search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்குமார் என கல்வெட்டு வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    தேனி:

    தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதி செல்கிறது. இந்த நதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலயம் கட்டப்பட்டு வந்தது. ஆலயம் கட்டி முடித்து கும்பாபிஷேக பணிகள் நடந்த நிலையில் அதற்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ரவீந்திரநாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.

    இந்த படம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போட்டுள்ளதற்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


    தேனியில் பாராளுமன்ற வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அறிவிக்கப்பட்டதில் இருந்து சர்ச்சைகள் வெடித்த வண்ணம் இருந்தது. வாக்குக்கு பணம் அளிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த போதும் மீண்டும் 2 மையங்களில் மறு வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டது. 2 மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவுக்காக கோவை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 70 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையாக கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் பெயர் இடம் பெற்றுள்ளது. எதிர்கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறப்போவதில்லை என்று தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

    கரூர்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தே.மு.தி.மு.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈசநத்தம் மூன்றுரோடு, அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னர், சின்னதாராபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொள்கை பிடிப்பில்லாதவர் தான் தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிற்கிறார். சுயநலம் கருதி பச்சோந்தியாய் இருப்பவர்களை கண்டறிந்து தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அரவக்குறிச்சி தொகுதியில் நீண்ட நாட்களாக எம்.எல்.ஏ. இல்லாத சூழல் இருக்கிறது. இதனால் தொகுதிக்கு மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.

    எனவே தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனுக்கு மக்கள் ஆதரவினை தர வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்த வரையில் ஒரு வாக்குறுதி சொன்னால் சொன்னது தான். அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. இதனால் மக்களின் எழுச்சியால் தமிழகம்-புதுச்சேரி உள்பட 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதனால் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்பதை ஆணித்தரமாக சொல்லலாம்.

    2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வருகிற சமயத்தில் மின்தட்டுப்பாடு நிலவியது. அப்போது அதற்கு உரிய தீர்வு காணப்பட்டு மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியது. இதனால் தற்போது எங்கும் மின் வினியோகம் அடிக்கடி நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. எங்களது கூட்டணி 2011-ல் அமைந்த கூட்டணி. ஆளும் கட்சி-எதிர்கட்சியாக அமைந்த கூட்டணியாகும்.

    சில துரோகிகளின் செயலால் அன்று கூட்டணி பிரிக்கப்பட்டது. ஆனால் கடவுளின் அருளால் மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. 2011 தேர்தலின் வெற்றி வரலாறு, மீண்டும் 2019-ல் திரும்பி வரப்போகிறது. அப்படி நடக்கும் போது தமிழகம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும். பிரதமர் மீண்டும் பதவி யேற்றவுடன், கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து சென்று நதிநீர் இணைப்பு பற்றி வலியுறுத்துவோம்.

    ஸ்டாலின் சொல்கிற எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேறப்போவதில்லை. ஏனெனில் தி.மு.க.வால் நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது. எனவே வாக்கினை இரட்டை இலைக்கு செலுத்துங்கள். இரட்டை இலைக்கு வாக்கு தருவீர்களா? செந்தில்நாதனை வெற்றி பெற வைப்பதோடு எதிர்த்து போட்டியிடுபவதை டெபாசிட் இழக்க செய்வீர்களா? (அப்போது ஆம் என்று மக்கள் கோ‌ஷம் எழுப்பினர்).

    அம்மாவின் (ஜெயலலிதா) ஆன்மாவுக்கு பதில் சொல்லும் வகையில், துரோகம் செய்தவருக்கு தக்க பதிலடியை கொடுக்க வேண்டும் என்று உங்கள் வீட்டு பெண்ணாக, சகோதரியாக அத்தனை பேரையும் பார்த்து கேட்டு கொள்கிறேன்.

    தி.மு.க. ஆட்சி வந்தாலே கட்டபஞ்சாயத்து தான் நடக்கும். ஆனால் இன்று தமிழகம் இன்று அமைதி பூங்காவாக இருக்கிறது என்தை எண்ணி பார்த்து கொள்ளுங்கள். டி.டி.வி. தினகரன் சொல்கிற வாக்குறுதிகள் எல்லாம் பொய்யானவை. இன்று அ.தி.மு.க.வில் சிலிப்பர் செல் இருக்காங்க என்று சொல்லி வருகிறார். உண்மையான சிலிப்பர் செல்லே டி.டி.வி.தினகரன் தான். வேறு யாராவது அ.தி.மு.க.வை விட்டு சென்று கட்சி ஆரம்பித்தார்களா?. அவருக்கும் சரியான பாடத்தை இந்த தேர்தலில் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    அ.தி.மு.க., தி.மு.க. செத்துப்போன கட்சிகள். எனவேதான் ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள். அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று சீமான் பேசியுள்ளார்.

    கோவை:

    சூலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். செஞ்சேரி மலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது-

    தமிழகத்தில் அரசியல் என்பது மிக இழிவாக கற்பிக்கப்பட்டு இருக்கிறது. கட்சிகள் நிறுவனமாகிவிட்டன. வேட்பாளர்களை நேர்காணல் செய்து பலகோடி ரூபாய் முதலீடு செய்து வாங்கும் வியாபாரிகளாக மாறிவிட்டனர்.

    வேட்பாளர் ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி முதலீடு செய்கிறார் என்றால் மக்களுக்கு சேவை செய்ய வருகிறாரா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    இதை தகர்த்து எறிந்து புதிய அரசியலை கொண்டு வராமல் நல்ல ஆட்சியை உருவாக்க முடியாது. நாங்கள் தோற்பதற்காக தானே தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று கேட்கிறார்கள். தோற்பதற்காக அல்ல, நல்ல அரசியலை தொடங்குவதற்காக போட்டியிடுகிறோம். வேட்பாளர்களோ, தலைவர்களோ வெற்றியை தீர்மானிப்பது இல்லை. வாக்களிக்கும் மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.

    எங்களை விமர்சிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. விமர்சனமும் ஒருவித பாராட்டுதான். காயப்படுத்தும் கற்கள் இல்லை. நாங்கள் உணர்ந்து கொண்ட தத்துவம் விமர்சனம் இல்லாமல் வளர முடியாது என்பதுதான்.

    ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்கிறோம். ஆனால் தொடர்ச்சியாக தேர்தல் களத்தில் நமது உரிமையை விற்பது என்பது அவமானம் ஆகும். வாக்கை விற்கவில்லை, வாழ்க்கையை விற்கிறோம்.

    தேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை இல்லை. அடுத்த 5 ஆண்டு வாழ்க்கையை தீர்மானிக்கும் சந்தை. சின்னத்தை பார்த்து வாக்களிப்பதை நிறுத்துங்கள். நல்ல எண்ணத்தை கவனித்து ஓட்டுப்போடும் முறையை செயல்படுத்துங்கள். தேர்தல் களத்தில் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்ல ஒரு கட்சியாவது இருக்கிறதா? பணம் இருப்பவன்தான் அரசியல் செய்யமுடியும் என்ற நிலை இருக்கும்போது எப்படி நல்ல ஆட்சி நடக்கும்.

    நாங்கள் வாக்குக்காக தேர்தலில் நிற்கவில்லை. எங்களின் இன மக்களுக்காக தேர்தலில் நின்று பேசி வருகிறோம். தமிழகத்தில் உள்ள 24 மாவட்டத்தை வறட்சியாக அறிவித்து உள்ளது. அப்படி என்றால் தண்ணீர் இல்லை என்று அர்த்தம்.

    அ.தி.மு.க.,- தி.மு.க.வை வெல்ல முடியாது என்று கூறுகிறார்கள். வெல்ல முடியாத படை உலகத்திலேயே இல்லை. அ.தி.மு.க., தி.மு.க. செத்துப்போன கட்சிகள். எனவேதான் ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள்.

    கல்வி சந்தை பொருளாக மாற்றப்பட்டு விட்டது. அறிவை வளர்க்கும் கூடம் இல்லை. வர்த்தக, வியாபார மையமாக மாற்றப்பட்டு விட்டது. நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில்தான் இருக்கிறது. ஆனால் குழந்தைகள் நலனுக்கு என்று ஒதுக்கப்படும் நிதியில் கொள்ளையடிக்கிறார்கள். இது கொடுமை இல்லையா?.

    தேர்தல் என்றால் என்ன மாறுதல் வருகிறது என்பதை படித்த இளைஞர்கள் உணர வேண்டும். அதே ஆட்சி முறைதான் இருக்கிறது. ஊழல் நிறைந்த கட்சியான அ.தி.மு.க., தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் நல்லது செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்கிறார்கள். ஏன் இருந்தபோது செய்யவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தேர்தல் பிரசாரத்தில் ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் தாளமுத்துநகர் பகுதியில் கூறியதாவது:-

    இந்த தேர்தல் தமிழகத்தின் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் அடிப்படையில் தொகுதி மக்களின் வருங்காலத்தை தீர்மானிக்க போகிறீர்கள். அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை தடம் புரளாமல் செய்து வரும் ஆட்சியாளர்கள். கிராமம் முதல் நகரம் வரை திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் இந்தியாவிலேயே முதல் வரிசையில் அமரக்கூடிய ஆட்சியாளராக தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். 

    22 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை அனைத்து மக்கள் நலனுக்காக பணியாற்றி வருகின்றனர். ஏழை, எளிய மக்களின் நலனை பேணி காக்கும் அணி. இல்லாதோர் நிலையை உயர்த்தும் அரசு. தொழிலாளர், விவசாயிகள் நலன் காக்கும் ஆட்சி. மகளிர், மாணவர்கள், இளைஞர் நலனை காக்கும் ஆட்சி.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் வெறுக்கும் கூட்டணி. நம்முடைய கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சாமானிய மக்களோடு நெருங்கி பழகி வருகின்றனர். இது போன்ற செயல்பாடுகள் தொடர வேண்டும். பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் மட்டும்தான் பெண்களுக்கு அதிக திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

    மத்திய அரசு இந்தியாவை வளர்ச்சியான பாதையில் அழைத்து செல்லும் அரசாக உள்ளது. அ.தி. மு.க.- பா.ஜனதா வுடன் கூட்டணி வைத்து இருப்பது மட்டுமின்றி, மத்திய அரசிடம் இருந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக பலகோடி ரூபாய் கிடைத்து உள்ளது என்பதுதான் உண்மை. தமிழக எதிர்க்கட்சி தலைவரை, தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்த போது மக்கள் புரிந்து கொண்டார்கள். வடஇந்தியாவில் காங்கிரசின் தோல்வி உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதன் அடிப்படையில் அரசியல் தொடங்கி உள்ளது. எனவே நம்முடைய வெற்றியை, வளர்ச்சியை உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் மோகனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் எக்கு கோட்டையாக உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் இடைத் தேர்தலில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 50 பூத்களின் வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு தலைமை வகித்த தேர்தல் பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    தமிழக முதல்வர் எடப்பாடியார் நல்லாட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் இந்த தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் நமது வேட்பாளர் மோகனை 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தே தீரவேண்டும் என்ற கொள்கையோடு நாம் பணியாற்ற வேண்டும்.

    உழைத்தால் உயர்வு உண்டு, பதவிகள் உண்டு என்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எத்தனையோ பேரை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஆகவே நீங்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்.

    உங்கள் உழைப்பை இந்த இயக்கத்திற்காக கொடுங்கள். உங்களுக்கான தேவைகளை கட்சி செய்து கொடுக்கும். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் தொகுதிகள் எடப்பாடியாரின் எக்கு கோட்டையாக உள்ளது. திருப்பரங்குன்றத்தில் முனியாண்டியை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம். அவரை வெற்றி பெறச் செய்து அதனை மீண்டும் நிரூபிக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    அரசின் சாதனைகளுக்காக இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்யுங்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்துத் துறைகளின் மூலம் மக்கள் நலத் திட்டங்களை கழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறது.

    காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்டும் வகையில் அம்மா வழியில் செயல்படும் இவ்வரசு மேற் கொண்ட தொடர் முயற்சிகளினால் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் உயர்வு பெற்றுள்ளது. 70.59 லட்சம் ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ. 1,223.35 கோடி செலவில் விலையில்லா நான்கு இணை சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மருத்துவ உதவித் தொகை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ. 91 கோடி செலவில் புற நோயாளிகள் பிரிவு மற்றும் ரூ. 16.11 கோடி செலவில் குழந்தைகள் கேத் லேப் கருவி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரூ. 229.46 கோடி மதிப்பில் புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 13.75 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா ரூ. 18,000 வீதம் ரூ. 1,113.52 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

    ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும், அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றது.

    கிராமப்புற பொருளாதாரத்தில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிப்பதுடன், அதிக எண்ணிக்கையிலான சிறிய, நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு பயனுள்ள வேலை வாய்ப்பை வழங்கி பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக, ரூ. 62.43 கோடி செலவில் 15,661 நபர்களுக்கு விலையில்லா கறவைப் பசுக்களும், ரூ. 315.03 கோடி செலவில் 2,45,199 நபர்களுக்கு விலையில்லா ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

    அம்மா மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ. 50.8 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை அரசு நினைவில்லமாக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் ரூ. 20 கோடியில் நடைபெற்று வருகின்றன. ரூ. 2.52 கோடி செலவில் சென்னை காமராசர் சாலையில்

    பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம், வையம்பாளையத்தில் ரூ. 1.50 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம், கடலூர் மாவட்டம், மஞ்சகுப்பத்தில் இராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்ப சுவாமி அவர்களின் நினைவாக நினைவுத் தூண் ஆகியவை அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

    போக்குவரத்து, பொதுமக்களின் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. தமிழ் நாடு வலுவான பேருந்து போக்குவரத்து அமைப்பைப் கொண்டுள்ளது. அவற்றில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மாநிலத்திலுள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு சேவை வழங்குவதுடன் அவற்றை தொலைதூர வழித்தடங்களுடன் இணைக்கவும் செய்கின்றன. மேலும், அண்டை மாநிலங்களுக்கும் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 1,955 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

    இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்ல ஆண்டுதோறும் ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த ஆண்டு 3,764 ஹஜ் புனித பயணிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் நிர்வாக மானியம் ரூ. 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    600 கிறித்துவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற் கொள்ள ரூ. 1.20 கோடி வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினருக்கு நேரடி நியமன முறையில் நிரம்பாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறை நீட்டிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

    மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்த அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், அம்மா வழியில் நடைபெறும் கழக அரசு தொடர்ந்து வெற்றி நடைபோடவும், அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும், வருகின்ற 19.5.2019 அன்று நடைபெற உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு

    எம்.ஜி.ஆரால் கண்டெடுக்கப்பட்ட, புரட்சித் தலைவியால் கட்டிக்காக்கப்பட்ட வெற்றிச் சின்னமாம் ‘‘இரட்டை இலை’’ சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு, வாக்காளப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் நினைத்தவர் டி.டி.வி.தினகரன் என்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை விந்தியா கூறினார்.
    தூத்துக்குடி:

    ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் முன்னிலையில் நடிகை விந்தியா நேற்று மாலையில் தாளமுத்துநகர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசும் போது கூறியதாவது;-

    ஒட்டப்பிடாரம் வீர பாண்டிய கட்டபொம்மன் முதல் பாரதி வரை வீரர்களை தந்த பூமி. அங்கு ஏழைகளுக்காக நடந்து வரும் அ.தி.மு.க. வேட்பாளர் தான் வெற்றி பெற வேண்டும். ஊழல்வாதிகள் அல்ல. தி.மு.க. நம் நாட்டை இத்தாலிகாரர்களிடம் ஒப்படைக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு தோல்வியை தர வேண்டும். ஊழல்களின் மொத்த உருவம் தி.மு.க. தான்.

    உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் நினைத்தவர் டி.டி.வி.தினகரன். இந்த தேர்தல் ஒரு தேர்தல் அல்ல. யுத்தம். இதில் மக்களின் ஆட்சி, ஏழைகளின் ஆட்சி வெற்றி பெற வேண்டும். மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    டி.டி.வி. தினகரன் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் தமிழக தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-

    முதலமைச்சரை ஒருமையில் பேசியும், உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பியும்,  பல்வேறு விவகாரங்கள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்தும், அவசர கால ஊர்திகளுக்கு வழிவிடாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி டி.டி.வி. தினகரன் செயல்படுகிறார்.



    டி.டி.வி. தினகரன் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படியும், இந்திய தண்டனைச் சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுத்து, அவர் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்வதறகு தடை விதித்து உத்தரவு பிறக்க வேண்டும்.

    இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. 
    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
    தூத்துக்குடி:

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவரது நாக்கில் சனி. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊரில் சென்று அவர் பேசி உள்ளார். தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது. அவர்களை தீவிரவாதி என்றுதான் கூற வேண்டும்.

    சிறுபான்மையினர் ஓட்டை பெறுவதற்காக இந்துக்களை பற்றி பேசும் கமல்ஹாசன் நாக்கை ஒருகாலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள். ஏனென்றால் ரொம்ப பேசுகிறார். இந்து மதம் புனிதமான மதம். மற்ற மதங்களுக்கு முன்னோடி மதம் இந்து மதம். இந்த மதத்தை புண்படுத்துவது சில கட்சிகளுக்கு தொழிலாகி விட்டது.

    கி.வீரமணி, மு.க.ஸ்டாலின் இந்துக்கள் சடங்குகளை அவமானப்படுத்தி பேசுவர். பின்னர் ஓட்டுக்காக திருநீறு பூசிக் கொள்வார். மாலையை வாங்கிக் கொள்வார். அவர்கள் நடிப்பார்கள். தற்போது கமல்ஹாசன் அவர்களோடு சேர்ந்து இருக்கிறார்.

    ஒற்றுமையாக வாழும் மக்களிடையே வாக்கு ஒன்றையே குறிக்கோளாக வைத்து, ஓட்டு வாங்குவதற்காகவே குறுக்குசால் ஓட்டும் வேலையை மு.க.ஸ்டாலின், கி.வீரமணி செய்தனர். தற்போது கமல்ஹாசன் ஆரம்பித்து உள்ளார். இது தவிர்க்கப்பட வேண்டிய கூட்டம். ஒடுக்கப்பட வேண்டிய கூட்டம். ஒழிக்கப்பட வேண்டிய அரசியல் வழிமுறை, நெறிமுறை.



    இது போன்ற பேச்சுக்களை கமல்ஹாசன் நிறுத்த வேண்டும் அல்லது நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் உரிய முறையில் தலையிட்டு அவரது கட்சியை தடை செய்ய வேண்டும். கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

    தி.மு.க. என்று சொன்னாலே தில்லுமுல்லு கட்சிதான். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தார். அன்றே ராகுல்காந்திக்கு நேரம் சரி இல்லை என்று சொன்னோம். ஏனென்றால் நல்லவர்கள் வாயில் இருந்து நல்ல வார்த்தை வந்தால்தான் பலிக்கும்.

    மு.க. ஸ்டாலின் நயவஞ்சகர். பாம்பின் வாயில் இருந்து வி‌ஷம்தான் வரும். அது போன்று மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட்டு, சந்திரசேகரராவுடன் 3-வது அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது கூட்டணிக்கு குழிபறிக்கும் செயலாகும்.

    கூட்டணியில் உள்ளவர்களை தோற்கடிப்பதுதான் தி.மு.க.வினர் வேலை. அதனை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். நம்பகத்தன்மை இல்லாத கட்சி என்பதற்கு எடுத்துக்காட்டு தி.மு.க. தி.மு.க.வுக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு கிடையாது. அந்தமானில் சென்று நிற்க வேண்டியதுதான்.

    அடையாளம் காணப்பட்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவாகி உள்ளார். கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகிறார் என்பதை மக்கள் நம்புகிறார்கள். இதனால் தான் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வருகிறார். எங்களுக்கு வரக்கூடிய கூட்டம் மக்கள் விரும்பி வரக்கூடிய கூட்டம். இந்த கட்சிதான் ஆளும். வாழும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சட்டசபை இடைத்தேர்தலில் தினகரன் கட்சி திமுக வெற்றிக்காக போட்டியிடுகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    சென்னை:

    ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட வசவப்புரம், வல்ல நாடு ஆகிய இடங்களில் அ.திமு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை தொடங்கினார். அந்த இயக்கத்திற்கு வழங்கப்பட்ட வெற்றிச் சின்னம் தான், இரட்டை இலை சின்னம். அந்த சின்னத்தை முடக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் வரை சென்று போராடியவர் தான் டி.டி.வி. தினகரன்.

    இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். கட்சியை உடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. தற்போது தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு அம்மாவின் ஆட்சியை கலைக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார். அது ஒரு போதும் பலிக்காது.

    டி.டி.வி.தினகரனை வாழ வைத்தது இந்த இயக்கம். அடையாளம் காட்டியது இந்த இயக்கம், விலாசம் கொடுத்ததும் இந்த இயக்கம், அவருக்கு அரசியல் முகவரி தந்து புரட்சித் தலைவி அம்மாவால் வாய்ப்பளிக்கப்பட்டு அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்டு, வெற்றி பெறச் செய்து, பாராளுமன்றத்தில் அமர வைத்ததும் இந்த இயக்கம் தான். ஆனால் இன்றைக்கு அந்த கட்சிக்கே துரோகம் இழைத்து வருகிறார்.

     


     

    மறைமுகமாக தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டும். என்பதற்காக இவர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். எம்.ஜி.ஆர் கட்சியை உருவாக்கும் போது தி.மு.கவால் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தார் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

    அவரது மறைவுக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா தலைமை பொறுப்பை ஏற்கும் போது தி.மு.கவால் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பதும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். புரட்சித் தலைவி அம்மாக்கு தி.மு.க. பல்வேறு வகையில் இன்னல்களையும், இடர்பாடுகளையும் அளித்து வந்தது. அம்மா மீது பல்வேறு பொய் வழக்குகளை போட்டு, அம்மாவை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்படைய செய்ததின் காரணமாகவே, அவரது உடல்நிலை நலி வுற்று, இந்த மண்ணை விட்டு மறைந்தார்.

    அம்மாவை யார், யார் எல்லாம் இந்த நிலைக்கு ஆளாக்கினார்களோ, பழி வாங்கினார்களோ அவர்களுடன் தினகரன் தற்போது கூட்டணி சேர்ந்து கொண்டு. இந்த ஆட்சியையும், கட்சியையும் அழிக்கப்பார்க்கிறார். அழிக்க நினைப்பவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    நான் கிராமத்தில் விவசாய குடும்பத்திலே பிறந்தவன். விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்களை நன்கு உணர்ந்தவன். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலையொட்டி 26 நாட்கள் தொடர்ந்து கடும் வெயிலிலும் பிரசாரம் செய்து மக்களை சந்தித்து வந்துள்ளேன். அனுபவ ரீதியாக கிராம மக்களின் இன்னல்களையும், துன்பங்களையும் நான் நன்கு அறிந்தவன்.

    ஆனால், ஸ்டாலின் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். அவரால் வெயிலில் பிரசாரம் செய்ய முடியவில்லை. 4 நாட்கள் கூட வெயிலை தாங்க முடியாதவர் ஸ்டாலின். இவர் மக்களின் கஷ்ட, நஷ்டங்களை தெரியாதவர். இவர் எப்படி மக்களுக்கு சேவை செய்வார். இவர் பிரச்சரக் கூட்டத்தில் பேசும் போது, நான் சிவப்பாக இருக்கிறேன், கவர்ச்சியாக இருக்கிறேன். தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் தற்போது கறுத்துள்ளேன் என பேசியிருக்கிறார். ஒரு தலைவர் இது போன்ற கருத்தை மக்களிடத்திலே தெரிவிக்கலாமா என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

    இவர் பிரசாரத்திற்கு செல்லும் போது, பேண்ட், டிசர்ட் அணிந்து இருபது வயது இளைஞர் என்ற எண்ணத்துடன் சென்று கொண்டிருக்கிறார். எனவே, வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    புரட்சித்தலைவி அம்மா மக்களுக்காக செயல்படுத்திய அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் தற்போது முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழைகாலங்களில் பெய்கின்ற மழைநீரை தடுத்திடும் வகையில் தடுப்பணைகள் கட்டும் திட்டமும் செயல் படுத்தப்படுகிறது.

    அதே போன்று குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படுகிறது. இது வரை 3000க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் அண்மையில் ஏற்றப்பட்ட சூறைக் காற்றால் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஏழை, எளிய மக்களும் முறையான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட முதல்- அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    தற்போது நான் தான் முதல்-அமைச்சராக இருக்கிறேன். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராகத்தான் இருக்கிறார். அவர் எப்படி தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்ற முடியும். பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வாக்குகளை பெற வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் திட்டமாகும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    நிலக்கரி, 2-ஜி ஸ்பெக்ட்ரம் என பஞ்ச பூதங்களில் ஊழல் செய்த ஆட்சி தி.மு.க தான் என்று தேர்தல் பிரசாரத்தில் நடிகை விந்தியா பேசினார்.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரசாரம் செய்தார்.

    ஏழைகளின் வாழ்வில் இருளைப் போக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கினார். பரதன் ஆண்டாலும் அது ராம ராஜ்யமாகத்தான் இருந்தது. அபோல தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தை ஆட்சி செய்தாலும் அது ஜெயலலிதா ஆட்சியாகத்தான் உள்ளது. நமது கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற நடப்பது இந்த தேர்தல்.

    சேது சமுத்திர திட்டம், நிலக்கரி, 2-ஜி ஸ்பெக்ட்ரம் என பஞ்ச பூதங்களில் ஊழல் செய்த ஆட்சி தி.மு.க. ஆட்சி. தேர்தல் வந்தால் மட்டும் இந்துக்கள் மீது தி.மு.க.வினருக்கு திடீர் பாசம் வந்துவிடும்.

    கிராமந்தோறும் கிராம சபை கூட்டங்கள் நடத்துவது, சாலையோர கடைகளில் டீ குடிப்பது, சைக்கிள் ஓட்டுவது என பல்வேறு வகைகளில் மக்களை ஏமாற்றுவார்கள். ஆட்சிக்கு வந்ததும் மக்களை கண்டுகொள்ள மாட்டார்கள்.

    தற்போது நடைபெற்ற தேர்தலில் தோற்று விடுவோம் என்று தி.மு.க.வுக்கு பயம் வந்து விட்டது. அதனால்தான் வாக்கு எந்திரத்தில் கோளாறு என மக்களை குழப்புகிறார்கள். ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அவருக்கு ஏமாற்றமே தேர்தல் பரிசாக மிஞ்சும்.

    எந்த கேள்வி கேட்டாலும் தினகரன் சிரித்துக் கொண்டே பதில் கூறுகிறார். ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தேர்தல் கமி‌ஷனுக்கே பணம் கொடுப்பவர் தினகரன். ஆர்.கே.நகர் மக்கள் இப்போதும் 20 ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களது அன்பை வாக்குகளாக மாற்றி வேட்பாளர் முனியாண்டியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.
    அமைச்சர் கருப்பணன் தேர்தலின் போது கட்சி பணியாற்றாமல் தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் ஆதரவாக செயல்பட்டதாக தோப்பு வெங்கடாச்சலம் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.
    பெருந்துறை:

    முன்னாள் அமைச்சரும் பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு என்.டி. வெங்கடாச்சலத்துக்கும் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

    அமைச்சர் கருப்பணன் குறித்து தோப்பு வெங்காடச்சலம் எம்.எல்.ஏ. கடுமையாக சாடி பேட்டி அளித்தார்.

    அவர் கூறும்போது, “கட்சிக்கு விரோதமாக அமைச்சர் கருப்பணன் செயல்பட்டு வருகிறார். தேர்தலின்போது பெருந்துறை தொகுதியில் கட்சி பணியாற்றாமல் மாறாக தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் ஆதரவாக செயல்பட்டார்” என்று பகிரங்கமாக குற்றச்சாட்டை அள்ளி வீசினார்.


    இதற்கு அமைச்சர் கருப்பணன் கூறும்போது, “யாரும் எதுவும் சொல்லிவிட்டு போகட்டும் என் விசுவாசம் நேர்மை பற்றி கட்சி தலைமைக்கு தெரியும்” என்று கூறினார்.

    இதற்கு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பதிலடி கொடுத்து இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது விஸ்வாசமும் நேர்மையும் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்கு தெரியும். நான் கேட்டது தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக நீங்கள் வேலை பார்த்தீர்களா... இல்லையா? இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை காட்டினால் நீங்கள் (அமைச்சர் கருப்பணன்) ஏற்றுக்கொள்வீர்களா? உங்களது விஸ்வாசத்தை, நடத்தையில் காட்ட வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சி அமைத்த 3 வருட காலத்தில் எத்தனை அ.தி.மு.க. தொண்டர்களின் பிள்ளைகளுக்கு உங்கள் கல்லூரியில் இலவசமாக பயில நீங்கள் அனுமதி அளித்து உள்ளீர்கள்? பட்டியல்போட முடியுமா? அம்மாவின் விசுவாசி என்று கூறும் நீங்கள் தகுதி உள்ள தொண்டர்களின் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் பெற்று கொடுத்துள்ளீர்களா? ஒரு தொண்டனையாவது வாழ வைத்ததாக கூறமுடியுமா?

    “மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்வார் ஆனால் தன் மக்கள் நலமே ஒன்று என்று இருந்து விடுவார்” புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பாடிய பாட்டு உங்களுக்கு பொருந்தும்.

    இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார்.
    ×