search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    கருத்து கணிப்புகள் பா.ஜனதாவின் ஏற்பாடு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் கூடிய ஒரு மாற்றம் வர இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் கருத்து கணிப்பு என்று தவறான தகவலை பரப்பி இருக்கிறார்கள்.

    எனது அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். இந்தத் தேர்தலில் மோடி இல்லாத ஒரு அரசு தான் அமையும். தமிழ்நாட்டிலும் 37 தொகுதிகளில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

    ஆனால் நேற்று வெளியான கருத்துக் கணிப்பில் ஒரு நிறுவனத்துக்கும் இன்னொரு நிறுவனத்துக்கும் இடையிலான வேறுபாடு சுமார் 100 இருக்கிறது. உண்மையான கணிப்பு என்றால் 5 தொகுதிகள்தான் வித்தியாசம் இருக்கும். நாளை மறுநாள் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுவதை மனதில் கொண்டு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நம்பகத்தன்மை இல்லை.

    பா.ஜனதா ஏற்பாடு செய்து வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பாகவே தெரிகிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையத்தை மோடி தன் கைக்குள் போட்டு இருக்கிறார். அவருக்கு ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது.


    எனவே வாக்கு எண்ணிக்கையின் போது எந்த அத்துமீறலையும் செய்வார். அதனால் தான் முன்கூட்டியே இப்படி ஒரு கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    386 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 30 பேர் வீதம் கருத்து கேட்டு இருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும். நான் நமது தொண்டர்களுக்கு சொல்வதெல்லாம் வாக்கு எண்ணிக்கையின் போது உஷாராக இருக்க வேண்டும் என்பதுதான்.

    தற்போது தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. நான் நந்தனத்தில் குடியிருக்கிறேன் எனது வீட்டுக்கு மஞ்சள் மற்றும் ஈஸ்ட் மேன் கலரில் தண்ணீர் வருகிறது. அதில் குளித்தால் நோய்கள் வரும். ஏற்கனவே பருவமழை பொய்த்துவிட்டது.

    நீர் பற்றாக்குறை வரும் என்பது தெரிந்திருந்தும் தமிழக அரசு முன்கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அஸ்லம் பாட்ஷா, ஜோதி ராஜன், மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சிவராஜ சேகரன், எம்.எஸ்.திரவியம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    தமிழகத்தில் கருத்துக் கணிப்புகள் மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், இதில் திமுக பெருமைப்பட ஒன்றும் இல்லை என்றும் இல.கணேசன் கூறினார்.
    ஈரோடு:

    மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில், திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் எனவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

    இதுபற்றி பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியதாவது:-

    மத்தியில் பாஜக ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்புகளில் தெளிவாக தெரியவந்துள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது.



    தமிழகத்தை பொருத்தவரை கருத்துக்கணிப்புகள் மாறக்கூடிய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு 50 சதவீத வெற்றி வாய்ப்புள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் திமுக பெருமைப்பட ஒன்றும் இல்லை,

    அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் என்ற பெருங்காய டப்பாவுடன் மற்ற கட்சிகள் இணைவது சாத்தியமில்லாதது.

    இவ்வாறு அவர் கூறினார்.  
    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இத்தகைய கருத்துக் கணிப்புகளில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளிதழ் ஒன்றுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலையே உள்ளது. அதனால்தான் மோடியின் பிரசாரம் வெறுப்பை வெளிக்காட்டும் வகையில் இருந்தது. அரசியல் ரீதியாக நான் அன்பையே வெளிப்படுத்துகிறேன்.

    23-ந் தேதி மக்கள் முடிவு என்ன என்பது தெரிந்து விடும். அதன்பிறகு தேர்தல் முடிவுகள் அடிப்படையில் நாங்கள் செயல்படுவோம். புதிய அரசு அமைவதில் நீண்ட இழுபறி இருக்காது என்று நினைக்கிறேன்.

    தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே அது பற்றி சொல்வது சரியாக இருக்காது. பிரதமர் மோடியை தேர்தலில் தோற்கடிப்பதும், ஆர்.எஸ்.எஸ்.சின் தவறான கொள்கைகளை வீழ்த்துவதும் தான் எனது இலக்காகும்.

    இந்த தேர்தலில் மோடி நிச்சயமாக தோல்வி அடைவார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மோடியால் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கவே முடியாது. மோடி மீது உள்ள பரவலான அதிருப்தி அவரை கண்டிப்பாக வீழ்த்தும்.

    தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த பிறகுதான் புதிய ஆட்சி பற்றி தெளிவாக தெரிய வரும். எனவே அது பற்றி இப்போதே பதில் சொல்வது சரியாக இருக்காது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இத்தகைய கருத்துக் கணிப்புகளில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது.

    மக்களின் விருப்பம் என்ன என்பது 23-ந் தேதி தெரிந்து விடும். அந்த முடிவுக்கு ஏற்ப எங்களது நடவடிக்கைகள் அமையும்.

    மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் மக்களின் குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்வோம். அனைத்துத் துறைகளும் மேம்படும் வகையில் பொருளாதார கொள்கையை சீரமைப்போம். மோடியின் ஆணவத்தால் நமது நாட்டின் பொருளாதாரம் சிதைந்து விட்டது.

    பொருளாதார கொள்கைகளை மோடி செயல்படுத்தும் முன்பு மன்மோகன்சிங் போன்ற பொருளாதார மேதைகளை கலந்து ஆலோசிக்க வேண்டும். நாங்கள் அப்படி இருக்க மாட்டோம். எதிர்க் கட்சிகளுக்கு மதிப்பு அளிப்போம்.


    மோடி அரசு, அரசியல மைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவதால் தான் நாங்கள் முழு மூச்சாக எதிர்க்கிறோம். மக்களின் குரலுக்கு இந்த அரசு மதிப்பு அளிப்பது இல்லை. எனவேதான் மோடிஅரசை வீழ்த்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.

    இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் இன்று மாலை வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக (தமிழ்நாட்டின்  வேலூர் பாராளுமன்ற தொகுதியை தவிர) நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பிரபல ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

    அவ்வகையில், ரிப்பப்ளிக் டி.வி. மற்றும் ஜன்கிபாத் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக கூட்டணி  287 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும்  ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களிலும், இதர கட்சிகள் 127 தொகுதிளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

    இதேபோல், டைம்ஸ் நவ் மற்றும் சி.என்.எக்ஸ். நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 306 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 132  இடங்களிலும், இதர கட்சிகள் 104 தொகுதிளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

    மேலும், நியூஸ் எக்ஸ் மற்றும் இந்தியா நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 298 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும்  ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 118  இடங்களிலும், இதர கட்சிகள் 126 தொகுதிளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

    காந்தியை தீவிரவாதி என்பதா? என்று திருமாவளவன் மீது தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:-

    சகோதரர் திருமாவளவனின் சுயரூபமும், மன நிலையும் வெளிப்பட்டு விட்டது. சனாதன தர்மம் எதிர்ப்பு என்று பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் தேர்தல் வந்ததும் சிதம்பரத்தில் தேர்தல் பக்தி பரவச வேடத்தில் சிவாச்சாரியர்களிடம் மண்டியிட்டு ஆசி வாங்கினார். நடிப்பில் கமலையும் மிஞ்சிவிட்டார்.

    இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு முழு காரணம் காங்கிரஸ் என்பது எல்லோருக்கும் தெரியும். காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று ஆவேசப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குள் எல்லாவற்றையும் மறந்து காங்கிரசோடு கூட்டணி அமைத்து ராகுலை பிரதமர் ஆக்குவதே என் முதல் வேலை என்கிறார்.

    தமிழர்களுக்காக ரத்தக் கண்ணீர் சிந்துவதாக கூறினார். ஆனால் தமிழர்களை கொன்று ரத்தக்கறை படிந்த ராஜபக்சேவின் கைகளினாலேயே பரிசும் வாங்கி வந்தார்.

     


    ஆக, இவர்களின் கொள்கை என்பது அவர்களின் சுய நலம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார். ஆனால், அந்த மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. முழுக்க முழுக்க தனது ஆதாயத்துக்காக சாதியை வைத்து அரசியல் நடத்துகிறார்.

    இப்போது காந்திகூட அவரது கண்களுக்கு தீவிரவாதி ஆகிவிட்டார். கோட்சேவின் செயலை யாரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் காந்தியை ஒரு இந்து தீவிரவாதி என்று மிகவும் மோசமாக விமர்சிக்கும் அளவுக்கு சென்று இருக்கிறார். இதற்கு மற்ற கட்சிகள் என்ன சொல்லப் போகிறது?

    காந்தி உண்மையான இந்து. அவர் வணங்கும் கடவுளை ‘ஹேராம்’ என்று சொன்னது தப்பா? எல்லோரும் அவரவர் மதங்களில் உண்மையாக இருங்கள் என்றுதான் காந்தி சொன்னார். அவரையும் திருமாவளவன் தீவிரவாதி ஆக்கி இருக்கிறார்.

    இளைஞர்கள் மனதில் வி‌ஷத்தை பாய்ச்சி வரும் திருமாவளவன் மனநிலை எப்படி இருக்கிறது என்பது வெளிப்பட்டு இருக்கிறது. தான் ஒரு பிரிவினைவாதி என்பதை அடையாளப்படுத்தி இருக்கிறார். இப்படியே பிரிவினை உணர்வுகளுடன் பேசியே குளிர்காய நினைக்கிறார். ஆனால் மக்கள் அவ்வளவு எளிதில் அவரது வலையில் சிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கோட்சேவை பற்றி கமல் பேசி வருவது தேவையற்றது. அவர் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தால் அடுத்த தேர்தலில் கட்சியே இல்லாமல் போய்விடும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் பேசியுள்ளார்.

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற விழாவில் நடிகர் எஸ்.வி. சேகர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொருளாதார அடிப்படையில் தான் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். அவரது ஆசையை மோடி நிறைவேற்றி இருக்கிறார். இப்போது மோடி அஸ்திவாரம் தான் போட்டு இருக் கிறார். அதை கண்டே பலர் ஆடிப்போய் இருக்கிறார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் திருடர்கள், கடத்தல் காரர்களுக்கு தான் பாதிப்பு.

    திருடர்களுக்கு போலீசை கண்டால் பிடிக்காது. அதனால் தான் எதிர்க்கட்சிகளுக்கு மோடியை பிடிக்க வில்லை. வெறும் அரசியல் மட்டுமே செய்து கொண்டு இருக்கக்கூடாது. அடுத்த தலைமுறையை பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறவர்களை தட்டி விடக்கூடாது.

    தமிழ்நாட்டில் மோடியை பற்றி பேசுவது அனைத்தும் கற்பனை கதைகள். மோடி ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்பவர் கிடையாது. தேர்தலில் மோடி 300 இடங்களுக்கு மேல் பெற்று மீண்டும் பிரதமராக வருவார்.

    மோடி கொண்டு வந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அங்கீகரித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த நேரத்தில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்து மதத்தை கேவலப்படுத்தக்கூடிய எந்த செயலையும் மற்ற மதத்தினர் ரசிப்பது இல்லை என்பது தான் உண்மை.


    இந்துக்கள் பொறுமைசாலிகள். ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை 23-ந்தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணும்போது தெரிந்து கொள்வார்கள். கோட்சேவை பற்றி கமல் பேசி வருவது தேவையற்றது. நான்கூட முன்பு கமல்ஹாசன் தேர்தலில் 6 சதவீத வாக்குகளை பெற்று தவிர்க்க முடியாத இடத்துக்கு வருவார் என்று கூறி இருந்தேன். ஆனால் அவர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தால் அடுத்த தேர்தலில் கமல்ஹாசனின் கட்சியே இல்லாமல் போய்விடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேற்கு வாங்காளத்தில் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜனதா தொண்டர்களில் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.
    பாராளுமன்ற தேர்தலில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று நடந்து வருகிறது. 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பல இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக-வுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது பாஜக கட்சியின் 2 வேட்பாளர்களின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

    இதேபோல் வடக்கு கொல்கத்தாவில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. சில வாக்குச்சாவடிகளில் பூத்தை கைப்பற்றும் முயற்சியில் கடுமையான வன்முறை நிகழ்ந்தது.



    இதனைத்தொடர்ந்து அந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏற்கனவே 6-கட்ட தேர்தலின் போதும் மேற்கு வங்காளத்தில் வன்முறை ஏற்பட்டது. கடைசி கட்ட பிரச்சாரத்தில் மோதல் ஏற்பட்டதால் பிரசாரம் ஒரு நாளைக்கு முன்பாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. இதேபோல பஞ்சாபிலும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
    புதுவையில் மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை மற்றும் கடை வியாபாரிகள் தொழில் செய்ய முடியாமல் ரவுடிகளால் மாமூல் வசூலிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தற்போது மாமூல் வேட்டைகளுக்கு சென்று ரவுடிகள் மாமூல் வசூலிப்பதால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதோடு, புதிய தொழில்கள் தொடங்கப்படுவதும் தடைபட்டு வருகிறது.

    ரவுடிகளின் ராஜ்ஜியமாக புதுவை மாறி வருவதை வில்லியனூர் சம்பவம் உறுதி செய்கிறது.

    இச்சம்பவத்தில் ஆளும் கட்சியினரே ஈடுபட்டு உள்ளனர். ஆனால், குற்றவாளிகள் திருந்தி நல்ல முறையில் வாழ்ந்து வரும் நிலையிலும் அவர்கள் மீது 144 சட்டத்தை போட்டு அவர்கள் பழிவாங்கப்பட்டு வருகின்றனர்.

    வணிகர்களிடமும், சிறு, சிறு தொழில் செய்வோரிடமும் மாமூல் வசூல் செய்யும் அனைவரின் மீதும் குண்டர் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    புதுவை மாநிலத்தில் தற்போது தொழில்கள் நலிவடைந்த நிலையில் வணிகர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள மின்சார வரி, தொழில் வரி, குப்பை வரி என அனைத்துக்கும் அதிக அளவில் வரிவசூல் செய்வதோடு புதிதாக மாமூல் வசூல் என்ற வரியையும் வணிகர்களிடம் வசூலிப்பது நியாயமா? இந்த நிலை நீடித்தால் புதுவை மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும்.

    தற்போது காவல்துறையில் குறுக்கிடும் எந்த அரசியல் வாதியாக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சட்ட விரோதமான 3 நம்பர் ஆன்-லைன் லாட்டரி விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அவற்றை எல்லாம் தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் ரோந்து பணியை அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    உத்தரகாண்ட் கேதார்நாத் குகையில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்து வருகிறார்.
    புதுடெல்லி

    பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது. பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார்.

    முன்னதாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றடைந்த பிரதமர் மோடி, பாரம்பரிய உடையில் கோவிலுக்கு நடந்து சென்றார். 4-வது முறை கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் நதிக்கரையில் உள்ள சிறிய குகைக்குள் சென்று, காவி ஆடை அணிந்து தியானம் செய்தார். தொடர்ந்து இங்கு அவர் 20 மணி நேரம் இருப்பார் என்று கூறப்படுகிறது. கேதார்நாத்தில் நடக்கும் ஆரத்தி நிகழ்ச்சியிலும் மோடி கலந்துகொள்வார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேதார்நாத்தில் இன்று தங்கும் அவர் நாளை இங்கிருந்து பத்ரிநாத் புறப்பட்டுச் செல்கிறார். நாளை மாலை அவர் மீண்டும் டெல்லி திரும்புகிறார்.
    நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்பதன் மூலம் சாத்வி பிராக்யா சிங் தாக்குர் போன்றவர்கள் இந்தியாவின் ஆன்மாவை கொல்வதாக நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான சாத்வி பிரக்யா சிங் தாக்குர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார்; இருக்கிறார்; அப்படியே தொடர்ந்து இருப்பார்” என பதில் அளித்தார். அதுமட்டுமின்றி, “நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என்று சொல்கிறவர்கள், தங்களை பார்க்கட்டும். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும்” என குறிப்பிட்டார்.

    பின்னர் இந்த கருத்து தொடர்பாக கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் சாத்வி பிரக்யா சிங் தாக்குர்
    பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

    இந்நிலையில், 'நாதுராம் கோட்சே காந்தியின் உடலைத்தான் சுட்டுக் கொன்றார். ஆனால், நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்பதன் மூலம் சாத்வி  பிராக்யா சிங் தாக்குர் போன்றவர்கள் அகிம்சை, அமைதி, சகிப்புத்தன்மை உள்ளிட்ட இந்தியாவின் ஆன்மாவை கொல்கின்றனர்’ என நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

    ‘அனைத்து விதமான அதிகாரம் மற்றும் அரசியலுக்கு எல்லாம் உயர்வானவர் காந்தி. குறுகிய கண்ணோட்டத்துடனான அரசியல் ஆதாயங்களுக்கு இடமளிக்காமல் ராஜநீதிக்கு உட்பட்ட வகையில் கட்சியில் இருந்து நீக்க பாஜக தலைமை உடனடியாக தீர்மானிக்க வேண்டும்’ எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தியுள்ளார்.
    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று கமல் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு திருமாவளவன், முத்தரசன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    கமல்ஹாசன் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:-

    மகாத்மா காந்தி இந்து மதத்தினரை மட்டுமல்ல எல்லா மதத்தவரையும் அரவணைத்து சென்றார். பிரார்த்தனையில் கூட பகவத் கீதையுடன் திருக்குர்ரானையும் சேர்த்து படிக்க வேண்டும் என்று கூறினார்.

    மத சார்பற்ற கொள்கையில் உறுதியுடன் இருந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த பா.ஜ.க. வினர் தலையில் தூக்கி கொண்டாடுகின்றது. கமல் கூறிய கருத்தில் பெரிய தவறு இல்லை. அதனை பா.ஜ.க.வினர் அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். கோட்சேவை தேச பக்தன் என்றும் அவர் செய்தது சரிதான் என்றும் கூறுகின்றனர்.

    பா.ஜ.க. வேட்பாளரே கோட்சே தேச பக்தன் என்று கூறுகிறார். அதற்காக வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி அவரை வேட்பாளரில் இருந்து நீக்கவில்லை.

    மோடியும், அமித்ஷாவும் நாடகம் ஆடுகிறார்கள். ஜனநாயக நாட்டில் கருத்துக்கள் கூற உரிமை உண்டு. அதனை மறுப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அதை தவிர்த்து செருப்பு, முட்டைகளை வீசி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இதை மோடி கண்டிக்கவில்லை.

    பா.ஜ.க.வை பொறுத்த வரை கோட்சே தேச பக்தர். காந்தி தேச துரோகி. வரலாற்று உண்மையை சொன்ன கமலை தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள். அவரை தனிமைப்படுத்த முடியாது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    பெரியார், அம்பேத்கார் கடந்த காலங்களில் இந்து மதத்தை பற்றி என்ன கருத்துக்களை கூறினார்களோ அதைதான் கமல் ஹாசன் பிரதிபலிக்கிறார். இந்து என்ற பெயரில் ஒரு மதம் இல்லவே இல்லை.

    மதங்களுக்கு இடையில் மோதல்-வன்முறை அவ்வப்போது நடந்து கொண்டே இருந்தது. இந்தியா என்கிற ஒரு தேசத்தையும் இந்து என்கிற மதத்தையும் ஆங்கிலேயர்களின் ஆட்சிதான் உருவாக்கியது. எனவே கமல் சொல்வது ஒரு வரலாற்று உண்மைதான்.


    அதை இன்று அரசியல் ஆதாயத்திற்கு வசதியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்து என்கிற உணர்வை தூண்டி பெரும்பான்மை மக்களின் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதுதான் அவர்களின் உண்மையான நோக்கம். அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் ஒரே இலக்கு.

    கமலின் கருத்து உண்மையானதும், நியாயமானதும் ஆகும். அவரை அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரலாறு தெரியாமல் பேசுவதாக பாரதிய ஜனதா தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல் தீவிரவாதி ஒரு ‘இந்து’ என்று சர்ச்சையை கிளப்பிய கமல் இந்து என்பது இந்துக்கள் பெயர் அல்ல என்று மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர்கூறி இருப்பதாவது:-

    ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, ‘இந்து’ என்ற வார்த்தையை சொல்லவில்லை.

    முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவர்களால் ‘இந்து’ என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘பெயராக’, ‘மதமாக’ கொள்வது எத்தகைய அறியாமை என்று குறிப்பிட்டுள்ளார். கமலின் சர்ச்சைக்குரிய இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளதாவது:-

    கமல் எதற்காக இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

    விஷ்ணுபுராணத்தில் ஒரு ஸ்லோகம் ‘இமயம் தொடங்கி இந்து மகா சமுத்திரம் வரை பரந்து விரிந்த இந்த நிலப்பரப்பு இந்துஸ்தானம்’ என்று விவரிக்கிறது. இந்துஸ்தான் என்பது மட்டுமல்ல. இந்த நாட்டின் எல்லையையும் குறிப்பிடுகிறது. இது ஆண்டவனால் உருவாக்கப்பட்ட தேசம்.

    நம்நாட்டில் இருக்கும் மதங்களை சனாதன தர்மம் என்போம். நம் நாட்டில் தோன்றிய எல்லா மதங்களுக்கு இடையேயும் ஒரு ஒற்றுமை உண்டு.

    ஆனால், பின்நாளில் அந்நிய மண்ணில் தோன்றி இங்கு வந்த முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் அடிப்படை கூறுகள் வேறுபட்டவை.

    அந்த இரு மதங்களும் வந்ததால் நம் நாட்டில் தோன்றிய மதங்களை இந்துஸ்தான மதங்கள் என்று வகைப்படுத்தினார்கள். பின்னர் இந்து மதங்கள், இந்து மதம் என்று நமது சவுகரியத்துக்காக நாம் வைத்துக்கொண்ட பெயர்தான் இது. மாற்றான் தரவில்லை. அவன் வருவதற்கு முன்பே நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட பெயர்தான் இந்து.

    சங்கராச்சாரியார் தனது உதவியாளரிடம் பைலை கொடுத்து இதை வெங்கட்ராமனிடம் கொண்டுபோய் கொடு என்பது வழக்கம். திடீரென்று ஒரு நாள் இந்த பைலை ‘குடுமி’ வெங்கட்ராமனிடம் கொண்டுபோய் கொடு என்றாராம்.

    அதை கேட்டதும் உதவியாளருக்கு ஆச்சரியம். என்ன இப்படி குடுமி வெங்கட்ராமன் என்று சொல்கிறாரே என்று குழம்பிபோனார். அப்புறம்தான் அவருக்கு புரிந்தது அங்கு புதிதாக இன்னொரு வெங்கட்ராமன் வேலையில் சேர்ந்து இருந்தார்.

    எனவேதான் ஏற்கனவே இருந்த வெங்கட்ராமன் குடுமி வைத்திருந்ததை அடையாளப்படுத்துவதற்காக அப்படி கூறி இருக்கிறார். பல மதங்களின் வருகையால் இங்குள்ள மதங்களை அடையாளப்படுத்துவதற்காக இந்த நாட்டின் மதம் இந்து மதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.

    இந்து என்று சொல்வதற்கு இங்குள்ளவர்கள் வெட்கப்படலாம். ஆனால், பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இன்றும் ‘மோடி பிரைம் மினிஸ்டர் அப் இந்துஸ்தான்’ என்றுதான் சொல்கிறார்கள்.

    இங்கிருந்து ஹஜ் புனித பயணம் செய்பவர்களையும் அங்குள்ளவர்கள் இந்து என்றே சொல்கிறார்கள். நம் தேசத்தவர் அனைவரும் இந்துக்களே.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×