search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94574"

    நடிகை ஜெயப்பிரதாவை ஆசம் கான் தரக்குறைவாக விமர்சித்த விவகாரத்தில் மவுனமாக இருக்கும் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். #DraupadiinRampur #Draupadidisrobed #Sushma #Mulayam #AzamKhan #Khakhiunderwear #Jayaprada
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூர் பாராளுமன்ற தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். 

    சமீபத்தில் இந்த தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதாவை கடுமையாக தாக்கி பேசினார். ஜெயப்பிரதா காக்கி நிற உள்ளாடை அணிந்திருந்தது தனக்கு தெரியும் என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
     
    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், அவர் மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பெண்களை தரக்குறைவாக விமர்சித்து பேசிய ஆசம் கானின் கருத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் ‘சகோதரர் முலாயம் சிங் அவர்களே!  நீங்கள்தான் சமாஜ்வாதி கட்சியின் தலைவர். ராம்பூர் தொகுதியில் உங்கள் முன்னால் திரவுபதி துகிலுரிக்கப்பட்டுள்ளார். பீஷ்ம பிதாமகர் போல் அமைதியாக இருக்கும் தவறை நீங்கள் செய்ய வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார். #DraupadiinRampur #Draupadidisrobed #Sushma #Mulayam #AzamKhan #Khakhiunderwear #Jayaprada
    ஒடிசா மாநிலத்தில் உள்ள குர்தா நகரத்தில் இன்று காலை பாஜக தலைவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். #BJPLeaderShotDead
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் குர்தா நகரத்தைச் சேர்ந்தவர் மங்குலி ஜனா. இவர் அந்நகரத்தின் மண்டல பாஜக தலைவர் ஆவார். இவர் நேற்றிரவு குர்தா தொகுதியின் பாஜக வேட்பாளர் வீட்டின் அருகில் நின்றுக் கொண்டு தேர்தல் பணிகள் குறித்து பாஜக தொண்டர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றில் வந்த மர்ம நபர், சற்றும் எதிர்பாராத விதமாக அவரை நோக்கி துப்பாக்கியால் 4 ரவுண்ட் சுட்டார். இதில் 2 குண்டுகள் அவர் மீது பாய்ந்தன.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜனாவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்நகரத்தின் நான்கு புற எல்லைகளையும் அடைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.  

    மங்குலி ஜனாவை கொன்றவரை கைது செய்ய வலியுறுத்தி குர்தா பகுதி பாஜகவினர் இன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களிடம் ஜனநாயகத்தை காப்பாற்றவும், ஆர்ப்பாட்டத்தை விடுத்து கலைந்து செல்ல வேண்டியும் வலியுறுத்தினார். மேலும் இதற்கான பதில், தேர்தலில் மக்களின் வாக்குகளில் வெளிப்படும் எனவும் கூறினார். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து குர்தா தொகுதி பாஜக வேட்பாளர் கூறுகையில், ‘இந்த சம்பவத்திற்கு நான் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன். எனது 40 ஆண்டுகால அரசியலில் குர்தா பகுதியில் இது போன்ற கொடூரம் நடப்பது இதுவே முதல் முறையாகும்’ என கூறினார். #BJPLeaderShotDead

    பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய இரும்பு பெட்டியில் என்ன இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. #PMModi #Congress
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திமோடி கடந்த 9-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்காவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    ஹெலிகாப்டர் மூலம் அவர் சித்ரதுர்கா வந்து இறங்கினார். அவருக்கு பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்தன.

    அந்த ஹெலிகாப்டர்கள் தரை இறங்கிய நிலையில் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து பெரிய வடிவிலான கருப்பு நிற இரும்பு பெட்டியை பாதுகாப்பு வீரர்கள் இறக்கினார்கள்.

    2 பேர் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கி சென்று அருகில் நின்றிருந்த காரில் ஏற்றினர். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது.

    அந்த பெட்டியில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. பெட்டியில் பணம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது.

    ஆனால் அந்த பெட்டியில் பிரதமர் பாதுகாப்பு தொடர்பான தளவாடங்கள் இருந்ததாக பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.


    இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:-

    பிரதமர் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய கருப்பு பெட்டியில் என்ன இருந்தது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஒருவேளை அதில் பணம் இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் அதில் என்ன இருந்தது என்ற உண்மை வெளியே வர வேண்டும். இது சம்பந்தமாக தேர்தல் கமி‌ஷன் விசாரணை நடத்தி அதன் விபரத்தை வெளியிட வேண்டும்.

    ஹெலிகாப்டரில் இருந்து இறக்கிய இரும்பு பெட்டியை தனியார் இன்னோவா காரில் ஏற்றி இருக்கிறார்கள். உடனே அந்த கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அந்த கார் சிறப்பு பாதுகாப்பு படையினர் அணிவகுப்பில் இடம் பெறவில்லை. இதுதான் பெரும் சந்தேகமாக உள்ளது.

    கர்நாடக மாநிலம் காங்கிரஸ் சார்பில் இதுபற்றி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்து தேர்தல் கமி‌ஷன் தான் தனது கடமையை செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஆனந்த்சர்மா கூறினார். #PMModi #Congress
    பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தவிர மோடி போட்டியிடும் இரண்டாவது தொகுதியை தேர்வு செய்ய பாஜக மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். #Loksabhaelections2019 #BJP #PMModi
    போபால்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது குஜராத் மாநிலம் வதேதரா, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

    அந்த இரு தொகுதிகளிலும் மோடி வெற்றி பெற்றார். வாரணாசி தொகுதியில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சுமார் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இதையடுத்து வதேதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்த மோடி, வாரணாசி தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். மீண்டும் 2-வது முறையாக வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட உள்ளார்.

    வாரணாசி தொகுதியில் மே 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதி தவிர மேலும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மத்தியபிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 1967-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி வி.வி.ஐ.பி. தொகுதி என்ற அந்தஸ்தைப் பெற்ற அதிர்ஷ்டமான தொகுதியாகும்.

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1991-ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானும் தொடர்ச்சியாக 5 தடவை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜூம் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்ற கோ‌ஷம் வலுத்து வருகிறது.

    விதிஷா தொகுதிக்கு இன்னும் பாரதிய ஜனதா வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Loksabhaelections2019 #BJP #PMModi
    வேலூர் தேர்தல் விவகாரத்தில் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க. ரகசிய உறவு வைத்திருப்பதாக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AMMK #TTVDhinakaran
    சென்னை:

    அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசால் பொருளாதாரம் சீரழிந்து, தொழில்கள் முடங்கி, வேலை வாய்ப்பை இழந்து, தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கிறார்கள் தமிழக மக்கள். இன்னொருபுறம்... ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியையும் ஆட்சியையும் பா.ஜனதாவிடம் அடகு வைத்துவிட்டு, அவர்களுக்கு அடிமை சேவகம் செய்து வருகிறார்கள்.

    இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் சிக்கி தமிழகம் தத்தளிக்கும் நேரத்தில்தான், பாராளுமன்றப் பொதுத்தேர்தலும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. தமிழக மக்களின் ஒட்டுமொத்த துயரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பாக, ஒரு வரமாக நமக்கு அமைந்திருக்கிறது இந்தத் தேர்தல்.

    தமிழகத்தின் நலன்களைக் கூட்டணி போட்டு சூறையாடியது போதாது என்று, தேர்தல் களத்திலும் கூட்டணி அமைத்து வருகிறார்கள் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும். அம்மாவின் மரணத்திற்குப் பிறகும் அவரைத் தரம் தாழ்ந்து விமர்சித்த பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகளையும் இணைத்து துரோகம் கலந்த ஒரு சுயநலக் கூட்டணியை அமைத்திருக்கிறது அ.தி.மு.க.

    மக்கள் நலன் சார்ந்த வி‌ஷயங்களில் இவர்கள் போடும் இரட்டைவேடத்தை இவர்களே இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

    கிராமப்புற மாணவர்களின் டாக்டராகும் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அ.தி.மு.க. சொல்ல ‘அவர்கள் எங்களிடம் அப்படிக் கேட்கவில்லை. நீட் தேர்வு அவசியம் எனும் எங்கள் நிலைப்பாட்டை சொல்லி அவர்களையும் ஏற்கச் செய்வோம்’ என்று பா.ஜனதா சொல்கிறது. எவ்வளவு பெரிய பித்தலாட்டம் இது?

    ஐந்து மாவட்ட விவசாயத்தை, இயற்கை வளங்களை, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து உருவாக இருந்த சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்துவிட்டது உயர்நீதிமன்றம். ‘அந்தத் தீர்ப்பை மதிப்போம்’ என்று சொன்ன முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், ‘இந்தத் தீர்ப்பு எங்களுக்குக் கிடைத்த வெற்றி’ என்று சொன்ன டாக்டர் ராமதாசையும் மேடையில் வைத்துக் கொண்டு, இந்தத் தீர்ப்புக்கு மாறாக அத்திட்டத்தை செயல்படுத்தியே தீருவேன் என்று அறிவிக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

    அதைக்கேட்டு ஒரு வார்த்தைகூட மறுப்பு சொல்லவில்லை இருவரும். மக்கள் நலன் சார்ந்த வி‌ஷயத்தில் இவர்களின் இரட்டை வேடத்தைப் பார்த்தீர்களா..?



    இன்னொரு புறம் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டே பா.ஜனதாவுடன் ரகசிய உறவை வைத்துள்ளது தி.மு.க. ஒரு துண்டுச் சீட்டை கைப்பற்றியதாகச் சொல்லி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்திய தேர்தல் ஆணையம், வேலூரில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான இடங்களில் சுமார் 12 கோடி ரூபாய் கைப்பற்றிய பிறகும் தேர்தல் நடப்பதை அனுமதிப்பது எதைக் காட்டுகிறது? பா.ஜனதாவுடன் ரகசிய உறவு இல்லாமல் எப்படி இது சாத்தியம்?

    அந்தக் காங்கிரசாவது நியாயமாக நடக்கிறதா என்றால் இல்லை. டெல்டாவை பாலைவனமாக்கும் வகையில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம், காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைப்போம் என்று கர்நாடகாவில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது. தமிழ்நாட்டுக்கு வந்து நீட் தேர்வு பற்றி பேசும் ராகுல் காந்தி, மேகதாது அணை மற்றும் காவிரி பிரச்சனை பற்றி எதுவும் பேசுவதில்லை. தி.மு.க.வும் அதை வேடிக்கை பார்க்கிறது.

    அரசியலில் எதுவும் சாத்தியம்... எப்படி வேண்டுமானாலும் கூட்டணிகள் அமைக்கலாம் என்ற அருவெறுக்கத்தக்க அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கொள்கையற்ற, முரண்பட்ட, சுயநலமான, மக்கள் விரோத கூட்டணிகளை அமைக்காமல், தமிழக மக்களையும் அம்மாவின் உண்மை விசுவாசிகளையும் மட்டுமே நம்பி களம் காண்கிறது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

    ஆபத்து அரசியல் நடத்தும் மதவாத பா.ஜனதாவையும், அப்படிப்பட்ட கட்சியுடன் தேர்தல் உறவு இல்லை என்று சொல்லிவிட்டு, தேர்தலுக்குப் பின்பு ஒட்டிக்கொள்ளும் வகையில் பா.ஜனதாவுடன் ரகசிய உறவைப் பேணிவரும் இரட்டை வேட தி.மு.க.வையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்களைப் புறக்கணிப்பதன் மூலம், மக்கள் விரோத ஆட்சி ஒழிவது மட்டுமல்ல... சுயநல, சந்தர்ப்பவாத, இரட்டை வேட அரசியலும், கூட்டணி என்ற பெயரில் நடக்கும் அருவெறுக்கத்தக்க பேர அரசியலும் ஒழிக்கப்படும்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #AMMK #TTVDhinakaran
    ஒடிசா மாநிலத்தில் ரூர்கேலா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக ஆட்சியில் பாகிஸ்தான், சீனாவால் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது என கூறியுள்ளார். #YogiAdityanath #LoksabhaElections2019
    ரூர்கெலா:

    ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 3 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலா பகுதியில் இன்று நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் கட்சி நக்சல்கள் மற்றும் பயங்கரவாதிகளிடம் மென்மையான அணுகுமுறையையே கையாண்டு வருகிறது.  உத்தரபிரதேசம் மாநிலத்தில்  காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது சீன ராணுவத்தினர் தொடர்ந்து ஊடுருவி வந்தனர். பிரதமராக மோடி வந்த பின்னர் இது முடிவுக்கு வந்தது.  இதேப்போல் பாகிஸ்தான் ராணுவத்தினர், நம் இந்திய ராணுவ வீரர்களின் தலைகளை வெட்டினர்.



    ஆனால் பாஜக ஆட்சியில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது. பாகிஸ்தான், புல்வாமாவில் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் இறந்தனர். இதற்கான பதிலடியும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் கொடுக்கப்பட்டது. இதன் நோக்கம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிப்பது மட்டுமல்ல, பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைக்க செய்யப்பட்ட உறுதியான செயலாகும்.

    மோடி அலை நாடெங்கும் வீசுகிறது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசை மீண்டும் கொண்டு வர ஒடிசா மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  

    இவ்வாறு அவர் பேசினார். #YogiAdityanath  #LoksabhaElections2019


    தேர்தல் வெற்றி செல்லாது என குஜராத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பாஜக எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை விசாரிக்க உள்ளது. #GujratBJPMLA #CourtTerminatesMLA
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் துவாரகா சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாபுபா மானக். இவரது வெற்றியை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் மீராமன் ஆகிர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், பாஜக வேட்பாளர் மானக், குறைபாடுள்ள வேட்பு மனுவை தாக்கல் செய்ததாகவும், அதனால் அவரது  வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், துவாரகா எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என 12ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, இந்த தீர்ப்பிற்கு 4 வாரங்கள் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மானக்கின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.


    இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து பாபுபா மானக், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அடுத்த திங்கட்கிழமை விசாரணையை தொடங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். #GujratBJPMLA #CourtTerminatesMLA 
    ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.



    ஆனால், ஜெயப்பிரதா குறித்து அப்படி பேசவில்லை என்று கூறிய ஆசம் கான், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலகுவதாக கூறினார்.

    இந்நிலையில்,  ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் அடிப்படையில், ஷகாபாத் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #AzamKhan
    பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும். #Loksabhaelections2019 #ElectionCommission
    புதுடெல்லி:

    பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் கடந்த நிதியாண்டில் எவ்வளவு செலவு செய்தன? வங்கியில் எவ்வளவு கையிருப்பு வைத்துள்ளன என்ற தகவலை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.

    வரவு-செலவு கணக்கு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும். கடந்த ஆண்டு இந்த கட்சி 665 கோடி ரூபாயை கையிருப்பு வைத்து இருந்தது. இந்த ஆண்டு அந்த தொகை ரூ.670 கோடியாக உயர்ந்துள்ளது.

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 2-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு வங்கிகளில் ரூ.471 கோடி கையிருப்பு உள்ளது. வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்திருக்கும் கட்சிகளில் முதல் 2 கட்சிகளும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


    காங்கிரஸ் கட்சி ரூ.196 கோடி கையிருப்புடன் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ரூ.136 கோடியே வைத்திருந்தது. ஒரே ஆண்டில் 60 கோடி ரூபாயை வங்கியில் காங்கிரஸ் கட்சி சேர்த்துள்ளது.

    சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ரூ.107 கோடியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ரூ.82 கோடி கையிருப்புடன் 5-வது இடத்தில் உள்ளது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ஆம்ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் தலா ரூ.3 கோடியை வங்கிகளில் கையிருப்பு வைத்துள்ளன. #Loksabhaelections2019 #ElectionCommission
    மக்கள் விரும்பும்போது 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #LoksabhaElections2019 #BJP #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நேற்று குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அவர் பொய் மட்டுமே கூறிவருகிறார். மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குஷ்பு கூறினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய மந்திரியும், கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி பொய் பேசுவதாக கூறும் சகோதரி குஷ்பு, சமீபத்தில் அவரிடம் தவறு செய்தவர் யார் என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

    பிரதமர் மோடி கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்? என்பது இங்குள்ள வாக்காளர்களுக்கு தெரியும். இம்மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி திட்டங்கள் அதற்கு பதிலாக அமையும்.

    ராகுல் காந்தி பிரதமராக வந்தால் தான் மாற்றம் ஏற்படும் என்று குஷ்பு சொல்வது உண்மைதான். அவர் பிரதமர் ஆனால் இப்போது விழித்து இருக்கும் மக்கள் அனைவரும் தூங்கி விடுவார்கள்.

    உலக நாடுகளின் தலைவர்கள் முன்பு தலை நிமிர்ந்து பேசியவர் தான் பிரதமர் மோடி. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர்கள் யாராவது இவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று இவர்களால் கூறமுடியுமா?

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் உறுதியான வளர்ச்சி திட்டம் என்பதால் ஒரு சிலரின் தூண்டுதல் பேரில் தடை வந்துள்ளது.


    8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் விரும்பும் போது அதனை யாராலும் தடுக்க முடியாது. இதனை தான் மத்திய மந்திரி பியுஸ்கோயலும் கூறியுள்ளார்.

    தேர்தல் ஆணையம் நடத்தும் சோதனைகளில் உள்நோக்கம் இருப்பதாகவும், பின் நோக்கம் இருப்பதாகவும் யாரும் நினைக்க வேண்டாம்.

    நான் பிரசாரத்திற்கு சென்றபோது கூட தேர்தல் அதிகாரிகள் பல முறை என் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.

    பிச்சை எடுப்பவர்கள் பிச்சை போடுபவர்களை தர்ம பத்தினி என கூறுவார்கள். அதுவே அவர்கள் பிச்சை போடாவிட்டால் அவர்களை மூதேவி என்பார்கள்.

    கூட்டணிக்கு அ.தி.மு.க.வை பா.ஜ.க. மிரட்டி பணிய வைத்ததாக குற்றச்சாட்டுகள் கூறும் மு.க. ஸ்டாலின் அதனை வேட்பு மனு தாக்கல் செய்த போதே கூறி இருக்க வேண்டும். தேர்தலுக்கு 3 நாட்கள் இருக்கும்போது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #BJP #PonRadhakrishnan
    பணக்கார நண்பர்களுக்கு மட்டும்தான் மோடி பிரதமராக உள்ளார் என்று குமரி மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை குஷ்பு தெரிவித்தார். #LokSabhaelections2019 #Kushboo
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து நேற்று குமரி மாவட்டத்தில் நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். சுசீந்திரம், கொட்டாரம், நாகர்கோவில் ராமன் புதூர் உள்பட 15 இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று அவர் பேசினார்.

    பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நாளான வருகிற 18-ந்தேதி நீங்கள் ஓட்டுப்போடும் முன்பு கடந்த 5 ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சியில் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்து வாக்களியுங்கள்.

    பிரதமர் மோடி உங்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்னாரே அதை அவர் செய்தாரா? 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக சொன்னாரே வேலை கிடைத்ததா? பாரதிய ஜனதா ஆட்சியில் 2 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர்.

    பாரதிய ஜனதா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. டெல்லியில் விவசாயிகள் 60 நாட்கள் போராடிய போதும் அவர்களை பிரதமர் பார்க்கவில்லை. பிரதமர் மோடி பணக்கார நண்பர்களுக்கு மட்டும்தான் பிரதமராக உள்ளார். இந்த ஆட்சியில் விலைவாசி எந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

    காங்கிரஸ் ஆட்சியின் போது 450 ரூபாயாக இருந்த கியாஸ் விலை இன்று 950 ரூபாய் அளவிற்கு உயர்ந்து விட்டது. கேபிள் டி.வி. கட்டணம் 150 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகி விட்டது. அதிக பணம் கொடுத்தால் தான் எல்லா சேனல்களையும் பார்க்க முடியும். நீங்கள் விரும்பும் சேனல்களைக்கூட உங்களால் பார்க்க முடியாது.

    பாரதிய ஜனதா ஆட்சியில் அவர்கள் சொல்வதைதான் நீங்கள் கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதைதான் நீங்கள் சாப்பிட வேண்டும். யாரை காதலிக்க வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதைக்கூட அவர்கள்தான் சொல்வார்கள். ஒரு சர்வாதிகார ஆட்சியை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.


    இதற்கு எல்லாம் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் முடியும். இளம் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் ஆகும் போதுதான் எல்லா மாற்றத்தையும் கொண்டுவர முடியும். அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். அவரது கனவை நினைவாக்க வேண்டும்.

    ஆட்சிக்கு வந்தபிறகு காங்கிரஸ் கட்சி சொன்னதை எல்லாம் நிறைவேற்றும். நாங்கள் சொல்வதைதான் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம். மக்களின் குரலுக்கு மோடி செவிசாய்க்கவில்லை. ஆனால் ராகுல் மக்களின் தேவை அறிந்து செயலாற்றுவார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.72 ஆயிரம் உங்கள் வீடு தேடி வரும்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஊரக வேலை திட்டத்தில் ரூ.300 வழங்கப்படும். கல்விக்கடன், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சிறு தொழில் தொடங்க வங்கியில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் கடன் வழங்கப்படும்.

    இவ்வாறு குஷ்பு பேசினார். #LokSabhaelections2019 #Kushboo
    நடிகையும் பாஜக வேட்பாளருமான ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆசம் கானுக்கு , ஜெயப்பிரதா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். #AazamKhan #Jayaprada
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.

    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில்,  தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும், ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகனும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து ஆசம் கான் கூறிய சர்ச்சை கருத்து தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெயப்பிரதா கூறியதாவது:

    இது போன்ற சர்ச்சை எனக்கு புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு சமாஜ்வாடி  கட்சியில் வேட்பாளராக இருந்தேன். ஆனால் ஒருவர் கூட ஆசம் கூறியது தவறு என எதிர்த்தும்,  என்னை ஆதரித்தும் பேசவில்லை.  நான் ஒரு பெண்ணாக இருப்பதால் அவர் என்ன கூறினார் என்பதையும் சொல்ல இயலவில்லை. நான் ஆசமிற்கு என்ன செய்தேன்? ஏன் இவ்வாறு பேச வேண்டும்?



    ஆசம் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும். ஒரு வேளை அவர் வெற்றி பெற்றால் ஜனநாயகம் என்ன ஆகும்? என சிந்தியுங்கள். சமூகத்தில் பெண்களுக்கென இடமே கிடைக்காது. நாங்கள் உரிமைக்காக எங்கே போக வேண்டும்? நான் இறந்தால் நீங்கள் திருப்தியாக இருப்பீர்களா? இப்படி பேசியதால் நான் பயந்து ராம்பூரை விட்டு சென்றுவிடுவேன் என நீங்கள் நினைத்தால், நான் அவ்வாறு செய்யமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #AazamKhan #Jayaprada
    ×