search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    சிக்கிம் மாநிலத்தில் மாநில கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியும், அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும் ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
    புதுடெல்லி:

    சிக்கிம் மாநிலத்தில் 32 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 11-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கும், சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சாவுக்கும் கடும் போட்டி நிலவியது. இரு மாநில கட்சிகளும் தனித்து களம் இறங்கின. காங்கிரஸ், பா.ஜனதாவும் களத்தில் நின்றன.

    இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்த போது ஆளுங்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. 5 தொகுதிகள் முன்னிலை அறிவித்தபோது அதில் அனைத்திலும் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் கையே ஓங்கி இருந்தது.

    1994-ம் ஆண்டு முதல் பவன்குமார் சாம்லிங் முதல்-அமைச்சராக இருந்து வருகிறார். 1999, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றிபெற்றார்.

    அருணாசல பிரதேச மாநில சட்டசபையில் 60 தொகுதிகள் உள்ளன. அங்கு பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்- அமைச்சராக பெமா கண்டு உள்ளார்.

    அருணாசல பிரதேச சட்டசபைக்கு ஏப்ரல் 11-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. அங்கு ஆட்சியை பிடிக்க பா.ஜனதா, காங்கிரஸ் மல்லுகட்டின. அருணாசலபிரதேச மக்கள் கட்சியும் போட்டியிட்டது. ஓட்டு எண்ணிக்கையின் போது பா.ஜனதா பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. இதன்மூலம் பா.ஜனதா மீண்டும் அருணாசல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கிறது.
    ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. காலை 10 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 321 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி 110 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 110 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

    ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


    பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிப்பதால், பங்குச்சந்தைகளும் எழுச்சி பெற்றன. இன்று காலை முதலே விறுவிறுப்பாக வர்த்தகம் நடைபெற்றது. காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 886.56 புள்ளிகள் உயர்ந்து 39,996 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 257.95 புள்ளிகள் உயர்ந்து, 11,995.85 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்றது.

    சுமார் 1240 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. 370 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. 68 நிறுவனங்களின் பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை. 
    பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.
    சென்னை :

    சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் மற்றும் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் ஆகியவை சார்பில் சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் (பயோலாஜிக்கல் டைவர்சிட்டி) சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் தலைவர் ஏ.கே.ஜெயின் வரவேற்புரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தேசிய பல்லுயிர் பெருக்க செயல் திட்டம், நிதி திட்டம் மற்றும் விருதுகள் பெறுவதற்கான தகவல்கள் அடங்கிய கையேடு ஆகியவற்றை வெளியிட்டார்.

    இதையடுத்து வெங்கையா நாயுடு பேசியதாவது:-

    சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய கவலை ஏற்படுவது நம் நாட்டுக்கு புதிதல்ல. 2,200 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை ஆண்ட பேரரசர் அசோகரின் ஆட்சிக்காலத்திலேயே, விளையாட்டுக்காக வேட்டையாடுதல் மற்றும் வனப்பகுதிகளை எரிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. முதன் முறையாக அரச பிரகடனத்தின் மூலம், பாலூட்டிகள், பறவைகள் மற்றும் மீன் போன்றவற்றுக்காக பாதுகாக்கப்பட்ட புகலிடங்கள் முறைப்படி உருவாக்கப்பட்டன.

    அசோக பேரரசின் ஸ்தூபிதான் தற்போது இந்தியாவின் தேசிய சின்னமாக திகழ்கிறது. அதில் இடம் பெற்றுள்ள நான்கு சிங்க முகங்கள், அதிகாரம், துணிச்சல், கவுரவம் மற்றும் நம்பிக்கை ஆகிய நான்கு அம்சங்களை பிரதிபலிக்கின்றன. அத்துடன் இந்த சின்னத்தில் இடம் பெற்றுள்ள முழுமையாக மலர்ந்த தாமரை, வாழ்வியல் மற்றும் ஊக்க சிந்தனையின் ஊற்றுக்கண்ணாகவும் திகழ்கிறது.

    அனைத்து மதங்களும், மனிதர்களிடையேயான ஒற்றுமை மற்றும் இயற்கையை பற்றி போதிக்கின்றன. தொழில்மயமாகி வரும் உலகில் இயற்கை வளங்களுக்கு தற்போது கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுவதால் மரங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன.

    2001 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் சுமார் 16 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட பரப்பிலான மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விலங்குகளும், அரிய வகை தாவர இனங்களும் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் கடந்த 100 ஆண்டுகளில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயிர் வகைகள் வயல்வெளிகளில் இருந்து இல்லாமல் போய் விட்டது.

    இதனால் கோடிக்கணக்கான மக்களின் உணவு பாதுகாப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது தற்போதைய உணவு வினியோக முறை 80 சதவீதம் அரிசி, கோதுமை, சோளம் மற்றும் சிறு தானியங்கள் போன்ற குறிப்பிட்ட சில பயிர்களை சார்ந்தே இருக்கிறது.

    உள்நாட்டு விலங்கின உற்பத்தியும் பாதியாக குறைந்ததோடு, மீன்பிடி தொழிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேளாண் உயிரி பன்முகத்தன்மை மற்றும் அதனுடன் சார்ந்த நமது பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான அறிவும் வீழ்ச்சியடைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட நமது பாரம்பரிய உணவு பழக்க வழக்கம் உடலுக்கு ஆரோக்கியமானது என்பதோடு சமச்சீரான ஊட்டச்சத்தை வழங்குவதாக இருந்தது. எனவே பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு நாமே பொறுப்பு என்பதை உணர்ந்து, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மக்கள் நலன் சார்ந்தவையாக அமைய வேண்டும். இயற்கையை அரவணைத்து சென்றால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிறைவாக கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அரசு கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா நன்றியுரை நிகழ்த்தினார்.

    விழாவில் தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் செயலாளர் பூர்வஜா ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிகர் உள்பட மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக ‘ட்ரீ ஆம்புலன்சு’ என்ற அரசு சாரா அமைப்பு சார்பில் மரங்களுக்கு என்று பிரத்தியேகமாக முதல் கட்டமாக தொடங்கப்பட்ட ஆம்புலன்சு சேவையை வெங்கையா நாயுடு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து இந்தியாவின் பசுமை மனிதன் என்று அழைக்கப்படும் ட்ரீ ஆம்புலன்சு’ அமைப்பின் நிறுவனர் டாக்டர் கே.அப்துல் கனி கூறும்போது, மரங்களை பாதுகாப்பதற்கான முதல் உதவி அளித்தல், மரம் நடுதல், மரங்களை இடம் மாற்றி நடுதல், விதைப்பந்துகள் மூலம் புதிய மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகளுக்கும், மரங்களை பாதுகாத்து, வனப்பரப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்குவதற்காக மரங்களுக்கான ஆம்புலன்சு சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆம்புலன்சில் செடி, கொடி பற்றிய நிபுணர்கள், தோட்டக்கலை உபகரணங்கள் உடன் உதவியாளர்கள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துடன் பயணம் செய்வார்கள் என்றார்.
    கர்நாடகாவில் குமாரசாமி வெள்ளிக்கிழமை வரைக்கும் பதவியில் இருப்பார் என பா.ஜ.க தலைவர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.
    பெங்களூர்:

    பாராளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 300 இடங்கள் வரையில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 பாராளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. 25 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே கர்நாடாகவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் இடையே பஞ்சாயத்து தொடர்ந்து வரும் நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்பு பா.ஜ.க.வை உற்சாகம் அடைய செய்துள்ளது. 

    மாநிலத்தில் ஆட்சியை கலைப்பதற்கு பாராளுமன்றத் தேர்தல் வரை காத்திருக்க பா.ஜ.க. டெல்லி தலைமை கூறியதாகவும், அதனால் எடியூரப்பா அமைதியாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் பா.ஜனதா தரப்பு தகவல்கள் வெளியாகியது.



    இதற்கிடையே, நாளை தேர்தல் முடிவு வெளியானதும் மாநிலத்தில் ஆட்சியை கலைக்க ஆப்ரேஷன் தாமரையை பா.ஜ.க. முன்னெடுக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், மத்திய மந்திரியுமான சதானந்த கவுடா கூறுகையில், கர்நாடகாவில் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலைவரை தான் பதவியில் இருப்பார் என தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலத்தில் புதிய அரசை அமைக்க பா.ஜ.க. தயார் நிலையில் உள்ளது. முதல் மந்திரியாக இருக்கும் குமாரசாமி வெள்ளிக்கிழமை காலைவரை தான் பதவியில் இருப்பார், அவரால் இரவு தூங்கவே முடியாது. அவர்களின் கூட்டணியில் பிளவு ஏற்படுவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் ஆயிரம் கிலோவுக்கு அதிகமான இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.
    சண்டிகர்:

    நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் கடந்த 19ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

    இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க., காங்கிரஸ், சிரோன்மணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் போட்டியை அளிக்கின்றன.
     
    சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் நாடு முழுவதும் பா.ஜ.க. 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தகவல்கள் வெளியானது பா.ஜ.க.வுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.



    நாளை வெளியாகவுள்ள வாக்கு எண்ணிக்கையில் தாங்கள் ஆட்சியை கைப்பற்றி விடுவோம் என காங்கிரஸ் கட்சியும், சிரோன்மணி அகாலி தளம் கட்சியினரும் உற்சாகத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் ஆயிரம் கிலோ லட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நூற்றுக்கணக்கானோர் லட்டுக்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

    மற்ற கட்சிகளை பொறுத்தமட்டில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற சில கட்சிகள் கூட்டணி அமைத்தும், பல கட்சிகள் தனித்தனியாகவும் களம் கண்டன.

    மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். வருகிற 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போதுதான் ஆட்சி அமைப்பது யார்? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே, தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டெல்லியில் இன்று விருந்தளித்தார்.



    டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்ற இந்த விருந்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஜி.கே.வாசன்,  சரத்குமார், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் விருந்தில் பங்கேற்றனர்.
    பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வர விடமாட்டோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க .தலைமையிலான கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெறும். அதேபோல் இந்திய அளவில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமராக வருவார். இது கருத்து கணிப்பு மட்டுமல்ல. இதை தான் நாங்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே சொல்லிக்கொண்டே வந்தது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தொடரும் மத்தியில் மோடி ஆட்சி தொடரும.

    தற்போது தமிழகமெங்கும் தண்ணீர் பிரச்சனைகள் இருந்து வருகிறது. நிலத்தடி நீர் குறைந்து வருவதினாலே தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு காரணம் காலநிலை மாற்றம்தான். இது திடீரென்று வந்தது இல்லை. இன்னும் வருகிற காலங்களில் அதிகமான வறட்சி ஏற்படும், வெள்ளமும் வரலாம். ஆட்சியாளர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இது ஒரு ஐம்பது ஆண்டுகால பிரச்சனை. நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மழைக்காலங்களில் நீரை சேமித்து வைக்க வேண்டும். முக்கியமாக கோதாவரி காவிரி திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் அப்பொழுது தான் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.


    நாங்கள் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களுடைய கொள்கையை எப்பொழுதும் விட்டுத்தர மாட்டோம். டெல்டா மாவட்டங்களில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை வர விடமாட்டோம்.

    நாங்கள் கூட்டணிக்குள்ளே இருந்து அதை எதிர்ப்போம். மக்களுக்கு எது எல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதை எல்லாவற்றையும் நாங்களும் எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இன்னும் கற்பனை வடிவத்திலேயே இருக்கும் எதிர்க்கட்சிகளின் 3வது அணியில் ஜெகன்மோகன் ரெட்டியை இழுக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கையின்போது பா.ஜனதா கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைத்து விடவேண்டும் என்று முயற்சிகள் நடந்து வருகிறது.

    இதற்காக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். அவருக்கு உதவியாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு பரம எதிரியாக திகழும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியையும் மாநில கட்சிகளின் அணியில் இடம் பெற செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சரத்பவார் கடந்த சில தினங்களாக ஜெகன்மோகன் ரெட்டியுடன் இது தொடர்பாக பேசி வருகிறார்.

    இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு ஆதரவான நிலை பரவி இருப்பதால் சில மாநில கட்சி தலைவர்கள் காங்கிரசுடன் சேர தயங்கியபடி உள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டியும் 23-ந்தேதிக்கு பிறகு இதில் முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்து இருக்கிறார்.

    இப்போதே காங்கிரசுடன் கூட்டணி என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் என்று அவர் தயங்கியபடி உள்ளார்.

    இதையறிந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று முதல் ஜெகன்மோகன் ரெட்டியை போனில் தொடர்பு கொள்ள முயன்று வருகிறார். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி அவருடன் பேசுவதை தவிர்த்து விட்டார்.

    இதனால் ஜெகன்மோகன் ரெட்டி எத்தகைய முடிவை மேற்கொள்வார் என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது. பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் அவர் பா.ஜனதா பக்கம் சாய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    எனது வார்த்தைகளால் எந்த தேசியவாதியாவது பாதிக்கப்பட்டு இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    போபால்:

    மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை ‘தேச பக்தர்’ என்று கூறியதன் மூலம் போபால் தொகுதி பா.ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் சர்ச்சையில் சிக்கினார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்டார்.

    இந்நிலையில், அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது வார்த்தைகளால் எந்த தேசியவாதியாவது பாதிக்கப்பட்டு இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் பணிகள் முடிந்தநிலையில், இது சிந்திக்க வேண்டிய நேரம். பிராயச்சித்தம் தேடும் செயலாக நான் மவுனம் அனுசரிக்கப்போகிறேன். கடுமையான விரதத்தை தொடங்கி விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்களுக்கு டெல்லியில் நாளை பாஜக தலைவர் அமித் ஷா ஏற்பாடு செய்துள்ள விருந்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகளின்படி, மத்தியில் ஆளும் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நாளை இரவு 7 மணியளவில் டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் விருந்து அளிக்கிறார்.



    பிரதமர் மோடி மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்கும் இந்த விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி, பெஸ்ட் ராமசாமி, நடிகர் சரத்குமார், டாக்டர் வே.தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், பூவை.ஜெகன் மூர்த்தி உள்ளிட்டவர்களுக்கு அமித்ஷா சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
    மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பாஜக கூறியுள்ளது.
    போபால்:

    மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. கமல் நாத் முதல்வராக பொறுப்பேற்றார்.

    230 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு 114 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 109 உறுப்பினர்களும் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 உறுப்பினர்களும், சமாஜ்வாடி கட்சிக்கு ஒரு உறுப்பினரும், 4 சுயேட்சை உறுப்பினர்களும் உள்ளனர். ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி ஆதரவு அளித்தது.

    இந்நிலையில், மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இதுதொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா (பாஜக) கூறியதாவது:-


    மத்திய பிரதேச சட்டமன்ற சிறப்பு அமர்வை விரைவில் கூட்டும்படி கவர்னருக்கு கடிதம் எழுத உள்ளேன். விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க விரும்புகிறோம். அரசின் ஸ்திரத்தன்மையை  சோதிக்கவும் விரும்புகிறோம்.

    முடிவுகள் எடுப்பதிலும், நிதி விவகாரங்களிலும் இந்த பலவீனமான காங்கிரஸ் அரசுக்கு சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இருக்கிறதா என்பதை சோதிக்க விரும்புகிறோம். அரசு  மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எந்த முயற்சியையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஸ்திரத்தன்மை குறித்து நிறைய குழப்பங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்றத் தேர்தல் முடிவு குறித்த கருத்துக் கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக இருந்ததால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று அபாரமாக உயர்ந்தன.
    மும்பை:

    பாராளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. 

    இந்த கருத்துக் கணிப்பால் இந்திய பங்குச்சந்தைகள் உற்சாகமடைந்தன. காலை முதலே பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. மதிய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1090 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் ஆனது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 320 புள்ளிகள் உயர்ந்தது. முன்னணி நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. பங்குச்சந்தைகளில் ஒரே நிமிடத்தில் ரூ. 3. 2 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு குவிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பாஜகவுக்கு ஆதரவான கருத்துக் கணிப்புக்களால் ஏற்பட்ட உற்சாகம் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சற்று உயர்ந்தது. காலை வர்த்தகத்தின்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்து, ரூ.69.44 என்ற அளவில் இருந்தது.
    ×