search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    மரணத்தையே சந்திக்கும் நிலை வந்தாலும் மோடியின் குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    போபால்:

    ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    ராஜீவ்காந்தியை நம்பர்-1 ஊழல் பேர்வழியாக இருந்த நிலையில் தான் மரணத்தை சந்தித்தார் என்று கூறினார். மேலும் விராத் போர் கப்பலை ராஜீவ்காந்தி சுற்றுலாவுக்கு பயன்படுத்தினார் என்றும் கூறினார்.

    இவ்வாறு மோடி ராகுல்காந்தி குடும்பத்தினரை விமர்சித்து வருவதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கு பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியினர் தங்களுடைய முன்னோர்களின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்கிறார்கள். அவர்கள் என்னென்ன தவறு செய்தார்கள் என்பதை சுட்டிக்காட்டுவது தவறான வி‌ஷயம் அல்ல என்று கூறினார்.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி எப்போதும் எங்கள் மீது வெறுப்புத்தன்மையுடன் பேசி வருகிறார். அவர் எனது தந்தை ராஜீவ்காந்தி, பாட்டி இந்திராகாந்தி, கொள்ளு தாத்தா நேரு என அனைவரையும் அவமதித்து பேசி வருகிறார்.



    அதே நேரத்தில் நான் என் வாழ்நாளில் ஒருபோதும் மோடியின் தாயார், தந்தை அல்லது அவரது குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன். நான் மரணத்தையே சந்திக்கும் நிலை வந்தாலும் அவர்களை அவமதித்து பேசமாட்டேன்.

    நான் பிரதமர் மோடியை அன்பால் வென்று காட்டுவேன். அவரை கட்டி அணைத்துக் கொள்வேன். நான் ஆர்.எஸ்.எஸ். அல்லது பாரதிய ஜனதாகாரன் அல்ல. நான் காங்கிரஸ்காரன். எனவே யாரையும் அவமதிக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை.

    யார் எங்களை வெறுத்தாலும் பதிலுக்கு நாங்கள் அவர்களுக்கு அன்பை திருப்பிக் கொடுப்போம்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார். 
    மேற்கு வங்காளத்தின் முதல் மந்திரி மம்தாவின் மார்பிங் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக கைதான பாஜக இளைஞரணி பெண் பொறுப்பாளர் பிரியங்கா சர்மா, மம்தா புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட  சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது.
     
    இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை தாஸ்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டார்.



    இதற்கிடையே, பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் என்.கே.கவுல் தாக்கல் செய்தார். பிரியங்கா கைது செய்யப்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில், மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துவிட்டு பிரியங்கா செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியது.

    இந்நிலையில் இன்று பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பிரியங்கா,  ‘நான் மம்தா புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். சிறையில் இருந்தபோது போலீசார் என்னை கொடுமைப்படுத்தினர். சிறை காவலாளி நேற்று என்னை தள்ளிவிட்டார். 

    நான் குற்றவாளி அல்ல, என்னை இவ்வாறு நடத்துவது முறை அல்ல என அவரிடம் கூறினேன். இருப்பினும் என்னை சரியாக நடத்தவில்லை. சிறைக்குள் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இதனால் நான் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன்’ என கூறினார். 
    பாராளுமன்ற தேர்தலில் 6ம் கட்டத்திலேயே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுவிட்டோம் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. 7-வது கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 543 இடங்களில் பெரும்பான்மை பெற 272 இடங்களில் வெற்றி பெறவேண்டும்.

    இந்நிலையில், 6ம் கட்ட தேர்தலிலேயே ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற்றுவிட்டோம் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. 5 மற்றும் 6-வது கட்ட தேர்தலிலேயே பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை நாங்கள் பெற்றுவிட்டோம்.

    7வது கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகளால் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
    கமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி கூறியது சரிதான் என்று பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் செய்த போது ஒரு பெண் தனது கணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் இன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் கணவரை சந்தித்து நலம் விசாரித்தார். மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவரது குடும்பத்தினருக்கு உறுதி அளித்தார்.

    எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பது இல்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என பேசியுள்ளார். அவர் அரசியலில் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரை பின்னால் இருந்து யாரோ இயக்கி கொண்டு இருக்கிறார்கள். அது அரசியல் கட்சிகளா? அல்லது வேறு யாருமா என்று தெரியவில்லை. எனவே அவரது பிரசாரத்தை தடை செய்ய வேண்டும்.

    மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் நான் என்றும், ஒரு கட்டத்தில் இந்த நாட்டை விட்டே வெளியேறும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறியவர் கமல்ஹாசன். இப்போது தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரது சர்ச்சை பேச்சுக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது.


    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பல முகதோற்றத்தில் உள்ளார். அவரிடம் தோல்வி பயம் தெரிகிறது. நாங்கள் வெற்றியின் விளிம்பில் உள்ளோம். சந்திரசேகர ராவை பார்த்த பிறகு அவர்களுடைய நிலைப்பாட்டை தி.மு.க. தெரிவிக்காதது ஏன்?

    தமிழகத்தில் முதல்- அமைச்சரின் காப்பீடு திட்டம் மற்றும் பிரதமரின் காப்பீடு திட்டங்களின் மூலம் ஒரு கோடியே 75 லட்சம் பேர் பயனடைய தகுதி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நிருபர்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி குறிப்பிடும் போது, தீவிரவாத செயல்களில் இந்துக்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும், தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என்றும் பேட்டி அளித்தது குறித்து கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன் பிரதமர் மோடி கூறியது சரிதான் என்றார்.
    என்னை அரசியலை விட்டு நீக்க சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று மாலை தமிழக பா.ஜ.க. தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது அரசியல் வாழ்க்கை என்றுமே நேர்மையானது தான். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அதிக நாட்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது ஆசை. அதே போல் என்னை அரசியலை விட்டு நீக்க சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இல்லை.

    நான்தான் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க.வினர் பேசிக் கொண்டிருக்கின்றனர் என கூறினேன். இல்லையென்று அவர்கள் நிரூபிக்கட்டும். அவர் சார்பாக யாராவது பேசி இருக்கலாம். அவர் சார்பாக யாரும் பேசவில்லை என நிரூபிக்கட்டும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.


    சந்திரசேகரராவை சந்தித்த பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசவில்லை. ராகுல்காந்தியை தான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவோம் என அவர் கூறவில்லை. இன்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்துவிட்டு, சந்திரசேகரராவை சந்தித்தது ஒன்றுமில்லை என்று சொல்வதற்காக போனோம் என துரைமுருகன் கூறுகிறார். அவர்கள் நிறம் மாறிக் கொண்டிருக்கிறார்கள். சந்திரசேகர ராவை பார்க்கிறார்கள்.

    சந்திரபாபு நாயுடுவிடம் தூது விடுகிறார்கள். அதே போல் பா.ஜ.க.வுக்கும் தூதுவிட்டு இருக்கிறார்கள். ஸ்டாலின் சொல்வதற்காக உடனடியாக நிரூபிக்க வேண்டும் என்றில்லை. எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் இதை நான் கூறுகிறேன். உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சொல்ல வேண்டும் என்ற பாரம்பரியத்தில் நான் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் நடைபெற்ற தாக்குதலுக்கு மம்தாவின் தோல்வி பயமே காரணம் என தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.
    மும்பை:

    கொல்கத்தா நகரில் நேற்று மாலை நடைபெற்ற பாஜக பேரணியில் அக்கட்சி தலைவர் அமித் ஷா பங்கேற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து சுமார் 7 மணியளவில் கல்லூரி சாலைக்குள் பேரணி நுழைந்தபோது அமித் ஷா வந்த பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    பேரணியில் வந்தவர்களுக்கும் வேறொரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது. பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில், கொல்கத்தாவில் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் நடந்த தாக்குதலுக்கு மம்தாவின் தோல்வி பயமே காரணம் என மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.



    இதுதொடர்பாக அவர் கூறுகையில், மம்தா பானர்ஜிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா பேரணியில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    மேர்கு வங்காளத்தில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து வருகிறார். தன்னை எதிர்த்து யாரும் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என அவர் செயல்பட்டு வருகிறார்.

    எனவே, பாராளுமன்ற தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
    பா.ஜ.க.வுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு முக ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசி வருவதாக இன்று காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வுடன் பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கு ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியுடன் நான் பேசியதாக பச்சைப் பொய் கூறிய தமிழிசைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்



    பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை இந்த அளவு தரம் தாழ்த்திக் கொண்டது வேதனை அளிக்கிறது. 

    ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதில் இரட்டிப்பு உறுதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
    ஆர்.எஸ்.எஸ்-ஐ பழிப்பதுபோல் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை காங்கிரஸ் புகழ்கிறது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஐ.எஸ். பயங்கரவாத இயக்கமும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஒன்றே என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    இதுகுறித்து பழம்பெரும் ஆர்.எஸ்.எஸ். இயக்க தொண்டரும், பா.ஜனதா மூத்த தலைவருமான இல.கணேசன் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு தேச விரோதிக்கும், தேச பக்தருக்கும் வித்தியாசம் தெரியாது. அழகிரியும் அந்த பட்டியலில் இருப்பவர்தான்.


    பாரத நாட்டில் கொள்கை ரீதியாக வேறுபட்டவர்கள் கூட தேசபக்திக்கும், ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் உதாரணமான இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்று புகழ்ந்து இருக்கிறார்கள்.

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பாராட்டி இருக்கிறார். பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். மாநாட்டுக்கு நேரில் சென்று பாராட்டினார். அழகிரி விவரம் தெரியாமல் பேசி இருப்பாரா என்பது சந்தேகம்.

    ஆர்.எஸ்.எஸ்.ஐ. குற்றம் சாட்டுவது போல் குற்றம் சாட்டி ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை புகழுவதற்காக அப்படி பேசி இருக்கலாம்.

    இஸ்லாமிய சமுதாயத்தை பார்த்ததும் சில தலைவர்கள் நிலைதடுமாறுவார்கள். கமலும் அப்படி தடுமாறியதன் விளைவுதான் அவரது அர்த்தமற்ற பேச்சு.

    மகாத்மா காந்தியை கொன்றவர் கோட்சேதான். அதற்கு புலனாய்வு அவசியமில்லை. சுட்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டார். அவர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர். அதை ‘இந்து’ என்ற வார்த்தையை நினைவு படுத்தினால் தான் கோட்சே நினைவுக்கு வருவாரா?

    அப்படியானால் காந்தி யார்? அவரும் நல்ல இந்து தானே! கோட்சே பற்றி மட்டும் இந்து என்ற வார்த்தையை சேர்ப்பது ஏன்? இது பொருத்தமற்ற வார்த்தை. சூடான ஐஸ்கிரீம் என்பதுபோல் இந்து ஒரு போதும் பயங்கரவாதி ஆக முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசிவருவது உண்மைதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தி, சந்திரசேகர் ராவிடம் பேசியதை போல் மறுபுறம் பிரதமர் மோடியுடனும் பேசி வருகிறார்.

    நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதை அறிந்துள்ளதாலும், பதவி, பசி காரணத்தாலும் பா.ஜ.க.வுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். 



    ஸ்டாலின் தான் குழப்பத்தில் உள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தேர்தல் நேரத்தில் சோதனை நடத்தப்படுவது வாடிக்கைதான் என தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க.விடம் 5 கேபினட் அமைச்சர் பதவிகளை கேட்டு தி.மு.க. பேசி வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.
    பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தமிழர்கள் உள்ள பகுதிக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம். வாரணாசி தொகுதியில் கடந்த முறை போட்டி இருந்தது.

    ஆனால் இந்த முறை யாரும் போட்டியாக கருத முடியாது. ஒட்டு மொத்த மக்களும் மோடிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். அங்குள்ள சிறுபான்மை மக்கள், இஸ்லாமிய மக்கள் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க இருப்பதாக கூறினார்கள். 5 ஆண்டுகளில் மோடி பல திட்டங்களை செய்துள்ளார். இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்.

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்புப்படுத்தி பேசும் கே.எஸ்.அழகிரியின் பார்வையில் கோளாறு இருப்பதாக தெரிகிறது.


    சந்திரசேகரராவை சந்திக்க முதலில் ஸ்டாலின் மறுத்ததாக தகவல் வந்தது. இப்போது சந்தித்து உள்ளார். அப்போது நல்ல டீ குடித்து இருப்பார்கள். அவ்வளவு தான் நடந்து இருக்கும். இதன் பின்னாடி எந்த பலனும் இருக்க போவதில்லை.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற போகிறது. பா.ஜனதா தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க கூடிய வகையில் பலம் பொருந்திய கட்சியாக வர போகிறது. கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி ஆட்சி அமைத்ததோ அதுபோல் பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார்.

    பா.ஜனதாவிடம் தி.மு.க. சார்பில் தூது அனுப்பப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாக கூறுகிறீர்கள். ஒருவேளை சந்திரசேகர ராவ் மூலமாக தூது அனுப்பி இருப்பார்.

    திரை மறைவில் எதுவும் பேசுவதற்கு பா.ஜனதா தயாராக இல்லை. இதை யார் சொல்லியிருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மோடி தனது மனைவியை தவிக்கவிட்டு ஓடியதுபோல் தங்கள் கணவர்களும் ஓடிப் போவார்களோ? என பாஜகவினர் மனைவிகள் அஞ்சுவதாக மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பாஜகவில் இருக்கும் தங்களது கணவர்கள் பிரதமர் மோடியை நெருங்கும்போது அவர்களின் மனைவிகள் எல்லாம் அச்சப்படுவதாக எனக்கு தெரியவந்துள்ளது. மோடியை போலவே தங்களது கணவர்களும் நம்மை கைவிட்டு ஓடிப் போவார்களோ? என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.



    அரசியல் ஆதாயத்திற்காக கட்டிய மனைவியை கைவிட்ட மோடி மற்றவர்களின் சகோதரிகளுக்கும் மனைவிகளுக்கும் எப்படி மதிப்பளிப்பார்?

    எனவே, இதைப்போன்ற ஒரு சூழ்நிலையில் இந்த நாட்டில் உள்ள பெண்கள் மோடியை போன்றவர்களுக்கு வாக்களிக்க கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இதுவே மோடியால் கைவிடப்பட்ட அவரது மனைவிக்கு நாம் செய்கின்ற மரியாதையாக இருக்கும்.

     தனது செய்தி குறிப்பில் மாயாவதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி தன்னை அறிவுறுத்தவும் எச்சரிக்கவும் கூடிய ஒரே பாஜக தலைவர் யார்? என்பதை முதன்முறையாக அடையாளம் காட்டியதுடன் அவருக்கு புகழாரமும் சூட்டியுள்ளார்.
    போபால்:

    மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியில் இருந்து 8 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் இந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு இருந்தது.

    ஆனால் அவருக்கு 76 வயது ஆவதால் இந்த முறை தொகுதி ஒதுக்குவது சந்தேகம் என்று பரவலாக பேசப்பட்டது. அதேசமயம் இந்தூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பும் தாமதம் ஆனது.

    இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த சுமித்ரா மகாஜன், வரும் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தார்.

    இதையடுத்து, இந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஷங்கர் லால்வானியை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்று பேசினார்.



    அப்போது பாராளுமன்ற சபாநாயகரும் அந்த தொகுதியின் எம்.பி.யுமான சுமித்ரா மகாஜனை அவர் வெகுவாக புகழ்ந்துப் பேசினார். ஒரு சபாநாயகராக தனது பணியை திறமையாகவும், கட்டுப்பாட்டுடனும் நிறைவேற்றியதால் நாட்டு மக்களின் எண்ணங்களில் நீங்காத இடத்தை சுமித்ரா பிடித்துள்ளதாக மோடி குறிப்பிட்டார்.

    இந்த நாட்டின் பிரதமராக என்னை உங்களுக்கு எல்லாம் மிக நன்றாக தெரியும். ஆனால், என்னை அறிவுறுத்தவும் எச்சரிக்கவும் எங்கள் கட்சியில் உள்ள ஒரேநபர் யாராவது உண்டு என்றால் அது இவராகத்தான் இருக்கும்.

     பாஜகவில் நானும் அவரும் இணைந்து பலகாலம் பணியாற்றி இருக்கிறோம். பணியின்மீது அவர் காட்டும் அர்ப்பணிப்புணர்வு அலாதியானது. இந்தூர் நகரின் மேம்பாட்டுக்காக சுமித்ரா மகாஜன் முன்னெடுத்த அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்படும் என இங்குள்ள மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்’ என்றும் மோடி தெரிவித்தார்.
    ×