search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94530"

    பர்கர் உங்களுக்கு மிகவும் பிடிக்குமானால், அதனை கடைகளில் வாங்கி சாப்பிடாமல் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இன்று சிக்கன் பர்கர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பர்கர் பேட்டி செய்ய…


    எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம்,
    வெங்காயம் - 1,
    கொத்தமல்லி - 1 கைப்பிடி,
    மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது - தலா 1/2 டீஸ்பூன்,
    பிரெட் தூள் - 1 கப்,
    உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

    பர்கர் பரிமாற…

    பர்கன் பன் - 4,
    சீஸ் ஸ்லைஸ் - 4,
    மையோனஸ், வெண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
    லெட்டூஸ் - தேவைக்கு.



    செய்முறை

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இந்த சிக்கன் கலவையில் சிறிதளவு எடுத்து கட்லெட் போன்று தட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

    பர்கர் பன்னை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.

    பன்னில் உட்புறம் வெண்ணெய் தடவி, செய்த பர்கர் (கட்லெட்) பேட்டியை அதன் நடுவில் வைத்து அதன் மேல் லெட்டூஸ் வைத்து மையோனைஸ் 1 டீஸ்பூன் தடவி, அதற்கு மேல் சீஸ் ஸ்லைஸ், பர்கர் பன்னை வைத்து மூடி பல் குச்சி சொருகி, தேவையானால் மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் பர்கர் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், தோசை, சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இறால் சுக்கா. இன்று இந்த சுக்காவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 250 கிராம்,
    சின்ன வெங்காயம் - 100 கிராம்,
    தக்காளி - 25 கிராம்,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
    தனியா தூள் - 2 டீஸ்பூன்,
    கரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    எண்ணெய் - 100 மி.லி.,
    பச்சைமிளகாய் - 5,
    சோம்பு தூள் - 2 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 2 டீஸ்பூன்.



    செய்முறை :

    இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, கரம்மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் இறால், உப்பு, சோம்பு தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இறால் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான இறால் சுக்கா ரெடி. 
    அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன் சேர்த்து வெள்ளை நிறத்தில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ,
    பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,
    (பட்டை - 1, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, கருப்பு ஏலக்காய் - 1, சீரகம் - 1½ டீஸ்பூன், ஜாதிக்காய் - 1, பிரியாணி இலை - 2) (ஒரு துணியில் கட்டி வைத்துக்கொள்ளவும்)
    மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்,
    சோம்பு - 1/4 டீஸ்பூன்,
    மிளகு - 1/4 டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 5,
    பெரிய வெங்காயம் - 2,
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
    தயிர் - 1/2 கப்,
    எலுமிச்சம்பழம் - 1,
    உப்பு - தேவைக்கு,
    எண்ணெய், நெய் - 1/2 கப்.



    செய்முறை :


    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துணியில் கட்டி வைத்த மசாலாவினை அதில் போட்டு கல் உப்பு, பச்சை மிளகாய், சிக்கன் சேர்த்து நன்றாக வேக விடவும்.

    பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், சோம்பு, மிளகு போட்டு தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் வேக வைத்த சிக்கன் மசாலாவினை நன்றாகப் பிழிந்து வெளியே எடுத்துவிடவும்.

    பின் சிக்கனை வெங்காயத்துடன் சேர்த்து அதனுடன் அரிசி, தனியா தூள், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து பிறகு கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை சாறு சேர்த்து தம் போட வேண்டும்.

    இப்பொழுது சுவையான கமகமக்கும் வெள்ளை சிக்கன் பிரியாணி தயார்.

    இதனுடன் சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் கிரேவி வைத்து பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சிக்கன் ரெசிபியில் ஒன்றான தவா சிக்கனை இதுவரை ஹோட்டல்களில் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இன்று அந்த தவா சிக்கனை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 500 கிராம்
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    வர மிளகாய் - 2
    வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    தக்காளி - 1  
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    ஃப்ரஷ் கிரீம் - 1 டேபிள் ஸ்பூன்
    குடை மிளகாய் - 1
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம் மற்றும் வர மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும்.

    பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    பின்னர் அதில் சிக்கன் துண்டுகளை போட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் கிளற வேண்டும்.

    பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை கிளற வேண்டும்.

    இந்த நேரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் ஃப்ரஷ் கிரீம் சேர்த்து, கலந்து 1 கப் தண்ணீரை விட்டு மூடி வைக்க வேண்டும்.

    ஒரு 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து, வேக வைக்க வேண்டும்.

    பின்னர் மற்றொரு கப் தண்ணீர் விட்டு, மீண்டும் 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    இப்போது தண்ணீர் சுண்டி, சிக்கன் நன்கு வெந்திருக்கும்.

    இந்த சமயம் மூடியைத் திறந்து, அதில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் கொத்தமல்லியை தூவி, மற்றொரு 5 நிமிடம் தீயை குறைத்து வேக வைத்து, பின்பு இறக்க வேண்டும்.

    சூப்பரான தவா சிக்கன் தயாராகிவிட்டது.

    இதனை சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளுக்கு வித்தியாசமான, சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் எக் ஃபிங்கர்ஸ் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3
    சோள மாவு - கால் கப்
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    தயிர் - 3 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    உப்பு - சுவைக்கு



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடி சமமான பாத்திரத்தில் இந்த முட்டை கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து கொள்ளவும்.

    வெந்ததும் அதை நீளமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோள மாவு, கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    மசாலா திக்காக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள மசாலாவில் வெட்டி வைத்துள் முட்டை துண்டுகளை மசாலாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான எக் ஃபிங்கர்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சப்பாத்தி, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட முட்டை சால்னா அருமையாக இருக்கும். இன்று இந்த சால்னாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 4
    தக்காளி - 2
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 1
    புளி - பெரிய நெல்லி அளவு
    தேங்காய்ப்பால் - 1 கப்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    பூண்டு - 15 பல்
    மஞ்சள் தூள் - தேவைக்கு
    தனி மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
    மிளகாய்தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை - தேவைக்கு
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து வெந்தயத்தை போட்டு லேசாக வறுத்த பின்னர் நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் சேர்க்கவும்

    அடுத்து தக்காளியை சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.

    பின்னர் புளிக்கரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்.

    பின்னர் தேங்காய் பால் தேவைக்கு சேர்க்கவும்.

    குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் முட்டையை தனித்தனியாக பவுலில் உடைத்து ஒவ்வொன்றாக இடைவெளி விட்டு விட்டு கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்.5 லிருந்து பத்து நிமிடம் மூடி போட்டு சிம்மில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சுவையான முட்டை சால்னா ரெடி.

    பின் குறிப்பு: தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடும்போது தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கலாம். முட்டையை ஊற்றிய பிறகு அதிக நேரம் அடுப்பில் வைத்தால் கிரேவி வற்றிவிடும். அதனால் சிறிது நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிக்கன், பார்லி சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பார்லி - 1/2 கப்
    எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
    கேரட் - 1
    ப்ரோக்கோலி - சிறிதளவு
    பெரிய வெங்காயம் - 1
    பூண்டு - 4 பல்லு
    இஞ்சி - 1/2 இன்சி
    பச்சை மிளகாய் - 1
    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப்ரோக்கோலியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    கேரட்டை வட்டமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பார்லியை நன்றாக சுத்தம் செய்து போதுமான அளவில் தண்ணீர் ஊற்றி நன்றாக அவித்து கொள்ளவும்.

    காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில், சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கவும்.

    காய்கள், சிக்கல் வெந்ததும் அதில், வேகவைத்த பார்லியை தண்ணீருடன் ஊற்றி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    சூப் நன்கு கொதித்தவுடன் அடுப்பை அனைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூழ்களின் தன்மை மாறுபடும். இன்று ஒடியல் கூழை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    ஒடியல் கூழ் என்பது பனங்கிழங்கை நன்றாக காயவைத்து கிடைக்கும் ஒடியலை மாவாக திரித்து எடுக்கப்பட்ட மாவை (ஒடியல் மா) கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகையாகும்.

    தேவையான பொருட்கள் :

    ஒடியல் மா - 1/2 கிலோ
    மீன் - 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)
    நண்டு - 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)
    இறால் - 1/4 கிலோ
    சின்ன சின்ன கணவாய்கள், நெத்தலி மீன் கருவாடு - 100 கிராம்
    காராமணி - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
    பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
    ஒரு பிடி கீரை, அல்லது கீரை வகைகள் ஒரு பிடி
    அரிசி - 50 கிராம்
    பச்சை மிளகாய் - 10 இரண்டாக பிளந்தது
    செத்தல் மிளகாய் - 15 அரைத்தது
    பழப்புளி - 100 கிராம்
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :

    காராமணியை நன்றாக ஊறடிவைத்து கொள்ளவும்.

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீன், நண்டு, கருவாடு, இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒடியல் மாவை ஒரு சிறு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2 மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும்.

    காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

    பழப்புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.

    இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.)

    அதனுள் கழுவிய அரிசி, ஊறவைத்த காராமணி, பலாக்கொட்டைகள், மீன் துண்டுகள், மீன் தலைகள், நண்டு, இறால், நெத்திலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.

    அனைத்தும் நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.

    சூப்பரான யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். நாளை சன்டே ஸ்பெஷலாக காராசாரமான முறையில் மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முள் இல்லாத மீன் - அரை கிலோ
    தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    சின்ன வெங்காயம் - 10
    இஞ்சி - 2 இன்ச்
    பூண்டு - 6 பற்கள்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிது
    தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    சுத்தம் செய்த மீன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,

    சன்டே ஸ்பெஷல் ஸ்பைசி மீன் வறுவல் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நண்டில் சூப், வறுவல், கிரேவி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று நண்டை வைத்து சுவையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நண்டு - 400 கிராம்
    தக்காளி - 2
    பாசுமதி அரிசி - 300 கிராம்
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 5
    இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் தூள் -1 1/2 ஸ்பூன்
    புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    தேங்காய் பால் - கால் கப்
    தயிர் - 4 ஸ்பூன்
    கரம் மசாலா - அரை ஸ்பூன்
    பட்டை - 2
    ஏலக்காய் -5
    அன்னாசிப்பூ - 2
    மல்லித்தூள் - 1 ஸ்பூன்
    எலுமிச்சை - 1
    நெய், எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி, பட்டை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, புதினா, ப.மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வதக்கியதும்

    பின்னர் தயிர், மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், கரம்மசாலா சேர்த்து கிளறி சுத்தம் செய்த நண்டை சேர்த்து கிளறி, போதுமான அளவு தேங்காய் பால் ஊற்றி, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடங்கள் நண்டை வேக விடவும்.

    நண்டு நன்றாக வெந்ததும் தயார் செய்து வைத்துள்ள சாதத்துடன் மசாலா கலவையை சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் தம் கட்டி இறக்கினால் சுவையான நண்டு பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    அசைவ உணவுகளில் இறால் மிகவும் சுவையானது. இன்று உங்களுக்காக எளிய முறையில் இறால் சேமியா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சேமியா - 2 கப்
    இறால் - 1 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
    கொத்தமல்லி புதினா - தேவையான அளவு
    பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை - 1
    தயிர் - 1 கப்
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    நெய் - 1 மேசைக்கரண்டி
    எலுமிச்சம்பழம் - 1

    செய்முறை :

    இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நன்றாக கழுவிய இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா பவுடர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள, தயிர் சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேமியாவை போட்டு முக்கால் பாகம் வேக வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூண்டு இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    பூண்டு இஞ்சி பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளிவை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து புதினா, கொத்தமல்லி மற்றும் சீரக பவுடர் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் ஊறவைத்த இறாலை சேர்த்து வதக்கி, இறாலில் உள்ள தண்ணீர் வற்றி வேகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் முக்கால் பாகம் வேகவைத்த சேமியாவை இறாலுடன் சேர்த்து கிளறவும்.

    நன்கு உதிரியாக வரும் பருவத்தில் இறக்கி பரிமாறவும்.

    சுவையான சேமியா இறால் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் காபி, டீயுடன் சாப்பிட சமோசா அருமையாக இருக்கும். இன்று மட்டன் கீமாவை வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்
    பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
    மட்டன் கீமா - 250 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
    புதினா  இலை - தேவையான அளவு
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    உப்பு - தேவையான அளவு
    நெய் - 3 தேக்கரண்டி
    தயிர் - 1 தேக்கரண்டி
    தக்காளி - 1 பெரியது
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி



    செய்முறை

    வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் கீமாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடரை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1 மணிநேரம் அப்படியே மூடி வைக்கவும்.

    பிசைந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கரம்மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் மட்டன் கீமாவை சேர்த்து வதக்கவும்.

    கீமாவில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றும் வரை வதக்கிய பின்னர் இறக்கி ஆறவிடவும்.

    மாவு உருண்டையை வட்டமாக தேய்த்து கொள்ளவும்.

    வட்டங்களை கோன் வடிவமாக செய்து அதில் மட்டன் கீமா கலவையை வைத்து மூடவும். அனைத்து மாவிலும் இவ்வாறு செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் கீமா சமோசா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×