search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    ஜனாதிபதி நியமனம் குறித்த தன்னுடைய பேச்சு திரித்து கூறப்பட்டு உள்ளதாகவும், தான் ஜனாதிபதி பதவி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AshokGehlot #RamNathKovind
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குஜராத்தில் 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்க முடியுமா? என பிரதமர் நரேந்திர மோடி பயந்தார். அதற்கு தீர்வாக ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை நிறுத்தலாம் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா யோசனை கூறினார். இதனால் ஜனாதிபதி பதவிக்கு தகுதியான அத்வானியை அவர்கள் ஒதுக்கி விட்டனர். இது பா.ஜ.க.வின் உட்கட்சி விவகாரம். ஒரு கட்டுரையில் படித்ததை கூறுகிறேன்” என்றார்.



    இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ் கூறுகையில், “அசோக் கெலாட்டின் கருத்து, தலித் சமுதாயத்துக்கு காங்கிரஸ் கட்சி எப்போது எதிரான மனநிலையை கொண்டுள்ளதை காட்டுகிறது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அவர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

    இதனிடையே அசோக் கெலாட் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “ஜனாதிபதி நியமனம் குறித்த தன்னுடைய பேச்சு திரித்து கூறப்பட்டு உள்ளது. நான் ஜனாதிபதி பதவி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ராம்நாத் கோவிந்தின் எளிமை, பெருந்தன்மை என்னை மிகவும் கவர்ந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய பேச்சு சர்ச்சையானதால் அசோக் கெலாட் பல்டி அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #LokSabhaElections2019 #AshokGehlot #RamNathKovind 
    திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் துலாபாரம் கொடுத்த போது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிதரூர் எம்.பி. நலம்பெற ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். #ShashiTharoor #RajnathSingh
    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி.யும், கட்சியின் திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசிதரூர், சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கோவில் ஒன்றில் துலாபாரம் கொடுத்த போது, தராசின் இரும்பு கம்பி தலையில் விழுந்து காயமடைந்தார். அவருக்கு திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரை நேற்று பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது அவர், சசிதரூர் விரைவில் குணம் பெற வாழ்த்தும் தெரிவித்தார். இதற்கு டுவிட்டர் தளத்தில் சசிதரூர் எம்.பி. நன்றி தெரிவித்து உள்ளார்.

    முன்னதாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் சசிதரூரை மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.  #ShashiTharoor #RajnathSingh 
    மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாத்வி பிராக்யா சிங் போபால் பாராளுமன்ற தொகுதியில் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். #BJPfields #SadhviPragyaSingh #BhopalLSseat #DigvijaySingh
    போபால்:

    மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த வழக்கை முதலில் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரித்தது. ராணுவ லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித் மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றனர். 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாத்வி பிரக்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டு மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர்களை குற்றவாளிகளாகச் சேர்த்தனர்.

    அதன்பிறகு தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு 2011-ல் மாற்றப்பட்டது. பின்னர், பிரசாத் புரோஹித், மேஜர் ரமேஷ் உபாத்யாயா உள்ளிட்ட 10 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.



    மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷியாம் சாஹு, ஷிவ்நாராயண் கல்சங்ரா மற்றும் பிரவீன் தகல்கி ஆகியோர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    சாத்வி பிரக்யா, லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித், சுதாகர் திவேதி, ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யா, சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, அஜய் ரஹிர்கர் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

    இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மேலும் இருவரான ஜகதிஷ் மாத்ரே, ராகேஷ் டாவ்டே ஆகியோர் மீது ஆயுத தடை சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஜாமினில் வெளியே வந்த சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தற்போது முறைப்படி பாஜகவில் இணைந்துள்ளார்.

    இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும்  பாஜக வேட்பாளராக சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் அறிவிக்கப்பட்டுள்ளார். #BJPfields #SadhviPragyaSingh #BhopalLSseat  #DigvijaySingh  
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #AshokGehlot #RamNathKovind
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்போதைய ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், தலித் என்பதால் அவர் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார். குஜராத்தில் மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து பாஜகவுக்கு கவலை ஏற்பட்டதாகவும், அப்போது தலித் வாக்குகளை கவனத்தில் கொண்டு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி ஆக்கியதாகவும் கெலாட் கூறினார். இந்த தகவலை ஒரு கட்டுரையில் படித்ததாகவும் அவர் கூறினார்.

    அசோக் கெலாட்டின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அசோக் கெலாட்டுக்கு பாஜக கண்டனம் தெரிவித்ததுடன், அசோக் கெலாட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. இந்த விஷயத்தை தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து கெலாட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி உள்ளது.


    “அரசியலமைப்பின் பாதுகாவலரான ஜனாதிபதிக்கு எதிராக சாதி ரீதியான கருத்தை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த கருத்து காங்கிரஸ் கட்சியின் தலித் விரோத மனப்போக்கையே காட்டுகிறது” என பாஜக செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் தெரிவித்தார். #LokSabhaElections2019 #AshokGehlot #RamNathKovind

    ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் 39 பாராளுமன்ற தொகுதி தேர்தல், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. #LoksabhaElections2019
    சென்னை:

    தமிழகம் - புதுவையில் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (18-ந்தேதி) தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அன்றைய தினம் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி, டி.டி.வி.தினகரன் கட்சி, சீமான் கட்சிகளிடையே 5 முனை போட்டி நிலவுகிறது.

    கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. உடனேயே அனைத்து அரசியல் கட்சியினரும் பிரசாரத்தை தொடங்கினர்.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோர் அ.தி.மு.க- பா.ஜனதா, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மட்டும் நேற்று பிரசாரம் செய்தார்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். கம்யூனிஸ்டு தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.



    தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமியும், மு.க.ஸ்டாலினும் வார்த்தைகளால் கடுமையாக மோதிக் கொண்டனர். இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.



    பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரசாரத்திற்காக 6 முறை தமிழகம் வந்தார். பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தமிழகத்தில் பிரசாரம் செய்தார்.

    இப்படி அகில இந்திய தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தாலும் தமிழக தேர்தல் களத்தில் அனல் பறந்தது.

    சுமார் ஒரு மாதமாக தலைவர்கள் சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு ஆதரவு திரட்டினர். இந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

    நாளை (17-ந்தேதி) எந்த தேர்தல் பணியிலும் அரசியல் கட்சியினர் ஈடுபட கூடாது. வாக்காளர்களுக்கு பூத்-சிலிப் கொடுக்கும் பணி நாளை தீவிரமாக நடைபெறும்.

    நாளை மறுநாள் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் அங்கு மட்டும் இரவு 8 மணி வரை பொதுமக்கள் ஓட்டுப்போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்களும், சட்ட சபை தொகுதிகளில் 269 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

    தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 100 சதவீத ஓட்டுப்பதிவு என்கிற இலக்கை எட்டுவோம் என்று மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    இன்று மாலை பிரசாரம் முடிவடைந்தவுடன் தொகுதிகளில் தங்கியுள்ள வெளி ஆட்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இதை மீறி தங்கி இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

    ஓட்டுப்பதிவின்போது அசம்பாவிதங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 160 கம்பெனி துணை ராணுவப் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரு கம்பெனியில் 100 பேர் வரை இருப்பார்கள். இதன்மூலம் 16 ஆயிரம் துணை ராணுவப் படையினர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

    சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசாரும், 20 கம்பெனி துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். #LoksabhaElections2019 #pollcampaign #pollcampaignends #campaignendsinTN
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் காலியாக உள்ள 24 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் ப.சிதம்பரம் பேசினார். #Loksabhaelections2019 #PChidambaram #congress #PMModi
    தேவகோட்டை:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து மானாமதுரை, இடைக்காட்டூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் ப.சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா. ஜனதா ஆட்சியில் நாட்டில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம். 50 ஆயிரம் குறுந்தொழில்கள் முடங்கி விட்டன. கடந்த 5 ஆண்டுகளில் கல்வி கடன் யாருக்கும் வழங்கப்படவில்லை.

    விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என பா.ஜனதா கூறியது. ஆனால் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட எந்த விவசாயிகளின் வருமானமும் இரட்டிப்பாகவில்லை. கடன் தான் இரட்டிப்பாகி உள்ளது.

    நாட்டில் 8 மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜனதாவிற்கு செல்வாக்கு கிடையாது. பா.ஜனதாவை எதிர்ப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கஜா புயல் உள்ளிட்ட எதையும் பா.ஜனதா அரசு கண்டு கொள்ளவில்லை. பா.ஜனதா ஆட்சியில் மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எங்களுக்கு பல பெரிய திட்டங்களை நிறைவேற்றிய அனுபவங்கள் உண்டு. அதனால் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஐந்து கோடி குடும்பங்களுக்கு மாதம் ரூ.6000 வீதம் நாங்கள் கொடுப்போம். இது எங்களால் முடியும்.

    தற்போது மத்திய அரசில் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநில அரசில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்படி பணியிடங்களை காலியாக வைத்திருப்பது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் சரியாக ஒன்பது மாதங்களில் அனைத்து காலியிடங்களை நிரப்புவோம்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். சிவகங்கை தொகுதியில் மட்டும் 20 ஆயிரம் பேருக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Loksabhaelections2019 #PChidambaram #congress #PMModi
    வாரணாசியில் பாஜகவின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இரண்டு நாட்கள் பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். #Loksabhaelections2019 #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடி தன் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்துக்கு செல்லவுள்ளார். சமீப காலமாக ராகுல், பிரியங்கா இருவரும் அடிக்கடி குஜராத் செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் மோடியும் குஜராத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

    மேலும் 5 பொதுக்கூட்டங்களில் பேச மோடி திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் நாளை குஜராத்தில் உள்ள ஹிமாத்நகர், சுரேந்திர நகர், அனந்த் ஆகிய 3 நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

    நாளை மறுநாள் 18-ந் தேதி அம்ரேலி நகரிலும் 21-ந்தேதி குஜராத் மாநிலம் பதன்நகரிலும் பேசுகிறார். மீண்டும் 23-ந்தேதி அகமதாபாத் சென்று அங்கு தனது வாக்கை பதிவு செய்கிறார்.

    அதன்பிறகு வாரணாசி தொகுதியில் கவனம் செலுத்த மோடி திட்டமிட்டுள்ளார். அதன்படி 25-ந்தேதி மோடி வாரணாசி செல்கிறார். அங்கு நடக்கும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். அன்றிரவு அவர் வாரணாசியில் தங்குகிறார்.

    மறுநாள் (26-ந்தேதி) வாரணாசி தொகுதியில் மோடி மனுதாக்கல் செய்கிறார். அன்றும் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்.

    அமேதியில் ராகுல் வேட்பு மனு தாக்கல் செய்த போது 3 கி.மீ. தூர ரோடு ஷோ நடத்தினார். அதை மிஞ்சும் வகையில் பிரதமர் மோடி வாரணாசியில் 2 நாட்கள் ரோடு ஷோ நடத்தவுள்ளார்.

    இதற்கிடையே அடுத்த வாரம் பிரியங்காவும் வாரணாசி தொகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். மோடியின் வாரணாசி பயணத்துக்கு முன்போ அல்லது பின்போ பிரியங்காவும் வாரணாசி செல்வார் என்று தெரிய வந்துள்ளது.

    உத்தரபிரதேசத்தில் நியாய் ரத யாத்திரை நடத்த பிரியங்கா ஏற்பாடு செய்து வருகிறார். பதேபூர் சிக்ரி நகரில் பிரியங்கா இந்த பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதனால் அடுத்த வாரம் முதல் உத்தரபிரதேச தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்ட உள்ளது. #Loksabhaelections2019 #PMModi
    அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். #LokSabheElections2019 #ChandrababuNaidu
    சென்னை:

    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது. அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம். பிரதமர் மோடி நாட்டுக்கு துரோகம் செய்கிறார். டெல்லியில் விவசாயிகள் போராடியபோது பிரதமர் மோடி சந்தித்து பேசினாரா?



    அனைத்து விவிபேட் இயந்திரங்களையும் சரிபார்க்க முடியாது என்கிறது தேர்தல் ஆணையம். பல்வேறு வளர்ந்த நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விலக்கிக் கொண்டனர். தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முன்வரவில்லை. உலகில் 10 சதவீத நாடுகளே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றன

    தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு மத்திய அரசு பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறது. மோடி அரசின் கைப்பாவையாக அதிமுக அரசு மாறிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் சந்திரபாபு நாயுடு புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. #LokSabheElections2019 #ChandrababuNaidu
    துலாபாரம் விழுந்து படுகாயம் அடைந்து திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சசிதரூரை நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். #ShashiTharoor #NirmalaSitharaman
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.

    இந்த தொகுதியில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேட்பாளராக திவாகரனும், பாரதிய ஜனதா சார்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர் கும்மனம் ராஜசேகரனும் களத்தில் உள்ளனர். இந்த 3 வேட்பாளர்களும் தங்களது தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரு கிறார்கள்.

    நேற்று மலையாள வருடப் பிறப்பு என்பதால் கேரளாவில் உள்ள கோவில்களில் விசே‌ஷ வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி திருவனந்தபுரம் தம்பானூரில் உள்ள காந்தாரி அம்மன் கோவிலுக்கு சசிதரூர் சென்றார். அங்கு அவர் வழிபாடு நடத்திவிட்டு தனது எடைக்கு எடை சர்க்கரை துலாபார காணிக்கையாக வழங்க முடிவு செய்தார்.

    இதற்காக தராசின் ஒரு தட்டில் சர்க்கரை வைக்கப்பட்டது. மறு தட்டில் சசிதரூர் அமர்ந்து இருந்த போது தராசின் கொக்கி உடைத்து அவரது தலையில் இரும்பு கம்பி விழுந்ததால் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    இதனால் சசிதரூரின் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் சசிதரூரை அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் கும்மனம் ராஜசேகரனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சென்றார். அவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சசிதரூரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி டாக்டர்களிடம் அவர் கேட்டு அறிந்தார்.

    தன்னை நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்தது பற்றி சசிதரூர் டுவிட்டரில் பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் ‘இது ஒரு நல்ல அரசியல். தேர்தல் பிரசாரத்திற்கு இடையில் நிர்மலா சீதாராமன் என்னை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.  #ShashiTharoor #NirmalaSitharaman
    ரபேல் விவகாரத்தில் பா.ஜனதா தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் அடிப்படையில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #PMModi #RahulGandhi #SupremeCourt #RafaleDeal
    புதுடெல்லி:

    ரபேல் விவகாரத்தில் பா.ஜனதா தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் அடிப்படையில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 22-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கூறியுள்ளது.

    பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் இந்திய பங்குதார நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

    இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. விமானத்துக்கு கூடுதல் விலை தரப்பட்டுள்ளதாகவும், அனில் அம்பானி நிறுவனத்தை தேர்வு செய்ததில் பிரதமர் மோடியின் தலையீடு இருந்ததாகவும் அக்கட்சி கூறி வருகிறது. “பிரதமர் மோடி ஒரு திருடன்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.



    ரபேல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததா என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி, பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    ஆனால், ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட்டு, ரபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

    இதற்கிடையே, ரபேல் விவகாரம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளியாகின. அந்த ஆவணங்கள் அடிப்படையில், ரபேல் ஒப்பந்தம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

    அந்த ரகசிய ஆவணங்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலின் ஆட்சேபனையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. அந்த ஆவணங்களை ஏற்றுக்கொண்டு, மனுவை விசாரிப்பதாக கடந்த வாரம் கூறியது.

    மத்திய அரசுக்கு இது பின்னடைவாக கருதப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மகிழ்ச்சி தெரிவித்தார். பிரதமர் மோடி திருட்டில் ஈடுபட்டதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டதாகவும், விமானப்படை பணத்தை அம்பானியிடம் கொடுத்துவிட்டதாக, தான் கூறியதை கோர்ட்டு ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

    ஆனால், பிரதமருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு எதுவும் கூறவில்லை என்று பா.ஜனதா தரப்பில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி, சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

    அதில், ராகுல் காந்தி தனது தனிப்பட்ட கருத்துகளை கோர்ட்டு கூறியதாக திரித்து கூறுவதாகவும், இதன்மூலம் கோர்ட்டு அவமதிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் மீனாட்சி லேகி கூறியிருந்தார்.

    இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மீனாட்சி லேகி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜரானார்.

    அவர் வாதிடுகையில், “காவலாளி நரேந்திர மோடி ஒரு திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறிவிட்டதாக ராகுல் காந்தி பகிரங்கமாக கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு சொல்லாததை எல்லாம் சொன்னதாக கூறுகிறார். இது, முற்றிலும் கோர்ட்டு அவமதிப்பு ஆகும்” என்று கூறினார்.

    அதைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:-

    நீங்கள் சொல்வது சரிதான். இந்த மனுவில் கூறியுள்ள படி நாங்கள் எதுவும் கூறவில்லை. ராகுல் காந்தி தனது பேட்டியில் கூறிய கருத்துகள், இந்த கோர்ட்டு சொல்லாதவை. அவற்றை நாங்கள் கூறியதாக அவர் தவறாக தெரிவித்துள்ளார்.

    சில ஆவணங்கள் சட்டரீதியாக ஏற்புடையவை தானா என்று விசாரணை நடத்தியபோது, எந்த சந்தர்ப்பத்திலும் அத்தகைய கருத்துகளை நாங்கள் கூறவில்லை.

    ஆகவே, இதுதொடர்பாக ராகுல் காந்தியிடம் நாங்கள் விளக்கம் கேட்போம். அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். அவர் 22-ந் தேதிக்குள் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும். 23-ந் தேதி, இந்த விவகாரத்தை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    இதற்கிடையே, ராகுல் காந்தியின் பொய் அம்பலமாகி விட்டதாக பா.ஜனதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

    ராகுல் காந்தி நாள்தோறும் பொய்களை சொல்லி வருகிறார். அவற்றில் ஒரு பொய்யை சுப்ரீம் கோர்ட்டு அம்பலப்படுத்தி இருக்கிறது. பிரதமரை இழிவுபடுத்தியதற்காக, அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழலில் சிக்கி தவித்தநிலையில், மோடி நேர்மையான அரசை அளித்ததை ராகுல் காந்தியாலும், அவருடைய குடும்பத்தாலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்திய அரசியல் தரம் தாழ்ந்ததற்கு அவரே காரணம். சரியான புரிதல் இல்லாமல்தான், அவர் பொய் குற்றச்சாட்டு கூறுவதாக, முன்பு மக்கள் நினைத்திருந்தனர். ஆனால், அவர் வேண்டுமென்றே தான் அப்படி பேசி வருவது, இப்போது தெளிவாகி விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியதாவது:-

    கோர்ட்டு கேட்டபடி, ராகுல் காந்தி விளக்கம் அளிப்பார். பிரதமர் மோடி கூடத்தான், சுப்ரீம் கோர்ட்டு தனக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PMModi #RahulGandhi #SupremeCourt #RafaleDeal

    சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. #ElectionCommission #AzamKhan #JayaPrada
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பா.ஜ.க. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



    பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக உள்ளார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.

    அவருக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.  ஆசம்கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  தனக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் போட்டியில் இருந்து விலக தயார் எனவும் யாரையும் பெயர் குறிப்பிட்டு தான் பேசவில்லை எனவும் ஆசம்கான் தெரிவித்தார்.

    இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் என கூறி அவர் 72 மணிநேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.  இதன்படி அவர் நாளை காலை 10 மணி முதல் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.  #ElectionCommission #AzamKhan #JayaPrada
    ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடி தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து பாஜக பிரமுகர்களுக்கு அளிக்கிறார் என குற்றம்சாட்டினார். #ChandrababuNaidu #PMModi
    அமராவதி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்காவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 
    ஹெலிகாப்டர் மூலம் அவர் சித்ரதுர்கா வந்து இறங்கினார். அவருக்கு பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்தன.

    அந்த ஹெலிகாப்டர்கள் தரை இறங்கிய நிலையில் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து பெரிய வடிவிலான கருப்பு நிற இரும்பு பெட்டியை பாதுகாப்பு வீரர்கள் இறக்கினார்கள். 2 பேர் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கி சென்று அருகில் நின்றிருந்த காரில் ஏற்றினர். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது.

    அந்த பெட்டியில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. பெட்டியில் பணம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது. அதில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.



    இந்நிலையில், ஆந்திரா முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடி தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து பா.ஜ.க. பிரமுகர்களுக்கு அளிக்கிறார் என குற்றம்சாட்டினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி, தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வருகிறார்.

    தனக்கு அளிக்கப்படும் உயர் பாதுகாப்பை பயன்படுத்தி, அவற்றை பா.ஜ.க. பிரமுகர்களுக்கு அளிக்கிறார். அதன்மூலம் இந்த தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டு உள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார். #ChandrababuNaidu #PMModi
    ×