search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒதுக்கப்படும் தொகுதிகள் தொடர்பாக ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப் 24-ந்தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது. குறைந்தது 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.

    இதற்காக மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் 2 முறை பேசி உள்ளனர்.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கத்தின் விருந்தினர் மாளிகையில் 2 நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் மத்திய மந்திரி பியூஷ்கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். மீண்டும் பேசுவதற்காக நாளை மறுநாள் பியூஷ்கோயல் சென்னை வருகிறார்.

    இதேபோல் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இந்த 3 கட்சிகளும் அ.தி.மு.க.வில் அதிக தொகுதிகளை கேட்டு வருவதால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறியில் உள்ளது.

    ஜெயலலிதா இருக்கும் போது, கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தாலும் அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர் பட்டியலையும் முன் கூட்டியே அறிவிப்பார்.


    அதே பாணியை இப்போதும் செயல்படுத்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு 15 தொகுதிகளை விட்டுக் கொடுக்க உள்ளதால் 25 தொகுதிகளில் யார்-யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 20 பேர்களுக்கு ‘சீட்’ கிடைக்கும் என்றும் மேலும் 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றன.

    ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை முடிவு செய்து இறுதி செய்து விட வேண்டும் என்றும் மூத்த நிர்வாகிகள் முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நல்ல நாள் பார்த்து 25 தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகி கூறியதாவது:-

    ஜெயலலிதா இல்லாத நிலையில் அ.தி.மு.க. முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

    இந்த தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர்கள், இப்போதைய அமைச்சர்கள், அவர்களின் மகன்கள் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் ‘சீட்’ கேட்டுள்ளனர்.

    இதனால் கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக நிச்சயம் சிலர் போர்க்கொடி தூக்குவார்கள். இதை தவிர்க்க முன் கூட்டியே வேட்பாளர் பட்டியலை அறிவிக்க தயாராகி வருகிறோம்.

    ஜெயலலிதா இருந்தபோது வேட்பாளர்கள் தேர்வில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் இந்த தேர்தலிலும் பின்பற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #BJP #ParliamentElection
    தேர்தல் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து தான் வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #ADMK #MinisterJayakumar #BJP
    சென்னை:

    தென் சென்னை எம்.பி. ஜெயவர்தன் ஏற்பாட்டில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும். அ.தி.மு.க. கொள்கை என்பது தேர்தலில் மக்களை சந்தித்து அந்த தேர்தல் மூலம் மகத்தான வெற்றி பெற்று மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செய்வது தான். அதை எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இப்போது வரை செய்து வருகிறோம். இது எங்களது கொள்கை.

    எனவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை. ரஜினி அவரது கொள்கையை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

    கேள்வி:- பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எந்த அளவில் உள்ளது?

    பதில்:- இது தேர்தல் காலம். இந்த சமயத்தில் பேச்சுவார்த்தைகள், குழு, தேர்தல் அறிக்கை குழு கூட்டணி குறித்து பேசும் குழு, தேர்தல் அறிக்கை குழு என அமைக்கப்பட்டுள்ளது.

    எங்கள் கட்சியில் அவரவர் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே கூட்டணி என்று வரும் போது நிச்சயம் வெளியில் தெரியவரும். தலைவர்கள் சந்திப்பை வைத்து கூட்டணியை உறுதிப்படுத்த முடியாது.

    கட்சித் தலைமையால் வெளியிடப்படுகிற அறிவிப்பு தான் உறுதியான அறிவிப்பாக எடுத்து கொள்ள முடியும். அது நல்ல அறிவிப்பாக நிச்சயமாக இருக்கும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் தான் மெகா கூட்டணி நிச்சயம் அமையும்.

    எனவே தேர்தலில் அ.தி. மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் தான் போட்டியே தவிர வேறு எவரும் போட்டி கிடையாது.



    கே:- பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை 12 மணி வரை நடந்துள்ளதே?

    ப:- எங்கள் தரப்பில் பேசி இருக்கலாம். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து தான் வரும். அதுவரை பொறுத்திருங்கள்.

    கே:- தமிழகத்தில் பா. ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

    ப:- எங்களைப் பற்றி கேளுங்கள் பதில் சொல்கிறேன். இந்த கேள்விக்கு நீங்கள் பா.ஜனதாவினரிடம் தான் பதில் கேட்க வேண்டும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை மக்களை எதிர் கொண்டு மகத்தான வெற்றி பெறும்.

    கே:- தேர்தலில் எதை மையப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட போகிறீர்கள்?

    ப:- எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. மாநிலத்துக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் கிடைக்க வேண்டும். இதற்காக முழு அளவுக்கு எங்கள் குரல் எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterJayakumar #BJP
    தமிழக அரசு தற்போது மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது ஒருவித லஞ்சம் தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். #NaamThamizharKatchi #Seeman
    தூத்துக்குடி:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் உள்பட 40 பேர் இறந்து உள்ளனர். இது மன்னிக்க முடியாத செயல். அவர்களின் தேவை, நோக்கம் என்னவென்று தெரியவில்லை. 350 கிலோ வெடிமருந்தை ஏற்றி கொண்டு அந்த வாகனம் வரும் வரை சோதனை சாவடிகள் இருந்ததா, இல்லையா? உளவு கட்டமைப்பு நமது நாட்டில் இருக்கிறதா, இல்லையா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நாட்டில் மக்களை தான் அச்சுறுத்தி வைத்து உள்ளனர். ஆனால் ராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லை.



    தமிழக அரசு தற்போது மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து உள்ளது. இது ஒருவித லஞ்சம் தான். விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுக்கும் நிலை தான் இருக்கிறது என்றால், என் தேசம் எவ்வளவு பின்தங்கி உள்ளது என்று பார்க்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படுவார்கள். தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை.

    ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜனதா உள்ளது. ஆட்சியையே அவர்கள் தான் நடத்துகிறார்கள். அவர்கள் தனித்து தேர்தலை சந்திக்க மாட்டார்கள். தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் அவர்கள் மோசமான தோல்வியை சந்திப்பார்கள். எல்லா கட்சிகளும் வெற்றியை நோக்கி தான் செல்கிறார்கள். நாங்கள் தற்காலிக வெற்றிக்காக நிரந்தர தோல்வியை ஏற்க மறுக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #NaamThamizharKatchi #Seeman
    ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவு தோல்வி அடைந்ததை எடுத்து காட்டுவதாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார். #PulwamaAttack #Thirumavalavan
    மதுரை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவு தோல்வி அடைந்ததை எடுத்து காட்டுவதாக உள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் பயங்கரவாதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியிருப்பது புலனாய்வு களத்தில் மத்திய அரசு பலவீனமாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

    எனவே மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழுவை ஏற்படுத்தி பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ள மர்மங்கள் குறித்து ஆராய வேண்டும்.



    ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி தலைமையிலான அரசு பதவியை தக்க வைப்பதற்காக போராடி வருகிறது. இதனால் மோடிக்கு கட்டுப்பட்ட அரசாக அச்சத்தில் உறைந்திருக்கிறது.

    மத்திய அரசின் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு தமிழக அரசு சுதந்திரமாக செயல்படாதது வேதனை தருகிறது.

    பாரதிய ஜனதாவுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அ.தி.மு.க -பா.ஜனதா கூட்டணி தி.மு.க.வுக்கு எதிரான வலுவான கூட்டணி அல்ல.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #PulwamaAttack #Thirumavalavan
    ஜெயலலிதா இறப்புக்கு காரணமான தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். #Jayalalithaa #ThambiDurai #DMK
    கரூர்:

    கரூர் அருகே உள்ள சணப்பிரட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு கீதா மணிவண்ணன். எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு இருக்கிறது. கரூர் தொகுதியில் தான் எம்.பி.யாக இருக்கிறேன். எனவே மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடவே விருப்ப மனு கொடுத்துள்ளேன். அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சி தான் நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும். அந்த சூழல் தி.மு.க.வுக்கு இல்லை.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தமிழகத்தில் ஒரு இடத்திலும் வெல்ல முடியாது. மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் சுற்றுப்பயணம் செய்கிறாரே தவிர, பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அல்ல. யார் இந்த நாட்டின் பிரதமர் என சொல்லும் அளவுக்கு தி.மு.க. இருப்பதாக தெரியவில்லை.



    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட காரணமே தி.மு.க. தான். அவர்கள் தொடர்ந்த வழக்கினால்தான் மனஉளைச்சலுக்கு ஆளாகி உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறப்புக்கு காரணமான தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #ThambiDurai #DMK
    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் பணம் நிச்சயமாக ஏழை மக்களுக்கு போய் சேராது என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். #Congress #Elangovan
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள மேட்டூரில் இ.காங்கிரஸ் சார்பில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

    இதில் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தீவிரவாதத்தை ஒழிப்போம் என ஆட்சிக்கு வந்த பா.ஜனதாவினர் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆனால் இந்த பணம் ஏழை மக்களுக்கு போய் சேராது.

    அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கு வழங்க பயனாளிகள் பட்டியல் தயாராவதாக கூறப்படுகிறது.

    100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ஏழை தொழிலாளர்களுக்கு கூட சரியான கூலி கொடுக்காமல் குறைந்த கூலியை கொடுக்கிறார்கள்.



    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனியாக போட்டியிட்டால் டெபாசீட் வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் பா.ஜனதாவுடன் சேர்ந்து போட்டியிட்டால் டெபாசீட் கூட கிடைக்காது.

    தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு என வாக்கு வங்கியே கிடையாது. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும் டெல்லி சென்றுள்ளார். கூட்டணி குறித்து நல்ல தகவல் வெளியாகும்.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #Elangovan
    தமிழகம் - புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #ADMK #BJP #ParliamentElection
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. - பா.ஜனதா இடையே கூட்டணி உருவாகி உள்ளது.

    ரகசியமாக நடந்து வந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போது அதிகாரப்பூர்வமாக நடந்து வருகிறது.

    பா.ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேற்று முன்தினம் சென்னை வந்து அ.தி.மு.க. தேர்தல் குழுவுடன் அதிகாரப்பூர்வ பேச்சு நடத்தினார்.

    பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரியுடன் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., கே.பி.முனுசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.



    3 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு மற்றும் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்ப்பது அந்த கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பற்றி முடிவு செய்யப்பட்டது. யார்- யாருக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் மட்டும் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதுவை என்.ஆர்.காங்கிரஸ், த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.

    தமிழகம் - புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாக தெரிகிறது. அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கும், பா.ஜனதா தனது கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும்.

    அ.தி.மு.க. தனது தொகுதிகளில் த.மா.கா., என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிக்கு தலா 1 தொகுதியை விட்டுக் கொடுத்தது போக 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    பா.ஜனதா தனது தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 4 தொகுதிகளும், தே.மு.தி. க.வுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்தது போக மீதம் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தொகுதி பங்கீடுகள் பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே உள்ளது. இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை முடிவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருகட்சி தலைவர்களும் இணைந்து வெளியிடுவார்கள்.

    பியூஷ்கோயல் வருகிற திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை மீண்டும் சென்னை வந்து இறுதிக்கட்ட பேச்சு நடத்துகிறார். அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

    பா.ஜனதாவுக்கு தென் சென்னை, கோவை, கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி, பெரம்பலூர் ஆகிய 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், மீதம் உள்ள 2 தொகுதிகள் திருப்பூர், பொள்ளாச்சியா? அல்லது நெல்லை, ராமநாதபுரமா? என்பதில் மட்டும் இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

    பா.ம.க.வுக்கு அரக்கோணம், ஆரணி, தர்மபுரி தவிர சிதம்பரம் அல்லது விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

    என்.ஆர்.காங்கிரசுக்கு புதுவையும், தே.மு.தி.க.வுக்கு மத்திய சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் தே.மு.தி.க. கூடுதலாக சேலம் தொகுதியையும் கேட்கிறது. அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. மறுத்து விட்டது.

    வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாசி பவுர்ணமி நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் தொகுதி பங்கீடு விவகாரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #ADMK #BJP #ParliamentElection
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #ADMK #ThangaTamilselvan #BJP

    தேனி:

    தேனியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து எங்களுக்கு அடிக்கடி அழைப்பு வருகிறது. எங்களுடன் வந்து இணைந்து பணியாற்றுமாறு அமைச்சர்கள் பேசி வருகின்றனர். உண்மையில் அ.தி.முக.வை விட அ.ம.மு.க.வுக்குத்தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் உள்ளது. எனவே அவர்கள்தான் எங்களுடன் வந்து இணைய வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மாநில கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைக்கும். ஏனெனில் தேசிய கட்சிகளுக்கு மாநில நலனில் அக்கறை கிடையாது. மாநிலத்தின் உரிமைகளான முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, ஸ்டெர்லைட், நீட் தேர்வு, கச்சத்தீவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி அமைத்ததை நாங்கள் வரவேற்கிறோம். ஏனென்றால் இந்த 2 கட்சிகளையும் மக்கள் தூக்கி எறிவார்கள். தேர்தலில் இக்கூட்டணி படுதோல்வி அடைவது உறுதி.

    தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். ஆனால் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThangaTamilselvan #BJP

    அ.தி.மு.க.வை விட்டால் பா.ஜ.க.வை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #ADMK #Congress #Thirunavukkarasar

    அறந்தாங்கி:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அறந்தாங்கியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அனுமதி அளிக்கும் தொகுதியில் தான் போட்டியிடுவேன். அந்த தொகுதி ராமநாதபுரமாகவும், திருச்சியாகவும், சென்னையாகவும் இருக்கலாம். பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுவது, அனைத்து அரசுகளும் வாடிக்கையாக செய்யக் கூடிய ஒன்று தான்.

    ஆனால் கடந்த 4½ஆண்டுகளாக பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாமல், தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிதி உதவி வழங்குவது தேர்தலை மனதில் வைத்து தான். ரூ.15 லட்சம் தருவதாக மக்களை ஏமாற்றிய மோடி, தற்போது இந்த தேர்தலில் மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் விவசாயிகளுக்காக கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

    அ.தி.மு.க. பிளவு பட்டதால், தற்போது பெரும் பான்மையை இழந்துள்ள அரசைக் காப்பாற்றிக்கொள்ளவும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும், தமிழக அரசு பா.ஜ.க.வின் பினாமி அரசு போல செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க.வின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்தே அக்கட்சியை நடக்க உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியில் அ.தி.மு.க. சேர்க்கிறது.

    தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.விற்கும் கெட்ட பெயர் உள்ளதால், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தான் பலமான கூட்டணியாக உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சேராவிட்டால், அந்த கட்சியை யாருமே சேர்க்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #Congress  #Thirunavukkarasar

    அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். #DMDK #Vijayakanth #PremalathaVijayakanth
    ஆலந்தூர்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

    அவருடன் மனைவி பிரேமலதா, மகன் விஜய் பிரபாகரன் ஆகியோரும் சென்றனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நாட்களில் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறித்து பேச குழு ஒன்றையும் அறிவித்து இருந்தார்.

    அதன்படி துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையிலான குழுவினர் கூட்டணி பற்றி பேசி வருகிறார்கள். விஜயகாந்த் நாடு திரும்பிய பிறகு அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் விஜயகாந்த் இன்று அதிகாலை 1.15 மணிக்கு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.

    பிரான்சில் இருந்து விமானம் மூலம் வந்த அவர் உடனடியாக வீடு திரும்பவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஓய்வு அறையில் தங்கி இருந்தார். அவருடன் மனைவி பிரேமலதாவும் உடன் இருந்தார். மகன் விஜய பிரபாகர் மட்டும் வீட்டுக்கு சென்று விட்டார்.



    காலை 8.30 மணிக்கு விஜயகாந்த் வெளியில் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அவரை வரவேற்க மாவட்ட செயலாளர்கள் தலைமையில் தொண்டர்கள் விமான நிலையத்தில் அதிகாலையில் குவிந்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை.

    இதற்கிடையே விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் காலை 9.05 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தார். அவரை தொடர்ந்து மகன் விஜயபிரபாகர் 9.20 மணிக்கு விமான நிலையத்திற்குள் சென்றார்.

    காலை 11 மணி அளவில் மியாட் ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு டாக்டர், 3 நர்சுகள் அடங்கிய குழுவினர் விமான நிலையத்துக்குள் சென்றதாக தகவல் வெளியானது.

    அவர்கள் விஜயகாந்தின் உடல்நிலையை பரிசோதனை செய்ததாகவும். விமான பயணத்தினால் விஜயகாந்த் சோர்வடைந்து உள்ளதாகவும், அதற்காக சிகிச்சை அளித்ததாகவும் தெரிகிறது.

    விஜயகாந்த் 10 மணி நேரத்துக்கு மேலாக விமான நிலையத்தில் தங்கி இருந்தார். சுமார் 12.30 மணி அளவில் அவர் பேட்டரி கார் மூலம் வெளியே வந்தார். அவரைப் பார்த்து தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவராக இருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். #TamilisaiSoundararajan #EdappadiPalanisamy-
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதலமைச்சர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவராக இருக்கிறார் என பாராட்டு தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவால்களையும், சதிகளையும் கடந்து பல நல்ல திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி கொண்டு வந்துள்ளார் என புகழாரம் சூட்டியுள்ளார்.



    மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்து பல சோதனைகளை சாதனையாக்கி 3 ஆவது ஆண்டில் தொடரும் முதலமைச்சருக்கு எனது வாழ்த்துக்கள் என அவர் வாழ்த்தியுள்ளார். #TamilisaiSoundararajan #EdappadiPalanisamy
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமைக்கும் கூட்டணி ராஜ்ய கூட்டணி என்றும் தி.மு.க. அமைப்பதோ பூஜ்ய கூட்டணி என்றும் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியுள்ளார். #ADMK #RBUdhayakumar #DMK
    மதுரை:

    மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் மகாலில் இன்று ஜெயலலிதா பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட பேரவைச் செயலாளர் சரவணன் எம்.எல்.ஏ. வரவேற்றுப் பேசினார்.

    புறநகர் மாவட்ட பேரவைச் செயலாளர் தமிழரசன், மாநில பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், மாணிக்கம், நீதிபதி ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு நிலைக்குமா? ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்ற முடியுமா? என்று கேள்வி கேட்டவர்களுக்கு முதல்வரும், துணை முதல்வரும் பதிலடி கொடுத்துள்ளார்கள்.

    ஏளனம் பேசியவர்களை எல்லாம் ஏறெடுத்து பார்க்க வைத்துள்ளோம். அதற்கு காரணம் கர்வமில்லாத முதல்வரும், துணை முதல்வரும் தான்.

    ஜெயலலிதா காட்டிய அறவழியில் தொண்டர்களோடு இணைந்து அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. யாரும் பிறக்கும்போது தலைவர்களாக பிறக்கவில்லை. மக்கள் பணி மூலமும், பொதுப்பணி மூலமும் தலைவர்களாக முதல்வரும், துணை முதல்வரும் உயர்ந்திருக்கின்றனர்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின், டி.டி.வி. தினகரன் செய்யும் பொய் பிரசாரத்தை முறியடிப்பது அம்மா பேரவையின் நோக்கமாகும்.

    தாலிக்கு தங்கம், ரூ.50 ஆயிரம் நிதியுதவி என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் தற்போது அசாம் மாநிலத்திலும் கொண்டு வரப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலம் 11 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற உள்ளது.



    ஸ்டாலின் ஊர், ஊராக சென்று கிராம சபை கூட்டம் நடத்தி அ.தி.மு.க. குறித்து பொய் பிரசாரம் செய்கிறார். ஸ்டாலின் கிராம சபை கூட்டத்துக்கு கூட்டம் வரவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் முதியோர் ஓய்வூதியத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க. அரசு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

    கடுமையான நிதிச் சுமையிலும், பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கியவர்கள் முதல்வரும், துணை முதல்வரும் தான்.

    தமிழகத்தில் காவல் துறையை நவீனமாக்க ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் 60 லட்சம் குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முதல்வரும், துணை முதல்வரும் மதி நுட்பத்துடன் செயல்படுத்தி வழங்க உள்ளார்கள்.

    ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் சென்றால் அவர்கள் எப்படி மக்களிடம் வர முடியும்?

    ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்தியும், அவர்களை அரவணைத்து பட்ஜெட்டில் ஆசிரியர்களுக்கு ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் உதவாக்கரை பட்ஜெட் என கூறியுள்ளார். எல்லோரும் பட்ஜெட்டை வரவேற்றுள்ளனர்.

    இந்தியாவில் உள்ள 29 முதல் அமைச்சர்களிலேயே அதிக தூரம் பயணம் செய்து மக்களை சந்தித்து அதிக கோப்புகளில் கையெழுத்திட்டு திட்டங்களை செயல்படுத்தி வருபவர் நமது முதல்-அமைச்சர்.

    அம்மா அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளது. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க. அமைக்கும் கூட்டணி ராஜ்ய கூட்டணி. தி.மு.க. அமைப்பதோ பூஜ்ய கூட்டணி ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், அய்யப்பன், பகுதி செயலாளர்கள் முத்திருளாண்டி, மாரிச்சாமி, மாநில இணைச் செயலாளர்கள் இளங்கோவன், முகில், சதன் பிரபாகரன், ரமேஷ், ராஜசேகர், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், மார்க்கெட் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK #RBUdhayakumar #DMK
    ×