search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி"

    மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 30-ம் தேதி மோடி பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இக்கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

    இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்ததும், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார். எம்பிக்களின் ஆதரவு கடிதத்தையும் வழங்கினார். அதனை ஏற்று மோடியை ஆட்சியமைக்க வரும்படி ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 



    இந்த சந்திப்புக்குப் பின் மோடி பேசுகையில், “ஜனாதிபதியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினேன். அதனை ஏற்று புதிய அரசு அமைக்கும்படி என்னை கேட்டுக்கொண்டார். அதுவரை காபந்து பிரதமராக என்னை நியமித்துள்ளார். விரைவில் புதிய அமைச்சர்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் வழங்க உள்ளேன். புதிய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தும். ” என்றார்.

    ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று வரும் 30-ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    பாராளுமன்ற தேர்தலில் ‘மோடி வெற்றி பெற்றிருக்கிறார், இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்து உள்ளார்.
    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்று இருக்கிறது. 40-க்கு 40 வெற்றி என்றோம், ஏறக்குறைய அதை செய்திருக்கிறோம். இந்த தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையேயான தேர்தல். மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற ஒரு சித்தாந்தமும், மக்களை பிரித்து வைத்து ஆளும் ஒரு சித்தாந்தமும் போட்டியிட்டது.

    விந்திய மலைக்கு தெற்கே உள்ள மக்கள் ஒற்றுமையாக தேசத்தை பாதுகாக்க வாக்களித்து உள்ளனர். ஆனால் அந்த உணர்வு விந்திய மலைக்கு மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இல்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த தேர்தலில், ‘மோடி வெற்றி பெற்றிருக்கிறார், இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது’, இதைத்தவிர சொல்வதற்கு எதுவும் இல்லை.



    ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி இயல்பானது. ஆனாலும் தவறான கொள்கை வெற்றி பெற்றுள்ளதே என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள் கிறோம். அ.தி.மு.க. தவறான சித்தாந்தத்தின் அடிப்படையில் பா.ஜ.க.வுடன் சென்றார்கள். பா.ம.க. உள்பட அவர்களுடன் கூட்டு சேர்ந்த அனைவருமே தவறான முடிவு எடுத்தார்கள். அதற்கான தண்டனையை பெற்றிருக்கிறார்கள். தென்னிந்திய மக்கள் பா.ஜ.க.வை ஏற்கமாட்டார்கள் என்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமல் அவர்கள் ஏற்றுக்கொண்ட கூட்டணி தலைமை, அவர்களை படுகுழியில் தள்ளியிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத், ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    முன்னதாக தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றிமுகம் காட்டிவரும் நிலையில் இந்த மகத்தான வெற்றிக்கு பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடிக்கு மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி, பாஜக மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், இந்த மகத்தான வெற்றிக்கு பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடிக்கு அக்கட்சியின் மிக மூத்த தலைவரான லால் கிஷன் அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ‘அபரிமிதமான இந்த வெற்றிக்கு பாஜகவை வழிநடத்தியமைக்காக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



    பாஜகவின் கொள்கைகள் ஒவ்வொரு வாக்காளர்களையும் சென்றடையும் வகையில் பாஜக தலைவர் அமித் ஷாவும் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களும் அபாரமான முயற்சியை முன்னெடுத்திருந்தனர்.

    பன்முகத்தன்மைகளை கொண்ட மிகப்பெரிய நாடான இந்தியாவில் இவ்வளவு வெற்றிகரமான தேர்தலை நடத்தி முடித்தமைக்காக வாக்காளர்கள், தேர்தல் கமிஷன் உள்ளிட்ட முகமைகளுக்கு வாழ்த்துக்கள். ஒளிமயமான எதிர்காலத்துடன் நமது உயர்ந்த நாடு ஆசீர்வதிக்கப்படுவதாக!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்தங்கியுள்ளார்.
    புதுடெல்லி:

    17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

    இதில், துவக்கம் முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தொடர்ந்து முன்னிலை பெற்றார். அமித் ஷா காந்தி நகர் தொகுதியில் முன்னிலை பெற்றார்.



    அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவக்கத்தில் முன்னிலை பெற்றார். காலை 8.30 மணிக்கு பிறகு ராகுல் சற்று பின்தங்கினார். அதேசமயம் வயநாடு தொகுதியில் ராகுல் தொடர்ந்து முன்னிலை பெற்றார். அதேபோல், ரேபரேலி தொகுதியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார்.
    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மதியம் முன்னணி நிலவரம் தெரியவரும். மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று தெரிந்துவிடும்.
    சென்னை:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுகிறது.

    17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

    நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

    அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்து இருக்கிறது.



    கடந்த 19-ந் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    எனவே மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பது இன்று தெரிந்துவிடும். இதேபோல் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதும் தெரிந்துவிடும்.

    ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

    தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

    சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் வட சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன. பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வட சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரியிலேயே நடைபெறுகிறது.

    45 மையங்களிலும், ஒரு மையத்துக்கு 14 மேஜைகள் போடப்பட்டு, 19 முதல் 34 சுற்று வரை வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முன்னணி நிலவரம் அறிவிக்கப்படும். காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் வெளிவர தொடங்கும். முடிவுகள் மேஜை வாரியாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும். அங்குள்ள அறிவிப்பு பலகையிலும், வேட்பாளர்கள் சுற்றுவாரியாக பெற்றுள்ள வாக்குகள் எழுதப்படும்.

    முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதனை தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். கடைசியாக வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட உள்ளன.

    மதியம் முன்னணி நிலவரம் தெரியவரும். வாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால், கடந்த தேர்தலை விட முடிவுகள் சற்று காலதாமதமாகவே வெளியாகும் என்று தெரிகிறது. மாலைக்குள் வெற்றி நிலவரம் தெரிந்தாலும், இறுதி முடிவுகளை பெறுவதற்கு இரவு ஆகலாம்.

    சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகிய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுதப்படை மற்றும் சென்னை மாநகர போலீசார் உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பென்சில், காகிதம் ஆகியவற்றை மட்டுமே உள்ளே எடுத்துச் செல்ல வேண்டும்.

    ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியை கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் 88 கண்காணிப்பு பார்வையாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கூடுதல் மேஜைகள் அமைக்கப்படும் மையங்களுக்கு 2 பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவையும் சரிபார்த்து கையெழுத்திடுவார்கள். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியும் கையெழுத்திட்டு, அதன் நகலை முகவர்களுக்கு வழங்குவார்கள்.

    பார்வையாளர் அனுமதியை பெற்ற பின்னர் வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவை தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிப்பார்.

    வாக்கும் எண்ணும் மையங்களில் 1,520 மத்திய துணை ராணுவ படை வீரர்கள், 4,960 ஆயுதப்படை போலீசார், 31 ஆயிரம் போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    சென்னையில் மட்டும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து எப்படி எந்திரங்கள் எடுக்கப்படுகிறது. அங்கிருந்து எப்படி மேஜைகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது போன்றவை ‘வீடியோ’ பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    வாக்குகள் எண்ணும் பணியில் 17 ஆயிரத்து 128 பேர் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்படும் மையங்கள் விவரம் காலை 5 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். எனவே எந்த ஊழியர், எந்த மையத்துக்கு செல்வார்? என்பது முன்கூட்டியே யாருக்கும் தெரியாது. காலையில்தான் அவர்களுக்கு உத்தரவு வழங்கப்படும்.

    அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் 34 சுற்றுகளிலும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடம் ஆகலாம்.

    14 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுவது வழக்கம். வாக்கு எண்ணும் மையம் சிறியதாக இருந்தால் 10 மேஜைகளும், வாக்கும் எண்ணும் மையம் பெரிதாக இருந்தால் அதிக மேஜைகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று வைக்கலாம். சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக 30 மேஜைகள் போடப்பட்டு இருக்கிறது. நாகர்கோவிலில் 10 மேஜைகள் போட்டு இருக்கிறோம்.

    தபால் ஓட்டுகள், மின்னணு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட பின் குலுக்கல் முறையில் 5 விவிபாட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். இதுதவிர ‘17 சி’ படிவம்-மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் இடையே வித்தியாசம் இருந்தாலும், மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான ஒப்புகைச் சீட்டுகளை வெளியே எடுக்காமல் இருந்திருந்தாலும் விவிபாட் எந்திரங்கள் சரிபார்க்கப்படும்.

    மறுவாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் ஏற்கனவே பதிவான வாக்கு எந்திரங்கள் தனியாக வைக்கப்பட்டு உள்ளன. அந்த எந்திரங்களில் எண்ணுவதற்கு தகுதி இல்லை என்று குறிப்பு ஓட்டப்பட்டு இருக்கும். எனவே மறுவாக்குப்பதிவு நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில் எனது கருத்தை ஏற்கவில்லை என்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசா குறிப்பிட்டுள்ளார்.
    மராட்டியத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பிரதமர் மோடி, முதன் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை, பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று பேசினார். மோடியின் இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கூறி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதேபோல், மேற்கு வங்கத்தில் தேர்தல் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, இந்திய பாதுகாப்புப்படை வீரர்களை மோடியின் படை என்று குறிப்பிட்டார். அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த புகார்கள் குறித்து ஆய்வு நடத்திய தேர்தல் ஆணையம், மேற்கண்ட  சம்பவங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மோடி மீறவில்லை என்ற முடிவு எடுத்தது. இதையும் சேர்த்து, மோடிக்கு எதிரான 8 புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை முடிவெடுத்துள்ளது.

    மோடி, அமித்ஷாவின் தேர்தல் விதிமீறல்கள் மீதான புகார் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ்,  சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது தேர்தல் ஆணையம் சார்பில் மோடி- அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை என பதில் மனு தாக்கல் செய்தது.



    இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில் தேர்தல் ஆணையர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்  அசோக் லவாசா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

    எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்.

    அதில் ‘‘பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர். பிரதமர் மோடி அமித் ஷாவுக்கு எதிரான 6 தேர்தல் விதிமுறை மீறல்களில் எனது கருத்து ஏற்கப்படவில்லை. எனது கருத்துக்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏற்றுக்கொள்ளவில்லை. எனது கருத்துக்களை ஏற்று கொள்ளாததால் இனிவரும் தேர்தல் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி நகர வீதிகளில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோவில் நகரமான வாரணாசி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த தொகுதியில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் அஜய் ராயை ஆதரித்து  வாரணாசி நகர வீதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரியங்கா காந்தி இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.



    கடந்த தேர்தலில் இங்கு சுமார் 10.28 லட்சம் வாக்குகள் பதிவாகின. அதில் பிரதமர் மோடி 5 லட்சத்து 16 ஆயிரத்து 593 வாக்குகளை பெற்றிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 793 வாக்குகளை பெற்றார்.

    மூன்றாவது இடத்தில் வந்த காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உள்பட அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
    கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, அவரை பதவி நீக்கம் செய்ய அப்போதைய பிரதமர் வாஜ்பாய் விரும்பினார் என்று பாஜக முன்னாள் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் யஷ்வந்த் சின்கா கூறியதாவது:

    “குஜராத்தில் 2002-ல் மதக்கலவரம் வெடித்த பிறகு, அந்த மாநிலத்தில் முதல் மந்திரியாக பதவி வகித்து வந்த நரேந்திர மோடியை ராஜினாமா செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று வாஜ்பாய் முடிவு செய்திருந்தார்.

    2002-இல் கோவாவில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றபோது, மோடி ராஜினாமா செய்ய ஒருவேளை மறுத்தால் குஜராத் அரசை கலைக்க வேண்டும் என்று வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார்.



    கட்சிக்குள் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, குஜராத் அரசை கலைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன், மோடி அரசு கலைக்கப்பட்டால், நான் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அவர் வாஜ்பாயிடம் கூறினார். இதனால், தனது முடிவை செயல்படுத்தாமல் வாஜ்பாய் நிறுத்தி வைத்தார்.”

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து மோடி பிரதமரானால் அதற்கு ராகுல் காந்திதான் பொறுப்பு என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #NarendraModi #ArvindKejriwal
    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரபல செய்தி நிறுவனத்துக்கு இன்று பேட்டியளித்தார். இந்த பேட்டியின்போது அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

    நாட்டுக்கு எதுவுமே செய்யாத பிரதமர் நரேந்திர மோடியின் தேசபக்தி போலியானது என்று குற்றம்சாட்டிய கெஜ்ரிவால், தனது ஆட்சியின் சாதனை என்று கூறிக்கொள்ள மோடியிடம் எதுவுமே இல்லாததால் ராணுவ வீரர்களின் சாகசங்களை எல்லாம் தனது சாதனை என்றுகூறி மக்களிடம் ஓட்டு கேட்கிறார்.

    நான் பள்ளிகளை உருவாக்கினேன். மருத்துவமனைகளை அமைத்தேன். மின்சார கட்டணத்தை குறைத்தேன். குடிநீர் திண்டாட்டத்தை தீர்த்து வைத்தேன் என்று கூறிக்கொள்ளும் வகையில் மோடி எதுவுமே செய்யவில்லை.



    என்னைப் பொருத்தவரை மோடியைவிட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆயிரம் மடங்கு மேலானவர். மோடியும் அமித் ஷாவும் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம். இவர்களை தடுக்க நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு அளிப்போம்.

    டெல்லியில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ், கேரளாவில் மா.கம்யூனிஸ்ட், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ஆந்திராவில் தெலுங்கு தேசம், டெல்லியில் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாதவாறு காங்கிரஸ் கட்சி இடையில் நின்று குழி பறிக்கிறது.

    அவ்வகையில், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து மோடி பிரதமரானால் அதற்கு ராகுல் காந்திதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #RahulGandhi #NarendraModi #ArvindKejriwal
    “மோடியை கன்னத்தில் அறைவேன்” என்று மம்தா பானர்ஜி சொன்னதாக பிரதமர் மோடி கூறியதை மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். #MamataBanerjee #PMModi
    கொல்கத்தா:

    “மோடியை கன்னத்தில் அறைவேன்” என்று மம்தா பானர்ஜி சொன்னதாக பிரதமர் மோடி கூறியதை மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் புருலியா மாவட்டம் சிமுலியாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    மோடியை கன்னத்தில் அறைவேன் என்று நான் பேசியதாக மோடி கூறியுள்ளார். அது, ஜனநாயக அறை. மொழியை புரிந்து கொள்ளுங்கள். நான் ஏன் உங்களை அறையப்போகிறேன். நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல.

    ஜனநாயக அறை என்றால், மக்கள் தங்கள் ஓட்டு மூலமாக தீர்ப்பு அளிப்பார்கள் என்று அர்த்தம்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #MamataBanerjee #PMModi 
    பிரதமர் மோடி அவுரங்கசீப்பின் நவீன அவதாரம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார். #PMModi #Aurangzeb #SanjayNirupam
    வாரணாசி:

    அரியானா மாநிலம் குருசேத்திரத்தில் பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தபோது, தன்னை எப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர் என வேதனையுடன் பட்டியலிட்டார்.

    இதற்கு மத்தியில் பிரதமர் மோடியை அவரது வாரணாசி தொகுதியிலேயே நேற்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம், அவரை அவுரங்கசீப்பின் நவீன அவதாரம் என குறிப்பிட்டார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த தொகுதி மக்கள் அவுரங்கசீப்பின் நவீன அவதாரத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். வாரணாசியில் பெரும் சாலைகள் அமைப்பதற்காக மோடியின் அறிவுறுத்தலால் நூற்றுக்கணக்கான கோவில்கள் இடித்து தள்ளப்பட்டுள்ளன” என கூறினார்.

    “விஸ்வநாதரை தரிசிக்க கோவிலுக்கு வருகிறவர்களிடம் மோடி அறிவுறுத்தலின்பேரில் ரூ.550 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அவுரங்கசீப்பால் செய்ய முடியாததை மோடி செய்கிறார் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது” எனவும் அவர் கிண்டல் செய்தார்.  #PMModi #Aurangzeb #SanjayNirupam 
    என் தாயைக்கூட விட்டு வைக்காமல் காங்கிரஸ் கட்சி விமர்சித்தது என வேதனையுடன் கூறிய பிரதமர் மோடி, அதையொட்டி ஒரு பட்டியலே வெளியிட்டார். #PMModi #Congress #LokSabhaElection
    குருசேத்திரம்:

    பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிற நிலையில் தேர்தல் பிரசார களம் சூடுபிடித்து வருகிறது.

    இதுவரை இல்லாத வகையில் தனிமனித விமர்சனங்கள் வலுத்து வருகின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஊழலில் முதல் இடம் பிடித்தவர் என பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.

    இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கட்கிழமையன்று பேசுகையில், “எனது தந்தையை அவமதித்தாலும்கூட, நான் பிரதமர் மோடி மீது அன்பு வைத்திருக்கிறேன்” என கூறினார்.

    அதற்கு பதிலடி தருகிற வகையில், 12-ந் தேதி பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிற அரியானா மாநிலம், குருசேத்திரத்தில் நேற்று நடந்த பாரதீய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

    அப்போது அவர். “காங்கிரஸ் கட்சி தனது அன்பு அகராதியில் இருந்து என்னை நோக்கி தவறான வார்த்தைகளை வீசி வருகிறது” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

    “காங்கிரஸ் கட்சி என்னை ஹிட்லர், தாவூத் இப்ராகிம், முசோலினி போன்றோருடன் எல்லாம் ஒப்பிட்டது” என கூறினார்.

    மேலும், “காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னை புழு பூச்சியுடன் ஒப்பிட்டார். இன்னொரு தலைவரோ என்னை பைத்தியக்கார நாய் என்றார். இன்னொருவர் என்னை பத்மாசூரன் என்று சொன்னார். வெளியுறவு மந்திரியாக இருந்த மற்றொரு தலைவர் என்னை குரங்கு என்று கூறினார். அவர்கள் என் தாயைக்கூட விட்டு வைக்கவில்லை. அவதூறான வார்த்தையை சொன்னார்கள். எனது தந்தை யார் என்று கேட்டனர். இதெல்லாம் நான் பிரதமர் ஆன பிறகு சொன்னதுதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

    தொடர்ந்து பேசுகையில் அரியானாவில் நடந்த நில மோசடியை நினைவுபடுத்தினார். இது தொடர்பாக விசாரணையை சந்தித்து வரும் முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரின் பெயரைக் குறிப்பிடாமல் மோடி தாக்கினார்.

    அப்போது அவர், “ விவசாயிகளின் நிலத்தை காங்கிரஸ் கட்சியினர் பறித்தனர். ஊழல் பயிரை அவர்கள் அறுவடை செய்தனர்” என சாடினார்.

    அரியானாவிலும், டெல்லியிலும் ஆட்சியில் இருந்தபோது அடிமாட்டு விலைக்கு விவசாயிகளின் நிலத்தை காங்கிரஸ் பறித்ததாக குறிப்பிட்ட அவர், “உங்கள் ஆசியுடன், விவசாயிகளை கொள்ளையடித்தவர்களை இந்த காவலாளிதான் கோர்ட்டில் நிறுத்தி உள்ளேன். அவர்கள் ஜாமீனுக்காக ஓடுகிறார்கள். அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு செல்கிறார்கள். அவர்கள் தாங்கள் எல்லாரும் பேரரசர்கள், தங்கள் மீது யாரும் கை வைக்க முடியாது என நினைத்தனர். ஆனால் இப்போது அவர்கள் அதன் விளைவை உணர்கின்றனர். அவர்களை நான் சிறை வாயிலுக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறேன். அவர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சிறையில் தள்ளுவதற்கு உங்கள் ஆசி நாடி நிற்கிறேன்” எனவும் கூறினார்.

    தேசிய பாதுகாப்பு, ஊழல், சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் என காங்கிரஸ் மீது சரமாரியாக மோடி குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

    அதைத் தொடர்ந்து, “தற்போது நிலைமை தெளிவாகி விட்டது. மே 23-ந் தேதி மாலை தேர்தல் முடிவுகள் வெளிவரப்போகிறது. உங்கள் ஆசிகளுடன் மீண்டும் மோடி அரசுதான் வரப்போகிறது” என்றும் கூறினார்.  #PMModi #Congress #LokSabhaElection
    ×