ரவரி) தமிழ்நாட்டில் 3 நாட்கள் பிரசாரம் செய்ய மோடி திட்டமிட்டு இருந்தார். ஆனால் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக மோடியின் தமிழக சுற்றுப்பயணத்தில் மாற்றம் ஏற்பட்டது.

    கடந்த 10-ந்தேதி பிரதமர் மோடி 2-வது முறையாக தமிழகம் வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அன்று அவர் திருப்பூரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசி ஆதரவு திரட்டினார். அன்றைய தினம் புதிய நலத்திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார்.

    இதைத் தொடர்ந்து பிப்ரவரி 17-ந்தேதி மீண்டும் கன்னியாகுமரிக்கு வந்து பிரதமர் பிரசாரம் செய்வார் என்று தகவல்கள் வெளியானது. பிறகு கன்னியாகுமரி கூட்டம் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருவது உறுதி செய்யப்பட்டது.

    கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பேசும் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன.

    மார்ச் 1-ந்தேதி கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு தமிழகத்தில் இருந்து புறப்பட்டு சென்று விடுவதாக பயண திட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தற்போது அதில் சற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி கூட்டத்தில் பேசி முடித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடியை காஞ்சிபுரத்துக்கு அழைத்து வர அ.தி.மு.க.-பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாவிட்டாலும் மோடியின் காஞ்சிபுரம் வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.


    மோடி காஞ்சிபுரம் வருவதை பா.ஜனதா மூத்த தலைவர்களில் சிலர் இன்று காலை உறுதிப்படுத்தினார்கள்.

    பிரதமர் மோடியின் காஞ்சிபுரம் வருகைக்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பொறுப்பேற்று செய்ய தொடங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. மோடி பேசும் கூட்டத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் பங்கேற்று பேச உள்ளனர்.

    அதுமட்டுமின்றி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களையும் ஒரே மேடையில் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக எந்தெந்த கட்சி சார்பில் யார்-யார் பேசுவார்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    மார்ச் 1-ந்தேதிக்கு இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீட்டை அதற்குள் முடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இன்னும் ஓரிரு தினங்களில் அதில் முடிவு எட்டப்பட்டு விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகள் விவரம் தெரிய வரும்.

    இதையடுத்து அ.தி.மு.க- பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கப்பட்டால் அந்த வேட்பாளர்களையும் காஞ்சிபுரத்தில் நடக்கும் கூட்டத்தில் மேடை ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பிரதமர் மோடி மற்றும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் காஞ்சிபுரம் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. #PMModi #ADMK #BJP
    மீண்டும் பிரதமர் வேட்பாளர் மோடி என்றால் பாஜக படுதோல்வி அடைந்து விடும் என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார். #CMNarayanasamy #BJP

    தூத்துக்குடி:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவரை மாவட்ட தலைவர் முரளிதரன் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. உடனான அ.தி.மு.க. கூட்டணி என்பது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பா.ஜ.க.வால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. பா.ஜ.க. பலமுறை அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் ஜெயலலிதா அவர்களை தூக்கி எறிந்தார். மேலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்றார். ஆனால் தற்போதுள்ள அ.தி.மு.க. இப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

    தமிழகத்தை மட்டும் அல்லாமல் புதுச்சேரியையும் மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்திற்கு நீட் தேர்வு கொண்டு வந்தது, ஜல்லிக்கட்டுக்கு தடை செய்தது, மீனவர் பிரச்சனைகள் தீர்க்காதது, தமிழகத்திற்கு முறையாக கிடைக்க வேண்டிய கஜாபுயல் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு கிடைக்க கூடிய நிதியை தடுத்து நிறுத்தியது. எனவே அ.தி.மு.க. அவர்களுடன் கூட்டணி சேர்ந்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி.

     


    அ.தி.மு.க.வினர் மீண்டும் பிரதமர் வேட்பாளராக மோடியை கொண்டு வருவோம் என்று தெரிவிக்கின்றனர். அதை தான் நாங்களும் விரும்புகின்றோம். ஏனென்றால் அப்போதுதான் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடையும். இதன் மூலம் அ.தி.மு.க.வும் அவர்களுடன் சேர்ந்து கடலுக்கு சென்றுவிடுவார்கள்

    இவ்வாறு முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள் முரளிதரன், சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர். #CMNarayanasamy  #BJP

    அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும் 2 நாளில் முடிவு வெளியாகும் என்று தெரிகிறது. #parliamentelection #admk #vijayakanth #bjp

    சென்னை:

    விஜயகாந்த் கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கிய தே.மு.தி.க. இதுவரை 5 பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்ன என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.

    தமிழக அரசியலில் மிக குறுகிய காலத்தில் 10 சதவீத வாக்கு வங்கிகளை பெற்ற கட்சி என்ற சிறப்பு தே.மு.தி.க.வுக்கு உண்டு. தமிழக சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. பிரித்த வாக்குகள் ஏதாவது ஒரு வகையில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் மாறி மாறி வெற்றி-தோல்வியை கொடுத்துள்ளன.

    இதன் காரணமாக தே.மு. தி.க. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. கடந்த 2 தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட தே.மு.தி.க.வுக்கு வாக்கு சதவீதமும் குறைந்து விட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

    2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க.வுக்கு 10 சதவீத வாக்குகள் இருந்தது. ஆனால் அதன் பிறகு 2011, 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தே.மு. தி.க.வின் வாக்கு சதவீதம் குறைந்து போனது.

    குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு ஏற்கனவே இருந்த தொண்டர்களில் பாதி பேர்தான் வாக்களித்தனர். தற்போது அந்த கட்சிக்கு 3 முதல் 5 சதவீத வாக்குகளே இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    தே.மு.தி.க.வுக்கு வாக்கு சதவீதம் குறைந்து விட்டாலும் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக அது இருப்பதாக கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டுதான் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களாக தே.மு.தி.க. தலைவர்களுடன் பேசி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வேண்டும் என்று முதலில் காய்களை நகர்த்தியது பா.ஜனதா தலைவர்கள்தான். எனவே டெல்லி பா.ஜனதா தலைவர்களிடம் தே.மு.தி.க. பேச்சு நடத்தியது. ஆனால் அதில் சுமூக முடிவுகள் எட்டப்படவில்லை.

    இதையடுத்து தே.மு.தி.க.வை வழிக்கு கொண்டு வரும் முயற்சிகளில் அ.தி. மு.க. ஈடுபட்டது. ஆனால் 7 முதல் 9 தொகுதிகள் வரை தே.மு.தி.க. கேட்டதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி உருவானது.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று விஜயகாந்தை சந்தித்து பேசினார். இதனால் தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே 40 தொகுதிகளிலும் விருப்ப மனுக்கள் வாங்குவதற்கு தே.மு.தி.க. சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தே.மு.தி.க. வின் நிலைப்பாட்டில் மாற்றம் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் தே.மு.தி.க. எந்த அணியில் சேரும் என்பது நேற்று இரவு வரை மதில்மேல் பூனையாக இருந்தது. ஆனால் இன்று காலை இது குறித்து சில தெளிவான தகவல்கள் தெரியவந்தன.

    தி.மு.க. மூத்த தலைவர் ஒருவரிடம் தே.மு.தி.க.வுக்கு தி.மு.க. அணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கேட்டபோது அவர் மாறுபட்ட தகவலை தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், “தி.மு.க. கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்து விட்டன. 40 தொகுதிகளிலும் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை நாங்கள் தீர்மானித்து விட்டோம். இனி எங்கள் அணியில் தே.மு.தி.க. இடம் பெற வாய்ப்பு இல்லை” என்றார்.

    தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் சிலர் இதுபற்றி கூறுகையில், “தி.மு.க. கூட்டணியில் சேர மாட்டோம். டி.டி.வி.தினகரன் பக்கம் போகும் பேச்சுக்கே இடமில்லை. எங்களது பலம் எங்களுக்கு தெரியும். விரைவில் எங்களது முடிவை அறிவிப்போம்” என்றனர்.


    இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர்களுடன் அ.தி.மு.க. தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவும் தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேசியது. இன்று காலையிலும் அந்த பேச்சு வார்த்தை நீடித்தது.

    அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே தொகுதிகள் எண்ணிக்கை மட்டுமே இழுபறியாக இல்லை. எந்தெந்த தொகுதிகள் என்பதிலும் இழுபறி நீடித்தப்படி உள்ளது. அதுபோல பா.ஜனதா தரப்பில் இருந்தும் சில உறுதி மொழிகளை தே.மு.தி.க. எதிர்பார்க்கிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் வரும் பட்சத்தில் தாங்கள் விரும்பும் தொகுதிகளை கண்டிப்பாக தந்தே தீர வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர்கள் பிடிவாதமாக உள்ளனர். எனவே பேச்சு வார்த்தை ஓரிரு தினங்கள் நீடிக்கும் என்றே கூறப்படுகிறது.

    இரு தரப்பினரும் விட்டு கொடுத்தால்தான் அ.தி.மு.க. அணியில் சுமூகமாக தே.மு.தி.க. இடம் பெறும் என்று கூறப்படுகிறது. எனவே அ.தி.மு.க- தே.மு.தி.க. இடையே எப்போது தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படும் என்பது இழுபறியாகவே உள்ளது.

    2 நாளில் இதில் என்ன முடிவு ஏற்படும் என்பது தெரிந்து விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #parliamentelection #admk #vijayakanth #bjp

    அ.தி.மு.க. தலைமையிலான அணி என்பதை விட தேசிய ஜனநாயக கூட்டணி என்றே அழைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு அமித் ஷா ஆலோசனை வழங்கினார். #BJP #Amitshah #ADMK #OPS
    மதுரை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தேசிய கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாநிலம் வாரியாக கூட்டணி அமைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

    தமிழகத்திலும் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் எந்ததெந்த கட்சிகள் போட்டியிடுவது என்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. அணியில் தற்போது பா.ஜனதா, பா.ம.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளது. சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் நேற்று மதுரை வந்த பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவை மதுரை விமான நிலையத்தில் அ.தி.மு.க. ஒருங் கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். 2 முறை நடைபெற்ற சந்திப்பின்போது கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் எத்தகைய அணுகுமுறைகளை கையாள வேண்டும் என்ற நிபந்தனைகளையும் அமித்ஷா ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டணியை அ.தி.மு.க. தலைமையிலான அணி என்று அழைக்கக்கூடாது என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி என்றே அழைக்க வேண்டும் என்று அமித்ஷா தெரிவித்தார். தேர்தல் பணிகளை மேற்கொள்ளும்போது அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி என்றே அழைக்க வேண்டும் என்றார்.

    வருகிற 1-ந்தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பேரணியில் முதல்-அமைச்சருடன் கூட்டணி தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.



    அப்போது பன்னீர்செல்வம் அன்றைய தினம் தனக்கு கட்சி நிகழ்ச்சிகள் இருப்பதாகவும் உள்ளூர் நிர்வாகிகள் பா.ஜனதா பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று அமித்ஷாவிடம் கூறினார்.

    இந்த ஆலோசனையின் போது பா.ஜனதா மேலிட பார்வையாளர் முரளிதர ராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர். சுமார் 1 மணி நேரம் நடத்தப்பட்ட ஆலோசனையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அமித் ஷா, ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு தொடர்பாக மாநில பா.ஜனதா முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பா.ஜனதா தலைமை தாங்குகிறது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் செயல்படும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை வகிக்கிறது.

    வருகிற 1-ந்தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்பாடு செய்துள்ள பேரணியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமித்ஷாவை சந்தித்து பேசியது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று தெரிவித்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஓ.பன்னீர்செல்வத்திடம் அமித்ஷா கூறிய யோசனைகள் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் இந்த சந்திப்பு வைரலாகி விமர்சனங்கள் எழுந்துள்ளளன. #BJP #Amitshah #ADMK #OPS
    திருநெல்வேலி மாவட்டம், வரகனூர் கிராமத்தில் பட்டாசு தீ விபத்தில் பலியான 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். #edappadipalanisamy #crackersfire

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டம், வரகனூர் கிராமத்தில் தனியார் பட்டாசு தொழிற் சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் வருத்தம் அடைந்தேன். இவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளேன்.

    உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் எதிரிகளை ஓட, ஓட விரட்டி அடிக்கின்ற தேர்தலாக அமைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Edappadipalaniswami #ADMK #PMK
    திண்டிவனம்:

    அ.தி.மு.க.-பா.ம.க. இடையே கூட்டணி ஒப்பந்தமானது. இதையொட்டி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று இரவு விருந்து அளித்தார்.

    பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவிலேயே நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., பா.ஜனதா கட்சி, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை கூட்டணியில் உள்ளது. இன்னும் பல கட்சிகள் நமது கூட்டணியில் சேர இருக்கின்றன.

    ஜெயலலிதா இருந்த காலத்தில், அவர் நிறுத்தியிருந்த வேட்பாளர்களை எப்படி வெற்றிபெறச்செய்தீர்களோ, அதுபோல நாம் நின்றாலும் சரி, நமது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நின்றாலும் சரி, இரவு பகல் பாராமல் உழைத்து அவர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    அவ்வாறு வெற்றி பெறச்செய்தால் தமிழகத்தில் பல திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் இருந்து நிதி பெற வலுவாக இருக்கும். தமிழகம் வளமாக இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றாலும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர்கள் வெற்றிபெற்று பாராளுமன்றத்துக்கு சென்றால் நமது தேவையை பூர்த்தி செய்ய முடியும். தமிழகத்தில் தேவையான திட்டங்களை பாராளுமன்றத்தில் கேட்டு வளமான தமிழகத்தை உருவாக்கலாம்.

    எனவே நமது கட்சி வேட்பாளர், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும். இந்த தேர்தல் மூலமாக எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


    ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நமது இயக்கத்தின் மீது எத்தனை பேர் பழிசுமத்துகிறார்கள் என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்ட தொடங்கியபோது எத்தனை வழக்குகள் தொடர்ந்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

    வஞ்சக குணம்படைத்த, தீய சக்தி கொண்ட தி.மு.க.வை வேறோடு அகற்ற வேண்டும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடக்கின்ற முதல் பாராளுமன்ற பொதுத்தேர்தல். இது எதிரிகளை ஓட, ஓட விரட்டி அடிக்கின்ற தேர்தலாக அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த தேர்தல் மூலமாக ஜெயலலிதா செய்த நன்மைகளை கிராமங்கள், பட்டிதொட்டிகளில் எடுத்துக்கூற வேண்டும். ஜெயலலிதா கண்ட கனவை நினைவாக்குகின்ற ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமைந்துள்ளது. இதனை தமிழகத்தில் நிரூபித்து காட்ட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #Edappadipalaniswami #ADMK #PMK
    திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி. ராஜேந்திரன்(62) மரணமடைந்தார். #RajendranMP #ADMK
    திண்டிவனம்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு விருந்து அளிக்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று இரவு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த விருந்து நிகழ்ச்சி திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்னைக்கு சென்று விட்டனர்.

    ராஜேந்திரன் எம்.பி. திண்டிவனத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை 6 மணிக்கு கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். காரை அருமைச்செல்வம் என்பவர் ஓட்டினார்.

    ராஜேந்திரன் எம்.பி. யுடன் அவரது உறவினர் தமிழ்ச்செல்வன் சென்றார். திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை திண்டிவனம் பகுதியில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ராஜேந்திரன் எம்.பி. கார் திண்டிவனம் போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பனி மூட்டம் காரணமாக சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த ராஜேந்திரன் எம்.பி., கார் டிரைவர் அருமைச்செல்வம், தமிழ்ச் செல்வன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். திண்டிவனம் போலீசார் அவர்களை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ராஜேந்திரன் எம்.பி. பரிதாபமாக இறந்தார்.

    காயம் அடைந்த அருமைச் செல்வம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் திண்டிவனம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்தில் இறந்த ராஜேந்திரன் எம்.பி.யின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ராஜேந்திரன் எம்.பி. இறந்த தகவல் அறிந்ததும் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

    ராஜேந்திரன் எம்.பி.யின் சொந்த ஊர் திண்டிவனம் அருகே உள்ள ஆதனப்பட்டு. சாந்தா என்ற மனைவியும், விக்னேஷ்வரன் என்ற மகனும், திவ்யா, தீபிகா ஆகிய மகள்களும் உள்ளனர்.



    ராஜேந்திரன் எம்.பி. மரணத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது அனுதாபசெய்தி வருமாறு:-

    விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ராஜேந்திரன் இன்று அதிகாலை சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனையும், பெரும் துயரமும் அடைந்தேன்.

    எஸ். ராஜேந்திரன் கட்சித் தலைமையின் மீது பற்றும், பாசமும், கழக கொள்கைகளின் மீது உறுதியும் கொண்டவர். பல ஆண்டுகளாக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் நலன்களுக்காக பாடுபட்டவர். அனைவரிடமும் விருப்பு, வெறுப்பின்றி அன்புடன் பழகும் பண்பாளர். இவர் கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர். தொகுதி மக்களின் பேரன்பைப் பெற்றவர். ராஜேந்திரனின் இழப்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும்.

    ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RajendranMP #ADMK #EdappadiPalaniswami
    ஸ்டாலின் எப்போதும் தளபதி தான், ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan #MKStalin
    ஈரோடு:

    கவுந்தப்பாடியில் ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா- அ.தி.மு.க.வின் 2 ஆண்டு சாதனை விளக்கம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் முக்கியம். பணியாற்றும் தொண்டர்களுக்கு விரைவில் எதிர் காலம் காத்திருக்கிறது. தொண்டர்களில் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் பல திட்டங்கள் வைத்துள்ளார்.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. அது முடிந்த பின்பு கட்சி தொண்டர்களில் குறைகளை அவர் தீர்ப்பார். பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தர்மயுத்தத்தில் எப்படி ஸ்ரீகிருஷ்ணரிடம் ஸ்ரீசக்கரம் இருந்ததோ அதே போல் முதல்வர் மற்றும் துணை முதல்வரும் தேர்தல் வியூகம் அமைத்துள்ளார்கள்.

    40 தொகுதியிலும் ஜெயிப்பது நாம் தான். ஸ்டாலின் எப்போதும் தளபதி தான் ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது. அந்த ராசியே ஸ்டாலினுக்கு இல்லை. கட்சி தொண்டர்கள் அயராத உழைப்பை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். காழ்ப்புணர்ச்சியை மறந்து உழைப்போம் வெற்றி பெறுவோம் என்று கூறினார். #Sengottaiyan #MKStalin
    நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஒரு குழந்தை என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். #kpmunusamy #kamal #admk

    திருவாரூர்:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று (22-ந் தேதி) திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 120 ஜோடி மணமக்களின் திருமண விழா நடைபெற்றது.

    விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் உணவு மற்றும் நுகர் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான இரா.காமராஜ் தலைமை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் நாகை கே.கோபால் தஞ்சாவூர் கு.பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருமண நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், தமிழக அமைச்சர்களான திண்டுக்கல் சி.சீனிவாசன், இரா.துரைக்கண்ணு, வெல்ல மண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மணமக்களுக்கு தங்கத்தாலி, பட்டுப்புடவை, வேட்டி உள்ளிட்ட 70 வகையான திருமண சீர்வரிசை பொருட்கள் மாவட்ட அ.தி.மு.க.வின் சார்பில் வழங்கப்பட்டது.

    அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருகிறது. விரைவில் யார்- யார் எங்களுடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்.

    தேர்தல் சமயத்தில் கொள்கை அடிப்படையிலும், வெற்றி நோக்கத்தின் அடிப்படையிலும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும். அ.தி.மு.க , பா.ஜனதா இடையே கொள்கை வேறுபாடு இருந்தாலும் மக்கள் நலன் கருதியும், வெற்றி நோக்கம் கருதியும் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா, பா.ம.க. வுடன் எண்ணிக்கை அடிப்படையிலான கூட்டணியை வைத்துள்ளோம்.

    நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஒரு குழந்தை. அவர் பேசுவதெற்கெல்லாம் பெரியவர்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.


    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூருக்கு வந்ததும் தினகரனையும் அவரது குடும்பத்தாரையும் எண்ணிப் பார்த்தேன்.

    பிரதமர் நரேந்திர மோடி தினகரனின் குடும்பத்தார் பாக்கெட்டில் இருப்பது போல் நாடகமாடினார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வரமாட்டார்கள் என்று தி.மு.க.வினர் சொன்னார்கள். ஆனால் எங்களுடன் பா.ம.க. வந்த விட்டது. இப்போது காசு கொடுத்து கூட்டணி வைத்ததாக கூறி வருகிறார்கள்.

    தி.மு.க.விடம் காசு இல்லையா. ஆசியாவிலேயே பணக்கார குடும்பம் கருணாநிதி குடும்பம் தான். நீங்களும் காசை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டியது தானே?. இது காசுக்காக சேர்ந்த கூட்டணி அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார். #kpmunusamy #kamal #admk 

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரசாகமாக உள்ளது என்று வைத்திலிங்கம் எம்பி கூறியுள்ளார். #parliamentelection #vaithilingammp #admk

    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

    பட்டிமன்றத்திற்கு அ.தி.மு.க. கொள்கைபரப்பு துணை செயலாளரும், தேர்தல் பிரசார குழு பொறுப்பாளருமான வைகைசெல்வன் நடுவராக பங்கேற்றார். அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான வைத்திலிங்கம் எம்.பி. பட்டிமன்றத்தை தொடங்கி வைத்தார். விழாவில் கு.பரசுராமன் எம்.பி மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    1967-ம் ஆண்டு முரண்பட்ட கொள்கை படைத்த அண்ணாவும், ராஜாஜியும் கூட்டணி சேர்ந்தனர். அதற்கு முன்பு வரை கருத்து வேறுபாடுகளால் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். அவர்கள் கூட்டணி சேர்ந்ததால் அப்போது யாரும் கடுமையான வார்த்தைகளை உச்சரிக்கவில்லை. கடுமையாக விமர்சனம் செய்த இந்திராகாந்தியை 1980-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நேருவின் மகளே வா. நிலையான ஆட்சி தா? என அழைத்து கூட்டணி சேர்ந்தார் கருணாநிதி.


    அப்போது கருணாநிதியை யாரும் விமர்சனம் செய்யவில்லை. ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த டாக்டர் ராமதாசுவை மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது. நிறைய மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. பேச்சுவார்த்தை முடிந்தவுடன் கூட்டணி குறித்து அறிவிப்போம். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரசாகமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #parliamentelection #vaithilingammp #admk

    ×