search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    தேர்தல் ஆணைய ஆதரவுடன் 4 தொகுதிகளிலும் தில்லுமுல்லு செய்ய ஆளுங்கட்சி திட்டமிடுகிறது என்று அரவக்குறிச்சி பிரசாரத்தில் பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

    கரூர்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தொகுதிக்குட்பட்ட வேலம்பாடி, அண்ணாநகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை தேர்தல் அதிகாரி 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளது. எனவே மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருக்கிறது என ஊடகங்களை அழைத்து அவரே கூறினார். ஆனால் இரவு 11 மணிக்கு மேலே அகில இந்திய தேர்தல் ஆணையம் 13 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு என அறிவிக்கிறது. அப்படியானால் மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் நடந்த தவறு என்ன ஆனது.

    தேர்தல் ஆணையம் மீதான சந்தேகம் பற்றி நாங்கள் புகார் சொன்னால், தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தேர்தல் ஆணையத்துக்கு வக்காலத்து வாங்கி அவர்கள் செய்வது சரி என்கிறார்கள். எனவே தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்கு, உத்தரவுக்கு பணிந்து தான் இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் நாங்கள் சொல்கிறோம், தலைமை தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும். அல்லது சிறப்பு பார்வையாளரை நியமித்து வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வேண்டும்.

    இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்திற்கு வித்திட வாய்ப்பு இருக்கிறது. இதனால் எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்கிற அச்சத்துடன் தான் அ.தி.மு.க. உள்ளது. இதனால் 4 தொகுதிகளிலும் தில்லுமுல்லு செய்ய ஆளுங்கட்சி தயாராக இருக்கிறது. தேர்தல் முடிவு அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எதிராகத்தான் இருக்கும். பிளஸ்-1, பிளஸ் -2 மாணவர்களுக்கு 6 பாடத்தில் இருந்து 5 பாடமாக குறைத்து, மொழிப்பாடத்தில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையென்றால் அதிக மாணவர்கள் தமிழை புறக்கணிக்கும் நிலை ஏற்படும்.


    ஆனால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அப்படிவராது என தெரிவித்துள்ளார். அது நம்பிக்கை அளித்தாலும் கூட எந்த சூழ்நிலையிலும் தமிழ் படிப்பை மாணவர்கள் கைவிடும் வகையில் தமிழக அரசு செயல்படுத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த உடன் அமைச்சர்கள் பாதி பேர் பாஜகவுக்கு ஓடி விடுவார்கள் என்று தினகரன் பேசியுள்ளார்.

    வேலாயுதம்பாளையம்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தளவாபாளையம், வேலாயுதம்பாளையம், புகளூர், நொய்யல் உள்ளிட்ட பகுதிகளில் 2-ம் கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறிய தாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீட்டுக்கு வழி அனுப்பி வைக்க ஓட்டு போட்டீர்கள். அதேபோன்று எடப்பாடி பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதுக்கு பரிசுபெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். 2016-ல் யாரை நீங்கள் வெற்றிபெறச்செய்தீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அவர் வெற்றிபெற்ற பின் உங்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. மீண்டும் மந்திரி பதவி கிடைக்காததால் சோகமாக திரிந்தார்.

    அவருக்கு தன்னை தவிர யார் மீதும் நம்பிக்கை இல்லை. இங்குள்ள பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரைக்கும், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கும் தாக்குபிடிக்க முடியாமல் தி.மு.க.வில் அடைக்கலம் புகுந்துள்ளார். அவரது சுபாவத்திற்கு ஏற்ற கட்சி தி.மு.க.தான்.

    தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இருப்பதுபோல தி.மு.க. வில் வேட்பாளர் பஞ்சம் இருக்கிறது. தி.மு.க. இப்போது அகதிகள் முகாம் ஆகி விட்டது. இளைஞர் பட்டாளம் அந்த கட்சியில் இல்லை. வயது முதிர்ந்தவர்களின் இயக்கமாக தி.மு.க. ஆகி விட்டது.

    இப்போது மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனைகளை சொல்லி ஓட்டுகேட்க முடியாமல் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்துவோம் என்கிறார். இது ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதையாக இருக்கிறது. ஜெயலலிதாவை கொன்று விட்டார்கள் என எங்கள் மீது தி.மு.க.வினர் பொய்களை பரப்பி விட்டனர்.

    நீதி விசாரணை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் நமது வக்கீலின் வாதத்தால் உண்மையை சொல்ல நேரிடுமே என பயந்து கொண்டு ஆஜராகாமல் இருக்கிறார்.

    ஜெயலலிதாவின் உடல்நிலை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் நிலையில் இல்லை என்பதே உண்மை. உடல் நலம் தேறி வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக டாக்டர்கள் விசாரணை கமி‌ஷனில் கூறியுள்ளனர். நீதிமன்றங்களை விட மக்கள் மன்றங்கள்தான் பெரிது. அ.தி.மு.க. தொண்டனின் உடலில் தி.மு.க. எதிர்ப்பு ரத்தம் ஓடுகிறது.

    எனக்கு பதவி ஆசை இருந்திருந்தால் என் சித்தியிடம்(சசிகலா) சொல்லி நானே முதல்வராக பதவி ஏற்றிருப்பேன். கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினோம். ஆனால் முதல்வராக்கிய சசிகலாவையும், என்னையும் கட்சியை விட்டு நீக்கி விட்டனர். அரசியலில் ராஜதந்திரம் என்ற பெயரில் துரோகம் செய்தவர்களை விடக்கூடாது. மோடியின் ஆட்சியில் தொழில்கள் முடங்கி விட்டன. 6 லட்சம் தொழிலாளர்கள் நடு ரோட்டுக்கு வந்து விட்டனர்.

    அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த உடன் இருக்கும் அமைச்சர்களில், கைகளில் கயிறு கட்டி இருக்கும் பாதிபேர் பா.ஜ.க.வுக்கு சென்று விடுவார்கள். மற்றவர்கள் தங்களின் தொழிலை பார்க்க போய்விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரசாரத்தின்போது மாவட்ட செயலாளர் பி.எஸ். என். தங்கவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    அ.தி.மு.க. அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் தி.மு.க. வழக்கு போட்டு தடுத்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
    விருதுநகர்:

    ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக மோகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 15 நாட்களுக்கு மேலாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    சொக்கநாதபுரம், மகாராஜபுரம், ஒட்டநத்தம், வடமலாபுரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் ஏழை மக்களுக்காக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் நாங்கள் பிரசாரம் செய்யும் இடமெல்லாம் வெயிலையும் பொருட்படுத்தாமல் இரட்டை இலை சின்னத்தை காட்டி உற்சாகப்படுத்தி வரவேற்கின்றனர். அவர்களது உற்சாகம் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது.

    வேட்பாளர் மோகன் உங்களுக்காக ஓடோடி உழைக்கக்கூடியவர். அவரை நீங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஒட்டப்பிடாரம் தொகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் 106 கோடி ரூபாய் செலவில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. திட்டப்பணிகள் முடிந்ததும் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்கும்.

    அ.தி.மு.க. அரசின் திட்டங்களை தி.மு.க. வழக்கு போட்டு தடுத்து வருகிறது. தி.மு.க.வுக்கு ஏழைகளை பற்றிய சிந்தனையே இல்லை. தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தினரே உயர் பதவியில் இருக்க முடியும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    அமைச்சர்களுடன் சந்திர பிரபா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர்.
    அ.தி.மு.க. ஆட்சியை டிடிவி தினகரனால் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டி நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு அ.தி.மு.க. அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சி, கீழக்குயில்குடி, ஆவியூர் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் முனியாண்டிக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தப்பகுதியில் தினகரன் தேர்தல் பிரசாரம் செய்தபோது இங்கு குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது என்றும் பேசி உள்ளார்.

    மு.க.ஸ்டாலினும் இது போலத்தான் பேசுகிறார். குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளார். ரூ.10.20 கோடி மதிப்பில் விரைவில் குடிநீர் பணிகள் தொடங்கப்பட உள்ளன. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகளை துரோகிகள் என்கிறார் தினகரன்.

    ஜெயலலிதா உருவாக்கித் தந்த ஆட்சியை தி.மு.க.வுடன் இணைந்து கவிழ்க்க துடிக்கிறார் தினகரன். இதனால் தினகரன் தான் உண்மையான துரோகி என்பதை தொண்டர்கள் தெரிந்து கொண்டனர். எனவே அ.தி.மு.க. ஆட்சியை தினகரனால் தொட்டுக்கூட பார்க்க முடியாது.

    திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. கோட்டை. இங்கு வெற்றி பெற்றதும் திருப்பரங்குன்றத்தை முதன்மை தொகுதியாக மாற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேர்தல் பிரசாரத்தில் சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் மண்டலத்தலைவர் சாலைமுத்து, நிர்வாகிகள் வெற்றிவேல், மாரிச்சாமி, முத்து இருளாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அதிமுக ஆட்சியை கலைக்க வாக்களிப்போம் என்று அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

    மதுரை:

    மதுரையில் இன்று அ.ம.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தான் வெற்றிபெறும். தினகரன் தலைமையில் நல்லாட்சி அமைப்பதற்காக அ.தி.மு.க. ஆட்சியை கலைப்போம். அதற்காக வாக்களிப்போம்.

    இது துரோகிகளின் ஆட்சி. ஊழல் ஆட்சியாக உள்ளது. ஊழலை மையமாக கொண்டு அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது.

    தி.மு.க.வோடு நாங்கள் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும்? ஜெயலலிதா ஆட்சியை கலைக்க தி.மு.க. வோடு கூட்டணி வைத்தவர் தான் ஓ.பி.எஸ். பொதுமக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள் என்பது வருகிற 23-ந் தேதி தெரியவரும்.

    அன்றைய நாளில் தோல்வியோடு அமைச்சர்கள் காணாமல் போவார்கள். அவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மறைமுகமாக மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தேர்தல் ஆணையம் என்பது இருக்கிறதா என தெரியவில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது.

    அ.தி.மு.க.வினர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பிரச்சினை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதனை தடுக்க தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் குண்டர்கள் நுழைய வாய்ப்பு உள்ளது.

    தேனி தொகுதியில் மறுவாக்குபதிவு யாரும் கேட்கவில்லை. ஆனால் மறுவாக்குபதிவு நடக்கும் போது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஓபிஎஸ் மகனின் வேட்புமனுவில் பிரச்சினை இருப்பதாக ஏற்கனவே புகார் அளித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மு.க.ஸ்டாலினால் எந்த காலத்திலும் முதல்-அமைச்சராக வர முடியாது என்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
    செய்துங்கநல்லூர்:

    ஒட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று 2-வது கட்டமாக பிரசாரம் செய்தார். வல்லநாடு பகுதியில் திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் பொற்கால ஆட்சியை நடத்தினார். 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தினார். ஆட்சியாளர்கள் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஜெயலலிதா நல்லாட்சி நடத்தியதால், 20 கிலோ இலவச அரிசி வழங்கினார். 16 லட்சம் குடிசைகளில் ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு 2023-ம் ஆண்டுக்குள் தரமான வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்தினார்.

    ஏழை, எளிய மக்கள் 60 லட்சம் பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழகம் விளங்கி கொண்டு இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு ரூ. 3 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டு தமிழகம் அமைதிப்பூங்காவாக விளங்கி வருகிறது. இந்த தேர்தல் யாரால் வந்தது, நம்மிடம் இருந்து சென்ற துரோகியால் வந்தது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற தீராத ஆசையில் உள்ளார். அவர் முதல்-அமைச்சராக எந்த காலத்திலும் வர முடியாது. அ.தி.மு.க. இந்த தேர்தலில் காணாமல் போய்விடும் என்று கூறுகிறார். அ.தி.மு.க. மிகப்பெரிய ஆலமரம். இதில் 1 கோடி தொண்டர்கள் உள்ளனர். கருணாநிதியால் முடியாதது, உங்களால் முடியவே முடியாது. தி.மு.க. ஆட்சியில் கொலை, நிலஅபகரிப்பு நடந்தது. அந்த நிலத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீட்டு மக்களிடம் தந்தார். மின்சார தட்டுப்பாட்டை போக்க முடியாத அரசாக தி.மு.க. அரசு இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு மின்மிகை மாநிலமாக மாற்றினார். தற்போது 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வுடன், கூட்டணி வைத்து இருப்பதாக ஒருவர் கூறுகிறார். இந்த கட்சியில் இருந்து வசதி வாய்ப்பை பெருக்கி கொண்டவர்கள் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க போகிறார்களாம். அது எந்த காலத்திலும் முடியாது. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து தனிக்கட்சி கண்டவர்கள், சாதிக் கட்சி கண்டவர்கள் யாரும் வாழ்ந்ததாக, உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. இது தொண்டர்கள் இயக்கம். தி.மு.க.வில் ஒரு தொண்டன் முதல்-அமைச்சராக வர முடியுமா? முடியாது. அ.தி.மு.க. வில்தான் ஒரு தொண்டன் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக வர முடியும். ஒரு தொண்டர் பழனிசாமி முதல்-அமைச்சராக உள்ளார்.

    தி.மு.க.வை எதிர்த்துதான் அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. நமக்கு ஒரே எதிரி தி.மு.க.தான். யார் ஆட்சியில் நல்ல மக்கள் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் கொண்டு வந்தார்கள், தொழில் வளர்ச்சி, விவசாயம் பெருகியது என்பதை பார்த்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற வரலாற்றை உருவாக்கி தாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து தெய்வச்செயல்புரம், முடிவைத்தானேந்தல் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
    சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் 4 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.
    சென்னை :

    அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 11-ந் தேதி (இன்று) முதல் 14-ந் தேதி வரையிலான 4 நாட்கள் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து இன்று மாலை 5 மணிக்கு மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை, மாலை 5.30 மணிக்கு வடபழஞ்சி, மாலை 6.30 மணிக்கு தனக்கன்குளம், இரவு 7.15 மணிக்கு ஆர்.வி.பட்டி, இரவு 8 மணிக்கு நிலையூர் கைத்தறிநகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். இரவு 8.45 மணிக்கு திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.



    ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து 12-ந் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் வசவப்புரம், மாலை 5.45 மணிக்கு வல்லநாடு, மாலை 6.30 மணிக்கு தெய்வசெயல்புரம், இரவு 7.15 மணிக்கு சவலாப்பேரி, இரவு 8 மணிக்கு ஒட்டநத்தம், இரவு 8.45 மணிக்கு ஒசநூத்து, இரவு 9.15 மணிக்கு குறுக்குச்சாலை பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து கரூர் மாவட்டம் சீத்தப்பட்டி காலனியில் 13-ந் தேதி மாலை 5 மணிக்கும், அரவக்குறிச்சியில் மாலை 5.45 மணிக்கும், பள்ளப்பட்டியில் மாலை 6.30 மணிக்கும், இனங்கனூரில் இரவு 7.15 மணிக்கும், குரும்பப்பட்டியில் இரவு 8 மணிக்கும், ஆண்டிப்பட்டிகோட்டையில் இரவு 8.45 மணிக்கும், ஈசநத்தத்தில் இரவு 9.15 மணிக்கும் பிரசாரம் செய்கிறார்.

    இதேபோல சூலூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் 14-ந் தேதி மாலை 5 மணிக்கும், அதனைத் தொடர்ந்து மாலை 5.45 மணிக்கு முத்துக்கவுண்டன்புதூரிலும், மாலை 6.45 மணிக்கு வாகராயம்பாளையத்திலும், மாலை 7.15 மணிக்கு கிட்டாம்பாளையம் நால்ரோட்டிலும், இரவு 8 மணிக்கு கருமத்தம்பட்டியிலும் (சோமனூர் பவர் ஹவுஸ்), இரவு 8.30 மணிக்கு சாமளாபுரத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறார். இரவு 9.20 மணிக்கு சூலூரில் தனது பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
    அ.தி.மு.க. அரசை கவிழ்க்க தினகரனின் ரகசிய பேரம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது என்று கிளி ஜோதிடர் போல பேசி வருகிறார். ஆனால் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு தி.மு.க. நிலைகுலைந்து போகும்.

    ஸ்டாலினும், தினகரனும் மறைமுக உடன்பாடு வைத்துக் கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த நினைக்கிறார்கள்.

    கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் மு.க.ஸ்டாலினும், தினகரனும் ரகசியமாக சந்தித்து பேசினர். அதனை அப்போது 2 பேரும் மறுத்தனர். ஆனால் அந்த ரகசிய சந்திப்பு இப்போது அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    தி.மு.க.வுடன் இணைந்து அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்போம் என்று தினகரன் கட்சியை சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.

    இதன் மூலம் மு.க.ஸ்டாலின், தினகரன் ரகசிய சந்திப்பு தற்போது வெளி வந்துள்ளது. பல்வேறு சாதனைகளை படைத்து வரும் அ.தி.மு.க.வை தினகரன், முக.ஸ்டாலின் போன்ற துரோகிகளும், எதிரிகளும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மே. 23-ந் தேதிக்கு பின்னர் மோடியோட டாடி வந்தாலும் அ.தி.மு.க. அரசை காப்பாற்ற முடியாது என்று தினகரன் பேசியுள்ளார். #dinakaran #modi #tamilisai

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளராக மகேந்திரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, மூலக்கரை பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி அல்ல. அதை தமிழக மக்கள் நன்றாக தெரிந்துள்ளனர். அதனால் தான் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும், 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலிலும் மக்கள் அ.ம.மு.க.வின் சின்னமான பரிசு பெட்டகத்துக்கு வாக்களித்துள்ளனர். அதேபோல திருப்பரங் குன்றம் தொகுதி இடைத் தேர்தலிலும் வாக்காளர்களாகிய நீங்கள் அ.ம.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    உலகம் முழுவதும் மே 1-ந்தேதி உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல மே 23-ந்தேதியை துரோகிகளை வீட்டுக்கு அனுப்பும் தினமாக கொண்டாட வேண்டும். தோல்வி பயம் காரணமாகவே 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மக்களைப்பற்றி சிந்திக்கவே இல்லை. ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவே இந்த அவல ஆட்சிக்கு சாட்சி. மக்களின் விரோதியான சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். அதேபோல பொது மக்களாகிய நீங்கள் வாக்களிப்பதன் மூலம் துரோக ஆட்சியை சம்ஹாரம் செய்ய வேண்டும்.

    எனக்கு கொள்கை, கோட்பாடு எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள். மக்களை காப்பாற்ற மக்களுக்காக நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த துரோக ஆட்சியை வீடுக்கு அனுப்ப வேண்டும். அதுவே எனது கொள்கையும் கோட்பாடும் ஆகும்.

    எங்களுக்கு சிறை கம்பி சின்னத்தை வழங்க வேண்டும் என்று கூறிய தமிழிசைக்கு கிருஷ்ணர் எங்கு பிறந்தார்? எனத் தெரியுமா? எங்களுக்கு சிறை கம்பியை சின்னமாக கொடுத்தாலும் வெற்றி பெறுவோம். மே. 23-ந் தேதிக்கு பின்னர் மோடியோட டாடி வந்தாலும் அ.தி.மு.க. அரசை காப்பாற்ற முடியாது. ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள், விசுவாசிகள் அனைவரும் அ.ம.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

    மேற்கண்டவாறு டி.டி.வி. தினகரன் பேசினார். #dinakaran #modi #tamilisai

    திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளதாகவும் அராஜகத்தில் ஈடுபடும் அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது எனவும் தேர்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPanneerselvam #ADMK #DMK
    சென்னை:

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பெரிய ஆலங்குளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இதற்கு முன்னாடி தமிழகத்தை பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்துள்ளது. யார் நல்லாட்சி தந்து, நல்ல நல்ல திட்டங்கள் கொண்டு வந்தார்கள், யார் மக்களுக்கு தேவையான, பல்நோக்கு திட்டங்களை தந்தார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

    எதிர்கட்சியினர் தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க. ஆட்சி காணாமல் போய் விடும். ஆட்சி கலைந்து விடும் என்று கனவு கண்டுக் கொண்டிருக்கிறார்கள்,

    அ.தி.மு.க.வுக்கு என்று ஒரு சிறப்பு இருக்கிறது. 28 ஆண்டுகளாக, பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என அனைவரின் ஆதரவோடு ஆளுகின்ற ஒரே கட்சியாக அ.தி.மு.க. திகழ்கிறது.

    தி.மு.க. ஆட்சியில் 2006 முதல் 2011 வரைக்கும் எத்தனை திட்டத்தை கொண்டுவந்தார்கள், எந்த திட்டத்தை முடித்தார்கள் என்று வாக்கு சேகரிக்க வரும் தி.மு.க.காரர்களிடம் கேளுங்கள்.

    ஜெயலலிதா ஆட்சியேற்றவுடன் ஒரே வருடத்தில் படிப்படியாக மின்வெட்டினை குறைத்து, மின்வெட்டினை இல்லாத மாநிலமாக உருவாக்கி, தற்போது உபரி மாநிலமாக, அண்டை மாநிலங்களுக்கு 3000 மெகா வாட் மின்சாரத்தினை வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

    எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பல திட்டங்களை போட்டு முதல்வராக கனவு கண்டுக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரால் முடியுமா?



    முடியாது, ஏனென்றால் மக்கள் அனைவரும் திமுக கட்சியின் மீது வெறுப்பில் உள்ளனர். தி.மு.க. அராஜகத்தில் ஈடுபடுவதால் மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு நீங்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #OPanneerselvam #ADMK #DMK
    இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #ministersengottaiyan #admk

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கை பேணி காக்கும் மாநிலமாக, தடையில்லா மின்சாரம் வழங்கும் மாநிலமாக, கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தருகிற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி இருக்கிறோம். எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை கொண்டு வருவதற்கான பணிகள் ஜனவரி மாதம் நிறைவேற்றப்படும்.

    வருகிற ஜூலை மாத இறுதிக்குள் பள்ளிகளில் 6 முதல் 8 வரை ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 9, 10, 11, 12ம் வகுப்புகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு இணையதள வசதி ஏற்படுத்தப்படும். அதேபோல் அனைத்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளிகளிலும் அரசு சார்பில் இலைப்ரரி என்ற முறையில் கம்ப்யூட்டர் மூலமாக அவர்கள் கற்றுக்கொள்வதற்கு நூலக வசதி கொண்டு வரப்படும்.

    இந்த ஆண்டு பிளஸ்-1, பிளஸ்-2 முடித்த 15 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். அதேபோல் 8, 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கணினி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக கல்விக்காக தனி டி.வி. சேனலை கொண்டு வருவதற்கும், ரோபோ மூலமாக கல்வி கற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தனியார் பள்ளிக்கூடங்களை மிஞ்சும் அளவுக்கு தரமான சீருடைகள் வழங்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்த ஆண்டு 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாடத்திட்டங்களை மாற்றும் பணி நிறைவு பெற்றுவிட்டது. இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு செங்கோட்டையன் கூறினார். #ministersengottaiyan #admk 

    தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்கள் மறக்கவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
    ஒட்டப்பிடாரம்:

    ஒட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 13 நாட்களுக்கும் மேலாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார்.

    தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், தலைமை கழக பேச்சாளர் ஜெயக்கோவிந்தன் மற்றும் விருதுநகர் மாவட்ட ஒன்றிய, நகர் நிர்வாகிகள், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசும்போது, ஒட்டப்பிடாரம் தொகுதியில் 50 பூத்களில் களப்பணியாற்றி வருகிறோம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர்வதற்கும் ஒட்டு மொத்தமாக நமக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

    ஒட்டப்பிடாரம் தொகுதி ஒடுக்கப்பட்ட சமுதாயம் வாழ்கின்ற தொகுதியாகும். வ.உ. சிதம்பரனார்பிள்ளை பிறந்த ஊர், வீரன் சுந்தரலிங்கம் அவதரித்த வீரமண். வெள்ளையத் தேவன் வாழ்ந்த பூமி, பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் வீரம்புரிந்த மண் இப்படி பல்வேறு வீரத்தலைவர்கள், தேசத் தலைவர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்பு மிகுந்தது.

    அ.தி.மு.க. அரசின் சாதனைகளை சரித்திரங்களை ஒவ்வொரு வாக்காளர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த வாக்காளர்களும் மாற்று கட்சிகளுக்கு வாக்களிக்க நினைக்கவே கூடாது. அந்த அளவிற்கு நாம் நம் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி அனைத்து வாக்காளர்களும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும் வகையில் களப்பணியாற்ற வேண்டும்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் நடைபெற்ற 20 மணி நேரம் மின்வெட்டு, கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்பு உட்பட எண்ணற்ற அராஜகங்கள் மற்றும் அவலங்கள் தமிழக மக்கள் மனதில் இன்றும் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனை யாரும் மறக்கவில்லை என்றார்.
    ×